விடுதலைப் புலிகளின் இராணுவ வெற்றிகள் - சர்வதேச சமூகத்தின் பார்வையில் புதிய மாற்றங்களை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

ஜெனிவாவில் மீண்டும் அக்.28, 29 தேதிகளில் விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்குமிடையே பேச்சு வார்த்தைகள் துவங்க உள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகள் ராணுவ ரீதியாக சிறீலங்காவை விட கூடுதல் வலிமையோடு பங்கேற்க விருப்பதாக சர்வதேசப் பார்வையாளர்களிடம் கருத்துகள் உருவாகியுள்ளன.

ஆணையிரவுப் பகுதியை மீட்டு, தனது ராணுவ பலத்தை சர்வதேச சமூகத்திடம் காட்டி, பேச்சு வார்த்தையில் பங்கேற்கலாம் என்று மனப்பால் குடித்த சிறீலங்கா அரசின் கனவுகளை விடுதலைப்புலிகள் தவிடு பொடியாக்கி விட்டனர். விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசமான முகமாலைப் பகுதிக்குள் தாக்குதலுக்காக நுழைந்த சீறிலங்கா ராணுவம், சந்தித்த தோல்வியும், இழப்பும் மிகவும் கடுமையானது என்பதை சிறீலங்கா அரசும், சர்வதேச ஊடகங்களும் ஒப்புக் கொண்டுள்ளன.

புலிகளைத் தாக்கி ஒழிக்கும் வலிந்த தாக்குதலை மேற்கொள்வதற்கு சிறீலங்கா ராணுவத்தின் வலிமையான படைப் பிரிவான ‘கேமுனு வாட்ச்’ 1000 பேர் கொண்ட படைப்பிரிவுடன் பெரும்சக்தி மிக்க நவீன ஆயுதங்களோடு, புலிகள் பகுதியான முகமாலை பிரதேசத்துக்குள் நுழைந்தது. மூதூரிலும், சம்பூரிலும் விடுதலைப்புலிகள் ராணுவத்தை எதிர்த்து, கடும் எதிர்த் தாக்குதல் நடத்தாததை, விடுதலைப்புலிகளின் பலவீனமாக, சிறீலங்கா ராணுவம் கருதிவிட்டது.

சூன்யப் பிரதேசத்தைத் தாண்டி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஒரு சில கிலோ மீட்டர் தூரம் நுழைந்த பிறகு, புலிகளின் எதிர்த்தாக்குதல் தொடங்கியது. நிலைக்குலைந்து போய் ஓட்டம் பிடித்தது சிங்கள ராணுவம், சிங்களப் பேரினவாதத்தைத் தீவிரமாக ஆதரித்து எழுதி வரும் கொழும்பு நாளேடுகள், இப்போது, சிறீலங்கா அரசை கடுமையான வார்த்தைகளால் ‘அர்ச்சித்து’ வருகின்றன.

‘அய்லேண்டு’ ஆங்கில நாளேடு, “அரசுக்கு அவமானகரமான தோல்வி; சிறீலங்கா அரசு கூறுவது போல் புலிகளுடன் அய்ந்தரை மணி நேரம் சண்டை நடக்கவில்லை. இரண்டு மணி நேரத்திலேயே புலிகள் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல், பின்வாங்கிவிட்டது. ராணுவம், புலிகளிடம் 6 கவச வாகனங்களைப் பறிகொடுத்துள்ளது. இந்த இழப்பை ராணுவத்தால் ஈடு செய்யவே முடியாது” என்று எழுதியுள்ளது.

அதே போல் ‘டெய்லி மிர்ரர்’ எனும் கொழும்பிலிருந்து வெளிவரும் நாளேடு, “2002 ஆம் ஆண்டு போர் நிறுத்தத்துக்குப் பிறகு இதுவே சிறீலங்கா சந்தித்த மிகப் பெரிய தோல்வி” என்று எழுதியுள்ளது. ராணுவம் தொடர்பான சிறீலங்காவின் இணைய தளங்கள் இத்தாக்குதல் பற்றிய செய்திகளை வெளியிட்ட அடுத்த நாளே இணைய தளத்திலிருந்து அகற்றிவிட்டன. முன்னாள் விமானப் படை தளபதியான ஹரிகுணதிலகே ராய்ட்டர் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “சிறீலங்கா அரசு, தன்னைப் பற்றி மிகுதியாக பரப்புரை செய்தது. இப்போது அதுவே சிக்கிக் கொண்டு விட்டது” என்று கூறியுள்ளார்.

