சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது, அரசியல் சட்டத்துக்கு உடன்பாடானதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. “பெண்கள் நுழைவதற்கு தடைவிதிப்பதற்கான அடிப்படை என்ன? இதற்கு நிர்வாகம் முன் வைக்கும் காரணங்கள் எவை? கோயிலுக்குப் போவதோ, போகாமல் இருப்பதோ, பெண்களுக்கான தனிப்பட்ட விருப்பம்.

ஆனால், அவர்களை 1500 ஆண்டுகளாக அனுமதிக்க மறுத்தது ஏன்? அனுமதிக்கக் கூடாது என்பதற்காக உங்களிடம் உள்ள சான்றுகள் எவை? என்று வழக்கை விசாரிக்கும் 3 நீதிபதிகள் ஆயத்தில் ஒருவரான தீபக் மிஸ்ரா, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு கேள்விகளை தொடுத்திருக்கிறார்.

வயதுக் கட்டுப்பாடு இல்லாமல் அனைத்துப் பெண்களையும் அய்யப்பன் கோயில் வழிபாட்டுக்கு அனுமதிக்கக் கோரி, இளம் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் நான்கு பெண் வழக்கறிஞர்கள் தொடர்ந்துள்ள வழக்கு இது.

(தற்போது 10 வயதுக்குக் கீழே உள்ள - 50 வயதுக்கு அதிகமான பெண்கள் மட்டுமே இந்தக் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.) 1987ஆம் ஆண்டில் கன்னட நடிகை ஜெய்மாலா, அய்யப்பன் கோயில் கருவறைக்குள் நுழைந்து, அய்யப்பன் சிலையை தொட்டதாக அவரே வெளியிட்ட தகவலைத் தொடர்ந்து, ஏதோ ‘பூகம்பமே’ வெடித்தது போல் பதறினார்கள்.

சிலை தீட்டாகிவிட்டதாகக் கூறி, தீட்டு கழிக்க ‘சிறப்பு பரிகார பூஜைகள்’ நடத்தப்பட்டன. பழக்க வழக்கங்களுக்கு எதிரானது என்று கூறி, பெண்களின் கோயில் நுழைவுக்கான தடையை 1965ஆம் ஆண்டு கேரள அரசு சட்ட பூர்வமாக்கியது. பிறகு 1991இல் கேரள உயர்நீதிமன்றம் இந்தத் தடையை உறுதி செய்தது.

சமூகத்தின் சரிபாதி எண்ணிக்கை பெண்களுடையது. பெண்கள் பங்கேற்பு இல்லாமல் ஒரு சமூகமே அமைப்பாக முடியாது என்ற நிலையில் அவர்களின் வழிபாட்டு உரிமையையே மறுக்கும் இழிவு - இந்து பார்ப்பனிய சமூகத்தில் மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கோயிலுக்குள் பெண்கள் நுழைவதைத் தடுப்பது சம உரிமைக்கு எதிரானது என்றால், அதே நியாயம் கர்ப்ப கிரகத்தில் நுழைய முடியாது என்பதற்கும் பொருந்தாதா என்று கேட்கிறோம். அரசியல் சட்டங்களைவிட ஆகம விதிகளுக்குத்தான் இந்த நாட்டில் அதிகாரம். இதற்குப் பெயர் தான் ‘சுதந்திர’ நாடா? ஆகமங்களை எழுதியது யார்? எப்போது எழுதப்பட்டது. இப்போது கோயில்களில் பின்பற்றப்படும் ஆகம முறைதான் முறையானவை என்பதற்கு சான்றுகள் உண்டா? இதற்கெல்லாம் விளக்கமோ விடைகளோஇல்லை.

இதே ஆகமங்கள் தொடர்பாக இராமேசுவரம் கோயில் வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கடந்த வாரம் பதிவு செய்துள்ள கருத்துகளை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இராமேசுவரம் இராமநாதசாமி கோயிலுக்கு தமிழக அரசு ‘கும்பாபிஷேகம்’ நடத்த ஜன.20ஆம் தேதியை தேர்வு செய்திருப்பது பொறுத்தமல்ல. அது ‘நல்ல’ நாள் இல்லை. அத்துடன் சிதைந்து போயிருக்கும் ‘பர்வதவர்த்தினி’ சிலையை சீர் செய்யாமல், குடமுழுக்கு நடத்துவது ஆகமத்துக்கு எதிரானது என்பது வழக்கு.

