(மு.வி. நந்தினி எடுத்த இந்நேர்காணலின் பெரும்பகுதி சூரியகதிர் இதழில் வெளியாகியுள்ளது.)
1.இலங்கைப் பயணத்தின் நோக்கம் என்ன?
நமது நேரடிச் சொந்தங்களான மலையகத்தமிழரை சந்திப்பது, இலங்கைத் தமிழர்களின் வடபகுதிக்குச் செல்வது- விடுதலைப்புலிகளை ஒடுக்குவதாகச் சொல்லிக்கொண்டு அந்த அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நிகழ்த்தி முடித்திருக்கும் அட்டூழியங்கள், அத்துமீறல்கள், படுகொலைகள் குறித்து நேரடியாக அறிவது, இன்றைய சூழலை விளங்கிக்கொள்வது, வாய்ப்பிருந்தால் தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ள வவுனியா முகாம்களுக்கு சென்று நிலைமையை நேரில் அறிவது என்பவைதான் எனது பயணத்திட்டம். அக்டோபர் 8 முதல் 15 வரை கண்டி, மாத்தளை, ஹட்டன் ஆகிய மலையக நகரங்கள் மற்றும் அவற்றைச் சுற்றிய தோட்டங்கள். 16-18 கொழும்பு. 19-21 யாழ்ப்பாணம். 22 மாலை நாடுதிரும்பினேன். குழு விவாதங்கள். அந்தனி ஜீவா, ஜோதிகுமார், ரங்கன் போன்ற தோழர்கள் ஏற்பாட்டில் சிறியதும் பெரியதுமாக நடந்த 11 நிகழ்வுகளில் பங்கெடுத்தேன்.
2. போருக்குப் பின் இலங்கை எப்படி இருக்கிறது? பாதுகாப்பு கெடுபிடிகள், மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை, அரசியல், ராணுவரீதியான போக்குகள்?
நாட்டின் எந்த மூலையிலும் துண்டுத்துக்காணி இடத்திலும் மணல்மூட்டைகளுக்குப் பின்னால் தயார்நிலையில் குமிந்திருக்கிறது ராணுவம். போர் உக்கிரமாக நடந்துகொண்டிருப்பதான பீதியே நிலவுகிறது. குண்டுதுளைத்து பாழடைந்த கட்டிடங்கள், கைவிடப்பட்ட வீடுகள், அடர்ந்த புதர்கள் என்று எங்கு பார்த்தாலும் ஒரு துப்பாக்கிக்குழல் துருத்திக் கொண்டுள்ளது. எந்நேரமும் நம்மை கண்காணிக்கிறது ஒரு ராணுவக்கண். தினசரி ஒருமுறையாவது ராணுவச் சோதனைக்கு உட்படாமல் பொதுஇடங்களில் நடமாடும் சுதந்திரம் அங்கு ஒருவருக்கும் வாய்க்கவில்லை. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் 40 நிமிட விமானப்பயணம். ஆனால் பறப்பதற்கு முன்னும் பின்னுமாக ஒருவர் 6 மணிநேரம் ஆர்மிக்காரர் முன் கைகளை பக்கவாட்டில் விரித்துக்கொண்டு சோதனைக்கு நின்றாக வேண்டும். ஏ-9 பாதைவழியே கொழும்பு திரும்புவதற்கும் இதே பாடுதான். பயணிகளை மூட்டை முடிச்சுகளோடு இறக்கி சோதனையிடுவதும், அரசாங்க கட்டிடங்களுக்குள் நுழைகிறவர்களை அங்குலம் அங்குலமாக சோதிப்பதுடன் அவர்களின் செல்போன் காமிரா போன்றவை பறித்துவைத்துக் கொள்ளப்படுவதும், உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரால் முள்வேலிகளால் தடுத்துவைக்கப்பட்ட பிரதேசங்களும் ஆட்சியாளர்களின் அச்சத்தையும் சந்தேகப்புத்தியையும் அம்பலப்படுத்துகின்றன. பிடிபடாமல் தப்பித்துவிட்ட புலிகள் என்ற சந்தேகத்துடனேயே பொதுமக்களை அரசாங்கமும் ராணுவமும் அணுகுகின்றன.
