ஒரு இனக்குழு மட்டுமே தன் வளர்ச்சிக்காகப் பிறர் மீது காலம் காலமாகத் திணித்துக் கொண்டிருந்த சனாதனத்தை இன்று இந்துகள் என்கின்ற பொது நீரோட்டத்தில் இரண்டற கலந்து முன்பைவிடவும் பெரும் அரசியல் ஆதாயத்தை அடைய அடிமைத்தனத்தை வளர்த்தெடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது சனாதனம்.

வட இந்தியாவில் சனாதனம் என்பது இந்து தர்மமாகவே பார்க்கும் மாயை உருவாக்கி அரசியல் இலாபத்தை அறுவடை செய்து கொண்டிருக்கிறது. வடஇந்தியாவைப் போலவே தென்னிந்தியாவையும் குறிப்பாகத் தமிழகத்தையும் தன் ஆக்டோபஸ் கரத்தால் அரவணைத்துக் கொள்ளும் முயற்சியில் மிகத் துரிதமான திரித்தல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் சனாதன எதிர்ப்பு என்பது நேற்றைக்கோ இன்றைக்கோ தொடங்கியதல்ல. அதன் கோரமுகத்தினைப் பன்னெடுங்காலத்திற்கு முன்பே உணர்ந்து கொண்ட தமிழர்கள் அன்றைய சூழல் சார்ந்தும், தேவை சார்ந்தும் போராட்டாங்களை மிக வலிமையாக எடுத்திருக்கிறார்கள். நான்கு வருணப் பேதங்களை விடுத்து இறைவழிபாட்டு உரிமையைப் பெறவே அந்தப் போராட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றது. அதன் பின் தேவை சார்ந்து தீண்டாமை, கல்வியென ஒவ்வொன்றுக்குமான அடக்குமுறைகளையும் விடுவித்துக் கொள்வதற்கான தொடர் போராட்டமாக இன்றளவும் சனாதனத்திற்கு எதிரான போராட்டம் என்பது நீண்டு கொண்டே இருக்கின்றது.

nandhanarஇன்றைக்கும் சனாதனம் மதச்சார்பற்ற அரசியலையும் மதச்சார்பின்மையையும் ஒழித்துப் புதிய உருவெடுத்து நிற்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல். இன்னும் ஆழமாக அதன் சிந்தனை என்பது ஒரே மதம் என்று சொல்லப்படாத நடைமுறைப்படுத்துதலில் களம் இறங்கி இருக்கிறது. தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்கின்ற நடைமுறைகளை எல்லாம் உள்ளுக்குள் வைத்துக் கொண்டு இந்துகள் அனைவரும் சமம் என்கின்ற பெரும் பொய்யை மிக இயல்பாக எல்லோரையும் நம்ப வைக்க முனைகிறதென்றால் மதமும் சனாதனமும் எத்தனை போதை தரும் பொருளாக இருக்க வேண்டும்.

சனாதனத் தீயில் எரிக்கப்பட்டவர்கள்

சனாதனத்தின் அழுத்தம் என்பது மனிதர்களை எழுச்சி கொள்ளாமல் சாந்தமாகவும் சாத்வீகத்துடனும் கொன்று எரித்துக் கடவுள் பக்தியாக்கி விடுகிறது. இந்தக் கொடிய செயலை நாம் கண்டித்து விடாதவாறு கடவுள் கதைகளைப் புனைந்து புனிதமாக்கிப் பாதிப்பிற்கு உள்ளானவர்களும் பாதிக்கப்பட்ட சமூகமும் கைக்கூப்பித் தொழ வைக்கின்ற காரியத்தை வரலாறு நெடுகிலும் நடத்தி முடித்துக் கொண்டே இருக்கிறது.

சனாதனத் தீயிக்கு இரையான இரண்டு தமிழர்களை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஒருவர் நந்தனார். மற்றொருவர் இராமலிங்க அடிகளார். இந்த இருவருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இருவரும் சனாதனத்தின் பார்வையில் தாழ்த்தப்பட்டவர்கள். இருவரும் சிவபெருமானை உள்ளம் உருகத் தொழுதவர்கள், இருவரும் தீயில் இறங்கித் தங்களின் புனிதத்தை நிரூபிக்க முயற்சித்து இறைவனின் திருவடியில் கலந்தவர்கள். சனாதன தீயிக்குப் பலியானவர்கள்.

