உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட அய்க்கிய நாடுகள் அவையின் உலகத் தட்பவெப்பப் பருவகால மாற்றம் 23.9.2019 அன்று நடந்த உச்சி மாநாட்டில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த 16 அகவை சிறுமி கிரெட்டா தன்பெர்க் உலகையும், உலகின் இளைஞர்களையும் இழிநிலைக்கும் இன்னலுக்குள்ளும் தள்ளுகிறீர்கள்; அழிக்கிறீர்கள் என்றும் இவர்களிடம் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் என்று எந்தத் தைரியத்தில் சொல்கிறீர்கள் என்றும் பணம், பொருளாதார வளர்ச்சி எனப் பொய்யுரை பேசுகிறீர்கள் என்றும் தனது கடுமையான எச்சரிக்கைக் கண்டனத்தை வெகுண்டெ ழுந்து கடும் சினத்துடன் பதிவு செய்தார். அவர் ஆங்கிலத்தில் பேசிய செய்திகளை அப்படியே கீழே தரப்பட்டுள்ளதையும் அடுத்து அதன் தமிழாக்கத்தையும் மனம் கொண்டு ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன்.

நியூயார்க்கில் 23.9.2019 அன்று அய்க்கிய நாடுகள் அவையில் சுவீடன் சிறுமி கிரெட்டா தன்பெர்க்கின் உரை, உலகத் தட்பவெப்ப நிலை மாற்றம் உச்சி மாநாட்டில் : “You have stolen my dreams and my childhood with your empty words. We are in the beginning of a mass extinction and all you can talk about is money and fairly tales of eternal economic growth - how dare you? My message is that we will be watching you. I should not be here. I should have been back at school on the otherside of the ocean. Yet you all come to us young people for hope. How dare you?” 

modi and amit shah after election resultஇதன் தமிழாக்கம் : “நீங்கள் என் கனவுகளையும், என் மழலைக் குழந்தைப் பருவத்தையும் உங்களின் வெற்றுச் சொற்களால் திருடிக் கொண்டுவிட்டீர்கள். நாம் ஒரு பெரும் அழிவுக்காலத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம்; நீங்கள் பணம், தொடர் பொருளாதார வளர்ச்சி பற்றிய கற்பனைக் கதைகளைப் பேசிக் கொண்டிருக்கலாம்; உங்களுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம்? உங்களை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தான் என் செய்தி. நான் இங்கிருக்கக் கூடாது. நான் பெருங்கடலுக்கு அடுத்த பக்கமுள்ள பள்ளிக்குத் திரும்பி யிருந்திருக்க வேண்டும். இருப்பினும் இளைஞர் களாகிய எங்களிடம் உங்களை நம்புமாறு நீங்கள் எல்லோரும் வந்துள்ளீர்கள். என்ன நெஞ்சு அழுத்தம் உங்களுக்கு?” இக்குரல் உலக முதலாளியக் கும்பல்களுக்கு விடப்பட்ட அறைகூவல். திருந்துங்கள், உலக மக்களின் நலனுக்காக. இலாப வேட்டையே உங்கள் வேட்கை வெறி எனில், வீழ்வீர்கள்; அல்லது வீழ்த்தப் படுவீர்கள் விரைவில் என்பதுபோல் எச்சரிக்கை விடுக்கிறார்.

இந்திய ஒன்றியத்தில் தற்போது வெகுமக்களும், குறிப்பாக 50 கோடிக்கு மேலான இளைஞர்களும் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு இன்னலுக்கும், துன்பத்திற்கும் உள்ளாக்கப்படும் சூழலில் இவரைப் போன்று இந்திய ஒன்றிய அமைப்பின் மீது இளைஞர்கள் சினம் கொள்ள வேண்டும்.

193 உலக நாடுகளிடையே மனிதவள மேம்பாட்டுக் கான பல்வேறு குறியீடுகளில் எல்லாம் பெரும்பாலும் சுவீடன் நாடுதான் முதல் நிலையில் வெகுகாலமாக இருந்து வருகின்றது. அதனை அடுத்தடுத்து அதன் அண்டை நாடுகளான பின்லாந்து, டென்மார்க், சுவிட் சர்லாந்து போன்ற நாடுகள்தான் முன்னிலையில் இருந்து வருகின்றன. ஒப்பீட்டளவில் நம் இந்திய ஒன்றியம் எவ்வளவு இழிநிலையில் நிலைத்து தொடர்ந்து 125-150 இடத்தில் கீழ் மட்டத்தில் வைக்கப்பட்டு வருகிறது என்பது பற்றி முன்னைய சிந்தனையாளன் கட்டுரைகளில் விரிவாகப் பேசி பதிவு செய்யப்பட்டுள்ளதையும் தயவு செய்து திரும்பவும் பார்க்கவும்,