“விடுதலைப்புலிகள் வைத்த பொறியில், இராணுவம் வசமாக சிக்கி விட்டது” என்று ‘ராவய்ய’ என்ற சிங்கள வார ஏட்டின் ராணுவ ஆய்வாளர் நிமால்பெரேரோ எழுதியுள்ளார், “இந்தத் தாக்குதலில் தங்களுக்கு தோல்வியும் இல்லை; வெற்றியும் இல்லை” என்று ராஜபக்சே கூறினாலும், ராய்ட்டர் செய்தி நிறுவனம் ராணுவ ரீதியாக புலிகள், பலம் பொருந்திய நிலையில் பேச்சுவார்த்தைக்குப் போகிறார்கள் என்று எழுதியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு முன்பு - புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள வாகறை நகருக்குள் ராணுவம் நுழைந்து வலிந்த தாக்குதலை மேற்கொண்டது. 300 ராணுவத்தினரையும், 80 துணைப் படையினரையும் உள்ளே நுழைய அனுமதித்துவிட்டு, பிறகு இரு பிரிவினரும் சந்திக்குமிடத்தில், சுற்றி வளைத்து புலிகள் நடத்திய தாக்குதலில் 70 ராணுவத்தினர் இறந்தனர்.

ராணுவம் முதலில் இறந்தவர்கள் உடலை வாங்க மறுத்தது. தங்களுடன் வந்த கருணா குழுவினர் இறந்திருக்கலாம் என்று ராணுவம் கருதி உடலை வாங்க மறுத்தது. பிறகு, ராணுவத்தினர்தான் இறந்துள்ளனர் என்பது தெரிந்த பிறகு உடலைக் கேட்டது. அதன் பிறகு புதைக்கப்பட்ட சடலங்களைத் தோண்டி எடுத்து, புலிகள், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்தனர். ராணுவத்தின் இந்த வலிந்த தாக்குதலைத் தொடர்ந்து விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப.தமிழ்ச்செல்வன், போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு, ஒரு எச்சரிக்கை கடிதத்தை எழுதினார்.

அடுத்து யாழ்ப்பாண பிரதேசத்தில் பெரும் தாக்குதலுக்கு, ராணுவம் தயாராகி வருவதை அவர் சுட்டிக் காட்டியதோடு, அப்படித் தாக்குதல் நடந்தால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஜெனிவாவில் பேச்சுவார்த்தை 28, 29 தேதிகளில் தொடங்கும் என்று நாள் குறிக்கப்பட்ட அடுத்த 24 மணிநேரத்திலேயே, சிறீலங்கா ராணுவம் தனது அடுத்த வலிந்த தாக்குதலை முகமாலைப் பகுதிக்குள் துவக்கி, கடும் இழப்புகளை சந்தித்து நிற்கிறது. 500க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளதோடு, 72 சடலங்களையும், செஞ்சிலுவை சங்கத்திடம், விடுதலைப் புலிகள் ஒப்படைத்துள்ளனர். பி.பி.சி. தமிழோசை வானொலிக்கு பேட்டி அளித்த ராணுவத்தின் பேச்சாளர் பிரசாத் தமரசிங்கே விடுதலைப் புலிகள் தான் தாக்குலைத் துவக்கியதாகக் குற்றம் சாட்டினார். “அப்படியானால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ராணுவத்தின் சடலங்கள் எப்படி வந்தன? என்று பி.பி.சி. செய்தியாளர் கேட்டபோது, அவர் திக்குமுக்காடிப் போனார்.