நந்தனார் கதைகள்

நந்தனார்க் கீர்த்தனையைக் கோபாலக்கிருஷ்ண பாரதி எழுதுவதற்கு முன்பே நந்தனார் பற்றிய செவிவழிக் கதைகள் சில வழிவழியாகச் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறன. கதைகளின் தொடக்கமும் முடிவும் அவரவரின் கருத்துக்கேற்பவும் தேவை சார்ந்தும் திரிக்கப்பட்டிருக்கின்றன. எத்தனை திரிபுகளாகக் கதைகள் சொல்லப்பட்டாலும் அதன் இறுதி முடிவு என்பது மரணத்தில் தான் முடிந்திருக்கிறது. இந்த முடிவு என்பது சனாதனத்தின் பார்வையில் இறைவன் திருவடி கலத்தல். அல்லது மோட்ச வாழ்வாக அது புனையப்பட்டிருக்கிறது.

கதை 1

கோபாலக்கிருஷ்ண பாரதி. சனாதனத்தைத் தீவிரமாக இன்றைக்கும் கடைபிடிக்க உறுதி கொள்ளும் வேதியர் மரபில் தோன்றியவர்.

இவர் நந்தனாரின் வாழ்க்கையைக் கீர்த்தனைகளாகப் பாடியுள்ளார். நந்தனார் சரித்திரம் என அழைக்கப்படும் இக்கீர்த்தனைகள் வாய்மொழிக் கதைகளோடு ஒப்பீட்டளவில் மிக நெருக்கமாக இருக்கிறது.

நந்தனார் சனாதனத்தைத் தீவிரமாகக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்த பண்ணைப் பிராமணரிடம் கூலித்தொழிலாளியாகவும். இறந்த மாடுகளையும் தோல் உரிக்கின்ற புலைத் தொழிலையும் செய்திருக்கிறார். வருணாசிரமப் படிநிலையில் கடைநிலையில் இருக்கிற சாதியாகப் பார்க்கப்பட்டிருக்கிறார். பெருதெய்வ வழிபாட்டை மனதால் கூட நினைக்க உரிமையற்ற இழிசாதியாகச் சனாதனம் வைத்திருந்த சாதியில் பிறந்தும் சிவனை உள்ளம் உருக வேண்டி வழிபட்டவர். கோயிலுக்குப் புறம் நின்று சிவத்தொண்டு புரிகின்ற அவலத்திலும் உள்ளத்தால் இறைவனுக்கு மிக அருகில் இருந்து வழிபாடு நடத்துகிறார். அவரின் உள்ளத்தில் இன்றைக்குச் சிதம்பரம் என்று அழைக்கப்படுகின்ற அன்றைய தில்லையில் நடனம் புரிகின்ற சிவபெருமானைத் தரிசிக்க வேண்டும் என்பது நெடுநாள் ஆசையாக இருந்தது. அவர் பிறந்த ஆதனூரில் இருந்து சிவபெருமானைத் தரிசிக்க வேண்டும் என்றால் பண்ணைப் பார்ப்பனரிடம் அனுமதி பெற வேண்டும்.

பண்ணைப் பார்ப்பனருக்கு ஒரு தாழ்த்தப்பட்டவர் சிவனை வழிபடுவதில் விருப்பமே இல்லை. தொடர்ந்து வருத்துகிறார். கடினமாக உழைக்கச் சொல்லி நிர்ப்பந்திக்கிறார். பண்ணையில் வேலை இருப்பதால் தில்லை செல்லக் கூடாது என்பது பார்ப்பணரின் கட்டளை. இத்தனை தடைகளையும் கடந்து இறை அருளால் நந்தனுக்குத் தில்லை செல்லும் வாய்ப்பு அமைகிறது. நந்தன் தில்லையின் புறநகர் சென்றடையும் பொழுதே தில்லையில் சிவப்பெருமானுக்கு நடத்தப்படுகின்ற வேள்விப் புகை வீசுகிறது. அந்தப் புகையும் வேள்வியும் நந்தனை அச்சப்படுத்துகிறது. அஞ்சிய நந்தன் தில்லையின் புறநகரிலேயே இரவு தங்குகிறார். அன்றைய இரவு இறைவன் நந்தனார் கனவில் தோன்றி "நந்தா நீ நாளை வேதியர்கள் மூட்டுகின்ற வேள்வித்தியில் இறங்கி மூழ்கி புனிதம் அடைந்து தன்னைக் காண வா" என்று சொல்கிறார். அதே நேரத்தில் வேதியர் கனவிலும் தோன்றி நந்தனுக்கு வேள்வித்தீயை மூட்டி நந்தனைப் புனிதமாக்குமாறு கூறுகிறார். இறைவனின் கட்டளையை ஏற்று வேதியர்கள் உருவாக்கிய வேள்வித்தீயில் நந்தன் மூழ்கி எழுந்து இறைவன் திருவடியை வணங்கியவர் இறைவனின் திருவடியில். கலந்து மீண்டு வரவில்லை.