முன்பேனும் ராணுவத்திற்கு புலிகள் என்ற திட்டவட்டமான கண்ணுக்குத் தெரிந்த எதிரிகள் இருந்தார்கள். இப்போது எதிரி யாரென்றே தெரியாத நிலை. ஆனால் எவரொருவராலும் எந்தநேரத்திலும் தன் நாட்டுக்கு ஆபத்து வரக்கூடும் என்கிற தன்முனைப்பை விரைத்துநிற்கிற ஒவ்வொரு ராணுவச்சிப்பாயிடமும் பார்க்கமுடிகிறது. இந்த தன்முனைப்பு, வெறுமனே ஒரு ராணுவத்தானுக்கு உரியதல்ல. அது, நீ சிங்களவன், இது உன்னுடைய- உனக்கே உனக்கான நாடு- அதை பத்திரமாக பார்த்துக் கொள்வது உனது பொறுப்பு என்று இனவெறியேற்றப்பட்டவனின் மனநிலையிலிருந்து பிறக்கிறது. எனவே தன்னை கடந்துபோகிற ஒருவரை உயிரோடு அனுப்புவதோ தன் நாட்டுக்கு ஆபத்தானவர் என்று சுட்டுத்தள்ளுவதோ அந்த கணத்திலான அந்த சிப்பாயின் கருணையின்பாற்பட்டதாக இருக்கிறது. அவ்வாறு சுட்டுத்தள்ளினாலும் அதற்காக அவர் யாரிடமும் பதில்சொல்ல வேண்டிய கடப்பாடு ஒன்றுமில்லை. அத்துமீறல்களை எதிர்க்கும் ஆற்றல்கொண்ட மக்களோ அமைப்புகளோ அங்கு இல்லை. மனிதசமூகத்தின் மேன்மைக்கு மகத்தான பங்களிப்பு செய்யவேண்டிய இளைஞர்சக்தி சீருடையணிந்த ஒரு இனவெறிப் பட்டாளமாக திசை மாற்றப்பட்டுள்ளது. எதிரியை வேட்டையாடும் வன்மத்தையும் கனத்த ஆயுதங்களையும் சுமந்துகொண்டு தினமும் விரைப்பாக தயாராகி குறுக்கும் நெடுக்கும் உலாத்திக் கொண்டிருக்கிற அந்த சிப்பாய்களின் மனநிலையில் ஏற்படும் சிதைவுகள் அந்த சமூகத்தை என்னவாக்கப் போகிறது என்பது வெறுமனே உளவியல் பிரச்னை அல்ல.
நம்மூரில் நடிகர்களுக்கும் தலைவர்களுக்கும் ஊதாரித்தனமாக வைக்கப்படுவதை விடவும் பலமடங்குப் பெரியதான கட்அவுட்களில் ராணுவத்தினரின் மூர்க்கமான முகங்கள் அச்சமூட்டுகின்றன. ராஜபக்ஷே கட்அவுட்களில்கூட தனியாய் நிற்பதில்லை, ராணுவத்தினர் புடைசூழவே காட்சி தருகிறார். அரசாங்க விளம்பரங்களில்கூட ராணுவச் சிப்பாய்களின் படங்களே பெருமிதத்தோடு இடம் பெறுகின்றன. ராணுவத்தினரை கதாநாயகர்களாகக் கொண்டாடுவது அவர்களது வீரதீரச் செயல்களுக்காக அல்ல. அவர்கள் வெளிப்படுத்திய சிங்கள இனவாதத்திற்காகத்தான் என்பதை புரிந்துகொள்வது கடினமான விசயமல்ல. போரின் வெற்றியைக் கொண்டாடுவது என்ற பெயரால் ராணுவத்தை முன்னிறுத்தி சிங்களப் பெருமிதம் தொடர்ந்து விசிறிவிடப்படுகிறது. ராணுவத்தின் மீதான மக்களின் இந்த ஈர்ப்பை யார் அறுவடை செய்வது என்கிற போட்டியின் வெளிப்பாடுதான் இப்போது ராஜபக்ஷேவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையே முட்டித் தெறிக்கிறது. அந்த நாட்டில் இன்றுவரை