தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அயோத்திதாசப் பண்டிதருக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்பை சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளார். அயோத்திதாசர் பற்றிய சில வரலாற்றுக் குறிப்புகளை இளைய தலைமுறைக்கு இங்கே தொகுத்து தருகிறோம்.

ayothidasar 340• 1845ஆம் ஆண்டு மே 20ஆம் நாள் சென்னை தேனாம்பேட்டையில் கந்தசாமி இணையருக்குப் பிறந்த குழந்தை காத்தவராயன். சித்த மருத்துவத்தைப் பரம்பரைத் தொழிலாகக் கொண்ட குடும்பம். சென்னை காசிமேடு பகுதியில் வாழ்ந்த வீ.அயோத்திதாசர் என்ற பன்மொழி அறிந்த பெரும் புலவரிடம் இளமையில் கல்வி கற்றார். அவர் நினைவாக தனது பெயரை அயோத்திதாசர் என்று மாற்றிக் கொண்டார்.

• “உயர் நிலையையும் இடை நிலையையும் கடை நிலையையும் பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை மற்றும் நேர்மையைக் கற்பிப்பதற்காக”, 1907ஆம் ஆண்டில் அவர் தொடங்கிய ‘ஒரு பைசா தமிழன்’ ஏடு, பிறகு ‘தமிழன்’ என்று பெயர் மாறி, அவர் இறக்கும் வரை (5.5.1914) 7 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளி வந்து உணர்வலைகளை உசுப்பி விட்டது.

• அவர் பெரியார் காலத்துக்கு முந்தையவர். 1881இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, தனது சமூகத்தினர் ‘பறையர்’ என்று பதிவிடக் கூடாது; ‘சாதியற்ற திராவிடர்கள் - ஆதி திராவிடர்கள்’ என்று பதிவிட வேண்டும் என்று வற்புறுத்தி, அப்படியே பதிய வேண்டும் என்று பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

• பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் உதவியாளர்களாகவும், சமையல் செய்பவர்களாகவும் நெருங்கிப் பழகியவர்கள், பார்ப்பனிய ‘தீண்டாமைக்கு’ உள்ளாக்கப்பட்ட மக்கள். அயோத்திதாசர் பாட்டனார் கந்தப்பன், தம்மிடம் பரம்பரையாகக் காப்பாற்றப்பட்டு வந்த திருக்குறளின் மூல ஓலைச் சுவடியை பிரிட்டிஷ் அய்.சி.எஸ். அதிகாரியான ஆரிங்டனிடம் அளித்து, அதை நூலாகப் பதிப்பிக்கக் காரணமாக இருந்தவர். 1831இல் திருக்குறள் பதிப்பிக்கப்பட்டது.

• 1891இல் ‘திராவிட மகாஜன சபா’யைத் தொடங்கினார். இலங்கைக்கு தனது சமூகத்தைச் சார்ந்தவர்களோடு இலங்கைக்குச் சென்று ‘மகாபோதி’ சங்கத்திடம் முறைப்படி ‘பவுத்தத் தீட்சைப்’ பெற்று பவுத்தர் ஆனார். (அவர்களை இங்கைக்கு அழைத்துச் சென்றது கர்னல் ஆல்காட். இவர் தியோசபிக்கல் சொசைட்டியில் அன்னிபெசன்டுடன் இணைந்து செயல்பட்டவர்)

• திரும்பி வந்து 1900இல் ‘மகாபோதி சொசைட்டி’ கிளையை சென்னையில் தொடங்கினார். பிறகு இலங்கை மகாபோதி சங்கத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ‘சாக்கைய பவுத்த சங்கத்தை’த் தொடங்கினார். மகாபோதி சங்கம் ஜாதியை நியாயப்படுத்தியதை தம்மால் ஏற்க முடியாது என்று அறிவித்தார் அயோத்திதாசர் (தமிழன் - 17.5.1911).

• அரசியல் விடுதலைக்காக ‘சுயராஜ்யம்’ கேட்பதைவிட சமூகச் சீர்திருத்தம் வந்தாக வேண்டும்; ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அவரது கருத்து.