கதை 2.

நந்தன் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்திருந்தாலும் இறைவழிபாட்டிற்கான பூசைப் பொருட்களான கோரோசணை போன்றவற்றைக் கொண்டு கொடுக்கின்ற பணியைச் செய்ததாகவும் அந்தச் சேவைக்கான மானிய நிலத்தை அவர் பெற்று இறைத் தொண்டு ஆற்றினார். அவர் பண்ணைப் பார்ப்பனரிடம் அடிமை பணியாற்றவில்லை. அதனால் பண்ணைப் பார்ப்பனர் நந்தனைத் துன்புறுத்தவில்லை. அப்படி கோபாலகிருஷ்ண பாரதி பாடிய நந்தனார் கீர்த்தனை என்பது அதீதக் கற்பனை என்றும் மற்றப்படி இறைவழிபாட்டில் மூழ்கியிருந்த நந்தனுக்குத் தில்லை செல்வதில் தான் ஒரு புலையர் என்பதில் தயக்கம் இருந்ததாகவும், புலையன் என்கிற இழிபிறப்பு நீங்க வேள்வித்தீயில் இறங்க இறைவன் கட்டளையிட்டதும் தீயில் இறங்கி இழிபிறப்பு நீங்க பூணூல் அணிந்து இறைவனைத் தொழுது இறையடி சேர்ந்தார் என்கிற கதையொன்றும் சொல்லப்படுகிறது.

கதை 3.

ஆதனூரில் பிறந்த நந்தன் பண்ணைப்பார்ப்பனரிடம் நிலத்தில் கூலித்தொழிலாளியாகப் பணியாற்றுகிறார். இறைவன் மீது அதீத பற்றுக்கொண்டு சிவனை நாள் தோறும் வழிபாடு நடத்துகிறார். தில்லையில் நடைபெறும் நடராசர் தரிசனத்தைக் காண விரும்பியவர் தன் ஆசையைப் பண்ணைப் பார்ப்பனரிடம் கூறுகிறார். ஒரு புலையன் மார்கழித்தரிசனத்தைக் காண்பதில் உடன்பாடு இல்லாத பண்ணைப் பார்ப்பனர் நந்தனை பல்வேறு சூழ்ச்சிகள் செய்து இறைத் தரிசனத்தைக் காணச் செல்லாது தடுத்து நிறுத்துகிறார்.

"மாடு தின்னும் புலையா உனக்கு மார்காழி தரிசனமா?" என்று கேட்டுவிட்டு. வயல் இன்னும் நடவு நடத் தொடங்கவில்லை எனவும் நட்டு முடித்துவிட்டுச் சிவனைத் தரிசிக்கச் செல்லலாம் எனவும் கூறுகிறார். அவர் இட்ட பணிகளை எல்லாம் செய்து முடித்துவிட்டு நந்தன் தில்லைத் தரிசனம் செல்வது என்பது நடக்காத காரியம். பெருத்த மனத்துயரோடு இந்த ஆண்டும் ஆரூரான் தரிசனத்தைக் காண முடியவில்லையே என்ற கவலையில் தூங்கச் செல்கிறார்.

அன்று இரவு நந்தன் கனவில் இறைவன் தோன்றுகிறார். தோன்றிய இறைவன் "நந்தா உன் பண்ணைப் பார்ப்பனரின் நிலங்கள் முழுதும் நடவு முடிந்து; விளைச்சல் பெருகி ; அறுவடையும் ஆகிவிட்டது. நீ புறப்பட்டுத் தில்லைக்கு வா" என்று அழைப்பு விடுக்கிறார்.

