சென்னை அடையாறில் உள்ள பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூலை 15, 2019 அன்று காமராசர் பிறந்த நாள் - கல்வி வளர்ச்சி நாள் கருத்தரங்கம் பகல் 11 மணியளவில் நடைபெற்றது. முதல் அமர்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘கல்விப் புரட்சி’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.

“கல்வியை அனைவருக்கும் வழங்குவதற்கே நமது நாட்டில் ஒரு புரட்சி நடத்த வேண்டியிருந்தது என்றால், அதற்கு என்ன காரணம்? ஜாதிய சமூகமாக நாம் இருந்ததுதான். மனுதர்ம அடிப்படையில் பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்கள் ‘சூத்திரர்கள்’ என்று இழிவுபடுத்தப்பட்டு கல்வி உரிமை மறுக்கப்பட்டது. பிறப்பின் அடிப்படையில் மறுக்கப்பட்ட கல்வி உரிமையை நேர் செய்வதற்கு வந்ததுதான் ஜாதியடிப்படையிலான இட ஒதுக்கீடு. ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்குக் காரணம் ஜாதியடிப்படையில் திணிக்கப்பட்ட பாகுபாடுகளை ஒழித்து, ஜாதி இல்லாத சமத்துவ நிலையை உருவாக்குவதற்கே தவிர, ஜாதியைக் காப்பாற்றுவதற்கு அல்ல. எனவே கல்விப் புரட்சி என்று பேசும்போது ஜாதிய ஒடுக்குமுறை, ஜாதிய அமைப்புகளையும் குறித்து நாம் பேச வேண்டும். காமராசர் கல்வி உரிமைக்கு வழி திறந்து விட்டார். அந்தக் கல்வி உரிமை கிடைத்தப் பிறகு தான் பள்ளிக் கல்வி, உயர் கல்வி கிடைத்தது. அதனால்தான் ஜாதி மறுப்பு திருமணங்களும் பெருகி வருகின்றன இளைஞர்களாகிய நீங்கள் - ஜாதியம் என்ற அமைப்பிலிருந்து வெளியே வரவேண்டும். ஜாதி ஆணவப் படுகொலைகளை எதிர்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையரைத் தேடுவது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணுக்கும் உள்ள உரிமை” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து இலயோலா கல்லூரி பேராசிரியர் முனைவர் ஜா. அமிர்த லெனின் பேசுகையில், “இடஒதுக்கீட்டுக்காக முதன்முதல் இந்திய அரசியல் சட்டத் திருத்தம், திருத்தப்பட்டதையும் தமிழ்நாட்டில் பெரியார் இயக்கம் அதற்காகப் போராடியதையும் செண்பகம் துரைசாமி என்ற பார்ப்பனப் பெண், மருத்துவக் கல்லூரிக்கு மனுப் போடாமலேயே தனக்கு இடஒதுக்கீடு கொள்கையால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனது” என்று வழக்காடிய மோசடியையும் விளக்கிப் பேசினார்.

“ஜாதி அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை மகாபாரத காலத்திலேயே தொடங்கிவிட்டது. ஏகலைவன் என்ற பழங்குடி மரபில் வந்தவன், வில் வித்தைக் கற்றுக் கொள்ள துரோணாச்சாரியிடம் வந்தபோது உனது ஜாதிக்கு வில்வித்தைக் கற்றுத் தர முடியாது என்று அனுமதிக்க மறுத்தார். இது ஜாதி அடிப்படையிலான சேர்க்கை! பிறகு, இப்போது ‘அஞ்சலகக் கல்வி முறை’ என்று கூறுகிறோமே அந்த வழியில் அந்தக் காலத்தில் தானாகவே துரோணாச்சாரியை குருவாகக் கருதி கொண்டு வில்வித்தை கற்றான். குருவாக உருவகித்துக் கொண்டு கற்றதால்

அவனது கட்டை விரலை ‘குருதட்சணையாகவே’ கேட்டுப் பெற்றவர் துரோணாச்சாரி” என்ற மகாபாரத வர்ணாஸ்ரமக் கொடுமையை எடுத்துக் காட்டி அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கு வந்த கொள்கைதான்” இடஒதுக்கீடு என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேராசிரியர் அரங்க மல்லிகா, ‘பெண் கல்வி’ குறித்தும், பெண்களுக்கான சமத்துவம் குறித்தும் உரையாற்றினார். நிகழ்வுகளை தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் பா.ஜ. சுப்ரமணியன் ஒருங்கிணைத்தார். நிகழ்வில் கல்லூரி முதல்வர் உஷா ஜார்ஜ், துணை முதல்வர் கீதா ரூபஸ், தமிழ்த் துறை பேராசிரியர்கள் அகிலா சிவசங்கர், மோ. பேபி பங்கேற்று உரையாற்றினர். 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

Pin It