இந்தப் பின்னணியில் பார்த்தால் தற்போதைய இந்தப் பாரதிய சனதாக் கட்சி முன்னைய காங்கிரசுக் கட்சி ஆகியவை நடத்திய இந்திய ஒன்றிய அரசு சென்ற 72 ஆண்டுகாலங்களில் நாடு பொருளாதார வளர்ச்சி பெற்று வருகின்றது என்ற அப்பட்டமான பொய்யைத் தொடர்ந்து பரப்பி அவர்கள் மேற்கொண்ட செயல்பாடுகளின் விளைவால் தற்போதுள்ள 100 கோடி மக்களுக்கும் மேலானோர் சமூகக் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு ஆகிய முதன்மையான துறைகளில் மட்டுமல்லாது ஏனைய மக்கள் நலம் சார்ந்த எல்லாத் துறைகளிலும் இரங்கத்தக்க இழிவான நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தப் பார்ப்பனியச் சனாதனக் காவிக் கும்பலான இராட்டிர சுயம் சேவக் சங்கம் அதன் அத்தனை துணை அமைப்புகள், அதன் அடிவருடிப் பாரதிய சனதாக் கட்சி அரசு இவர்களின் எடுபிடி அடிமைத் தமிழக அரசு எண்ணம், பேச்சு, எழுத்து, செயல் என இவை எதிலும் அறிவு நாணயமற்று முற்றிலும் ஒன்றுக்கொன்று முரண் பட்ட செயல்கள், நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டு மேற்சொன்னவாறு வெகுமக்களை நசுக்கித் துன்புறுத்தி அவர்களின் பிழைப்பையே அழித்துக் கேள்விக்குறியாக்கிவிட்டனர்.

இதற்குமேலும் நாட்டு மக்களில் வளமாக வாழும் மேல் வகுப்பு மக்களுள் நலிவுற்றோர் எனச் சொல்லி 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி அந்த மக்கள்தான் அவர்களைப் பொறுத்தவரை இந்துக்கள் என்பதுபோல் அவர்களின் வாழ்க்கையைக் கொழிக்கச் செய்துவிட்டு தாங்கள் எல்லோருக்குமானவர்கள் என்று மனமறிந்து பொய் பேசி வருவதை கீழே தரப்பட்டுள்ள விவரங்கள் தெளிவாக்கும்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி வேலை மறுப்பு என்பதற்குப் பலவற்றை விரிவாக எடுத்துரைக்கப்படு வதற்குமுன் உடனடி நிகழ்வு ஒன்றைச் சொல்ல வேண்டும். மேல்சாதி மக்களுள் ரூ.8 இலட்சம் ஆண்டு வருமானமுள்ள நலிந்த பிரிவினரெனச் சொல்லி 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்து அதற்காக மக்களுக் கென்று சென்ற 18-19 நிதியாண்டு, கல்வியாண்டில் அரசின் உயர்கல்வி இடங்கள், வேலைகள், பதவிகள், கூடுதலாக உருவாக்குவதற்கென பல ஆயிரம் கோடி ரூபாய்கள் ஒதுக்கீடு செய்ததைத் தொடர்ந்து சென்ற திங்களில் நடப்பு 19-20-ஆம் ஆண்டிற்குமாக இன்னும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுவிட்டது. இவர்கள் 10 விழுக்காடு மக்கள் என்பது அப்பட்டமான பொய்.

நாட்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால் இவர்கள் மொத்த மக்கள் தொகையில் உண்மையில் 2 அல்லது 3 விழுக்காட்டினருக்குமேல் இருக்க வாய்ப்பே இல்லை. ஏற்கெனவே மொத்தத்தில் 10 விழுக்காடு அளவே இருந்துவரும் மேல்சாதிக்காரர்கள் பலப்பல நூறு ஆண்டுகளாகக் கல்வியை முற்றுரிமை கொண்டவர் களாக உயர் கல்வியை ஏறத்தாழ முழுமையாக ஆக்கிர மித்துள்ளனர். இன்னும் கொடுமை இதில் பத்து கல்வி நிறுவனங்கள் சிறப்பானவை என்று சொல்லி, ஒவ்வொன்றுக்கும் ரூ.1000 கோடியைக் கொட்டிக் கொடுக்கின்றது மோடியின் அரசு.

ஆனால் இவர்களில் தகுதி திறமை என்பவை வெற்றுப் பீற்றல் என்பதை உலகளவில் உள்ள 1000 உயர்கல்வி நிறுவனங்கள் சிறப்பியல்புகளை அடிப் படையாகக் கொண்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளதில் இந்திய ஒன்றியத்தில் பெருமையாகச் சொல்லப்படு பவையான அய்.எஸ்.சி., அய்.அய்.எம்., அய்.அய்.டி. என எவையும் முதல் 300 இடங்களுக்குள் கூட வரவில்லை என்பதிலிருந்து தெளிவாகின்றது.

