லண்டன் மாநகரமாகிய வைகுண்டத்திலே ஜார்ஜ் மன்னராகிய மகா விஷ்ணுவானவர் பார்லிமெண்டு என்னும் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கின்றார்:-

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ கே.நடராஜன், சி. ராஜகோபாலாச்சாரி, வி.எஸ். சீனிவாச சாஸ்திரி, எஸ். சீனிவாசய்யங்கார், சிவசாமி அய்யர், வெங்கிட்டரமண சாஸ்திரி, சி.பி.ராமசாமி அய்யர், டி.ரங்காச்சாரி, டி.ஆர். ராமச்சந்திரய்யர், எம்.கே. ஆச்சாரி, சத்தியமூர்த்தி முதலாகிய அநேக பூதேவர்கள் போய் கால்மாட்டில் நின்று கொண்டு தவம் செய்கின்றார்கள்.

மகாவிஷ்ணு :- (தேவர்கள் தவத்திற்கிரங்கி) ஹே பூதேவர்களே! எங்கு வந்தீர்கள்?

பூதேவர்கள் :- ஆபத்பாந்தவா! அனாதரக்ஷகா! தங்களிடம்தான் வந்தோம்.

ம.வி.:- என்ன விசேஷம்?

பூ.தே:- தேவர்களுக்கு ஏதாவது இடுக்கண் வந்தால் அதைத் தடுக்கத் தங்களையன்றி இந்த உலகத்தில் யார் இருக்கின்றார்கள்? எனவே தங்களிடம் வந்தோம்.

periyar nagammai 350ம.வி.:- என்ன விசேஷம்?

பூ.தே :- மகாப்பிரபூ. பழையபடி ராக்ஷதர்களுடைய ஆதிக்கம் வலுத்துவிட்டது. பூதேவர்களாகிய எங்கள் நிலை இருப்பதா? இறப்பதா? என ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றது இந்தச் சமயம் தாங்கள் அருள்புரிய வில்லையானால் பூலோகமே சாம்பலாய்ப் போய்விடும். பூலோகமே இல்லை யானால் மகாவிஷ்ணுவாகிய தாங்கள் பாடு கூட திண்டாட்டமாய்விடும். தங்களை வணங்கவோ, தங்களுக்கு பூஜை, ஆராதனைகள், உற்சவம்முதலிய வைகள் செய்யவோ கூட யாரும் இருக்க மாட்டார்கள் வணங்காததும் பூஜிக்காததுமான பகவான் இருந்தென்ன ஒழிந்தென்ன? எனவே இந்தச் சமயம் தாங்கள் கிருபை கூர்ந்து எங்களைக் கடாக்ஷித்தருள வேண்டும்.

ம.வி.:- என்ன! என்ன!! உங்களுக்கு அப்பேர்ப்பட்ட கஷ்டம் என்ன வந்தது? சங்கதியைச் சொல்லுங்கள்.

பூ.தே.:- பிரபுவே! முன்யுகங்களில் தேவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் போல இப்போது பெரிய ஆபத்துகள் வந்திருக்கின்றது.

ம.வி. :- எப்படி வந்திருக்கிறது? சீக்கிரம் விவரமாய்ச் சொல்லுங்கள்.

பூ.தே:- எப்படியோ வந்துவிட்டது! பெரிய உபத்திரவமாயிருக்கின்றது! ஒவ்வொரு யுகங்களிலும், தேவர்களுக்கு இடர்கள் செய்ய அசுரர் களாகவும், அரக்கர்களாகவும், ராக்ஷதர்களாகவும் வந்து எங்களை இடர்கள் செய்யும் போது பகவானாகிய தாங்கள் தான் பல அவதாரங்களாக வெளிக் கிளம்பி, இராக்ஷதர்களையெல்லாம் அழித்து எங்களையும் எங்கள் உயர்வா கிய வேதங்களையும் உத்தியோகங்களாகிய யாகத்தையும் காத்தருளி வருகிறீர்கள்.

