சைவ நெறியாளர் கலையரசியின் ஆரிய எதிர்ப்பு முழக்கம்
கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, ‘ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ்’ என்ற தலைப்பில் கிறிஸ்துவ மத நல்லிணக்க அமைப்பு சென்னையில் டிசம்பர் 20, 2021இல் ஒன்றை நடத்தியது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
விழாவில் இஸ்லாம், முஸ்லிம், சைவ மதப் பிரிவினர் பங்கேற்றுப் பேசினர். சைவ நெறியாளரும் பரப்புரையாளருமான கலையரசி நடராசர் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி.
இந்து மதம் என்ற ஒன்றை, இங்கே பேசும் போது அருமை நண்பர் இனிகோ கூறினார். இந்து என்ற சொல்லையே குறிப்பிடாதீர்கள். அது உருவாகி 200 ஆண்டுகள் தான் ஆகிறது. நாங்களெல்லாம் சைவர்கள். எப்படி, ‘கல்தோன்றா மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய தமிழ்’ என்னுடையது. என்னுடையது என்று கூறியதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.
இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி கிருத்துவர்களாக இருந்தாலும் சரி தொப்புள்கொடி உறவுகள். அவர்கள் எங்களுடைய சகோதரர்கள். யார் என்ன செய்தாலும் நாங்கள் அவர்களை பிரிய மாட்டோம், எங்களையும் அவர்கள் பிரிய மாட்டார்கள். இனிகோ பேசும்போது இந்துக்கள் என்று குறிப்பிட்டார். இந்துக்கள் என்று குறிப்பிட வேண்டாம்; தமிழரென்றே குறிப்பிடலாம். தமிழர்களில் ஒரு பிரிவினராக நாங்கள் இருக்கிறோம் வேறொரு பிரிவினராக நீங்கள் இருக்கிறீர்கள். இதுபோன்ற மாநாடுகளில் இந்து என்ற வார்த்தையை பயன்படுத்துவதே நமக்கு பலவீனம். அப்படி ஒரு மதமே கிடையாது.
தமிழன் யார்?
“ஓங்கல் இடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி நீர் ஞாலத்து இருள் அகற்றும்
- ஆங் கவற்றுள்
மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது
தன் நேர் இலாத தமிழ்”
தமிழனும் அவ்வாறே. இந்தத் தமிழனுக்கு நிகர் உலகிலே எவரும் கிடையாது. மாயைக்கு உட்பட்டு போனதால் தமிழனின் எதிர்காலம் வருத்தத்திற் குரியதாகவும், அச்சத்திற்குரியதாகவும் இருக்கிறது.
கடந்த 18ஆம் நூற் றாண்டுகளிலே இந்தத் தமிழை முழுமையாக அழித்துவிடலாம் என்கிற எண்ணத்தில் அழிவின் விளிம்பில் கொண்டு நிறுத்தியவர்கள் இந்த ஆரிய மாபாவிகள். ஆரியர்களுக்கு எதையும் அழிப்பது என்றால் ஆனந்தம், ஆனந்தம், பேரானந்தம். அந்த வகையில் தான் இன்று இந்திய ஒன்றியத்தின் தேசிய இனங்களின், மொழி, பண்பாடு, பொருளாதாரம், வாழ்வாதாரம் ஆகிய அனைத்தையும் அழித்து அடிமைப்படுத்த வேண்டும் என்பதே இவர் களுடைய நோக்கம்.
மனிதர்கள் அடிமையாகவில்லை என்றால் அந்த மனிதர்களை அழித்துவிடுவார்கள். இதுதான் அவர்கள் வழக்கமாக கையாளுகின்ற முறை. அந்த வகையில் தான் மலைகள் சூழ்ந்த ஜார்கண்ட் மாநிலத்தை அதானிக்குத் தாரை வார்ப்பதற்காக அந்த மண்ணின் மக்களை ஏழை எளியவர்களை இவர்கள் படுத்துகின்ற பாடு, செய்கின்ற கொடுமைகள் ஏராளம்.
