‘வைதீகத்தை எதிர்த்த வள்ளலார்’ எனும் தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கம், அக்டோபர் 22, மாலை சென்னை அன்பகத்தில் சிறப்புடன் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரை யாற்றினார். முன்னதாக வைதீக எதிர்ப்புப் புரட்சிகரப் பாடல் களுடன் பாடகர் கோவன் குழுவினர் நடத்திய கலை நிகழ்ச்சி அரங்கை சூடேற்றியது.
“இந்த அரங்கில் தலைசிறந்த ஆளுமைகள், துடிப்பு மிக்க இளைஞர்கள், பெண்கள் என்று அரங்கத்தில் கூடியிருப்பதைப் பார்க்கும்போது மிகுந்த நம்பிக்கை யும் எழுச்சியும் உருவாகிறது” என்று கோவன் குறிப்பிட்டார்.
மு.வெ. சத்தியவேல் முருகனார் ‘ஆகமங்களும் அர்ச்சகர்களும்’ எனும் தலைப்பிலும், பேராசிரியர் வீ. அரசு, ‘வள்ளலாரின் இறுதிப் பத்தாண்டுகள்’ எனும் தலைப்பிலும், பேராசிரியர் கருணானந்தன், ‘வள்ளலார் வைதீக எதிர்ப்பு’ எனும் தலைப்பிலும், நிறைவாக கொளத்தூர் மணி, ‘வள்ளாருக்குப் பிறகு பார்ப்பனியம், வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சபையில் உருவ வழிபாட்டைத் தொடங்கி, பார்ப்பனியமாக்கி, வள்ளலாரின் இலட்சியங்களை அழித்தொழிக்க நடத்திய சதிகளை’ விளக்கியும் உரையாற்றினார். நிகழ்வில் நன்செய் பதிப்பகம் மாணவர்கள், இளைஞர்களை பெரியாரியல் கொள்கைக்கு ஈர்க்கும் நோக்கத்தோடு அதற்கான வாழ்வியலை விளக்கிடும் ‘இரகசிய புத்தகம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. பெரியார் மய்யம் இதைத் தொகுத்துள்ளது.கருத்தரங்கில் பேசிய பேராசிரியர் கருணானந்தன், “வள்ளலார் வைதீகத்தையும் பவுராணிகத்தையும் (கோயில், சிலை வழிபாடு) சேர்த்து எதிர்த்ததால், அவரை மக்களிடமிருந்து பிரிக்க ‘ஜோதியில் கலந்தார்’ என்ற சூழ்ச்சியை அரங்கேற்றினார்கள்” என்று விளக்கினார். அவரது உரையிலிருந்து சில பகுதிகள்:
“இந்த அரங்கில் இருப்பவர்கள், நாத்திகர் களோ, ஆத்திகர்களோ அல்லது கடவுள் பற்றி அக்கறை இல்லாதவர்களோ (Agnostics) நிறைந்திருக்கிறார்கள். நம்மை இங்கு எது இணைத்திருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், 'மனிதம்'. மனித மான்பு, மனித சமத்துவம், மனித முன்னேற்றம் இந்த அடிப்படையில் அக்கறை உள்ளதினால், ஆர்வத்தினால் நாம் இங்கே இணைந்திருக் கிறோம். ஆத்திகம் பேசியதாக கூறப்படும் வள்ளலாருக்கும், நாத்திகம் பேசிய பெரியாருக்கும் கடவுள் ஒரு மய்யப் பொருளே அல்ல. இருவரது மய்யப் புள்ளியும் மனிதம் தான். கடவுளுக்கு மனித உதவி தேவைப் படுமா? சர்வ சக்தி பொருந்திய கடவுளை மனிதன் வந்து தான் உயர்த்திப் பிடிக்க வேண்டுமா? எந்த தத்துவமும் மனிதனை மய்யப்படுத்தி இருக்கும் போது தான் அது இந்த சமூகத்திற்குப் பொருந்து கிறது. நீங்கள் கூறுகின்ற கடவுள் இருக்கின்றாரா என்று ஆராய்வது எங்கள் வேலை. அந்த ஆய்வினால் மனிதத்திற்கு எதாவது பயன் உண்டா என்பது எங்கள் வேலை.