காலை பொழுது விடுகிறது. நந்தன் பண்ணை வயலுக்கு ஓடுகிறார். இறைவன் சொன்னது போலவே அறுவடை முடிந்து களத்தில் நெல் குவிந்து கிடக்கிறது. அங்கிருந்து பண்ணைப் பார்ப்பனரின் இல்லத்திற்கு ஓடுகிறார். நிகழ்ந்தவற்றைக் கூறிவிட்டு. நேரே தில்லைக்குப் புறப்படுகிறார்.

நடைப்பயணமாகத் திருப்புன்கூர் வருகிறார். அங்கே இறைவனைத் தருசிக்க முயற்சிக்கிறார். நந்தி பெருமான் இடையில் கிடந்து நந்தன் இறைவனைத் தரிசிக்க விடாமல் தடுக்கிறது. நந்தன் இறைவனிடத்திலே முறையிடுகிறார். " இறைவா இத்தனைத் தூரம் உன்னைத் தரிசிக்க ஓடோடி வந்த எனக்கு ஏன் இத்தனை சோதனை?

தன்னைக் காணாதவாறு ஏன் நந்தி என்னைத் தடுக்கிறது?" என இறைவனிடம் முறையிட இறைவன் நந்தியை விலகிப் போகுமாறு கட்டளையிடுகிறார். நந்தியும் விலகிப் படுக்கிறது.அதன்பின் இறைவனைத் தரிசனம் செய்கிறார். இன்றளவும் திருப்புன்கூர் சிவாலயத்திற்குச் சென்றால் நந்தி விலகி படுத்திருப்பதைக் காண முடியும்.

திருப்புன்கூரில் இருந்து நடையாகவே தில்லைக்குப் பயணம் நிகழ்கிறது. இறைவனைத் தரிசிக்கச் செல்லும் மகிழ்வில் நடனம் ஆடிக்கொண்டே வீதியில் வருகிறார். அவர் நடனம் ஆடி வந்த ஊர் இன்றளவும் 'ஆனந்தக்கூத்தன்' என்று அழைக்கப்படுகிறது.

அங்கிருந்து கொள்ளிடம் ஆற்றைக் கடந்துதான் தில்லை என்று அழைக்கப்பட்ட சிதம்பரத்திற்குச் செல்ல வேண்டும். வழியில் இன்றைக்கும் சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி தருகின்ற சிதம்பரநாதபுரம் என்று அழைக்கப்படுகின்ற ஊரில் உள்ள சிவனையும் நந்தன் தரிசனம் செய்கிறார். அவர் தரிசனம் செய்து கொண்டிருக்கையில் சிதம்பரம் நடராசர் கோவிலில் அடித்த மணியோசை கேட்கிறது. அப்போது நந்தனார் அந்த ஊருக்குச் சிதம்பரநாதபுரம் எனக் காரணம் கருதி பெயர் சூட்டுகிறார். சிதம்பரத்தில் அடித்த நாதமாகி மணியோசை இப்புறம் கேட்டதால் இவ்வூர் இனி சிதம்பரநாதபுரம் என அழைக்கப்படும் என்பது நந்தனாரின் வாக்கு.

சிதம்பரநாதபுரத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் தான் கொள்ளிடம் ஆற்றங்கரை உள்ளது. அவ்வாற்றைக் கடந்து சென்றால் எட்டுக் கிலோ மீட்டர் தொலைவில் சிதம்பரத்தை அடையலாம். இவ்வழியாகத் தான் நந்தனார் நடந்து சென்று சிதம்பரத்தின் புற எல்லையில் தங்கி; மறுநாள் சிவனைக் கோவிலுக்கு வெளியே நின்று தெற்கு வாயிலில் வழிபாடு நடத்துகிறார். வழிபடும் பொழுது தோன்றிய இறைவன் நந்தனாரை அப்படியே விழுங்கி விட்டதாகவும். நந்தனின் பாதங்கள் மட்டுமே சிவனின் வாயில் தெரிந்ததாகவும். அதன் பின் தாழ்த்தப்பட்டவர் இறைவனை வழிபட்டதால் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டது என்று கருதி நந்தன் இறைவனை வழிபட்ட அந்த தெற்கு வாயிலை இனி யாரும் வழிபடாதவாறு அடைத்து வைத்திருக்கிறார்கள். இன்றளவும் அடைத்து வகைப்பட்டிருக்கின்ற அந்த வாயிலைக் காண முடியும்.