இதற்கு நீதிபதிகள் தந்துள்ள விளக்கம் இதுதான். “இப்போது எல்லா ஆகமங்களும் கிடைத்திடவில்லை. கூறப்படும் ஆகமங்களுக்கும், ஒவ்வொரு பண்டிதரும் வெவ்வேறு விளக்கங்களைத் தருகிறார்கள். சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், கவுரம், கானபத்யம் என்ற

6 பிரிவுகளுக்கும் தனித்தனி ஆகமங்கள் இருந்தன. இவை எல்லா வற்றையும் ஆதிசங்கரர் ஒருங்கிணைத்து ஒரே மதமாக்கியபோதே பல ஆகமங்கள் தொலைந்துவிட்டன. இப்போது எஞ்சியிருப்பது 28 சைவ ஆகமங்களும் இரண்டு பிரதான வைணவ ஆகமங்கள் மட்டும்தான். இந்த ஆகமங்களுக்கும் வெவ்வேறு  விளக்கங்களே தரப்படுகின்றன” (‘தி இந்து’ ஜன.9, 2016) என்று நீதிபதிகள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

இதேபோல் கோயில்கள் பற்றியும் இதே தீர்ப்பில் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ள கருத்துகளும் குறிப்பிடத்தக்கதாகும். “தமிழக வரலாற்றில் மன்னர்கள் பல கோயில்களை கட்டியதே தங்களின் நலனுக்காகவும், தங்கள் பரம்பரை ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காகவும்தான். போரில் தங்களுக்கான வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கத்திலும் பல கோயில்களை கட்டினார்கள். இப்போது மன்னராட்சி போய், ‘ஜனநாயகம்’ வந்து விட்டது.

அப்போது போரில் வெற்றி பெற கோயில்களைக் கட்டினார்கள் என்றால், இப்போது தேர்தலில் வெற்றி பெற, ஆண் கடவுள், பெண் கடவுள்களை மகிழ்விக்கும் சடங்குகளை நிகழ்த்து கிறார்கள். அரசர் காலத்தில் நடந்தது தான் இப்போதும் தொடர்கிறது.

ஒரு வேளை, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆட்சிக்கு வந்தால், இதுபோன்ற நிகழ்வுகளில் ஆட்சியின் தலையீடு இல்லாமல், கோயில் நிர்வாகத்துக்கே முடிவுகளை எடுக்கும் உரிமைகளை வழங்கக் கூடும்” (‘தி இந்து’, ஜன.8) என்றும் நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கடவுள், மத நம்பிக்கை இல்லாதவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வரும் போதுதான் கோயில்கள் முழு சுதந்திரமாக செயல்படும் வாய்ப்புகள் உண்டு என்று நீதிமன்றமே சுட்டிக்காட்டியிருக்கிறது. ((After democracy replaced monarchy, elections have taken the place of wars and the tradition of propitiating certain Gods and Goddesses for the purpose of winning appears to have continued. Perhaps, if a country is ruled by non-believers, they may leave it entirely to the wisdom of the persons in management of temples to decide all these matters.)

கோயில் அதிகாரம், ஆட்சி அதிகாரம் இரண்டுமே பார்ப்பனர்களின் சுய நலன், ஆதிக்க நலன், அதிகார வெறிக்கு ஏற்பவே மாற்றி அமைக்கப்படுவதையே இத்தீர்ப்புகளிலிருந்து உணர முடிகிறது.

ஆகமங்கள், பழக்க வழக்கங்கள் என்ற போர்வைக்குள் பார்ப்பனர்கள் நாட்டின் பெரும்பான்மை மக்களான பெண்கள், ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’களின் சுயமரியாதையை மறுக்கும் நிலை

இனியும் தொடரத்தான் வேண்டுமா? என்ற கேள்வி வெடிக்கத் தொடங்கி விட்டது. கேரளத்து அய்யப்பன், தமிழகத்து இராமநாதசாமி

கோயில் வழக்குகளில் நீதிமன்றங்களின் கருத்துகள் தரும் வெளிச்சங் களிலிருந்து நாம் முன் வைக்க வேண்டிய கேள்வி இதுவாகத்தான் இருக்க முடியும்.

ஆகமங்களும் அதன் விதிகளும் இனியும் தேவை தானா?

Pin It