சென்னை மாவட்டக் கழகம் சார்பாக, ‘வைதீகத்தை எதிர்த்த வள்ளலார்’ என்ற தலைப்பில், 22.10.2022 அன்று சென்னை, தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் “வள்ளலாரின் இறுதிப் பத்தாண்டுகள்”" என்ற தலைப்பில் பேராசிரியர் வீ.அரசு ஆற்றிய உரை.

உரையில் இராமலிங்கனாரின் பிறப்பு முதல் அவர் சென்னைக்கு குடியேறி பிறகு சென்னையை விட்டு வெளியேறி சன்மார்க்க சங்கத்தை உருவாக்கியது வரை, வள்ளலாரின் இளமைக்கால வரலாறுகளில் தொடங்கி வள்ளலாரின் வைதீக எதிர்ப்பு எப்படி பரிணமித்தது என்பதை பேராசிரியர் விளக்குகிறார். அதில் ஒரு பகுதி:

“சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் இலட்சியம் வைக்க வேண்டாம்”. வள்ளலார், மதம், சமயம் என்று இரண்டையும் வேறுபடுத்தி காட்டுகிறார். மதம் என்பது, வடமொழி மரபு சார்ந்த, சமஸ்கிருத மரபு சார்ந்த, ஆன்மீக மரபு சார்ந்த அவைதீகத்திற்கு எதிரான வைதீகர்களால் கட்டமைக்கப்பட்ட புராணியத் தன்மைகளைக் கொண்டவை மதங்கள். சமயங்கள் என்று சொல்லக்கூடியவை, பாசுரங்கள், தோத்திரங்கள் இப்படிப் பாடல்களைப் பாடி இந்தப் பாடல்கள் வழியாக உருவான நாயன்மார்கள், தாயுமானவர் போன்றவர்களாளெல்லாம் உருவானவற்றை சமயங்கள் என்கிறார். இப்படி இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கிறார். சைவம், வைணவம் முதலிய சமயம், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களில் இலட்சியம் வைக்க வேண்டாம் என்கிறார். “அவற்றில் தெய்வத்தைப் பற்றி குழுவக்கூடியதாக குறித்திருக்கிறதே அன்றி புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயில்வோமானால் நமக்குக் காலமில்லை, அதனால் அவற்றில் இலட்சியம் வைக்க வேண்டாம். ஏனெனில் அவைகளில் சமய மதங்களில் அற்ப பிரயோஜனங்கள் பெற்றுக் கொள்ளக்கூடுமே ஒழிய ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கை உண்மை எனும் ஆன்ம அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் நமக்கு காலமில்லை மேலும் இவைகளுக்கெல்லாம் சாட்சியமாக நானே இருக்கிறேன்” நானே இருக்கிறேன் என்று அவர் வெளிப்படுத்துவது தனது சொந்த அனுபவத்தின் மூலமாக அறிந்தவை. நான் பெற்றவற்றை, நான் அறிந்தவற்றை நான் உங்களுக்குச் சொல்லு கிறேன், அதை நீங்கள் பின்பற்ற வேண்டும். “சாதியும், மதமும், சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி”. “சாதி, சமய சடங்கை விட்டேன், அருட் ஜோதியைக் கண்டேன்”. இப்படி பல விசயங்களை வெளிப்படுத்துகிறார்.v arasu viduthalai rajendran and kolathoor maniஇப்படி ஜாதி, மத, சமயங்களுக்கு எதிராக அவர் பாடிய பாடல்களைத் தொகுக்கின்ற காலம் வருகிறபோது, அது சார்ந்த அமைப்புகளை அவர் உருவாக்குகிறபோது, இவரின் ஜீவகாருண்யம், தயவு, அது சார்ந்து இவர் மனித வாழ்க்கையின் மீது கொண்ட அன்பு இவற்றைச் சார்ந்து அவர் செயல்பட்ட அனைத்து முறைமைகளுக்கும் கடுமையான சிக்கல்கள் வருகிறது. இது தான் வள்ளலார். அவர் மிக மகிழ்ச்சியாகவெல்லாம் வாழ்ந்து விட்டுப் போகவில்லை. 1865இல் சன்மார்க்கம் என்பதை அவர் அறிவிக்கிறார்.