சனாதனத்தின் முடிவு

சனாதனம் படிநிலைகளில் அடிமைத்தனத்தையும் அடக்கு முறைகளையும் கடவுளைத் துணைக்கு அழைத்துக் கொண்டு மிக எளிமையாக அரங்கேற்றியிருக்கிறது. நந்தனின் கதைகளின் முடிவுகள் அனைத்துமே நமக்கு அதனை மெய்ப்பிக்கின்றன. நந்தன் கதையின் முடிவு என்பது மரணத்தில்தான் முடிந்திருக்கிறது. இறைவனை வழிபட்ட நந்தன் ஏன் மீண்டு வரவில்லை என்கின்ற கேள்வியை முன் வைத்தால் இறையடி சேர்ந்து விட்டார் என்கிற எளிய பதிலை முன் வைக்கிறார்கள். அது எப்படி இறைவன் திருவடியை அடைந்தால் மீண்டு வர முடியாதா என்கின்ற விஞ்ஞான கேள்விகளை எல்லாம் இறைவழிபாட்டிற்கு முன் வைக்க முடியாது. இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை என்பதை விடவும் இது போன்ற கேள்விகளையே கேட்க முடியாது என்பதுதான் உண்மை.

இப்படியான நிலை என்பது சனாதனத்தை எதிர் கேள்வி கேட்டவர்களுக்குத்தான் நிகழ்ந்திருக்கின்றன. நந்தனாகட்டும் வள்ளலார் ஆகட்டும் இவர்கள் இப்படியான கேள்விகளை முன் வைத்தவர்கள். அதனால் சனாதனம் மூட்டிய கொடுந்தீயிலிருந்து இவர்கள் நினைத்தாலும் மீண்டுவர இயலாது என்கின்ற பேருண்மையை இவர்களின் வாழ்க்கையின் முடிவுகள் மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன.

சீதையின் கற்பை மெய்ப்பிக்க உண்டாக்கிய தீயும், நந்தனையும் வள்ளலாரின் சாதி இழிவை எரித்து அவர்கள் இறைவனை வழிபட மூட்டிய தீயும் ஒன்றல்ல என்பதை நம்மால் உணர முடியும். தீயில் இறங்கி தன் கற்பின் புனிதத்தை உண்மையாக்கிய சீதைக்கு அதன் பின் வாழ்ந்த வாழ்வின் தொடர்கதையாடல்கள் உண்டு. தீயில் இறங்கி பூணூல் அணிந்து சனாதனப் புனிதத்தை ஏற்றுக் கொண்டு இறைவனை வழிபட்ட நந்தனுக்கு அதன் பின் தொடர் கதையாடல் என்பது இல்லை. அவர் மீண்டுவர முடியாத இறைவனின் திருவடியை அடைந்து விட்டார் என்று கதையாடல் முற்றுப் பெற்று விடுகிறது எனில் சனாதனம் என்ன சொல்கிறது. மார்பிலே நூல் அணியாதவர் எவராயினும் இறைவழிபாடு நிகழ்த்தினால் மீண்டுவர இயலாத இறைவன் திருவடிகளை அடைந்து விடுவீர்கள் என்று சொல்லாத ஒரு செய்தியைச் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

இப்படியான மோட்ச வாழ்வைச் சனாதனத்திற்கு வெளியே இருப்பவர்களுக்குக் காட்டி சனாதனத்தை எதிர்ப்பவர்களுக்கும் எதிர்கேள்வி கேட்பவர்களும் இறைவனின் திருவடிக்கலத்தல் என்கின்ற மரண வாழ்வே கிடைக்கும் என்று நந்தனாரின் வாழ்க்கை வரலாற்றுக் கதைகளின் மூலம் காலம் காலமாக நம்மை சனாதனத்திற்கு எதிராக ஒன்று சேராமல் இறைவனைக் கைகாட்டியே அச்சமூட்டி வைத்திருக்கிறது சனாதனம்.

- மகா.இராஜராஜசோழன், குழந்தைகளுக்கான தமிழ் பயிற்றுநர், செம்மொழி தமிழ்க்கூடம், சீர்காழி.

Pin It