நாடாளுமன்ற ஜனநாயகம் நீடித்திருப்பதாக அலட்டிக்கொண்டாலும் உண்மையில் அங்கு ராணுவம்தான் சமூகத்தை கட்டியாள்கிறது. யாழ்ப்பாணத்திற்குள் ஒருவர் நுழைவதோ அல்லது அங்கிருந்து வெளியேறுவதோ பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியைப் பெற்றால் மட்டுமே சாத்தியம். ( இந்த நிபந்தனை கடந்தவாரம் தளர்த்தப்பட்டிருப்பதாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது)
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு செல்கிற பேருந்துகளில் உங்களது இருக்கை எண்ணை ஒதுக்குவதும்கூட ஒரு சிப்பாய்தான் என்பதே நிலைமையை விளங்கிக்கொள்ளப் போதுமானது. வவுனியா செல்லும் பேருந்துகள் புறப்படும் இடம்கூட ராணுவத்திடம்தான் உள்ளது. 8.30க்கு புறப்படும் பேருந்தில் செல்கிறவர், அங்கு அதிகாலை 5.30 மணிக்கே சோதனைக்காக வரிசையில் நின்றாக வேண்டும். அங்குள்ள கழிப்பறைகளில்கூட தண்ணீர் கிடையாது. தமிழருக்கு தண்ணீர் ஒரு கேடா என்ற நினைப்பாயிருக்கும். ராணுவச் செலவுக்கான நிதிஒதுக்கீட்டை அதிகரிப்பது, ராணுவத்தினரின் எண்ணிக்கையை இப்போதுள்ளதுபோல் இரட்டிப்பாக்குவது என்ற ஆட்சியாளர்களின் முடிவுகள் தமிழர்களுக்கு மட்டுமல்ல, வாழ்வியல் நெருக்கடி தாளாமல் ஒருவேளை சிங்களவர்கள் போராடத் தொடங்கினால் அவர்களுக்கும் எதிரானதுதான். மக்களைப் பொறுத்தவரை, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க சிலர் கொடிய விஷப்பாம்புகளுடன் கண்ணாடி கூண்டுக்குள் வாழ்கிற சாகசத்தைப் போல இந்த ராணுவ கெடுபிடிக்குள் வாழப்பழகிவிட்டார்கள்.
1995 முதல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் யாழ்ப்பாணம் இருக்கிறது. இப்போது தமிழர்களின் முழுப்பகுதியையும் ராணுவம் கைப்பற்றியிருக்கிறது. ஏ9 பாதையில் பயணிக்கிறபோது ஆனையிறவு தொடங்கி ஓமந்தைவரைக்கும் ஒரேயொரு சிவிலியனைக்கூட காணமுடியவில்லை. அந்த நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் இருந்த எல்லா சிற்றூர்களும் கிளிநொச்சி போன்ற நகரங்களும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. கோயில்கள், தேவாலயங்கள், கல்விக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், தண்ணீர் தொட்டி எதுவும் மிஞ்சவில்லை. எத்தனையோ தலைமுறை தாண்டி பலன் கொடுக்கும் பனைமரங்கள் தலைவெட்டப்பட்டு மொட்டைமொட்டையாக ஆயிரக்கணக்கில் நிற்பதும் மனிதநடமாட்டமற்ற பகுதிகளில் மாடுகள் கேட்பாரற்று அநாதைகளாக சுற்றியலைவதும் நெஞ்சையறுக்கும் காட்சிகள்.