கிறிஸ்துவத்தில் உள்ள ஜீவகாருண்யத்தைப் போல நமது தமிழ் மரபுகளில் உள்ளதைத் தேடி கட்டமைப்பதில் அவர் பயிற்சி பெற்றிருந்தார். கிறிஸ்துவத்தில் ஜீவகாருண்யம் போன்றவைக் கூடுதலாக இருப்பதை நாம் பார்க்க முடியும். இந்து மதம் என்று பார்த்தால் அதில் அப்படி எதுவும் இல்லை. சமயங்களோ, மதங்களோ ஒரு கடவுள் வழிபாடுகளைத் தவிர்த்து, சடங்கு களைத் தவிர்த்து மனித மேம்பாடுகளுக்காக என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினால் அதற்கு விடை இருக்காது. ஏனென்றால் அவைகள் ஒன்றும் செய்யவில்லை என்பதே பதில். ஆனால், கிறிஸ்தவத்திலோ, இஸ்லாத்திலோ மனித வாழ்வியலைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். கிறிஸ்துவர்கள் இங்கே வந்த உடன் என்ன செய்தார்கள் ? பட்டினியாக இருந்தவர்களுக்கு உணவு கொடுத்தார்கள். மருத்துவமனை கட்டினார்கள். எந்த இடத்திலாவது, சைவமோ வைணவமோ, மக்களுக்கு உணவு கொடுப்பதைப் பற்றியோ, உடல்நிலை சரியில்லையென்றால் சரி செய்வது பற்றியோ கூறியிருக்கிறதா ?

பிற்காலச் சோழர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? 8ஆம் நூற்றாண்டில் சங்கராச்சாரி, இங்கே வருகிறார். சங்கராச்சாரி இங்கே வருகிறபோது ஒரு பெரிய கூட்டத்தைக் கூட்டி வருகிறார். அவர்கள் தான் 'ஸ்மார்த்தப் பார்ப்பனர்கள்' என்று சொல்லக் கூடியவர்கள். அவர்கள் அனைவரும் இந்த இரஜாக்களைச் சுற்றி வளைக்கிறார்கள். அதனால் தானங்கள் அனைத்தையும் பெறுகிறார்கள். கோவிலுக்குள் உட்கார்ந்து கொண்டு கருவறைக்குள் இராஜாக் களுக்குக் கூட அனுமதி மறுக்கிறார்கள். நமது தமிழ் மொழியை தூக்கி எறிந்தார்கள். முழுதாக சமஸ்கிருத மொழியைக் கொண்டு வந்தார்கள்.

எனவே, சமஸ்கிருதம் என்பது கடவுள் மொழி, அதைப் பேசுகிறவர்களை எதுவும் செய்யக் கூடாது என்று பார்ப்பனர்களுக்கான அதிகாரங்களை கொடுத்தார்கள். மிகப்பெரிய கட்டிடக்கலை, கோவில்களை கட்டியிருந் தாலும் அதில் முழுதாக பார்ப்பனர்களின் ஆதிக்கம் இருந்தது. இதை தற்போதைய காலத் தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், வட இந்தியாவில் இருந்து இந்தி, இந்தி என்று திணிக்கிறார்களே அதன் மூலம் அனைத்தையும் செய்து விடலாம் என்று நினைக்கிறார் களல்லவா ? அதே போல, 8ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருதம் மூலமாக செய்து முடித்தார்கள். இந்த சமஸ்கிருதங்களை, சடங்குகளை வள்ளலார் ஏற்றுக் கொள்ள வில்லை. அவர் சன்மார்க்கத்தை அறிவித்த 1865 முதல் 1874 வரை மிகப் பெரிய புரட்சியாளராக அவர் வாழ்ந்திருக்கிறார்.