இந்த இழிநிலைக்கான காரணம் ஒதுக்கீடுதான் எனக் கூச்சநாச்சமின்றி பார்ப்பனிய அச்சு ஊடகம் தலையங்கம் வெளியிடுகிறது. இந்த மூன்று விழுக்காடு இந்து மக்களுக்கு இவ்வளவு கரிசனத்துடன் செயல் படும் போது 2006-இல் 57-60 விழுக்காடு மக்களான இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வியில் 27 விழுக்காடு அளித்ததாகச் சொல்லி, இந்த 2019-20 கல்வியாண்டு வரையில் மேற்சொன்ன கல்வி நிலை யங்களில் 5-6 விழுக்காடு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது அந்த இந்து மக்களை மனமறிந்து வஞ்சிப்பதாகாதா?

பொதுவாக தன்மான உணர்வுக்கும், தன் விடு தலை உணர்வுக்கும், மனிதவள மேம்பாட்டுக்கும் ஒவ் வொரு தனிமனிதனுக்கும் அடிப்படையான இடுபொரு ளாகக் கல்வி வழங்கப் பெறவேண்டும். குறுக்கும் நெடுக்குமாக தடுப்புச் சுவர்களுள் சமூகக் குழுக்கள் பிளவுபடுத்தப்பட்டு படிநிலைச் சமூகமாகக் கட்டமைக் கப்பட்டுள்ள இந்திய ஒன்றிய சமூகத்திற்கு மேற்சொன்ன தடைகள் தகர்த்தெறியப்படும் வகையில் சிறப்பான கல்வி முறை வகுக்கப்பட்டு அதை மக்களுக்கு வழங்க வேண்டும்.

ஆனால் இதுகாலம் வரை இங்கு அளிக்கப்பட்டு வருவது சமூகப் பொதுப் பண்புநலன்களை உள்ளடக்கிய அவ்வகையான கல்வி அல்ல, ஆனால் இதுபோன்ற உள்ளீடில்லாத போலியான பிழைப்புக்கு அடிகோலும் வெறும் படிப்புத்தான். இதுவே காலம் காலமாகச் சமயம், கடவுள், பார்ப்பனியம் சனாதனம் என்பதின் பேரில் பார்ப்பனர், சில மேல் வகுப்பினரின்றி ஏனைய 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோருக்கு அண்மைக்காலம் வரை முற்றிலும் மறுக்கப்பட்டு வந்தது மட்டுமல்ல, இதை மீறுபவர்கள் கடுமையான தண்டனைக்கும் உள்ளாக்கப்பட்டு உடைமைக்கே உரிமை அற்றவர்களாக வைக்கப்பட்டு இதுதான் தம் வாழ்முறை என்று அவர்களையே நம்பும்படி செய்து இழிவாழ் நிலையில் வைக்கப்பட்டு வந்தனர்.

1835-இலிருந்து எல்லோரும் கல்வி அறிவு பெற லாம் என்று அரசு பொதுக் கல்வி அளித்திட முன் வந்தது. இது படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் போதுமான உயர்கல்வியும், வேலைக்கான வாய்ப்பும் இந்திய ஒன்றியத்தில் கிடைக்கப் பெறவில்லை. இதைக் கருத்திற் கொண்டு நாட்டிலிருந்த சில மன்னராட்சிகள் இம்மக் களுக்குக் கல்வியில் வேலையில் இடஒதுக்கீடு அளித்தனர்.

தமிழ் மக்கள் உள்ளிட்ட தென்மொழி மக்களைக் கொண்ட சென்னை மாகாணத்தில் முதன்முதலாக அனைத்து அரசுக் கல்வி இடங்களும் பணிகளும் 100 விழுக்காடு மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு 1921-இல் ஆட்சியிலிருந்த நீதிக்கட்சி அரசு வகுப்புவாரி பங்கீட்டு அரசாணை வெளியிட்டது. ஆனால் நடைமுறைக்கு வந்துவிடாதவாறு 1927 வரை பார்ப்பனியம் எல்லா வகையிலும் முட்டுக்கட்டை போட்டு தடுத்து வந்தது. ஆனால் அந்தத் தடை உடைத்தெறியப்பட்டு 1928-லிருந்து வகுப்புவாரி பங்கீட்டு அரசாணை செயல் பாட்டுக்கு வந்தது. அடுத்தடுத்து வெகுமக்களுக்குக் கல்வி, பணி வாய்ப்புகள் கிடைக்காதவாறு பல வடிவத்தில் இதற்குத் தடைகள் வந்து கொண்டே இருந்தன.

அவை உடைக்கப்பட்டு இடஒதுக்கீட்டுப் பயன்கள் தொடர்ந்தன. விவரங்கள் கீழே :

அ. 1932-இல் இருந்த இராசாசி அரசு பல நூறு பள்ளிகளை மூடியது. இந்தத் தடை அடுத்து நீக்கப்பட்டது.

ஆ. நாடு விடுதலை அடைந்த 1947-ஆம் ஆண்டில் வகுப்புவாரி பங்கீட்டு ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டது. அதுவரை சென்னை மாகாண எல்லைக்குள் இருந்த மய்ய அரசு கல்வி, பணிகளில் இருந்த இடஒதுக்கீடும் நிறுத்தப்பட்டது.