தீபாவளி வாழ்த்தையும் நான் கூற வேண்டும். ஏன் கூற வேண்டும்? மகாவீரரின் இறுதி நாள் இதுதான். வைதீகத்தை எதிர்த்த மகாவீரரை மறக்க செய்வதற்காக தீபாவளியை உருவாக்கியிருக் கிறார்கள். வைதீகத்தை எதிர்த்த வள்ளலார் என்பது கருத்தரங்க தலைப்பு. நாம் இன்று நடைமுறையில் பேசுகின்ற வைதீகம் என்பது பார்ப்பனீயம் என்று பொருள். பல முகமூடிகள் பார்ப்பனியத்திற்கு உண்டு. வைதீகம் என்று கூறினால் பார்ப்பனியம், சனாதனம் என்று கூறினால் பார்ப்பனியம், வர்ணாஸ்ரமம் என்று கூறினால் பார்ப்பனியம், ஆரிய மதம் என்றால் பார்ப்பனியம், பௌரானீகம் என்றால் பார்ப் பனியம். இப்படி பல முகமூடிகள் இருக்கின்றன. இந்த முகமூடிகளில் வசதிக்காக நாம் வைதீகம் என்ற ஒன்றை எடுத்துக் கொண்டோம். வைதீகம் என்றால் வேதம் சார்ந்தது என்று பொருள். வேதம் என்றால் அவர்கள் கூறுகிற, ரிக், யஜூர், சாம, அதர்வண என்ற நான்கு வேதங்கள் என்று பொருள். வேதாந்தம் என்பது வேதத்தை மறுப்பதாக பொருள். வேதத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக பொருள். அதையும் வேதத்தின் சாரமாக நம்மை நம்பச் செய்தார்கள். விளக்கங்கள் மூலமாக மூலத்தை திரித்து விட்டார்கள். வேதாகமம் என்ற சொல்லை வள்ளலாரும் பயன்படுத்தி இருக்கிறார்.
]ஆகமம் என்ற சொல் நிறுவன மயப்பட்ட வழிபாட்டு முறைக்கு செயல்முறை விளக்கங் களை கூறுவது என்று பொருள். அது கோவில் சார்ந்தது சிலை சார்ந்தது. வள்ளலார் வைதீகத்தை மட்டுமல்ல, வைதீகத்தின் இரண்டாம் முகமான பௌரானீகத்தை யும் எதிர்த்துப் போராடினார். புராணம் என்பது எப்படி வந்தது? ஆதி கால ஆரியர்களுக்கு பல கடவுள் மீது நம்பிக்கைக் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் Polytheism என்று சொல்லக் கூடிய பல கடவுள் கொண்ட நம்பிக்கை கடவுளை அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். வசதிக்காக ஒரு கடவுளை முன்னிலைப்படுத்தி பிற கடவுளை பின் நிலைப் படுத்துவார்கள். போர் என்றால் இந்திரனை முன்னிலைப்படுத்து வார்கள். ‘யக்ஞம்’ என்றால் சோமனை முன்னிலைப்படுத்துவார்கள். இப்படி வசதிக்காக கடவுளை வரிசைப்படுத்தும் நம்பிக்கை முறையை வேத கால ஆரியர்கள் கொண்டிருந் தார்கள்.
