அன்று வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்தவர்கள் இன்று அமுல்படுத்துகிறார்கள்

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்த பார்ப்பனர்கள், ‘சங்கிகள்’ இப்போது மகாராஷ்டிராவில் அதைப் பின்பற்றுகிறார்கள்.

periyar on stageவேத மதத்தை ‘பிராமணரல்லாத’ வெகு மக்கள் மீது ‘இந்து’ மதம் என்ற போர்வைக்குள் பதுங்கிக் கொண்டு திணித்த பார்ப்பனர்கள் பெரும்பான்மை மக்களை ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ களாக்கியதோடு  ஜாதிக் குழுக்களையும் உருவாக்கி மக்கள் ஒற்றுமையை சிதைத்தனர். குலத் தொழில் அடிமைத் தொழில் பிறப்பின் அடிப்படையில் திணிக்கப் பட்டது. குல தர்மப்படி வேதம் படிக்க வேண்டிய பார்ப் பனர்கள் மட்டும் வழக்கறிஞர்களாக மருத்துவர் களாக நீதிபதிகளாக உயர் அதிகாரிகளாகி பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே அதிகார மய்யங்களை ஆக்கிரமித்துக் கொண்டதோடு ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை ‘இந்து’க்களுக்கு உரிமைகளைத் தடுத்து வந்தனர். அக்காலக் கட்டத்தில்தான், ‘இந்து’ சமூகத்தில் அடக்கப் பட்ட ஒடுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத பெரும் பான்மை சமூகத்தினருக்கு கல்வி - வேலை -அரசியல் உரிமைகளுக்காகப் பெரியார் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கேட்டு போர்க்கொடி உயர்த்தினார். “அப்போது பெரியார் ஜாதிப் பிரிவினையைத் தூண்டுகிறார்; இந்த கோரிக்கை யால் தகுதி திறமை போய் விடும்” என்று பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை நீதிக் கட்சி ஆட்சிக் காலத்திலேயே வந்துவிட்டது. பார்ப்பனர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடி ஒழித்துக் கட்டினார்கள். மீண்டும் பெரியார் போராடினார். இந்திய அரசியல் சட்டம் முதல்முறையாக திருத்தப்பட்டு ‘சமூகக் கல்வி ரீதியாக’ப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு என்ற முறை அமுலுக்கு வந்தது. அப்போதும் பார்ப்பனர்கள் “தகுதி போய் விட்டது; திறமை போய் விட்டது” என்று தொடர்ந்து எதிர்த்து வந்தார்கள். 1990இல் வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் நடுவண் அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார். அவரது ஆட்சியையே அதற்காகக் கவிழ்த்தார்கள்.

இப்போது மோடி ஆட்சி முன்னேறிய ஜாதி யினருக்கு மட்டும் 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தவுடன் அதே பார்ப்பனர்கள் விழுந்து விழுந்து ஆதரிக்கிறார்கள். தகுதி திறமையை இடஒதுக்கீடு ஒழித்து விடும் என்றெல்லாம் இப்போது பேசுவதே இல்லை; வாயை மூடிக் கொண்டார்கள்.

இன்னும் ஒருபடி மேலே போய் மகாராஷ்டி ராவில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சி ‘மராத்தா’ என்ற சமூகத்தினருக்கு மட்டும் தனியாக 16 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறது. ஏற்கெனவே இந்த மாநிலத்தில் 50 சதவீத இடஒதுக்கீடு இருக்கிறது. இப்போது 68 சதவீத இடஒதுக்கீடு மகாராஷ்டிராவில் வந்து விட்டது. முன்னேறிய ஜாதியினருக்கு 10 சதவீத ஒதுக்கீடு கொண்டு வந்ததால், ஏற்கெனவே 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்று உச்சநீதி மன்றம் ஒரு தீர்ப்பில் விதித்த வரம்பை மோடி ஆட்சியும் மீறி விட்டது. தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டவிரோதம் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்த பார்ப்பனர்கள், இப்போது 10 சதவீத ஒதுக்கீடு வந்த பிறகு 50 சதவீதத்தை மீறலாம் என்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் 68 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு தொடரப் பட்டது. வழக்கில் அம்மாநில உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள 487 பக்க தீர்ப்பில் “50 சதவீதம் என்ற அளவை மீற அசாதாரணமான சூழலும் விதிவிலக்கான நிலைமைகளும் இருக்கின்றன” எனவே தனி ஒதுக்கீடு செல்லும் என்று கூறி விட்டது. மராத்தா சமூகத்தினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், “விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் நோக்கி இந்தியா கால் எடுத்து வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது” என்று ‘தமிழ் இந்து’ நாளேடு தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

எந்த விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்? 1925இல் பெரியார் முன் மொழிந்தாரே அதே விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்.

இந்து சமூகத்தைக் கூறுபோடக் கூடாது என்று இடஒதுக்கீட்டை ஆர்.எஸ்.எஸ்.சும் ஜன சங்கமும் அப்போது எதிர்த்தன. அவர்கள் வழியில் வந்த பா.ஜ.க. ஆட்சியின் முதல்வர்  மோடி, உயர்ஜாதியினருக்கு தனி இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்துள்ளார். இப்போது தனது கட்சியின் பிற்படுத்தப்பட்ட நாடாளு மன்ற உறுப்பினர்களை மட்டும் தனியே அழைத்துப் பேசி விவாதிக்கிறார்.

பார்ப்பனர்கள் கட்டமைத்த ‘இந்து’ சமூகம் - சம உரிமைகளை அனைத்துப் பிரிவினருக்கும் வழங்கவில்லை என்று பெரியார் கூறிய கருத்துக்குத்தான் இப்போது ‘சங்பரிவாரங் களும்’ பார்ப்பனர்களும் பா.ஜ.க.வினரும் வந்து சேர்ந்திருக்கிறார்கள். பெரியார் பேசிய வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைக் கையில் எடுக்கிறார்கள்! பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தேவை; அதற்கு சட்ட அங்கீகாரம் தருவோம் என்கிறார்கள். ஆனால் பார்ப்பன ஆதிக்கத்தை மட்டும் விட்டுத்தர மாட்டோம் என்கிறார்கள்.

இவ்வளவுக்குப் பிறகு, பெரியார் ‘இந்து’க் களின் எதிரி என்ற கூப்பாடு மட்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும் ‘இந்து இராஷ்டிரம்’ என்ற ‘வர்ணாஸ்ரம’ இராஜ்யத்தை அமைக்கவும் ‘பெரியாரியல்’ என்ற தத்துவமே தடையாக நிற்கிறது என்பதைத் தவிர வேறு என்ன காரணம்?

Pin It