இ. மறுபடியும், 1950 அரசமைப்புச் சட்டம் நடை முறைக்கு வந்து, அதில் கல்விக்கு இடஒதுக்கீடு அளிக்கும் விதிகள் இல்லையென்று கல்விக்கான இடஒதுக்கீடு முடக்கப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்துப் பெரியார் பெரும் போராட்டம் நடத்தி அரசமைப்புச் சட்டத்திற்கு முதல் திருத்தம் கொண்டுவர செய்து கல்விக்கான இடஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்து அரசமைப்புச் சட்டத்தில் 15(4)ஆம் விதி சேர்க்கப்பட்டது.

(இவையெல்லாம் தமிழ்நாட்டில் மட்டும்தான் நடைமுறையில் இருந்தன. அரசமைப்புச் சட்டம் பிற்படுத்தப்பட்டோருக்காக கல்வியில் பணிகளில் இடஒதுக்கீட்டுக்கு உரிமை வழங்கியிருந்தும் மகாராட் டிரம் தவிர்த்த வடமாநிலங்கள் எதிலும் அது நடைமுறைப் படுத்தப்படவில்லை).

ஈ. 1952-இல் சென்னை மாகாணத்தில் இராசாசி ஆட்சியில் 7000 பள்ளிகள் மூடப்பட்டு, பொதுக்கல்வி மறுக்கப்பட்டது. பெரியாரின் கடும் போராட்டத்தின் தொடர்ச்சியால் காமராசர் முதலமைச்சராய் வந்ததும் மூடிய பள்ளிகள் திறக்கப்பட்டு, மேலும் பத்தாயிரத் திற்கும் மேற்பட்ட புதிய பள்ளிகளும் தொடங்கப்பட்டன.

உ. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 25% பின் 31% அதன்பின் 50% எனவும் பட்டியல் வகுப்பினருக்கு 15% அடுத்து 16% பின் 18% அளிக்கப்படுகிறது எனவும் பழங்குடியினருக்குத் தனியே 1% எனவும் மொத்தத்தில் 69 விழுக்காடு அளிக்கப்படுகிறது. இந்திய ஒன்றியத்தில் முதல் மாநிலமாகத் திகழ்கிறது. இன்னும் சிறப்பு போதுமான அளவில் பிரதிநிதித்துவம் பெறாத தொகுப்புகள் கண்டறியப்பட்டு அவர்களின் மேம்பாட்டுக்கெனத் தனித்தனியே உள்ஒதுக்கீடாக இசுலாமியர்க்கு 3.5%, அருந்ததியருக்கு 3%, பெண்களுக்கு 33% (விதிவிலக்காக தென்கிழக்கு மாநிலங் களில் 90% மேலும்) ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகின்றது.

ஊ. இந்திய ஒன்றிய அரசில் அரசமைப்புச் சட்டம் வழங்கிய இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி, பணிகளில் ஒதுக்கீட்டு உரிமை 1950 முதலே மறுக்கப்பட்டு வந்ததற்கு எதிராக வெகுண்டெழுந்து 1976-இல் முகிழ்ந்தது முதல் (பெரியார் சமஉரிமைக் கழகம்) மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, அதன் பொதுச் செயலாளர் வே. ஆனைமுத்து இந்திய ஒன்றியத் தலைநகரான தில்லி முதல் உ.பி., பீகார், ம.பி. என அனைத்து மாநிலங்களின் தொடர் போராட்டங்கள், ஊர்வலங்கள், மாநாடுகள், பொதுக் கூட்டங்கள் நிகழ்த்தி பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக் கீட்டுக்கு உரிமை உணர்த்தப்பட்டது. அதன் துணை விளைவாக 1978 முதல் பீகார், ம.பி., இராசத்தான், குசராத் எனப் பல மாநிலங்களில் அதுவரை இடஒதுக் கீடு பெறப்பட்டது.

எ. மேற்சொன்ன போராட்டங்களின் நேரடி விளை வாக ஒன்றிய அரசையும் மண்டல் குழு அமைக்க வைத்து, கல்வியிலும் பணிகளிலும் 27 விழுக்காடு ஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கிட வேண்டுமென தந்த பரிந்துரைத்தது. ஆனால் அடிப் படையில் அரசமைப்புச் சட்ட 16(4) விதி வழங்கிய இடஒதுக்கீட்டு உரிமை மட்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. வி.பி. அரசால் - 27 விழுக்காடு இடஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அளித்து 1990இல் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஏ. ஆனால் உச்ச அறமன்றம் இதற்கு இடைக்காலத் தடைவிதித்து ஆணையை நிறுத்தி வைத்தது. மேலும் பார்ப்பனிய சங் பரிவார பாரதிய சனதாக் கட்சியின் சதிகளால் பல்வேறு தடைகள் குறுக்கிட்டன. இறுதியில் 1994-இலிருந்துதான் இதர பிற்படுத்தப்பட்டோருக் கான 27 விழுக்காடு ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப் பட்டது. இது விரிவாகக் கீழே விளக்கப்பட்டுள்ளது.