நாம் கடவுள்களைப் பார்க்கும் போது இரண்டு விதமாக பார்க்கிறோம். ஒன்று கற்பிதக் கடவுள், இரண்டு கருத்தியல் கடவுள். வள்ளலார் அருட் பெருஞ்சோதி என்று கூறியது கருத்தியல் கடவுள். சிவன் என்று வருகிறது அது கற்பிதக் கடவுள். சிவனை சிவமாக மாற்றுகிற போது அது கருத்தியல் கடவுள். சைவ சித்தாந்தம் சிவனை சிவமாக மாற்றியது. ‘அன்பே சிவம்’ என்று தான் கூறியது. அன்பே சிவன் என்று கூறவில்லை. கற்பிதம், கருத்தியல் இரண்டிற்கும் உண்டான வேறுபாட்டை நாம் தெரிந்து கொண்டு நாம் இந்த வைதீகத்தைப் பற்றி விளங்கிக் கொள்ள வேண்டும். போரில் வெற்றி பெறுவதற்கு யாகத்தில் பலியிட வேண்டும், மேலே இருக்கிற கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் என்று மோசடி செய்கிற தோத்திரப் பாடல்களை நம்பி ஏமாறுவதற்கு ஏமாளிகள் இருந்தார்கள், ஏமாந்தார்கள். அதை இந்தியா முழுமைக்கும் விஸ்தரித்தார்கள். அதைத்தான் Brahmanisation in India என்று கூறுவார்கள்.
பிராமணிய மயம் என்பது மன்னர்களின் படையெடுப்புக்களால் வந்தது அல்ல. அசோகன் படையெடுத்தான். ஆனால் பிராமணியத்தை கொண்டு வரவில்லை. பிராமணியம் என்பது மன்னர்களால் ஆதரவளிக்கப்பட்டு பிராமண குடியேற்றங்களால் உருவாக்கப்பட்டது. பேராசிரியர் அரசு கூறினாரே பல்லவர் காலத்தில் நிலங்கள் கொடுக்கப்பட்டது என்று. அதற்கு முன்பே துவங்கிவிட்டது. பிரம்மதேயம் என்பது முதலில் கொடுக்கப்பட்டது விந்திய மலைப் பகுதியில். அது அதிக எண்ணிக்கையில் விரிவாக்கம் செய்யப்பட்டது பல்லவர் காலத்தில். அந்த பிரம்மதேயம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. பிரம்மதேயம் எதற்காக கொடுக்கப்பட்டது என்று குறிப்புகள் உள்ளன. இந்தக் குறிப்புகள் முதலில் எழுதப் பட்டது ‘பிராகிருத’ மொழியில். பின்னர் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தினார்கள். பல்லவர்களின் இறுதிக் காலத்தில் தமிழில் வந்தது.
பல்லவர்கள் பிராமணர்கள் அல்ல. பல்லவர்கள் உள்ளூர் மக்கள். அவர்களை தங்களது மாய மோசடி வலையில் பார்ப்பனர்கள் வீழ்த்தினார்கள். தென்னகத்தில் சத்ரியர்கள் இல்லை என்று அவர்களது புராணம் கூறுகிறது. பிறகு எப்படி பல்லவர்கள் வந்தார்கள்? உள்ளூர் மக்களில் சிலரை விலை பேச முடியும். எப்படிப் பேச முடியும் ? “உங்களுக்கு நாங்கள் அந்த தெய்வீக அந்தஸ்தைத் தருகிறோம்”. நீங்கள் ‘பரத்வாஜ கோத்திரம்’ என்று பல்லவ மன்னர்களுக்கு கூறுவார்கள். பரத்வாஜ கோத்திரம் என்பது பிராமண கோத்திரம். அந்த பல்லவ அமைச்சரவையில் அமைச்சர்களாக மாறிய இந்தப் புரோகித கும்பல் தனது கோத்திரத்தை அந்த மன்னனுக்கு கொடுத்து விட்டன. மன்னன் உடன் பிறந்தவன் சூத்திரன்; மன்னன் மட்டும் சத்ரியன். எந்தவொரு பல்லவ கல்வெட்டிலும் மன்னனை பிராமணன் என்று குறிப்பிடவில்லை. ஆனால் கோத்திரம் பரத்வாஜ கோத்திரம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது இந்தியாவில் எங்கும் காணப்படுகின்ற பிராமணிய விரிவாக்கத்தின் ஒரு வெளிப்பாடு.
