வ.உ.சி இன் 150 (05.09.2021) ஆவது பிறந்தநாள் முடிந்துள்ளது. தமிழ்நாடு அரசு அவருக்கு சிலை, மணிமண்டபம் எழுப்புவது உள்ளிட்ட சிறப்பான முடிவுகளை எடுத்துள்ளது. வ.உ.சி பற்றி ஏராளமான கட்டுரைகள் ஏடுகளில் வந்துள்ளன. காங்கிரஸ் கட்சியில் அவர் சில ஆண்டுகாலம் மட்டுமே இருந்திருந்தாலும் கூட அவர் சமூக நீதிக் கொள்கையிலும், பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும் அவர் மிக நெருக்கமாக இருந்த வரலாற்றை நாம் நினைவூட்ட வேண்டும். ஏராளமாக அவரைப் பற்றி கூற முடியும்.

voc letter1927 ஆம் ஆண்டு நவம்பர் 5, 6 தேதிகளில் சேலம் மாவட்ட காங்கிரஸ் மாநாட்டிற்கு வ.உ.சி தலைமை தாங்கினார். அந்த மாநாட்டில் சூத்திரன் என்ற பதம் பொது ஆவணங்களில் இருந்து நீக்கப்பட வேண்டும். பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யும் தீர்மானத்தை, வ.உ.சி தனது முயற்சியால் நிறைவேற்றச் செய்தார்.

சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்களால் எழுதப்பட்ட ‘ஞான சூரியன்’ என்ற நூல் இந்து மதத்தில் பார்ப்பனப் புரட்டுகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய ஒரு நூலாகும். 1928ஆம் ஆண்டு பெரியார் இந்த நூலை சுயமரியாதை பிரச்சார நிறுவன கழகத்தால் வெளியிட்டார். இந்த நூலுக்கு முன்னுரை எழுதியது வ.உ.சி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த முன்னுரையில் அவர் ஒரு பகுதியில், “பிராமணப் புரோகிதர்களும், பூசாரிகளும் பிராமணர் அல்லாதவர்களின் பொருள்களை கவருவதற்கு தொன்று தொட்டு செய்து வரும் சூழ்ச்சிகளையும், கொலைகளையும் இந்த நூல் விரிவாக எடுத்துக் கூறுகிறது. பிராமணப் புரோகிதர்களையும் பூசாரி களையும் இந்த மக்கள் இன்னும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? என்ற கேள்வியையும் இந்த நூல் எழுப்புகிறது. இந்து சமயம் என்பதன் பொய்களையும், புரட்டுகளையும், ஆபாசங்களையும் அச்சமயம் பெயரால் செய்யப்படுகின்ற சடங்குகளின் வாயிலாக பிராமணரல்லாதார் தாழ்த்தப்படுவதையும் அக்கொள்கை யிலிருந்தும், தாழ்விலிருந்தும் பிராமணரல்லாதார் தப்பி வர வேண்டிய அவசியத்தையும் இந்த நூல் விளக்குகிறது” என்று அவர் குறிப்பிட்டிருப்பதோடு சைவர்களையும் கடுமையாக சாடுகிறார். இப்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது ஆகமத்துக்கு எதிரானது என்று கூச்சல் போடும் பார்ப்பனர்களுக்கு அப்போதே வ.உ.சி. இந்த முன்னுரையில் பதிலளித்துள்ளார்.

“வட மொழி ஆகமங்களை ஏற்றுக் கொண்டு சிவாலயங்களில் நடத்தப்படுகின்ற வழிபாட்டு முறைகளிலிருந்து சைவர்கள் விடுபட்டு பார்ப்பனர்கள் பிடியிலிருந்து வெளியே வரவேண்டும். ஜாதி பேதமே காணாத திருக்குறள் தமிழ் மக்களிடத்தில் சென்று சேரவேண்டும்” என்று கூறியுள்ளார்.