35 வயது முதல் அவர் பாசுரங்களைப் பாடியிருந்தாலும் அவர் 1865 இல் இருந்து களத்தில் இறங்குகிறார். சன்மார்க்கத்திற்கான விதிகளை உருவாக்குகிறார். அதில் சாதி மறுப்பு, சமய மறுப்பு ஆகியவகளை விதிகளாகக் கொண்டு வருகிறார். 1867 இல் வள்ளலாரின் பாடல்களைத் தொகுத்து முதன் முதலாக அச்சிட்டுக் கொண்டு வருகிறார்கள். வேலாயுதம் முதலியார் அவருடன் 1849 முதல் இருக்கிறார். அவர் முயற்சியால் தான் வள்ளலாரின் பாடல்கள் தொகுக்கப்படுகிறது. ஆனால், வள்ளலார் தனது பாடல்களைத் தொகுக்கக் கூடாது என்கிறார். உடன் இருந்தவர்கள் உணவு உண்ண மாட்டோம் என்று கூறி அவரை சம்மதிக்க வைத்தார்கள். அப்படி தொகுக்கப் பட்டது தான் “அருட்பா”. இது ஆறுமுக நாவலருக்கு பிடிக்கவில்லை. ஏன் பிடிக்க வில்லை? வள்ளலார் கருணீகர் குலத்தைச் சேர்ந்தவர். ஒரு கருணீகர் அருட்பா பாடுவதா? என்பதே நாவலரின் எண்ணம்.

சைவ வேளாளர்கள் அல்லது பார்ப்பனர்கள் தான் அருட்பா பாட முடியும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள். கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு போடப்படுகிறது. இப்படி அவருக்கு என்னென்ன உளைச்சல்களைக் கொடுக்க முடியுமோ அப்படி அவரது பாடல்கள் வந்த உடனே தரத் தொடங்கி விட்டனர். இப்படி ஜாதி எந்தெந்த வடிவங்களில் வருகிறது என்பதை வள்ளலார் உணர்கிறார். இதனால் வள்ளலார் மனரீதியாக பாதிக்கப்படுகிறார். வள்ளலார் கருணையின் வடிவம். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் உண்மை யாகவே வாடினார். வா, வா என்று எதுகை மோனைக்காக எழுதியவர் இல்லை. இந்த ஜாதிய ரீதியான தொந்தரவுகள் 1865 முதல் 1930 வரை தொடர்ந்தார்கள். இந்த காலகட்டத்தில் தான் தமிழில் ‘கண்டனம்’ என்ற விசயம் அதிகமாக நடந்தன. கிறிஸ்துவர்களை எதிர்த்து எழுதுவது, அதற்கு கிறிஸ்துவர்கள் எழுதுவது, சைவர்களை எதிர்த்து வைணவர்கள் எழுதுவது என்று இப்படி பல விசயங்கள் நடைபெற்றன. 1878 முதல் 1888 வரை செயல்பட்ட “மெட்ராஸ் லௌகீக சங்கம்” என்ற ஒரு அமைப்பை எதிர்த்து, யாழ்ப்பாணத்தில் இருக்கக் கூடிய சபாபதி நாவலர் என்கிற வெள்ளாளர் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். ஏனென்றால் மெட்ராஸ் லௌகீக சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நாத்திகத்தை பேசினார்கள், மூட நம்பிக்கையை மறுத்தார்கள். பெரியபாளையத்தம்மன் கோவிலுக்குச் செல்வதைப் பற்றி லௌகீக சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு கட்டுரை எழுதினார்கள், “பெரிய பாளையத்தம்மன் கோவிலுக்குப் போவதேன், வாந்தி, பேதி வந்து சாவதேன்?” இதை 1883இல் எழுதினார்கள்.