ஐ. அரசமைப்புச் சட்டம் விதி 15(4) வழங்கிய இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக கல்விக்கான ஒதுக்கீட்டு உரிமை 2006 வரை மறுக்கப்பட்டு வந்ததையும் மா.பெ.பொ.க.வின் தொடர் போராட்டங்கள் வாயிலாய் பிற அமைப்புகள், இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டு முயற்சியால் 2007-இல் ஒன்றிய அரசுக் கல்வியில் 27% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அந்த ஆணையிலேயே அது செயல்பாட்டுக்கு வருவதை முடக்கும் வகையில் நிதிமுடை, கல்வி நிலையங்களில் அடிப் படை கட்டமைப்பு போதுமானதாக இல்லை.

பயிற்று விக்க வேண்டிய அளவு ஆசிரியர்கள் இல்லை என்ற பல்வேறு காரணங்களைச் சொல்லி ஆண்டுக்கு 9% ஒதுக்கீடு அளவுக்கு மட்டும் வழங்கி மூன்றாண்டுகளில் 27% இடஒதுக்கீட்டு அளவை எட்டலாம் என்று ஒன்றிய அரசு நயவஞ்சகம் செய்தது. உண்மையில் முதல் தவணை 9% ஒதுக்கீடு கூட மேற்சொன்ன காரணங்க ளைக் காட்டி மேலும் பல ஆண்டுகளுக்குத் தள்ளிப் போடப்பட்டது. இதன் விளைவால் இந்த 2019ஆம் ஆண்டு வரையில் முழுமையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை.

வெகுமக்களுக்கெதிராக அவர்களின் மேம்பாட்டுக்கு எதிராகத் திட்டமிட்டு எவ்வாறெல்லாம் வஞ்சகமாகவும், கயமை எண்ணத்துடனும் இந்திய ஒன்றியப் பார்ப்பனிய சனாதன அரசு அடுக்கடுக்காக தடைகளை ஏற்படுத்தி இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசமைப்புச் சட்டம் கல்வியில் வேலையில் உரிமையாக வழங்கிய ஒதுக்கீட்டை சிதைத்து வந்துள்ளது மட்டுமல்ல.

இந்த மக்கள் பற்றற்ற ஆளும் பார்ப்பனக் கும்பல், மண்டல் குழு ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடு தலைக்காகவும் மேம்பாட்டுக்காகவும் கல்வி, வேலையில் மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரத்தின் பல்வேறு தளங்களான வணிகம், தொழில்கள், நாட்டின் அடிப்படை கட்டுமானம் அமைக்கும் பணிகள் என அனைத் திலும் இடஒதுக்கீடாக அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைகளைக் கருதவே இல்லை என்பதல்ல கொடுமை; நாட்டின் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையமோ, இவர்கள் நலன் பேசும் எந்த அமைப்பும் கட்சியும் பேசவே இல்லை என்பது வன் கொடுமை.

மேற்சொன்ன தன்மையில் உழைக்கும் ஒடுக்கப்பட்ட வெகுமக்கள் எவ்வாறெல்லாம் மனித உரிமை நேரடியாக மறுக்கப்பட்டவர்களானார்கள் என்பதுடன் இவர்கள் மறைமுகமாகவும் முன்னைய இதழ்களில் விரிவாக விவாதித்துள்ளோம். தற்போது 10% இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்துள்ளதை மேலும் விளக்க வேண்டியுள்ளது. எனினும் அதற்கு முன்பாக கற்பனைக் காவிய கதாநாயகனான கண்ணனின் திறனும் ஆற்றல்களும் பல்வகைச் சூழ்ச்சிகளால் முடுக்கப்பட்டு கையறு நிலைக்குத் தள்ளப்பட்டு வீழ்த்தப்படுவது போன்று இவர்கள் காலம் நெடுகிலும் சிதைக்கப்பட் டார்கள் என்பதைக் காட்டிலும் அறநெறி மன்றங்களாலும் அநீதி இழைக்கப்பட்டவர்களாகின்றனர் என் பதையும் இங்குக் காண வேண்டும்.

1992 நவம்பர் 16-இல் உச்ச அற மன்றம் ஒன்றிய அரசு இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பணிகளில் 27% இடஒதுக்கீடு அளித்து வெளியிட்ட ஆணையைச் சட்டப்படி செல்லும் என்றது. ஆனால் அதன் ஊடாகவே எதிர்விளைவைத் தந்து அவர்களின் நலனை முடக்கியும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே ஆணையும் இட்டுவிட்டது.

