சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் சமூக நீதித் தூண்கள் காமராசர்-வி.பி. சிங் சாதனைகளை நினைவுகூரும் பொதுக் கூட்டம் ஜூலை 21, 2019 அன்று தியாகராயர் நகர் முத்து ரங்கன் சாலையில் மாலை 7 மணியளவில் பறை இசையுடன் தொடங்கியது. விரட்டு கலைக் குழுவினர் பெரியார், மணியம்மையார், அம்பேத்கர், காமராசர், வி.பி.சிங் குறித்த எழுச்சிப் பாடல்களையும் ‘நீட்’ பாதிப்புகளை விளக்கும் நாடகங்களையும் நடத்தினர். நடுவண் அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்வித் திட்டம் குறித்த விமர்சனப் பாடல் அனைவரையும் கவர்ந்தது. சைதைப் பகுதி கழகத் தோழர் ப. மனோகரன் வரவேற்புரை யாற்றிட தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் நிகழ்வுக்குத் தலைமை தாங்கி, காமராசர்-வி.பி.சிங் சாதனைகளை நினைவு கூர்ந்து சமூக நீதி உரிமைகள் தமிழகத்தில் படிப்படியாக பறிக்கப்பட்டு பார்ப்பனியம் வேகமாக தலைதூக்கி வருவதை சுட்டிக் காட்டினார்.

இளைஞர் இயக்கத்தின் நிறுவனரும் பெரியாரிஸ்டுமான மருத்துவர் நா. எழிலன், காமராசரால் சத்துணவுத் திட்டம் கொண்டு வரப்பட்ட போது எழுந்த எதிர்ப்புகளையும் பிறகு பிரதமர் நேருவிடம் பேசி அதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு காமராசர் எடுத்த முயற்சிகளையும் மக்களிடம் நன்கொடையாகத் திரட்டி இத் திட்டத்தை உறுதியோடு காமராசர் அமுல்படுத்தியதையும் அப்போது அவருக்கு உறுதுணையாக இருந்த பள்ளிக் கல்வி அதிகாரி நெ.து. சுந்தர வடிவேலு பதிவு செய்த வரலாற்றிலிருந்து எடுத்துக் காட்டினார். தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டம் பிறகு இந்தியா முழுதும் பின்பற்றக்கூடிய திட்டமாக மாறியதை சுட்டிக் காட்டினார். தொடர்ந்து நடுவண் ஆட்சி இப்போது கொண்டு வந்திருக்கும் கல்விக் கொள்கையால் சமூக நீதிக்கும் கிராமப் புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும் ஆபத்துகளை விளக்கிப் பேசினார்.

தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பங்கேற்றுப் பேசிய ஆளுர் ஷாநவாஸ் - கல்விக் கொள்கையில் சமூகநீதிக்கு எதிராக இடம் பெற்றுள்ள கல்வித் திட்டங்களை விளக்கினார். கல்விக் கொள்கை மீது கருத்துகளைக் கேட்பதாக நடுவண் அரசு கூறும்போது கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவை பா.ஜ.க.வினர் மிரட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். கல்விக் கொள்கையை ஆதரித் துப் பேசினால் மட்டும் தான் கருத்தாக ஏற்பீர்களா என்று கேட்டார். தமிழ்நாடு என்றும் பெரியார் மண் தான் என்பதை நாம் மதவெறி சக்திகளுக்கு உறுதிப்படுத்துவோம் என்று சூளுரைத்தார்.

தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசினார். “காமராசர்-வி.பி.சிங் - சாதனைகளை நினைவு கூர்ந்தார். இரண்டு தலைவர்களுமே பார்ப்பனர்களால் வெறுக்கப் பட்டவர்கள். காரணம் அவர்கள் சமூகநீதியில் உறுதியாக இருந்தார்கள். பதவி அதிகாரங்களைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் என்றார்.

கோட்சே வழியாக பார்ப்பன இந்துமதவெறி, காந்தியை சுட்டது. துப்பாக்கியால் சுட்டவுடன் காந்தி உயிர் போய்விட்டது. வி.பி. சிங் உயிரை அதே இந்து மதவெறி படிப்படியாகப் பறித்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன், மசூதியை இடித்தவர்களைக் கைது செய்யாததைக் கண்டித்து பம்பாயில் தனது தோழர்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் வி.பி.சிங். மகாராஷ்டிராவில் நடந்த பா.ஜ.க., சிவசேனை ஆட்சிப் போராட்டத்தை அலட்சியப்படுத்தியது. இரண்டொரு நாட்களில் வி.பி.சிங் போராட்டம் நடத்திய இடத்துக்கு அருகே ‘உண்ணும் விரதம்’ என்று எதிர்ப்புப் போராட்டம் நடத்தி அவமானப் படுத்தினார்கள். ‘இதற்கு என்னுடைய பதில்  - இனி தண்ணீர்கூட குடிக்காமல் உண்ணா விரதத்தைத் தொடரப் போகிறேன்’ என்று அறிவித்தார் வி.பி. சிங். மகாராஷ்டிர இந்துத்துவ ஆட்சி, அப்படியே சாகட்டும் என்று கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது. சுதர்சன் லோயல்கா என்ற வி.பி. சிங் நண்பர் - பம்பாய் உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குத் தொடர்ந்து, அரசின் அலட்சியத்தைக் கவனத்துக்குக் கொண்டு வந்தார். அதற்குப் பிறகு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே மகாராஷ்டிரா ஆட்சி, வி.பி.சிங்கை கைது  செய்தது. அப்போதுதான் அவரது சிறுநீரகம் பழுதடைந்தது. அதன் தொடர்ச்சியாக வாழ்நாள் முழுதும் போராடி மரணத்தைத் தழுவினார் வி.பி.சிங்” என்றார் விடுதலை இராசேந்திரன்.