அய்ரோப்பிய புத்தொளி இயக்கம் நமது மண்ணில் செல்வாக்கு செலுத்தியது அந்த காலத்தில். வங்காளத்தில் செல்வாக்கு செலுத்தியதாகக் கூறிவார்கள். ஆனால் அங்கே செலுத்தியது ஒரு வகையான அரசியல் செல்வாக்கு. சமய மறுப்போ, கடவுள் மறுப்போ அங்கு இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் தான் கடவுள் மறுப்பு, சமய மறுப்பு என்று புத்தொளி மரபு வேகமாக உருவானது. அந்த மரபு உருவான காலத்தில் இந்தச் செயல்பாடுகளைக் கவனித்து வருபவராக வள்ளலார் இருந்திருக்கிறார்.

அவர் இந்தக் கடவுள் என்ற ஒன்று கூறுவதற்கு ஜீவகாருண்யத்தில் இருந்து கூற முயற்சி செய்து சன்மார்க்கத்தை உருவாக்கு கிறார். எனவே, அருட்பாவில் ஒரு தலைவலியை உருவாக்கினார்கள். அதன் பிறகு 'சத்திய தருமச் சாலை' என்ற ஒன்றை உருவாக்கிறார். இதற்கு பொருள் என்னவென்றால் ‘அணையா அடுப்பு’. இன்றைக்கும் வடலூரில் அந்த அடுப்பு எரிந்து கொண்டே இருக்கிறது. ஒரு நாளைக்கு 1000 முதல் 2000 பேர் உணவருந்துகிறார்கள்.

மனிதன் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ? மனிதனுக்கும், அவனது பசிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதைத்தான் தத்துவமாக கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதி வைத்தார்கள். பசி எப்படி வருகிறது இதற்கு காரணம் என்ன ? உழைப்பை யார் சுரண்டுகிறார்கள் ? என்று தான் ‘கம்யூனிச அறிக்கை’ யை உருவாக்கினார்கள். ஏறக்குறைய இதே போன்று தான் வள்ளலாரும், பசிப் பிணிக்கு எதிராக எப்படி செயல்பட முடியுமோ அப்படி செயல்பட்டு தான் இந்த சத்திய தருமச் சாலையை உருவாக்குகிறார். அடுத்ததாக சத்திய ஞான சபையை உருவாக்கு கிறார். இது தான் ஒளி வழிபாடு. இப்படி வள்ளலார் உருவாக்கியவைகளை அப்போது இருந்தவர்கள் பாராட்டினார்களா ஆதரித்தார்களா ? என்றால் பெரிய சிக்கல் இருக்கிறது. அவர் இதை உருவாக்குகிறபோது பல எளிய மக்கள் நிலங்களை தானமாக கொடுக்கிறார்கள். ஆனால், வள்ளலாரின் அமைப்பிற்குள் புகுந்த சிலர் நாச வேலைகளில் ஈடுபடுகின்றனர். நிலங்களை பட்டா போடுகிறார்கள். இப்படி பல துன்பங்களை அவருக்குக் கொடுக்கிறார்கள். அவற்றை வள்ளலார் பல கடிதங்கள் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தக் கடிதங்கள் பாலகிருஷ்ண பிள்ளை என்பவரால் 1930 இல் தொகுக்கப்படுகிறது. அந்தக் கடிதத்தில் ஒன்று, “இந்த சாலையால் எனக்கு மிகவும் சலிப்பு உண்டாகிறது. அந்த சலிப்பு இரண்டு பக்கத்திலும் உபத்திரமும் பண்ணும். ஆதலால் சாலையில் இருப்பவர்களெல்லாம் சன்மார்க்கத்திற்கு ஒத்து வாயடங்கி, மனமடங்கி இருக்க வேண்டும். என்மேற் பழியில்லை. சொல்லி விட்டேன். பின்பு வந்ததைப் பட வேண்டும்” இப்படி அவர் கோபப்பட்டு எழுதுகிறார். இப்படி பல கடிதங்கள் உள்ளன.