  1. எந்த நேர்விலும் ஒதுக்கீடு அளவு ஒதுபோதும் 50 விழுக்காட்டுக்கு மிகக்கூடாது. இது விதி 16(4)-இல் எந்த ஏற்பாட்டையும் என்றிருப்பதற்கு எதிரானது. மேலும் அரசின் பார்வையில், வேலை பணிகளிலும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம் போதுமான தாக இல்லை என்றிருப்பின் இடஒதுக்கீடு அளிக்கலாம். அந்தக் காலக்கட்டத்தில் இவர்களில் பங்கு வெறும் நான்கு விழுக்காடு மட்டுமே இருந்தது. உள்ளங்கை நெல்லிக்கனி போலான பொருண்மையான உண்மை நிலை. ஆனால், அதனைச் சற்றும் கருத்தில் கொள்ளாமல் 50 விழுக்காடு மக்கள் தொகையுள்ள அவர்களுக்குப் போதுமான அளவு இடஒதுக்கீடு வேண்டு மென விதி சொல்லியுள்ளதை நிறைவேற்றும் வகை 4 விழுக்காடு அளவில் மட்டும் பணியில் உள்ளனர் என்பதால் அதனை ஈடுகட்டும் வகையில் 50 விழுக்காட்டுக்கு அதிகமாக அளித்திருக்க வேண்டும். இதற்கு மண்டல் குழு பரிந்துரையே தேவையில்லை. இது உச்ச, அற மன்றம் இழைத்த பெரும் அநீதி.
  1. அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 40 ஆண்டுகள் கடந்த நிலையில் 1990-இல் அதிலுள்ள 16(4) விதிப்படி இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பணிகளில் பதவி உயர்வில் ஒதுக்கீடு அளிக்கப்பட்டி ருந்தால்தான் அதில் சொல்லப்பட்டவாறு (முன்பே விளக்கியதுபோல்) போதுமான பங்கு கிடைக்க வாய்ப்புக் கிட்டியிருக்கும். ஆனால் உச்ச அற மன்றம் இங்கும் நெறிதவறித்தான் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஆணை பிறப்பித்து பிற்படுத்தப்பட்டவர்களின் மேம்பாட்டை முடக்கி அநீதி இழைத்துவிட்டது.
  2. இவையெல்லாம் (arbitrary) தன் மனப்போக்கில் அரசமைப்புச்சட்டத்திற்கு எதிராக ஆணையிட்டவை என்பதைக் காட்டிலும், பிற்படுத்தப்பட்டுள்ளோருள் ஆறு வகையினரை எந்த அடிப்படையுமின்றி வளமான பிரிவினர் (creamy layer) என்று கோடிட்டுக் காட்டி விட்டு, அதை அப்படியே அரசின் குழுவின் பரிந்துரை யாகப் பெற்றுக்கொண்டு அவர்கள் கல்வி, சமூகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு விளிம்புக்கு வெளியுள்ளவர்கள் எனச் சொல்லி அவர்கள் இடஒதுக் கீட்டுக்குத் தகுதியற்றவர்கள் என்று ஆணையிட்டது பார்த்தமாத்திரத்திலேயே அடிப்படை இயற்கை நியதிக்கு முரணானது மட்டுமல்ல; அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது. இது கீழ்க்காணும் காரணங்களால் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இழைக்கப் பட்ட மிகப் பெரும் அநீதி.

அ) மண்டல் குழுவின் ஆய்வு முழுமையான தல்ல; போதுமான மாதிரி அளவு (sample size) ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. உண்மையில் 1881 ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரையிலான மக்கள் தொகையை அடிப்படையாகவும், அறி வியற்படியான இணைவுருபருண்மை (Projection) முன்வைக்கப்பட்டு அதன் அடிப்பைடயிலும் சமூகம், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவர்கள் என ஒரு பிரிவினைக் கருதுவதற்கு அப்பிரிவின் படிப்பறிவு, பொருளாதார நிலை, சமூக நிலை, வாழ்கின்ற சூழல், குடிநீர் பெறச் செல்ல வேண்டிய தூரம் எனப் பல அளவுகோல்களை முறையாக வகுத்து, அவற்றை நிறைவு செய்யும் பிரிவினர் மட்டும் என வரையறை வகுத்திருந்தார் மண்டல். உண்மையில் மண்டல் எதிர்கொண்ட ஆய்வுக் கான மிகப்பெரிய விரிந்த இந்திய ஒன்றியப் பரப்பு, 7000-8000 சாதி அமைப்புகளைக் கொண்ட மிகப் பெரும் படிநிலைச் சமூகம், இன்னும் எண்ணிலடங்கா இடையூறுகளையும் இன்னல்களையும் எதிர் கண்டு இரண்டு ஆண்டுகள் நாடெங்கும் விரிவாக பயணித்து ஆழ் ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையிலான முடிவுகளின் துணைகொண்டு பரிந்துரைகள் வடித் தெடுக்கப்பட்டவை.