ம.வி:- ஆம்! அது உண்மைதான்!

பூ.தே:- பிரபுவே! இந்த யுகத்திலும். அதுபோலவே ஒரு ராக்ஷதன் தோன்றிவிட்டான். அவன் எங்களுடைய பெரிய பெரிய உத்தியோமாகிய யாகத்திலும் வேதத்திலும் கையை வைத்து அவைகளை யெல்லாம் அடியோடு ஒழிக்கப்பார்க்கிறான்.

ம.வி :- அப்படிப்பட்ட ராக்ஷதன் யார்?

பூ.தே.:- பிரபுவே! அவன்தான் சுயமரியாதை என்று சொல்லப்பட்ட இராக்ஷதன். அவன் இப்போது தேவர்களாகிய எங்களுக்கு மாத்திரம் துன்பம் விளைவிக்கின்றான் என்றோ, எங்களுடைய உத்தியோகங்களாகிய யாகத்தை மாத்திரம் அழிக்கின்றான் என்றோ கவலையீனமாய் இருந்து விடாதீர்கள். நாங்கள் ஒழிந்தால் பகவானாகிய தாங்களும் ஒழிந்து போவது நிச்சயம். ஏனென்றால் எங்களை ஒழித்தால்தான் தங்களை ஒழிக்க முடியுமென்று நினைத்து முடிவு செய்து தங்களை ஒழிப்பதற்காகவே முதலில் எங்களை ஒழிக்கின்றானாம்.

ம.வி.:- அப்படியா! அப்பேர்ப்பட்ட ராக்ஷதனா அவன்? அவனுக்கு இவ்வளவு சக்தி எப்படி வந்தது?

பூ.தே.:- அவன் மகா தவசிரேஷ்டன். பெரிய பெரிய தவங்கள் செய்து அதன் மூலம் பெரிய பெரிய வரங்களைப் பெற்றுவிட்டான். அன்றியும் தக்க ஆயுதங்கள் அவனிடமிருக்கின்றன. அவ்வாயுதங்களுக்குப் பயந்து கொண்டு சில்லரை தேவதைகளும், தங்கள் பரிவாரங்களும் கூட அவனது பரிவாரங்களாக இருக்கின்றன. அவனைக் கண்டால் நடுங்காத முனிகள் இல்லை. ரிஷிகள் இல்லை.

ம.வி. :- அப்படியா அவன் செய்யும் கொடுமை என்ன?

பூ.தே:- மதம் பொய் என்கிறான்; வேதம் பொய் என்கின்றான். புராணம் பொய் என்கின்றான். பராசர் ஸ்மிருதி பொய்யாம் மனுதர்ம சாஸ்திரம் பொய்யாம் எல்லாம் பொய் என்கின்றான்; ராமாயணம் பொய்யாம் பாரதம் பொய்யாம் திருவிளையாடல் புராணம் பொய்யாம் பெரியபுராணம்கூட பொய்யாம் தேவர்களைக் கண்டதார் விஷ்ணுவைக் கண்டதார் சிவனைக் கண்டதார் எல்லோரும் பொய் என்கின்றான். இருக்கின்றதாக அகச்சான்று, புறச்சான்று காட்டினாலோ காட்டுகின்றவர்கள் எல்லோரையும் அயோக்கியர்கள், அன்னக்காவடிகள் என்கின்றான். அவனுடைய உபத்திரவத்தினால் புராணங்களே விற்பனை ஆவதில்லை. காலnக்ஷபங்களே நடைபெறுவ தில்லை இவைகள் போனாலும் போகட்டும் எங்கள் யாகங்கள் நடைபெறு வதில்லை அவனால் எங்களுக்கு வெகு நஷ்டமாயிருக்கின்றது.

ம.வி.:- அப்படியா, சொல்லுகின்றான்?

பூ.தே.:- ஆமாம் பகவானே!

ம.வி:- இன்னம் என்ன செய்கிறான்?