• சுதேசி அரசியல் பேசியவர்களை அவர் விமர்சித்தார். அதன் காரணமாக ‘தமிழன்’ பத்திரிகை, ஆங்கிலேய ஆதரவு பத்திரிகை என்று விமர்சிக்கப்பட்டது. “நாம் சுதேசியை தூற்றுவதற்கோ, பரதேசிகளைப் போற்றுவதற்கோ வந்தவர்கள் அல்ல; சகல மக்களின் நீதிக்காகப் போராட வந்தவர்கள்” என்று பதிலளித்தார். (தமிழன் 18.8.1909)

• சுயராஜ்யம் பேசியவர்களை சாதித் திமிர், அறிவுத் திமிர், பணத் திமிர் கொண்டவர்கள் என்று விமர்சித்த அவர், ‘அன்னியப் பொருள்களைப் புறக்கணிப்பதை விட, சாதிப் பெருமையைப் புறக்கணிப்பதே முதன்மையானது’ என்றார். (பெரியார் சிந்தனையோடு அவரது சிந்தனையும் இதில் இணைந்தே நின்றது)

• பெங்களூரில் நடைபெற்ற பெரியார் 68ஆவது பிறந்த நாள் விழாவில் பெரியார் பேசும்போது, “என் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும் தங்கவயல் ஜி. அப்பாத்துரையும் ஆவார்கள்” என்று கூறினார்.

• கடவுள் தான் உலகத்தைப் படைத்தார் என்ற வாதத்தை மறுத்தார். கடவுள் இல்லாமல் உலகம் உண்டாயிருக்குமா? குயவன் இல்லாமல் மண்பாண்டம் வந்திருக்குமா?” என்று கேட்போருக்கு, “அப்படியானால் அந்தக் கடவுளை உருவாக்கியது யார்” என்று கேட்டார். “கடவுள் என்னும் ஒரு உருவம் கட்டைத் தடிபோல் சட்டத் திட்டமாக உட்கார்ந்து கொண்டு உலகத்தை சிருஷ்டிப்பவர் என்றால் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என்றார்.

• பாரதி, “ஈனப் பறையர்களேனும்” என்று கூறியதைக் கடுமையாக எதிர்த்து எழுதினார். இப்படிப் பேசுவது ஜாதியொழிந்த ஒற்றுமையை எப்படி ஏற்படுத்தும் என்று கேட்டதோடு, இவர்கள் “பாட்டுப் பிரசங்கிகள்” என்று சாடினார்.

• திராவிட எதிர்ப்புப் பேசும் இன்றைய ‘குழப்ப தமிழ் தேசியர்களுக்கு’ அயோத்திதாசர், அவரது காலத்திலேயே பதிலளித்துள்ளார்.

“சுதேசிகள் (பூர்வகுடிகள்) என்போர் யார் என்றால், தமிழ் பாஷையில் பிறந்து, தமிழ் பாஷையில் வளர்ந்து, தமிழ் பாஷைக்கு உரியோர்களாக விளங்கும் பூர்வீக திராவிட குடிகளேயாகும்.

மற்றுமிருந்த ஆந்திர, கன்னட, மராஷ்டகரும் பூர்வக்குடிகளேயாயினும் திராவிடர்களைப்போல் தேசவிருத்தியை நாடியவர்களும், பல தேசங்களுக்குச் சென்று பொருளை சம்பாதித்து சுயதேசத்தை சீர்பெறச் செய்தவர்களும் பூர்வ சரித்திரங்களையும், ஞானநீதிகளையும் பல்லோர்க்கு உணர்த்தி சுயபாஷையில் எழுதி வைத்துள்ளவர்களும், சாதிபேதமெனுங் கொடியச் செயலைப் பூர்வத்தில் இல்லாமல் எவ்வகையாக வாழ்ந்து வந்தனரோ நாளது வரையில் வாழ்ந்தும் வருகின்றனரோ அவர்களே யதார்த்த சுதேசிகளும் பூர்வக் குடிகளுமாவர்." - (அயோத்திதாசர் சிந்தனைகள், ஞான அசோசியஸ் தொகுப்பு - பக். 432)

• 2007ஆம் ஆண்டு ‘தமிழன்’ வார ஏட்டுக்கான நூற்றாண்டு விழாவை அன்றைய தமிழக அரசே நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் தலைமையில் கொண்டாடியது. நிதிநிலை அறிக்கையிலேயே சட்டசபையில் இதற்கான அறிவிப்பு வெளியானது. அயோத்திதாசர் நூல்களையும் அன்றைய முதல்வர் கலைஞர் அரசுடைமையாக்கினார். இப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அயோத்திதாசருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

தொகுப்பு - விடுதலை இராசேந்திரன்

Pin It