ஆனால், உச்ச அறமன்றம் சமூகம் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருள் வளமான பிரிவினர் என்று அடையாளங் காணப் பலவகைப் பதவி, பணிகளின் உயர்தன்மைகளைக் கணக்கில் கொள்ளப்பட்டு அவர்கள் இடஒதுக்கீட்டுக்கு விளிம்புக்கு வெளியில் வருவோர் என வரையறுக்கப்பட்டது. இதற்காக எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. உண்மையில் இவையெல்லாம் இரண்டாம் நிலை விவரங்களின் அடிப்படையில் மிகப்பெரும் அரச எந்திரம் எளிதில் ஆய்வு செய்திருக்க முடியும். ஆனால் அப்படி எந்த ஆய்வுமின்றி உச்ச அறமன்றம் கோடிட்டுக் காட்டிய பிரிவினரை வளமானவர்கள் என்று வரையறுத்து விட்டது.

உச்ச அறமன்றம் இடஒதுக்கீட்டு உரிமையுள்ள சமூகக் கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுள் ஆறு வகைப் பிரிவினரை வளமான பிரிவினர் என இட ஒதுக்கீட்டு வளையத்திலிருந்து நீக்கிட வேண்டும் என்கிறது. ஆறாவது பிரிவினர் அவர்களின் பொருளாதார அடிப்படையில் வளமானவர் என்றால் இடஒதுக் கீட்டு தகுதியற்றவர் ஆகிறார். வளமானவர் என்பதற்கு அளவுகோலாக ஒருவரின் ஆண்டு வருமானம் 1993-இல் (அப்போது) ரூ.ஒரு இலக்கத்திற்கு அதிகமாக உடையவர் என வரையறுக்கப்பட்டது. அதாவது இந்த வருமான வரம்பு எந்த ஆய்வின் அடிப்படையிலும் முடிவு செய்யப்படவில்லை.

எனினும் இந்த வருமான வரம்பை எட்டிய பிற்படுத்தப்பட்ட பிரிவினர் சமூக நிலையில் உயர்ந்து விடுகின்றனர். மற்றும் இந்த அளவு வருமானம் உடையவர் கல்வி பெறுவதிலும் இன்னல் இருக்காது. எனவே இந்த அளவு வருமான உடையவர் சமூக அளவிலும், கல்வியிலும் பின் தங்கிய நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு வந்து விடுவதால் இவர்கள் முன்னேறிய வளமான (Creamy Layer) பிரிவுக்குள் வந்து விடுகின்றனர். அடிவேளை ரூ. ஒரு இலக்கத்திற்குக் குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர் வளமான பிரிவுக்குள் வரமாட்டார். ஆனால் அவர்கள் வறியவர் என்றோ, நலிந்தோர் என்றோ கொள்ளப்படாமல் அவர்கள் சமூக நிலையிலும் கல்வி யிலும் பிற்படுத்தப்பட்டோராகக் கருதப்பட்டு இடஒதுக் கீட்டுக்கு உரிமை உரியவராகின்றார் என உச்ச அற நீதிமன்றம் ஆணையிட்டுவிட்டது. இந்த வகையில் உச்சநீதிமன்றம், ஒரு பிற்படுத்தப்பட்டவர் இடஒதுக்கீடு பெறுவதற்கு அவர் சமூக நிலையிலும், கல்வியிலும் மட்டுமின்றி பொருளாதார நிலையிலும் என மூன்று வகையிலும் பிற்படுத்தப்பட்டோராக இருக்க வேண்டு மென வரையறுத்துவிட்டது.

இப்போது 10% இடஒதுக்கீடு சட்டத்தைப் பார்ப்போம் அதாவது மேல்சாதி மக்களுள் ஒருவரின் குடும்ப ஆண்டுக்கு ரூ.8 இலக்கத்திற்குக் குறைவாக இருப்பின் அவரை நலிந்த பிரிவினர் எனச் சொல்லி அவருக்கு இடஒதுக்கீடு வழங்கிடலாம் என்று அந்தப் பிரிவினருக்கு என கல்வியிலும், வேலை, பணிகளிலும் தனியே பத்து விழுக்காடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டு சென்ற நிதி கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அரசமைப்புச் சட்ட விதிகள் 14, 15, 16, 19, 21, 335-ன்படி இந்தப் பத்து விழுக்காட்டுச் சட்டம் அரச மைப்புச் சட்டத்திற்கு எதிராக இயற்றப்ப்டடது என்ப துடன் இந்தச் சட்டம் இயற்றப்பட விதி 46-ஐ ஆதார மாகக் கொள்ளப்பட்டு அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின்மீது நிகழ்த்தப்பட்ட மோசடி என நாம் விரிவாகப் பேசியுள்ளோம். காரணம், விதி 46, பொதுவாக ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட நாட்டி லுள்ள அனைத்து மக்களுள் நலிந்த பிரிவினர்களைக் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெறச் செய்து சமூக அநீதியிலிருந்து அரசு காப்பாற்ற வேண்டு மென்றுதான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் கல்வியி லும், சமூகத்திலும் மேல்சாதி நலிந்தவர் என்ற பிரிவினர் இந்திய ஒன்றிய வரலாற்றில் ஒருபோதும் வேறுபடுத் தப்பட்டவர் (discriminate) எனப் பின்தங்கிய நிலையில் இருந்தவரே அல்ல. எனவே இந்த 10% இடஒதுக்கீடுச் சட்டத்திற்காக மேற்கொண்ட அரசமைப்புச் சட்டத் திருத்தம் அடிப்பைடயிலேயே பிழையானது (inherently error sticken) எனவே இது ஒரு அரசமைப்புச் சட்ட மோசடி.