72 சடலங்களைத் தவிர, போரில் உருக்குலைந்துபோன 43 ராணுவத்தினரின் சடலங்களை, அவர்களின் அடையாள அட்டையை மட்டும் பத்திரப்படுத்திக் கொண்டு, விடுதலைப் புலிகளே எரித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் இதைத் தொடர்ந்து மற்றொரு தகவலையும் கூறினார். இறந்து போனவர்கள் பற்றிய தகவல்களை சிறீலங்கா அரசு, அவர்களின் குடும்பத்துக்குத் தெரிவிக்காது என்பது எங்களுக்குத் தெரியும். எனவே, அடையாள அட்டை மூலம் ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு நாங்களே தகவல் தெரிவிக்கவிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

சிறீலங்கா எதிர்கட்சியான அய்க்கிய தேசியகட்சியுடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்ட ராஜபக்சே அதன் மூலம் அரசியல் ரீதியான பலத்தைத் தமக்கு தேடிக் கொண்டுள்ளார். சர்வதேச நாடுகளின் ஆலோசனைப்படி, இந்த முடிவுக்கு உடன்பட்டனர் ராஜபக்சேயும், ரணிலும். அடுத்து ராணுவ ரீதியாகத் தமது மேலாண்மையைக் காட்டுவதற்கு ராஜபக்சே மேற் கொண்ட முயற்சிதான், இந்தத் தாக்குதல் திட்டங்கள். ஆனால் குளிக்கப் போய் சேறு பூசிய கதையாக அவருக்கு மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை விடுதலைப்புலிகள் மீது மட்டுமே குற்றம் சுமத்தி வந்த சர்வதேச ஊடகங்கள் இப்போது, சிறீலங்கா அரசையும் குற்றம் சாட்டி எழுதத் தொடங்கிவிட்டன.

சிறீலங்கா, ராணுவமயமாக்கப்பட்டு வரும் ஒரு அரசு என்பதை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வருவதில் விடுதலைப் புலிகள் வெற்றி பெற்றுள்ளதாகவே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இதற்கிடையே திரிகோணமலை அருகே கப்பல் படைத் தளத்திற்குப் போக பேருந்துக்கு காத்திருந்த 103 சிங்கள கப்பல் படையினர் புலிகளின் தற்கொலைப் படை தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகியுள்ள செய்தியும் வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து ராணுவத்தின் வலிந்த தாக்குதலை இந்தியாவும் கண்டித்துள்ளது.

அதே நேரத்தில் ஜெ.வி.பி.க்கும், ராஜபக்சேவுக்குமிடையே முரண்பாடுகள் முற்றி வருகின்றன. ராஜபக்சே அரசுக்கு எதிராகவும், சமர முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நார்வே வெளியேற வேண்டும் என்றும், ஜெ.வி.பி. போர்க்கொடி உயர்த்தியிருக்கிறது. ஜெ.வி.பி. தலைவர் சோமவர்ச அமர சிங்க - ராஜபக்ச ஆட்சியை விபச்சார ஆட்சி என்று கடுமையாகக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, அமர சிங்கேயின் சொந்த சகோதரியை விபச்சார குற்றத்தின் கீழ் சிறீலங்கா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவர் 28 ஆண்டுகளாக விபச்சாரத் தொழில் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அவரது வீட்டை சோதனையிட்ட காவல்துறை 3 பெண்களையும், 2 ஆண்களையும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்துள்ளது. இது பற்றி ஜெ.வி.பி. தலைவர் அமரசிங்கேயிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும்கூட, அமைச்சர்களாக இருந்து, கொள்ளை அடிக்கும் தொழிலைவிட, விபச்சாரத் தொழில் எவ்வளவோ உயர்வானது” என்று கூறியிருக்கிறார்.

வடக்கு-கிழக்கு மாநில இணைப்பே சட்டவிரோதம் என்று சிறீலங்கா உச்சநீதிமன்றம் இப்போது அறிவித்துள்ளது. சிறீலங்காவுக்கு மேலும் நெருக்கடியாகிவிட்டது. யுத்த மோதல்களுக்கிடையே யாழ்ப்பாணத் தமிழர் வாழும் பகுதியில் போக்குவரத்துப் பாதைகள், 2 மாத்துக்கும் மேலாக சிறீலங்கா அரசு, மூடி வைத்திருப்பால், உணவுப் பொருள் தட்டுப்பாடு அதிகரித்து, சொல்ல முடியாத துயரத்துக்கு மக்கள் அல்லலுறுகிறார்கள். பள்ளி சிறுவர்கள் உணவின்றி பள்ளி வகுப்புகளிலேயே மயக்கமடைந்து வீழ்கிறார்கள் என்று நெஞ்சு பதறும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

Pin It