பூ.தே:- நாள் பொய் என்கின்றான், திதி பொய் என்கிறான், சடங்கு பொய் என்கின்றான், தேர் பொய் என்கிறான், திருவிழா பொய் என்கிறான்!

ம.வி:- சரி; இவ்வளவையும் பொய் என்கின்றானா?

பூ.தே:-ஆம் பிரபூ!மற்றும் இவனுடைய உபத்திரவத்தினாலே புஸ்தகக் கடைக்காரன் பட்டினி, புராணக் கடைக்காரன் பட்டினி, புராணப் பிரசங்க பண்டிதன் பட்டினி, புரோகிதன் பட்டினி, அர்ச்சகன் பட்டினி, குருமார் பட்டினி, சமயப் பிரசாரகன் பட்டினி, நல்ல ஆங்கிலம் படித்த சாஸ்திரிகள், சாதுக்கள் எல்லாம் பட்டினி கிடக்கும் படியாகிவிட்டது! இதைப்பற்றிக் கேட்டால் மூட்டை தூக்கி மண்வெட்டி வயிறு வளர்க்கச் சொல்லுகிறான்; கொடுமை! கொடுமை!! சகிக்க முடியவில்லை.

ம.வி:- நமது கடவுள் தன்மையைப் பற்றி என்ன சொல்லுகின்றான் அதையாவது ஒப்புக் கொள்ளுகின்றானா இல்லையா.

பூ.தே:- கடவுளைப் பற்றிச் சொன்னால் எனக்கு அவசியமில்லை என்கின்றான். கடவுள் உண்டா? இல்லையா? என்றால் நான் அதைப்பற்றிக் கவலைப்படுவதே கிடையாது என்கின்றான். கடவுள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அதைப்பற்றி உனக்கென்ன கவலை என்கின்றான்.

ம.வி:- பின்னை, அவன் எதைத்தான் ஒப்புக்கொள்ளுகின்றான்?

பூ.தே:- அவன் மனிதனுக்கு மனிதன் அன்பு, இரக்கம், உதவி, ஒழுக்கம் இவற்றைத்தவிர மற்றொன்றையும் மதிப்பதில்லை என்கின்றான்.

ம.வி:-அப்படியானால், இவற்றை எல்லாம் உலகம் ஒப்புக் கொள்ளுகிறதா?

பூ.தே:- ஒப்புக் கொள்ளுகிறதே, இதுதானே ஆச்சரியமாயி ருக்கின்றது. ஒப்புக் கொள்ளுவது மாத்திரமா? இந்த சமயம் நாங்கள் தெருவில் ஒண்டியாய் போகிறதே ஆபத்தாய் இருக்கிறது!

ம.வி:- நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? நீங்களும் எதிர்த்துப் போர் செய்வதுதானே!

பூ.தே:- நாங்களும் எங்களால் கூடியவரை பார்த்தோம். எங்கள் ஆயுதங்களாக அந்த ராக்ஷதக் கூட்டத்திலிருந்தே சில ஆட்களைக் கைப்பற்றி, அதன் மூலமாகவும் போரிட்டுப் பார்த்தோம். அவர்கள் ஆயுதங் களும் எங்கள் ஆயுதங்களும் நாங்கள் கூலிக்குப் பிடித்த ஆயுதங்களும், எல்லாம் அவன் ஆயுதங்களுக்கு முன்னால் முனை மழுங்கிப் போய்விட்டது.

ம.வி:- அப்பேர்ப்பட்ட அந்த ராக்ஷதனுடைய ஆயுதந்தான் என்ன?