ஆளரவமற்ற அந்த பாதை நெடுகிலும் நிறுத்தப்பட்டிருக்கும் சிப்பாய்களுக்கு இன்னும் எதிரிகள் தேவைப்படுகிறார்கள். அதேவேளையில் மக்களின் நண்பர்கள் என்று காட்டிக்கொள்கிற பகட்டுக்கும் குறைவில்லை. இழவுவீட்டாருக்கு நெருங்கிய உறவினர்கள் சாப்பாடு செய்து பகிர்வதுபோல, பொன்னாலைக்கட்டியான் என்ற தமிழர்கிராமத்தில் ஒரு இழவுவீட்டிற்கு ராணுவமுகாமிலிருந்து சாப்பாடு செய்து அனுப்பட்டதாம். முகாமிலிருந்து விடுவிக்கப்படுபவர்களுக்காக கட்டப்படவிருக்கிற அடுக்குமாடி குடியிருப்புகளில் சிங்களவர்களும் குடியமர்த்தப்படலாம் என்கிற அச்சம் இப்போதே உலவுகிறது. ஏ-9 பாதையின் இருமருங்கும் காட்டை அழித்து உருவாக்கப்பட்டுள்ள வெற்றிடங்களில் ராணுவ முகாம்கள் அல்லது சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் தமிழரல்லாதாரை குடியேற்றும் திட்டமும் அரசிடம் இருப்பதாக சந்தேகம் வலுத்துள்ளது. குண்டுசத்தமும் ஷெல்லடியும் ஓய்ந்திருக்கும் இன்றைய நிலை அமைதிக்கு பதிலாக ஒரு உறைந்த திகிலூட்டும் மௌனத்தையே கொண்டு வந்திருக்கிறது. மக்கள் இறுகிய மௌனத்தின் வழியாக எல்லாத்துயரங்களையும் கடக்க எத்தனிக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் எஞ்சியிருக்கும் விதவைகளையும் அங்கவீனர்களையும் மனநிலைப் பிறழ்ந்தவர்களையும் பார்த்துப் பார்த்து மருகிப் போய் உறைந்து நிற்கும் அவர்கள் மனம் திறந்து பேச இன்னும் கனகாலம் செல்லும். இந்தப் போரை உசுப்பேற்றி கொன்றதில் நமக்கும் பங்கிருக்கிறது என்ற குற்றவுணர்வில் நாம் காத்திருக்க வேண்டியதுதான்.
அங்கிருந்து தமிழர்கள் வெளியிடும் சஞ்சிகைகள் எதிலும் ஈழப்போராட்டம், அல்லது ராணுவத்தின் அட்டூழியங்கள், முகாம்களில் வதைபடும் மக்களின் துயரம் என்று எதையும் பேரளவில் காணமுடியவில்லை. தணிக்கையும் சுயதணிக்கையும் அவர்களின் எழுத்துச் சுதந்திரத்தை அந்தளவுக்கு கட்டுப்படுத்தியிருக்கிறது. நாளிதழ்களில் ஓரளவுக்கு இதுகுறித்த செய்திகளைப் பார்க்க முடிந்தது.
3. முகாம்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்ததா?
யாழ்ப்பாணம் செல்வதே எனக்கு பெரும்பாடாகிவிட்டது. யாழ்ப்பாணத்திற்கு முதல்முறையாக செல்பவர் விமானத்தில்தான் சென்றாக வேண்டும். விமான டிக்கெட் பெறவேண்டுமானால் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அனுமதிக் கடிதம் இருந்தால் மட்டுமே சாத்தியம். இந்த ஏற்பாடுகளை தோழர்கள் ரங்கனும் அந்தனிஜீவாவும் செய்துகொடுத்தபோதும், எனக்கு 19ம் தேதிதான் டிக்கெட் கிடைத்தது. 22ம் தேதி நாடு திரும்பவேண்டிய நிலையிலிருந்ததால் முகாம் எதற்கும் செல்ல முடியவில்லை. ஆனால் முகாம்களில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டவர்கள் சிலரை சந்தித்து அவர்களது துயரங்களை கேட்டறிய முடிந்தது.
