“ஆண்டாள் கோயிலில் ஒன்றும் நடக்கவில்லை. எல்லாம் வீண் வதந்தி. அப்படியெல்லாம் என் சுயமரியாதையை விட்டுவிட மாட்டேன், ரசிகர்களே நம்புங்கள்” என்கிறார் இளையராஜா.

தொலைக்காட்சிகள் அர்த்த மண்டபத்துக்கு வெளியே அவர் நிற்பதை ஒளிபரப்புகின்றன. அவருடன் நின்ற ஜீயர் மட்டும் மண்டபதுக்குள்ளே நுழைவதையும் கேமிராக்கள் காட்டுகின்றன. வதந்திகள் எப்படி கேமிராவுக்கள் நுழைந்தது என்று கேட்காதீர்கள்.

இளைய ராஜாவே ஒரு கடவுள். ஆனாலும் கருவறைக்குள் எல்லோரும் போக முடியாது என்கிறார் ”அந்தப்புறப் பேச்சு”ப் புகழ் கஸ்தூரி.

ஒருமுறை பெரியார் திடலில் இளையராஜாவுக்குப் பாராட்டு விழா நடந்தது. சிம்பொனி இசையமைத்ததற்காக பெரியார் தமிழிசை மன்ற நா.அருணாச்சலம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி. பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை போட அழைத்தார்கள். “முடியாது; நான் கடவுள் நம்பிக்கைக்காரன். பெரியாருக்கு எப்படி மாலை போட முடியும்” என்றார் இசைஞானி.

சுயமரியாதை இயக்கத் தலைவர் பெரியாருக்கு தனது சுயமரியாதையைக் காப்பாற்ற மாலை போட மறுத்தவர். இப்போது அர்த்த மண்டப அவமானத்தை அப்படியே துடைத்தெரிந்துவிட்டு, நான் சுயமரியாதைக்காரன் என்கிறார்.

”நான் என்னையே கடந்து விட்டேன். என்னுடைய ஆன்மீகம் அவமானத்தைப் புறந்தள்ளி விடும்” என்பதே இளையராஜா கருத்தாக இருக்கும் என்று எதிர்ப்பார்த்தோம். அவர் ஏமாற்றவில்லை. அவமானத்தைத் ஆன்மீகத்தால் துடைத்துக் கொண்டார்,

“பெரியார் திரைப்படத்திற்கு இசையமைக்க முதலில் ஒப்புக்கொண்ட இளையராஜா, பிறகு மறுத்து விட்டார். பெரியாரை மறுப்பார், ஜீயர்களின் அவமதிப்பை தலை வணங்கி ஏற்பார். இதில் தான் அவரது சுயமரியாதையே அடங்கியிருக்கிறது.

திருவரங்கம் கோயில் கோபுரம் கட்ட 8 லட்சம் நிதி திரட்டினார். அந்தக் கோபுர விமானத்தில் ஏறுவதற்குக் கூட அனுமதிக்கவில்லை. கோபுரம், கர்ப்பகிரகமோ, அர்த்த மண்டபமோ அல்ல, சூத்திரர்கள் கோயிலுக்குள் நுழையாமல் வீதியில் நின்று தரிசிக்க கண்டுபிடிக்கப்பட்டது தான் கோபுரம்.

அம்பேத்கர் என்ற பெயரை அவர் உச்சரித்ததே இல்லை. திடீரென்று ஒருமுறை அம்பேத்கர் பெயரைக் கூறினார். பிரதமர் மோடி அம்பேத்கரைப் போன்றவர் என்றார். அது என்னப்பா திடீர் பாசம்? பிறகு தான், பா.ஜ.க. அறிவிப்பு வந்தது. மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்ற அறிவிப்பு வந்தது. மாநிலங்களவையில் அவர் இருக்கையில் சென்று ஒருமுறையாவது அமர்ந்தாரா என்பது தெரியவில்லை. அவரது ஆன்மீகம் தடை செய்திருக்கலாம்; ஆன்மீகம் பதவியை ஏற்கும். ஆனால் பதவிக்கான கடமையை மறுக்கும்.

ஆன்மீகத்துக்கு பொருளியல் சக்தி உண்டா என்பது பற்றி நமக்குத் தெரியவில்லை. தன்னுடைய பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பாடியதற்காக உரிமைத் தொகை கேட்டார். ஆனலும் பாடலைக் கேட்டு கைதட்டி மகிழ்ந்த ரசிகர்களும், ஒவ்வொரு கைதட்டலுக்கும் கணக்கிட்டு உரிமைத் தொகை கேட்காமல் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டதைப் பாராட்டத்தான் வேண்டும். அதற்காக நீதிமன்றம் வரை சென்றது அவரது ஆன்மீகம். இசை அமைப்புக்காக படத் தயாரிப்பாளரிடம் ஊதியம் வாங்கியாகி விட்டது. பிறகு பாடலை பாடும் போது எனக்கான உரிமைத் தொகையை எடுத்து வை என்று கேட்பது ஆன்மீகமா? வணிகமா? என்று கேட்கக் கூடாது.

அவரது உடன்பிறந்த தம்பி கங்கை அமரனே கொதித்து எழுந்தார். மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்ட ஒரு மாதத்திலேயே அவரது மகன் யுவன் சங்கர் ராஜா, “நான் ஒரு கருப்பு திராவிடன்; பெருமைமிகுத் தமிழன்” என்று முகநூலில் பதிவிட்டார். இப்படி பல சுயமரியாதைக் குடும்பக் கதைகள் இருக்கின்றன.

“உயிர் போன பிறகு மீண்டும் உயிர்பெற்று வந்தவர் ரமண மகிரிஷி மட்டும் தான். இயேசு உயிர்த்தெழுந்தார் என்பது பொய்” என்று ஒரு பேட்டியளித்தார். அவரது ஆன்மீகம் அறிவியல் வரை இப்படி பரந்து விரிந்தது. மீண்டும் உயிர்த்தெழுந்த ரமண மகரிஷி இப்போது இளையராஜா இதயத்தில் மட்டும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பார் என்று நம்புவோம்.

“புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே” – இது இளையராஜாவின் பாடல். இப்படி புது ராகம் படைத்து இசைக்கு அவர் “இறைவனாக” உரிமைக் கோரலாம். அவருக்கு முழுத் தகுதி உண்டு.

ஆனால் அவர் பேசும் ஆன்மீகம் தான் சகிக்க முடியவில்லை.

- கோடங்குடி மாரிமுத்து