இப்படி பல இடையூறுகள் அவருக்குக் கொடுக்கப்படுகின்றன. வடலூரில் இருந்தால் தாங்க முடியாது என்று அங்கிருந்து தள்ளி மேட்டுக் குப்பத்தற்கு செல்கிறார். மேட்டுக்குப்பத்திற்கு செல்கிற ஆண்டு 1873. அங்கிருந்து தான் அவர் அதிகமான உபதேசக் குறிப்புகளை வழங்குகிறார். இதில் தான் முழுமையாக ஜாதி எதிர்ப்பு, சடங்கு எதிர்ப்பு, சமய எதிர்ப்பு என்று அனைத்தையும் பதிவு செய்கிறார். இப்படி மன துன்பத்திற்கு ஆளாகி தான் 1873 இறுதியில் கதவை சாத்திக் கொண்டுவிட்டார். 1874 வாக்கில் வெளியே வந்து பேசுவார் என்று நினைத்தார்கள். அதன் பிறகு அங்கே திறந்து பார்த்தால் அதில் ஒன்றுமில்லை. அங்கு சாம்பல் இருந்தது, எலும்பு இருந்தது என்று கூறப்படுவது அனைத்தும் கதைகள். இதைப் பற்றி சென்னை லௌகீக சங்கம் நடத்திய ‘தத்துவ விவேசினி’ என்ற பத்திரிக்கையில் விரிவாகப் பதிவு செய்துள்ளார்கள். வள்ளலார் மறைந்து ஒன்பது ஆண்டுகள் கழித்து பதிவு செய்தனர்.

இரண்டு நிகழ்வுகள் நடந்திருக்க வேண்டும். ஒன்று அவர் தற்கொலை செய்திருக்க வேண்டும் அல்லது அவரைக் கொலை செய்திருக்க வேண்டும். இப்படித் தான் சென்னை லௌகீக சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தத்துவ விவேசினியில் எழுதினார்கள். மறைமலை அடிகள் அங்கே சென்றிருக்கிறார் 'ஒன்றும் இல்லை' என்று தான் கூறினார். வெள்ளையர்கள் சென்று பார்த்தார்கள் ஒன்றுமில்லை என்று தான் கூறினார்கள். எப்படி நந்தன் தீக்குள் பாய்ந்து நேரடியாக சிவனிடம் சென்றார் என்று கூறினார்களோ அதே போல வள்ளலாரையும் கூறினார்கள். என்னைப் பொறுத்தவரை, ஒரு சிறு துன்பம் மனிதனுக்கு ஏற்பட்டாலும் தாங்க முடியாத வள்ளலார், அவ்வளவு இடையூறுகள் தாங்க முடியாமல் தற்கொலைக்குத் தூண்டுதலாக அமைந்திருக்கலாம். இல்லையென்றால் இவர் பேசிய சாதி, சடங்கு, சமய மறுப்புக்களை ஒத்துக் கொள்ளாத கூட்டம் அவரைச் சுற்றி இருந்தது. அவர்கள் இவரை ஏதேனும் செய்திருக்கலாம். இப்படி அவரையும் நந்தனைப்போல ஜோதியில் கரைந்து விட்டதாக கூறிவிட்டார்கள். நம்மவர்களும் அவர் ஜோதியில் கரைந்து விட்டார் என்றே கூறிக் கொண்டிருக்கின்றனர். ஒன்று அவர் தற்கொலை செய்திருக்கனும் அல்லது கொன்றிருக்க வேண்டும். இதற்கான ஆதாரங்களை நாம் தேடித் திரட்ட வேண்டும்.

இப்படி வள்ளலாரின் வரலாறைப் படிக்க வேண்டும். தமிழில் வள்ளலாரைப் பற்றி எழுதப்பட்ட வரலாறுகள் உண்மையானவை அல்ல. அனைத்தும் செவி வழிச் செய்திகள்.

(தொடரும்)

பேராசிரியர் வீ.அரசு

Pin It