நான் தங்கியிருந்த விடுதியின் சமையல்காரரின் குடும்பம் 1996ல் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு குடிபெயர்ந்திருக்கிறது. மீன்பிடித்தொழில் அவர்களுக்கு. போர் உக்கிரமடைந்த நிலையில் காடுகளுக்குப் போகிறார்கள் புலிகளோடு. நிலவறைகளில் பதுக்கம். ராணுவம் அழித்து நொறுக்கி வரவர இவர்கள் மூட்டைமுடிச்சுகளோடு பத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஓடியோடிப்போய் பதுங்க வேண்டியிருந்திருக்கிறது. நடந்துவர முடியாத நோயாளிகள் வயோதிகர்கள் அங்கவீனர்களை அப்படியப்படியே பங்கருக்குள் கைவிட்டுவிட்டு ஓடியுள்ளனர். கைவிடப்படப்பட்ட அந்த பங்கர்களுக்குள் ஒருவேளை யாராவது உயிர் பிழைத்திருந்தாலும் கூட ஒருவருக்கும் தெரியப்போவதில்லை. இனி புலிகளை நம்பி உயிரையும் போக்கிக்கொள்வதில் அர்த்தமில்லை. எனவே படகேறித் தப்பித்து நேவியிடம் சரண். பின் முகாமில் வதிந்து ஆகஸ்டில் விடுவிப்பு. இப்போது அவர்களின் பிரச்னை, வீடு. வன்னிக்குப் போன அவர்களின் ஒரு குடும்பம் இப்போது ஐந்தாக பெருகி யாழ்ப்பாணம் திரும்பி நடுத்தெருவில் நிற்கிறது. தொழிலுக்குச் செல்ல படகோ வலையோ இல்லை. பணம் நகை எதுவும் மிஞ்சவில்லை. அவற்றை விற்றுத்தான் கடைசிநாட்களில் சீவித்திருக்கிறார்கள். எல்லாமும் தோற்றாகிவிட்டது. தெரிந்த தொழிலுக்கு அவர்களால் திரும்ப முடியவில்லை. நீர்மேலிருந்தவர் நெருப்புக்குள் கரிபடுகிறார். முகாம்களிலிருந்து விடுவிக்கப்படுகிறவர்களுக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லை. முப்பது ரூபாய்கு ஒரு டீ விற்கிற நாட்டில், அரசு கொடுக்கிற சிறுதொகையை வைத்துக்கொண்டு அந்த மக்கள் எப்படி மீண்டெழ முடியும்?
4.இலங்கை தமிழர்களின் நிச்சயமான வாழ்வாதாரம் குறித்து பேசாதநிலை தமிழகத்தில் நிலவிக்கொண்டிருக்கிறது. தமிழர்களின் வாழ்வாதாரம் குறித்து ஏதேனும் முன்னெடுப்புகள் இலங்கையில் (அரசு அல்லாத) புலம்பெயர்ந்த இடங்களில் நடக்கிறதா?
அ.) ஐரோப்பா அல்லது பிறநாடுகளில் அடைக்கலம் புகுந்த இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலோர் ஐந்தாறு ஆண்டுகளில் அங்கு பொதுசமூகத்தோடு இணைந்து வாழவும் குடியுரிமை பெறவும் முடிகிறது. ஆனால் கால்நூற்றாண்டு காலமாய் தமிழ்நாட்டின் அகதிகள் முகாமில் வதியும் இலங்கைத்தமிழர்கள் இன்றளவும் அகதிகள்தான் என்பதை எமது புதுவிசையில் தொடர்ந்து எழுப்பிவந்தோம். வவுனியா முகாமைப் பார்க்கப்போன நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனைபேர் தமிழ்நாட்டிலுள்ள முகாம்களுக்கு சென்றிருப்பார்கள் என்பது தெரியவில்லை. அண்டி வந்தவர்களையே ஆதரிக்காத இந்த தமிழ்நாட்டு சமூகம் இலங்கைக்குப் போய் என்னத்த கிழிக்கப்போகிறது? கழுத்துநரம்பு புடைக்க ராஜபக்சேவையும் சிங்களவர்களையும் இங்கு வசைபாடித் திரிவதால் அங்குள்ள தமிழர்களுக்கு நன்மையேதும் விளையப் போவதில்லை.
ஆ) புலம்பெயர் நாடுகளின் புலி ஆதரவாளர்களைப் பொறுத்தவரை மாற்றுக்கருத்தாளர்கள் எல்லோரையும் சிறுமைப்படுத்துவதன் மூலம் இலங்கையில் அமைக்கமுடியாத தனி ஈழத்தை இணையத்திலாவது அமைத்தே தீர்வோம் என்று மும்முரமாய் பாடுபட்டுக் கொண்டுள்ளனர். ஒரு இருபதாண்டுகள் கழித்து தனிஈழப் போராட்டம் பற்றி அறிந்துகொள்ளும் தரவுகளை இணையத்தில் தேடும் ஒருவருக்கு அங்கு ஏற்பட்டுள்ள இழப்புகள், தோல்விகள் எதற்கும் புலிகள் அமைப்போ தலைமையோ பொறுப்பல்ல என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கும் அதிரடியான அறிக்கைகளையும் இட்டுக்கட்டப்பட்ட ஆவணங்களையும் இணையத்தில் உலவவிடுவதோடு இவர்கள் பணி நிறைவு பெறுகிறது. எனவே இவங்கையில் தமிழர்கள் படும் துயரங்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. ஏனெனில் அவர்கள் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை எட்டிவிட்டவர்களாக இருக்கிறார்கள்.
