இந்திய அரசியலமைப்பு - இந்தியாவை ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்று அறிவிக்கிறது. மாநிலங்கள் இல்லாமல் இந்தியா என்ற நாடு இல்லை; ஆனால் மாநிலங்களின் ‘இறையாண்மை’யை ஒடுக்கி, இந்தியாவை ஒற்றை தேசமாக்கி ஒற்றைப் பண்பாடு என்ற பெயரில் பார்ப்பனிய - வேத மதப் பண்பாட்டை - நடுவண் பா.ஜ.க. ஆட்சி கல்வி, மொழி, உணவு, பண்பாட்டுத் துறைகளில் திணித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே மாநிலப் பட்டியலிலிருந்த கல்வி உரிமை பறிக்கப்பட்டு, ஆள் தூக்கி அடக்குமுறை சட்டங்களும் மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டன.

இந்த நிலையில் இந்த உரிமை பறிப்புகளைத் தடுத்திடவும், தமிழ்நாட்டுக்கே உரிய சமூக நீதி - சுயமரியாதைப் பண்பாடுகளை பாதுகாத்து வளர்த்தெடுக்கவும் தமிழ்நாட்டுக்கு தனியான அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொள்ளும் உரிமைப் போராட்டத்தை தொடங்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது. அண்டை நாடான மியான்மார் நாட்டில் இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக ஆட்சி மலர்ந்துள்ள நிலையில் அந்நாட்டில் அடங்கியுள்ள

7 மாநிலங்கள் - 7 மண்டலப் பிரதேசங்கள் தனித்தனியாக அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்று மியான்மார் அரசே முடிவெடுத்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆயுதம் தாங்கிப் போரிட்ட போராளிக் குழுக்களுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகிறது. மாறி வரும் சர்வதேச சூழல்களைக் கருத்தில் கொண்டு ஒற்றை ஆட்சி - ஒற்றைப் பண்பாட்டுத் திணிப்பை எதிர்க்க தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் தனித்தனியாக அரசியல் சட்டத்தை உருவாக்கிட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

அய்.நா. பொது அவையின் உரிமை சாசனத்தில் 1514(15)வது பிரிவு 1960ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பு வழங்கியுள்ள தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் இந்தியாவின் பன்முகத் தன்மை பன்முகக் கலாச்சாரத்தைக் காப்பாற்றிட விரும்பும் தேசிய இனங்கள் விரும்பினால் பிரிந்து போகும் உரிமையுள்ள சுய நிர்ணய உரிமை கொண்ட தன்னாட்சி என்ற இலட்சியத்தை நோக்கிய விவாதங்களைத் தொடர வேண்டிய அவசியத்தையும் இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது.

- சென்னை கழக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

Pin It