பூ.தே:- குடி அரசு, திராவிடன், குமரன், நாடார்குலமித்திரன், தமிழன், விஸ்வநேசன், சிங்கப்பூர் முன்னேற்றம், சுயமரியாதைத் தொண்டன் முதலிய அநேக ஆயுதங்களின் வலிமை எங்கள் ஆயுதங்களின் முனைகளை எல்லாம் மழுங்கவைத்துவிட்டன. எங்கள் கூலி ஆயுதங்களும் உறை இல்லாமல் வெளியே தலைநீட்ட முடியவில்லை. இப்போது நாங்கள் செத்த பாம்பை ஆட்டுவதுபோல் பொய் வேஷம் போட்டுக் கொண்டு திரிந்து பார்த்தும், வேறு மார்க்கமில்லாததால் தங்கள் பாதத்தில் வந்து விழுந்து விட்டோம். தாங்கள்தான் எங்களைக் காப்பற்ற வேண்டும். தங்கள் பரிவாரங் களான சைமன் கமீஷன் என்னும் உபதேவர்களை நாங்கள் அறியாமல் பகிஷ்காரம் செய்துவிட்டோம். அதைத் தயவு செய்து மன்னிக்க வேண்டும்.

ம.வி:- இதற்காக என்னை என்ன செய்யச் சொல்லுகின்றீர்கள்.

பூ.தே.:- தங்களிடமுள்ள சில பாணங்களைக் கேட்க வந்திருக்கின் றோம்.

ம.வி:- என்ன பாணம்?

பூ.தே:- 124-ஏ, 153ஏ ஆகிய பாணங்கள் வேண்டும்.

ம.வி:- ஏன் 144- பாணம் வேண்டாமா?

பூ.தே:- 144 அவனிடம் செல்லாது. அது சரமாரியாய் அவன்மேல் விடப்பட்டும் அவைகள் அவனிடம் போய் போய் அவன் பாதத்தில் விழுந்து நமஸ்காரம் செய்துவிட்டு வந்தவிட்டதோடு மாத்திரமல்லாமல் திரும்பிவந்து எய்தவர்கள் மீதும் கூட சில சமயங்களில் பாய்ந்து விடுகின்றது.

ம.வி.:- சரி, நாம் நமது தூதர்களை முதலில் உங்கள் லோகத்திற்கு அனுப்புகிறோம். அவர்களைக் கொண்டு பூலோக நிலை அறிந்து பிறகு வேண்டியது போல் செய்வோம்!

பூ.தே:- பிரபுவே! தங்கள் தூதர்கள் யார்? தயவு செய்து அதைக் கொஞ்சம் தெரிவித்துவிட்டால் நாங்கள் ஜாக்கிரதையாயிருக்க அனுகூல மாயிருக்கும்.

ம.வி.:- நமது தூதர்கள் சைமன் கமிஷனர்கள். அவர்களிடம் முறைகளை மெய்ப்பியுங்கள்.

பூ.தே:- நாங்கள் அறியாத புத்தியினால், தங்கள் தூதர்களை ஆதியில் அலக்ஷிமாய்க் கருதிவிட்டோம். அதனால் வந்த வினைப் பகுதி என்று கூடச் சொல்லலாம். ஆனாலும் இப்போது அவர்களிடம் சொல்லிக் கொள்ளுவது எங்களுக்குக் கொஞ்சம் அவமானமாயிருக்கின்றதே.

ம.வி.:- நேரில் தெரிவிக்காவிட்டால் பாதகமில்லை மறைமுகமாக வேறு ஏதாவது வழிகளில் தெரிவித்து விடுங்கள்!

பூ.தே:- அப்படியே ஆகட்டும், பிரபுவே! எப்படியாவது இந்தச் சமயம் எங்களைக் காப்பாற்றுங்கள்! இல்லாவிட்டால். தங்களுக்கும் எங்களுக்கும் இரண்டு பேருக்குமே ஆபத்து வந்துவிடும். இதை நன்றாய் மனதில் வையுங் கள்.

ம.வி :- நம்மைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்கள் காரி யத்தை நீங்கள் ஜாக்கிரதையாய் பார்த்துக்கொள்ளுங்கள். சரி போய் வாருங்கள்.

(சித்திரபுத்திரன் என்ற பெயரில் பெரியார் எழுதியது; குடி அரசு - உரையாடல் - 10.03.1929)

Pin It