இ.) யாழ்ப்பாணத்தில் பெரியபெரிய பதாகைகளையும் கொடிகளையும் கட்டிக்கொண்டு தொண்டு நிறுவனங்கள் என்கிற ஃபண்டு நிறுவனங்களின் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் பறக்கின்றன. மாளிகை போன்ற பெரிய வீடுகள்தான் அவற்றின் அலுவலகங்கள். அரசியல்ரீதியான பிரச்னைகளை இந்த அமைப்புகள் கொடுக்கும் சோற்றுருண்டைகள் தீர்த்துவைக்க முடியாது. ஒருசில அமைப்புகளைத் தவிர மற்றவற்றுக்கு சுனாமி கொள்ளை போல இதுவும் ஈழமக்களின் பெயரால் கொள்ளையடிக்கும் வாய்ப்புதான்.
ஈ) புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் கொழும்பிலும் வாழக்கூடிய பொன்னாலைக்கட்டியான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் ஒரு குழுவை அமைத்து நிதிதிரட்டி போரினால் முற்றிலும் அழிந்துபோன தங்கள் ஊரை மீள கட்டியெழுப்புவதாக அந்த குழுவின் நிர்வாகி மருத்துவர்.ஞானகுமரன் தெரிவித்தார். இம்மாதிரியான முயற்சிகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கின்றன.
உ) புலம்பெயர்ந்தவர்களில் ஒரு சிறுகுழு இப்போதைய சூழலைப் புரிந்துகொண்டு செயலாற்றவேண்டிய தளங்களை கண்டறிய முயற்சிக்கிறது. ராணுவரீதியில் பலவீனமாக இருந்த பல்வேறு நேரங்களில் அரசியல் தீர்வு, சமஸ்டிமுறை என்றெல்லாம் புலிகள் பேசியதைதான் இவர்களும் முன்வைக்கிறார்கள். அதற்காக துரோகிகள், அரசாங்கத்தின் கைக்கூலிகள் என்று தூற்றப்படுகிறார்கள். எனினும் அரசியல் உரிமைகளை அடையும் சக்திகள் இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியிலிருந்துதான் உருவாக முடியும் என்பதை உணர்ந்து அதற்கான தொடர்புகளை மேற்கொண்டுள்ள இந்த சிறுபகுதியினர் நம்பிக்கையளிக்கின்றனர்.
5. விடுதலைப் புலிகள் இனி... விடுதலைப் புலிகள் குறித்து இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை என்ன-? அடுத்தக்கட்ட போருக்கு தயாராவோம் என்று இங்கிருந்து கிளம்பும் கோஷங்களுக்கு இலங்கை வாழ் தமிழர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கு...
பிரபாகரன் மீண்டும் வருவாராமே என்று அங்குள்ளவர்களிடம் கேட்டால், வரட்டுமே.. வந்து என்ன செய்யப் போகிறார்... இத்தனை ஆயிரம் போராளிகளையும் இவ்வளவு ஆயுதங்களையும் பெருந்தொகையான பணத்தையும் வைத்துக்கொண்டே ஒன்றும் செய்ய ஏலாதவர் இனி வந்து என்ன செய்யப் போகிறார் என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள். ஒருவேளை வந்தால் அவரும் ஒரு இணையதளத்தையோ பிளாக்கையோ அமைத்துக்கொண்டு அட்டைக்கத்திதான் வீசமுடியமேயன்றி ஆயுதத்தை தூக்கமுடியாது என்கிறார்கள்.