காங்கிரசில் திலகர் ஆதரவு அணியில் அவர் இடம் பெற்றிருந்தாலும், அவரது பார்ப்பனிய கருத்துகளை வ.உ.சி. ஏற்கவில்லை. திலகர் கீதைக்கு ஆதரவாக உரை எழுதினார். வ.உ.சி. கீதையை மறுத்து எழுதினார். அயர்லாந்து நாட்டைச் சார்ந்த அன்னிபெசன்ட், இந்தியாவில் ‘தியாசபிக்கல் சொசைட்டியை’ உருவாக்கி, ஸ்மார்த்த பார்ப்பனர்களின் ஆதரவாக செயல்பட்டார். அவர் திலகர் ஆதரவாளர்; ஆனால் வ.உ.சி. , அன்னிபெசன்ட் அம்மையாரின் பார்ப்பனியத்தை எதிர்த்தார்.

1927இல் சேலத்தில் பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் பங்கேற்று, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்துப் பேசியதோடு ஜாதி எதிர்ப்பையும் வெளிப்படுத்தினார்.

1919இல் அமிர்தசரஸ் நகரில் காங்கிரஸ் மாநாடு நடந்தபோது, பெரியார் பயணமானார். அப்போதெல்லாம் தொடர்வண்டியில் முதல் வகுப்பில் பயணம் செய்தவர் பெரியார். மாநாட்டில் பங்கேற்க முடியாத அளவுக்கு வறுமையில் இருந்தார் வ.உ.சி. சேதி அறிந்த பெரியார், தண்டபாணி பிள்ளையிடம், தனது முதல் வகுப்புப் பயண டிக்கெட்டை மூன்றாம் வகுப்புக்கு மாற்றி, எஞ்சியப் பணத்தை வ.உ.சி.யிடமே கொடுக்கத் செய்தார். அவர் திரும்பி வருவதற்கு பணம் வேண்டும் என்பதற்காக!

1928இல் நாகப்பட்டினத்தில் ‘தேச பக்த சமாஜம்’ அமைப்பின் 7ஆம் ஆண்டு விழவில் பெரியார் படத்தைத் திறந்து வைத்து வ.உ.சி. பேசினார். அவரது உரையில் இவ்வாறு கூறினார்:

“திரு. இராமசாமி நாயக்கரைப் பற்றி, நான் அதிகம் சொல்ல வேண்டிய தில்லை. அவரைப் பற்றி அய்ரோப்பாவிலே உள்ள பார்லிமெண்டில் பேசப்படுகிறது என்றால் நாயக்கரின் புகழைப் பற்றி நான் என்ன சொல்வது?

திரு. நாயக்கரிடத்திலுள்ள விசேஷ குணம் என்னவென்றால், மனதிற்படும் உண்மையை ஒளிக்காமல் சொல்லும் ஓர் உத்தம குணந் தான். அவரை எனக்கு 20 வருடமாய்த் தெரியும். அவரும் நானும் ஒரே இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தோம். அதில் (காங்கிரஸ்) நேர்மையற்றவர்கள் சிலர் வந்து புகுந்தபின், நானும் அவரும் விலகிவிட்டோம். பிறகு நாயக்கர் அவர்களால் ஆரம்பித்து நடத்தப் பெறும் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்து, இது எல்லா இயக்கத்திலும் நல்ல இயக்க மாயிருப்பதால், நானும் என்னாலான உதவியை அவ்வியக்கத்துக்குச் செய்து வருகிறேன். சுருங்கச் சொல்லின், நாயக்கரவர்கள் தமிழ் நாட்டின் எல்லாத் தலைவர்களையும்விடப் பெரிய தியாகி என்றுதான் சொல்ல வேண்டும்.” (ஆதாரம்: சாமி சிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்’ நூல்)

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வ.உ.சி. தியாகத்தைப் போற்றிட வ.உ.சி.க்கு சிலை, வரலாற்று விளக்கக் கண்காட்சி நினைவிடங்கள் அமைக்கும் அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.

பெரியார் நடத்திய வகுப்புரிமை மாநாடுகளில் பங்கேற்று வகுப்புரிமை கொள்கையை தீவிரமாக ஆதரித்தவர் வ.உ.சி.

(8, 15, 22.10.2020 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழ்களில் வ.உ.சி. குறித்து - கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை முழுமையாக வெளி வந்துள்ளது)

Pin It