நிறைவாகப் பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “காமராசர் அகில இந்தியத் தலைவராக காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் வடநாட்டுக்காரர்கள் மாநாட்டில் இந்தியில் பேசியபோது தமிழகத் தலைவர்களும், கன்னடத் தலைவர்களும் தங்கள் தாய்மொழியில் பேசியதை ஆதரித்ததையும் அகில இந்திய தேர்வுகள் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதையும் சுட்டிக் காட்டினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் பசுவதைத் தடையை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் உள்ள பார்ப்பன மதவாத சக்திகள் வலியுறுத்தியபோது காமராசர் உறுதியாக மறுத்தார். அதன் காரணமாக நவம். 7, 1966இல் புதுடில்லியில் சங்பரிவார் மற்றும் சாமியார் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் டெல்லியில் கலவரம் நடத்தி காமராசர் தங்கியிருந்த வீட்டில் அவரை உயிருடன் எரிக்க திட்டமிட்டு, அவரது வீட்டுக்கு தீ வைத்தது. காமராசர் மயிரிழையில் உயிர் தப்பினார். பெரியார் இந்த நிகழ்வுகளை காமராசர் கொலை முயற்சி சரித்திரம் என்று நூலாக வெளியிட்டார்” என்ற வரலாற்றுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்

தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதி, மேடை நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். புதுச்சேரியிலிருந்து பெரியார் சிந்தனையாளர் இயக்கத்  தோழர்கள் தனி வாகனத்தில் வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். க. சிவா நன்றி கூற 10 மணியளவில் நிறைவடைந்தது.

இதுதான் பெரியார் மண்

சென்னை தியாகராயர் நகரில் கழகக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மேடையில் மருத்துவர் எழிலன் பேசிக் கொண்டிருந்தார். “கூட்டம் நடக்கும் பகுதியில் அலகு குத்திக் கொண்டு சாமி ஆடிக் கொண்டு ‘ஓம் மகா சக்தி’ என்று முழங்கிக் கொண்டு ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் மேளதாளத்தோடு ஊர்வலமாகக் கோயிலை நோக்கிப் போகிறார்கள். அவ்வளவு பேரும் நம்முடைய ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக் குடும்பத்தினர். மேடையில் பேசிக் கொண்டிருந்த மருத்துவர் எழிலன், பக்தி ஊர்வலம் சென்று முடியும் வரை தனது பேச்சை நிறுத்திக் கொண்டார். ஊர்வலம் சென்று முடிந்த பிறகு இந்த மக்களின் உரிமைகளுக்காகத் தான் பெரியார் தொண்டர்களாகிய நாம் போராடி வருகிறோம்” என்று கூறி தனது பேச்சைத் தொடர்ந்தார்.

அடுத்து பேச வந்த ஆளூர் ஷா நவாஸ், “இங்கே அமைதியாக பக்தி ஊர்வலத்திற்கு வழிவிட்டு பேச்சைக்கூட நிறுத்திக் கொண்டு பக்தர்கள் கடந்து செல்ல அனுமதித்தோம். இதுதான் பெரியார் மண்! நினைத்துப் பாருங்கள். இதுவே விநாயகன் ஊர்வலமாக இருந்திருந்தால் எப்படி நடந்து கொண்டிருப்பார்கள்? மசூதி வழியாகவே போவோம் என்பார்கள். ஆத்திரமூட்டும் முழக்கமிடுவார்கள். வன்முறைக்குக் காத்திருப்பார்கள். போலீஸ் படை சூழ்ந்து நிற்கும். இங்கே அதுபோன்ற எந்த அசம்பாவிதமும் இல்லை. இப்படித்தான் பெரியார் தனது இயக்கத்தை பக்குவப்படுத்தியிருக்கிறார்” என்று கூறியபோது பலத்த கரவொலி எழுந்தது.

கழகக் கூட்ட மேடைக்குப் பின்னால் சற்று தூரத்தில் அம்மன் விழாவும் தீமிதியும்கூட நடந்து கொண்டிருந்தது.

Pin It