யாழ்ப்பாணம் நாவலர் அரங்கில் நடைபெற்ற சந்திப்பின்போது ஒரு அன்பர் சொன்னார்- தமிழர்கள் மானஸ்தர்கள், ஆளப்பிறந்தவர்கள், அவர்கள் தனித்துவமானவர்கள், பிற இனத்தோடு சேர்ந்து வாழ முடியாதவர்கள், தனிநாட்டுக்கு குறைவான எதிலும் அவர்கள் திருப்தி கொள்ள முடியாது என்றெல்லாம் உங்கள் தமிழ்நாட்டுத் தலைவர்கள் பேசுவது உண்மையென்றால், தனி தமிழ்நாட்டுக்காக போராட வேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு இவர்களது வீராப்புக்கும் வெத்துச் சவடாலுக்கும் ஏன் எங்கள் உயிரையும் வாழ்வையும் பணயம் வைக்கிறார்கள்? என்று.
வவுனியா முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு வந்துகொண்டிருக்கும் 1280 பேரை அழைத்துப்போக யாழ்ப்பாண நூலகத்தினருகில் உள்ள துரையப்பா ஸ்டேடியத்தின் வாயிலில் காத்திருந்த ஒரு கூட்டத்திடம் உரையாடிக் கொண்டிருந்தோம். ஒரு மீனவப்பெண் சொன்னார்- எத்தனை இம்சை... இன்னொரு தடவை ஆயுதம் போராட்டம்னு எவனாச்சும் சொன்னா தும்புக்கட்டையாலயே ( துடைப்பம்) அடிச்சு சாத்திப்புடுவேன். போரை எதிர்கொண்ட எளிய மக்களின் மனநிலை இதுதான்.
6.இலங்கை தமிழர்கள் வாழ்வுரிமைக்காக நம்மைப் போன்ற வெளியில் இருக்கும் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? (அல்லது) இலங்கை தமிழர்கள் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார்கள்?
வாயை மூடிக்கொண்டிருந்தால் போதும், அதுவே நீங்கள் செய்யும் பேருதவி என்பதுதான் அவர்கள் நமக்கு விடுக்கும் வேண்டுகோள். காடு அதிர்கிறது மீண்டும் எழுகிறது என்றெல்லாம் வீராவேசமாக இங்குள்ள பத்திரிகைகள் வெளியிடும் பரபரப்பு செய்திகள் கண்டு அவர்கள் பதறுகின்றனர். இப்படியான செய்திகள், தனது ராணுவ கெடுபிடிகளை நீட்டித்துக்கொள்ள அரசாங்கத்துக்கு உதவும் என்று கண்டிக்கின்றனர். ஒருவேளை அரசாங்கத்துக்கு இப்படி மறைமுகமாக உதவுவதுதான் இவர்களது உள்நோக்கமோ என்றும் சந்தேகிக்கிறார்கள். ஏற்கனவே இணையதளங்களிலும் யூடியூப்களிலும் வெளியிடப்பட்ட வீரதீர புகைப்படங்களையும் வீடியோக்காட்சிகளையும் வைத்துக்கொண்டு ஒவ்வொரு தமிழனையும் உற்றுஉற்று பார்த்து சந்தேகிக்கும் ராணுவத்தாருக்கு உதவும் பொறுப்பற்ற பேச்சுகளையும் அறிக்கைகளையும் நிறுத்தச் சொல்லுங்கள் என்ற அவர்களது வேண்டுகோள் நம் தமிழ்த்தேச தலைவர்களின் இதயங்களை தைக்கவேயில்லை.
7.இந்திய அரசாங்கம் ஏன் தமிழர்களை ஆதரிக்கவில்லை?
இலங்கையின் ஒடும் வாகனங்கள் டாடாவும் லேலண்டும். இருசக்கர வாகனமென்றால் பஜாஜ், ஹீரோ ஹோண்டா, டி.வி.எஸ். தொலைத்தொடர்பில் ரிலையன்சும் ஏர்டெல்லும். நாடு முழுதும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் பெட்ரோல் நிலையங்கள். அங்கிருந்த பெரிய சிமெண்ட் ஆலை இப்போது பிர்லாவிடம். நாட்டின் பொருளாதாரத்தில் பிரதான பங்கு வகிக்கும் தேயிலைத் தோட்டங்கள் இந்தியருக்கு சொந்தம். இவையன்றி இலங்கையின் அன்றாடப் பயன்பாட்டில் புழங்கும் பொருட்களில் 90 சதமானவை இந்திய தயாரிப்புகள். தமிழர்கள் என்ற சிறுபான்மையினரை ஆதரித்து இலங்கை என்கிற இவ்வளவு பெரிய சந்தையை இழக்க இந்திய முதலாளிகளும் வர்த்தக நிறுவனங்களும் தயாரில்லை. இவர்களது சந்தை நலனுக்கு பாதிப்பில்லாத ஒரு அணுகுமுறையைதான் சோனியா, வாஜ்பாய், கருணாநிதி, ஜெயலலிதா என்று யார் ஆண்டாலும் கடைபிடிப்பார்கள்.