அந்த ஏழை மக்களை ஆதரித்து இந்த அநியாயங்களை எதிர்த்து குரல் கொடுத்தார் என் பதற்காக, தமிழகத்தை சேர்ந்த திருச்சி மாவட்டத்தை சார்ந்த ‘ஸ்டேன் சுவாமிகள்’ என்கிற தமிழ் கிருத்துவ பாதிரியார்; தமிழர். அவருக்கு வயது 84. அவர் ஒரு கொடிய நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார்.
அவரை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஆன்மிகத்தைப் பற்றி பேச தகுதி இருக்கிறதா? அன்பை பற்றி பேசலாமா? கருணை என்றால் என்னவென்று தெரியுமா? மிகவும் கொடியவர்கள்; ஆரியர்கள் மிகவும் கொடியவர்கள். தமிழகத்தில் தமிழ் மொழியை அழித்துவிட்டால் தமிழனை அழித்து விடலாம் என்பது இவர் களுடைய எண்ணம்.
அந்த வகையில் 18ஆம் நூற்றாண்டில் தமிழ்ச் சொற்களில் உள்ள 50 விழுக்காடு சொற்களை பிடுங்கி எறிந்து, 50 விழுக்காடு சமஸ்கிருத சொற்களை சேர்த்து தமிழ் மொழி என்கிற அந்த பெயரையே மறைத்து ‘மணிப் பிரவாளம்’ என்று புதிய பெயரை சூட்டினார்கள்.
அந்த கால கட்டத்தில் பல தமிழ் அறிஞர்கள் இந்த மண்ணில் தோன்றினார்கள். அப்படித் தோன்றியவர்களெல்லாம் தமிழ்த்தாயின் புதல்வர்கள். தமிழைக் காக்க கடமைப்பட்டவர்கள். ஆனால் இந்த ஆரியப் பாவிகளால் அந்நியர்கள் என்று கைகாட்டப்பட்ட சீகன் பால் கு, பெஸ்கி எனும் வீரமா முனிவர், எல்லீஸ், ஜி.யு.போப், டாக்டர் வின்ஸ்லோ, டாக்டர் கால்டுவெல் போன்ற கிருத்துவ பெருமக்கள் தமிழகத்தில் மறைக்கப்பட்ட பல எழுத்துக்களை, பல அறிவுச் செல்வங்களை நமக்கு மீட்டெடுத்து கொடுத் தார்கள். அப்படி அவர்கள் செய்திருக்கவில்லை யென்றால், இந்த தமிழ்நாட்டின் பல எழுத்துச் செல் வங்கள் நமக்கு கிடைக்காமலேயே சென்றிருக்கும்.
உ.வே.சா.வும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும்
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் அவர் செய்த பணிகளை மட்டுமே பேசுவார்கள். அந்த தமிழ் தாத்தாவிற்கு தமிழைக் கொடுத்தவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, அவரை நினைவுகூர மாட்டார்கள். அந்த தமிழ் தாத்தாவிற்கு உணவை வழங்கியது, தமிழ் மக்களின் உழைப்பில் விளைந்த திருவாடுதுறை ஆதீனம்.
இப்படி தமிழர்களின் உழைப்பு, தமிழர்களின் செல்வம், தமிழர்களின் ஆதரவைக் கொண்டு தலையெடுப்பார்கள் பிறகு ஆடிட்டர் குருமூர்த்தி போன்று தமிழ் நீஷ பாஷை என்று தமிழர்களை உட்கார வைத்துக்கொண்டு தமிழில் கூறுவார்கள். தமிழர்களும் கேட்டுக் கொண்டிருப் பார்கள்.
நம்மை உட்காரவைத்துக் கொண்டே ஒருவன் தமிழை நீஷ பாஷை என்று கூறுகிறான் என்றால் அவனை விட்டுவிடுவதா ? அந்த உணர்வும், வீரமும் எங்கே சென்றது தமிழனுக்கு ? இந்த தமிழன் ஏன் இப்படி ஆனான் ? சினிமா தான் காரணம். என்னைப் பொறுத்தவரை நான் அப்படித்தான் நினைக்கிறேன். இந்த சினிமா கவர்ச்சியினால், இன்று யார் யாரோ வந்து உரிமை என்கிறார்கள், போருக்குத் தயாராகு!
