மயிலாடுதுறையில் எழுச்சியுடன் நடைபெற்ற கழகப் பொதுக்கூட்டம்
நாகை மாவட்டம் வழுவூர் திருநாள் கொண்ட சேரி தலித் மக்கள் மீதான ஜாதிய அடக்கு முறைகளை கண்டித்து ஜாதிக்கொரு சுடுகாடு! ‘இது சமத்துவ நாடா?’ என்கிற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நாகை மாவட்ட செயலாளர் தெ.மகேஷ் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
இந்தியாவில் பிறக்கும் குடிமக்கள், பிறக்கும்போதே ஜாதி அடையாளத் துடன் தான் பிறக்கிறார்கள். நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே என்று மயானத்தில் நின்று பாடுவதாக பழைய சினிமா பாடல் ஒன்று உண்டு. ஆனால் நடைமுறையில் இறந்த பிறகும் ஜாதி அடையாளம் மக்களை விடுவதில்லை. மதம் மாறினா லும் அது நிழல் எனத் தொடர்கிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் சமத்துவ உரிமையை அடிப்படை உரிமை என பிரகடனப்படுத்துகிறது. தலித்துகள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனாலும் கூட இந்தியாவில் தீண்டாமை கொடுமை பல வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. திருநாள்கொண்டசேரியில் தலித் முதியவர் செல்லமுத்து மரணத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் பொதுப்பாதையில் உடலை எடுத்து செல்ல மறுத்து எளிய மக்கள் மீது அடக்கு முறைகளை கட்டவிழ்த்த தமிழக அரசின் செயல் என்பது வெட்கி தலைகுனியக் கூடியது.
இச்செயலை கண்டித்துதான் மயிலாடுதுறையில் பொதுக்கூட்டம் சின்னகடைத் தெருவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நாகை மாவட்ட காவல்துறையினர் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். நாகை மாவட்ட நிர்வாகிகள் உடனடியாக கழக வழக்கறிஞர்கள்
துரை அருண், திருமூர்த்தி மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி பெற்று மயிலாடுதுறை விஜயா தியேட்டர் அருகில் எழுச்சியுடன் கூட்டத்தை நடத்தினர்.
முன்னதாக வந்திருந்த அனைவரையும் நகர செயலாளர் தமிழ்வேலன் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் அன்பரசன், நகர தலைவர் நாஞ்சில் சங்கர், நகர துணை செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர். தொடர்ந்து விடுதலை தமிழ்புலிகள் கட்சி நாகை மாவட்ட செயலாளர் குமாரவேல், தமிழர் உரிமை இயக்கம் அய்யா சுரேஷ், குடியுரிமை பாதுகாப்புக்குழு தனவேந்திரன், திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, கிழக்கு கடல் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சங்கர், ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தொடர்ந்து எழுத்தாளர் வே.மதிமாறன், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். தலைமைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இளையராஜா நன்றி கூறினார். பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு மாணவர்கழக மாநில அமைப்பாளர் பாரி சிவக்குமார்,
தஞ்சை மாவட்ட முன்னாள் அமைப்பாளர் பாரி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் துரை அருண் உட்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தி மன்னை இரா.காளிதாசு