8.மலையகத்தமிழர்கள் வாழ்நிலை என்னவாக உள்ளது?
இலங்கைக்குப் போய் திரும்பியிருக்கிறேன் என்றதும் எல்லோரும் யாழ்ப்பாண தமிழர்களைப் பற்றிதான் விசாரிக்கிறார்கள். ஆனால் இலங்கையில் ரயில்பாதை அமைக்கவும் பாலங்கள் கட்டவும் துறைமுகம் தோண்டவும் காப்பி தேயிலைப் போன்ற பெருந்தோட்டங்களில் வேலைசெய்யவும் 19 ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் தமிழ்நாட்டிலிருந்து பிரிட்டிஷ்காரர்களால் பிடித்துச் செல்லப்பட்டு இன்று மலையகத்தமிழர் என்றழைக்கப்படும் நமது முன்னோர்களைப் பற்றி ஒருவரும் விசாரிப்பதேயில்லை.
அவர்களும் தமிழர்கள். அவர்களது பூர்வீகம் என்ற இந்த தமிழ்நாட்டில் அவர்களுக்காக ஒரு கைப்பிடி மண்ணும் இல்லை. இருநூறாண்டுகளாக எஸ்டேட்டுகள் என்ற திறந்தவெளி சிறைச்சாலைக்குள்ளும் அனேக இடங்களில் முள்வேலிக்குள்ளும் அடைக்கப்பட்ட வாழ்க்கைதான் அவர்களுடையது. கடும் உழைப்புச் சுரண்டலுக்கு இன்றளவுக்கும் ஆளாகியிருப்பவர்கள். 83 வன்செயலின்போது சிங்களவர்களாலும் ராணுவத்தாலும் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள். பல்லாயிரக்கணக்கான அடி உயரத்திலுள்ள மலைகளுக்கு தாங்களே பாதையமைத்து மேலேறிப் போனவர்களில் பலர் இன்னும் சமதளத்திற்கு இறங்கவேயில்லை. உயரங்களிலும் சிகரங்களிலும் வசித்தாலும் அவர்களது வாழ்க்கை அதலபாதாளத்தில்தான். ஒருவேளை மலையகத்தமிழர்களில் 87 சதமானவர்கள் தலித்துகள் என்பதோ, டாலரும் பவுண்ட்சும் இல்லாத கூலித்தமிழர்கள் என்பதோ அல்லது பரபரப்பாக கவனிக்கப்படாது என்பதாலோ அவர்களைப் பற்றி தமிழ்த்தேசியவாதிகளோ, இனமானக் காவலர்களோ, ஊடகங்களோ பேசுவதேயில்லை. இலங்கையின் மலையகத்தமிழர் பற்றி மட்டுமல்ல, உலகம் முழுவதும் தமது காலனிகளாயிருந்த 40 நாடுகளுக்கு பிரிட்டிஷ், பிரான்ஸ் ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டு மக்களை பிடித்துப்போயிருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியர் அழைத்துச் செல்லப்பட்டதன் (?) 150வது ஆண்டு விழாவை வெட்கங்கெட்டு கொண்டாடிக் கொண்டிருக்கிற இந்த நேரத்திலாவது 40 நாடுகளுக்கும் புலம் பெயர்த்து கொண்டுபோகப்பட்ட தமிழர் நலன் குறித்த விவாதம் தொடங்கப்பட வேண்டும். இல்லையானால் ஈழத்தமிழருக்காக வடிக்கப்படும் கண்ணீரை கபடம் நிறைந்ததென்றே வரலாறு குறித்துக் கொள்ளும்.
(மு.வி. நந்தினி எடுத்த இந்நேர்காணலின் பெரும்பகுதி சூரியகதிர் இதழில் வெளியாகியுள்ளது.)