தமிழ்நாட்டில் பல இலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் நிலையில், மத்திய அரசுப் பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் வட நாட்டுக்காரர்கள் ஏராளமாக குவிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அடையாளமே அழிந்துபோகும் ஆபத்தை நாம் சந்திக்க வேண்டி வரும்.  வேலை வாய்ப்புகளை அழிப்பது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டையே வடநாட்டுப் பண்பாட்டில் மூழ்கச் செய்யும் ஆபத்தும் இதில் அடங்கியுள்ளது.

dravidan 600 இந்த பேராபத்தைத் தடுக்க, மகாராஷ்டிரா ஆந்திரா இராஜஸ்தான் மாநில அரசுகளைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் குறைந்தது 75 விழுக்காட்டு  வேலைவாய்ப்புகளை - தனியார் தொழில் நிறுவனங்களிலும், உற்பத்தி நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உறுதி செய்யும் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இதுவே தமிழ்நாட்டின் ஒருமித்த உணர்வாக இருப்பதைத் தமிழக அரசு உணர வேண்டும் என்றும் மாநாடு சுட்டிக்காட்ட விரும்புகிறது. 

நடுவண் அரசுப் பணிகளுக்கு மாநில அளவிலே தேர்வு நடத்துக!

தமிழ்நாட்டில் நடுவண் அரசுப் பணிகளில் பிற மாநிலத்தவர் ஆக்கிரமிப்பைத் தடுக்க மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை அகில இந்திய அடிப்படையில் நடத்தாமல் மாநில அளவிலான தேர்வாக நடத்த வேண்டும் என்பதோடு,  வினாத்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருத்தல் வேண்டும் என்ற கோரிக்கையை நடுவண் அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடத்தும் குஜராத் மாநிலத்திலேயே இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டதைத் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நடுவண் அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 2017 ஆம் ஆண்டு நடந்த பணியாளர்த் தேர்வில் 116 வேலை வாய்ப்புகளில் 15 மட்டுமே கிடைத்த நிலையில், குஜராத்தியர்  புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கில் குஜராத் மாநில அரசும் தன்னை இணைத்துக் கொண்டு குஜராத்திகளுக்கே வேலை வழங்கக் கோரியது.

அதுமட்டுமின்றி குஜராத்தில் 85 விழுக்காடு வேலை வாய்ப்புகளை குஜராத்தியருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் 1995 முதல் குஜராத்தில் நடைமுறையில் இருப்பதையும், அந்த கொள்கையை சுட்டிக்காட்டியே மேற்குறிப்பிட்ட வழக்கில் குஜராத் அரசு வழக்காடியது என்பதையும் இம்மாநாடு தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறது.

தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் திருத்தப்பட்ட விதியைத் திரும்பப் பெறுக!

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்காக செயல்படவேண்டிய தமிழக அரசு, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) விதிகளைக் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் நாள்  திருத்தி அமைத்தது. இந்தத் திருத்தத்தின் காரணமாக, வெளி மாநிலத்தவர் தமிழக அரசுப் பணிவாய்ப்புகளைப் பறிப்பதற்கு தமிழக அரசால் கதவு திறந்து விடப்படுள்ளது.

இதன் காரணமாக கடந்த 2019, மே மாத இறுதியில் நடத்தப்பட்ட மின்வாரிய உதவிப் பொறியாளர் பணியிடங்களில் 39 இடங்களைப் பிற மாநிலத்தவர்கள் பெற்றுவிட்டனர்.

அதுபோலவே  கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் பதவிகளிலும் இதுவே நடந்தது. மின்னணு தொடர்பியல் துறைக்கான விரிவுரையாளர்களுக்கான 36 பதவிகளில் 31ஐயும், இயந்திரப் பொறியியல் துறைக்கான விரிவுரையாளர் பணிகள் 67இல் 46 பணிகளையும் வெளிமாநிலத்தவர் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை வெளிமாநிலத்தவர்கள் பறிக்க வழிவகுக்கும் 26.11.2016இல் திருத்தப்பட்ட விதிகளை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

Pin It