ஆன்மீக அரசியல் என்கிறார்கள். என்ன ஆன்மீக அரசியல்? எங்களுக்குத் தெரியாத ஆன்மீக அரசியலா? சமஸ்கிருதத்தில், ‘உபன்னா திராவிடம், பக்தி விருத்தம் கர்நாடகம், பிரளையம் கூர்ச்சவம்’ என்று ஒரு சொற்றொடர் உள்ளது. திராவிடம் என்று கூறினால் தமிழகம் என்று பொருள்.
உபன்னா திராவிடம் என்பது என்னவெனறால்? பக்தி தமிழகத்திலே உருவானது என்று பொருள் படும். ஆரியத்துக்கும் தமிழனுக்கும் என்ன தொடர்பு? ஆன்மீகம், பக்தியை பற்றி ஆரியர்களுக்கு என்ன தெரியும் ? அடுத்து பக்தி விருத்தியாம் கர்நாடகம், கர்நாடகத்தில் பக்தி வளர்ந்தது என்று பொருள். பிரளையம் தூர்ச்சரம் என்றால் குஜராத்தில் அழிந்தது என்று பொருள்.
குஜராத்தில் இருந்து யாராவது வந்தால் அனைத்தையும் அழித்துவிடுவார்கள் என்று அர்த்தம். இது சமஸ்கிருத சொற்றொடர். எனக்கு சமஸ்கிருதம் தெரியாது; அதை பார்த்தாலும் வாசிப்பது இல்லை. இவ்வளவு காலமாக அவர்கள் கூறிய கதைகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருந் தோம் இனி கேட்கமாட்டோம்.
தற்போது இந்து என்ற வார்த்தையை கேட்டாலே உடலெல்லாம் எரிகிறது; என்கிறபோது இந்து சம்மந்தப்பட்ட கதைகளை கேட்டாலும் பிடிக்கவில்லை. தமிழன் தமிழனாக இருக்க வேண்டும். சங்க இலக்கியங்களை படியுங்கள். திருமறை தான் நமது உயிரைக் காப்பாற்றுகின்ற நூல்.
இங்கே ஆட்சிக்கு வரக்கூடிய தகுதி யார் யாருக்கோ இருப்பதாக கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால் சைவர்களாகிய, தமிழர்களாகிய எங்களுடைய எண்ணம், எங்களுடைய கனவு இந்த தமிழகத்தை மீட்டெடுக்கும் ஆற்றல் கலைஞருடைய புதல்வராகிய மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தான் இருப்பதாக நான் எண்ணுகின்றேன்.
நான் பல இடங்களில் பேசிப் பார்த்ததில் அப்படித்தான் ஒரு முடிவை கூறுகிறார்கள். அவர் மேயராக, துணை முதல்வராக, செயல்தலைவராக இப்படி பல பொறுப்புகளிலிருந்து பணியாற்றி ஆட்சி அனுபவம் பெற்றவர்.
அந்த ஆட்சி அனுபவம் பெற்றவரிடம் இந்தத் தமிழகம் மிக மிக எதிர்பார்க்கிறது. தமிழ் மக்கள் அவரிடம் மிகுந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வைத்திருக்கிறார்கள். நிச்சயமாக நாளைய முதல்வர் அவர்தான், அதில் அய்யமில்லை.
(குறிப்பு: இந்த உரை, பார்ப்பனர்களை எரிச்சல் அடையச் செய்தது. அதன் காரணமாக மதன் ரவிச்சந்திரன் என்ற பா.ஜ.க. பேர்வழி அம்மையார் அனுமதி பெறாமல் திடீரென்று வீட்டிற்குச் சென்று தனது அடையாளத்தை மறைத்து பேட்டி ஒன்றை எடுத்துள்ளார். இது அயோக்கியத்தனம் என்று அம்மையார் கலையரசி கடும் கண்டனம் தெரிவித் துள்ளார். )
- கலையரசி