மேலும் இந்த 10% ஒதுக்கீட்டுச் சட்டம் உச்ச அறமன்றம் விதித்துள்ள இடஒதுக்கீட்டுக்கான 50% உச்ச வரம்பை மீறுவதாக உள்ளது. இது போன்ற 50% வரம்பு மீறிய இடஒதுக்கீடு பற்றிய வழக்குகளில் நாட்டின் உச்ச அற மன்றங்கள் 1990-லிருந்து காலம் நெடுகிலும் அந்த ஒதுக்கீட்டு ஆணைகளைச் சட்டத் திற்கு ஒப்பான உச்ச அறமன்றத் தீர்ப்புக்கு எதிரானது எனச் சொல்லி தள்ளுபடி செய்துள்ளன. எனவே இந்தப் 10% சட்டம் செல்லத்தக்கதல்ல எனத் தள்ளுபடி செய்யப் படவேண்டும்.

இந்த 10% இடஒதுக்கீட்டுச் சட்டத்தின்படி மேல்சாதி யைச் சேர்ந்த ஒருவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 இலக்கத்திற்குள்ளாக இருந்தால் அவர் ‘நலிந்தவர்’ என இடஒதுக்கீடு பெறமுடியும். ஆனால் 1992 நவம்பர் 16-இல் உச்ச அனறமன்றம் வருமான உச்சவரம்பு விதித்து அந்த அளவுக்கு மேல் உள்ள பிற்படுத்தப்பட்ட வர்களை வளமானவர்கள் (creamy layer) என்றும் அவர்கள் இடஒதுக்கீடு பெறும் தகுதியற்றவர் என்றும் தீர்ப்பு அளித்தது. அதன்படி அந்த வருமான உச்ச வரம்புக்குள் வருபவர்கள் வளமான பிரிவினர் அல்லர் என்பதாகச் சொல்ல முடியும். இதுவன்றி அவர்கள் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியவர்கள் என்ப தால் இடஒதுக்கீடு பெறலாம் என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும்.

அதேபோன்று இந்த மேல் சாதி சார்ந்த நலிந்தோரை வளமான பிரிவினர் அல்ல என்றுதான் கொள்ள முடியும். பின் எப்படி அவர்களை நலிந்த பிரிவினர்கள் என்று சொல்வது? அதாவது மேல்சாதி சேர்ந்த ஒருவரின் ஆண்டு வருமான அளவும் அதே வருமானமுடைய பிற்படுத்தப்பட்டவரும் வருமானத் தின் அடிப்படையில் முன்னவர் வளமானவர் அல்ல என்றும் பின்னவர் நலிந்தவர் என்றும் இரு வகை யினராகக் கொள்வது எப்படி? அப்படியெனில் மேல்சாதியினர் என்பதாலேயே அந்த வருமானமுடையவரை நலிந்தவர் என்று சொல்வதாகாதா? இது மிகவும் அடிப்படையான முரண். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால் 10% இடஒதுக்கீடு சட்டம் இயற்கை அறனுக்கு முற்றும் முரணானது. எனவே தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

இதில் நாம் ஒன்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். அடிப்படையில் இவையெல்லாம் ஒட்டுமொத்த ஒடுக்கப் பட்ட மக்களையெல்லாம் மேம்பாடடையப் போதுமானதல்ல. ஆனால் அரசமைப்புச் சட்டத்தில் இவர்களுக் கென்று வழங்கப்பட்ட கல்வி, பணிகளில் இடஒதுக்கீட்டு உரிமையைப் பார்ப்பனிய சனாதன போக்கைக் கொண்ட இந்திய ஒன்றியத்தின் அனைத்து அலுகுகளும் அச்சு ஊடகங்களும் 10% ஒதுக்கீடு சட்டம் மூலம் மறைமுக மாக குறுக்குவழியில் தொடர்ச்சியாக முற்றிலுமாக முடக்கி இவர்களைக் காலமும் சிதைத்துக் கொண்டே தான் இருக்கும். இதனை இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்வதற்கு ஒத்த கருத்துடைய அனைத்து சமூக, அரசியல் சக்திகளும் மிகப்பெரும் அளவில் ஒருங்கிணைந்து செயல்திட்டங்கள் வகுத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டும் அனைத்து வகைப் போராட்ட வடிவங்களையும் கையாண்டும் இந்திய ஒன்றிய அரசைப் பணிய வைத்து அரசமைப்புச் சட்டம் ஒடுக்கப்பட்டோருக்கு வழங்கியுள்ள உரிமைகளை வென்றெடுத்துப் பாதுகாப்போம்.

Pin It