சோழர்களிடத்தில் என்ன கூறினார்கள்? கோத்திரத்தை கூறவில்லை. ‘சூரியகுலம்’ என்றார்கள். சேரர்களிடத்தில் ‘அக்னிகுலம்’ என்றார்கள். அங்கேயும் கோத்திரம் வரவில்லை. பாண்டியர் களிடத்தில் ‘சந்திரகுலம்’ என்றார்கள். அதே மன்னர்களிடம் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, ‘நீ பிரம்மாவினுடைய பேரனுக்கு, பேரனுக்கு பிள்ளை’ என்றார்கள். “நீ தேவ, அசுர போரில் தேவர்களின் பக்கம் நின்று அமிர்தத்தை எடுத்து கொடுத்தீர், இந்திரனுடன் போரிட்டு நீ வென்று விட்டாய். அர்ஜுனனை போரில் நீ வென்றிருக்கிறாய். குருnக்ஷத்திரப் போரில் பாண்டவர்கள் பக்கம் நின்று வெற்றி வாங்கி கொடுத்துவிட்டாய் என்று மன்னர்களைப் புகழ்ந்து அவர்களை தமதாக்கிக் கொண்டார்கள். இது வியாசரின் பாரதத்தில் இல்லை. அவர்களது எந்த வடமொழி புராணங்களிலும் இது இல்லை. கல்வெட்டுகளில் உள்ளன. ஏமாந்தவர்கள் நம்மவர்கள். தனக்கு இந்திரப் பதவி கிடைப்பதாக நினைத்துக் கொண்டு, தம் மக்களை பலிகடாக்களாக மாற்றினார்கள். நம்மை வீழ்த்தியதே நமது மன்னர்கள்.
நிலங்கள் என்பது சமூக சொத்து. அதை எடுத்து பிராமணர்களுக்குக் கொடுத்தார்கள்; உழைக்கின்ற மக்களையும் வேலைக்கு அனுப்பி வைத்தார்கள்; இது செப்பேட்டில் இருக்கிறது. பிராமணர்களுக்கு ‘தரிசு நிலம்’ தரக் கூடாது; சோழர்கள் காலம் யாருக்கு பொற்காலம்? பார்ப்பனர்களுக்குத் தான்! வைதீகத்தால் நாம் வீழ்ந்தோம்; வைதீகம் அறிவைக் கொண்டது அல்ல; நம்பிக்கையை, மோசடியைக் கொண்டது. அவர்கள் குறி வைத்தது ஆளும் பிரிவினரை. அவர்கள் வைதீகத்தில் வீழ்ந்தார்கள். மன்னராட்சி போய் மக்களாட்சி காலம் வந்து விட்டது. இப்போது மக்களை மயக்குவதற்கு சிலைகளையும் கோயில்களையும் பயன்படுத்துகிறார்கள். அண்ணாமலை கூறுகிறார்: ஸ்டாலின் தமிழை வைத்து வியாபாரம் செய்கிறார் என்கிறார். நீ என்ன செய்கிறாய்? மதத்தை வைத்து விபச்சாரம் செய்கிறாய்! அனுமனின் வாரிசுகள் அப்படித்தான் இருக்கும்.
சிற்றரசர்கள் பேரரசர்களாக மாறிய காலத்தில் பெருங்கோயில்களைக் கட்டினார்கள். அவை மக்களின் வரிப் பணத்தால் கட்டப்பட்டன. கட்டாயப்படுத்தி உழைப்பை உறிஞ்சி கோயில்கள் கட்டப்பட்டன. மக்களுக்குரிய இடங்கள் கோயிலுக்கு தரப்பட்டன. நில உடைமை யாளர்களாக இருந்த நம் மக்கள் தினக் கூலிகளாக மாற்றப்பட்டனர். எங்கு வளமான அரசுகள் இருக்கிறதோ அங்கு ‘மறையவர்கள்’ வந்து விடுவார்கள். அது என்ன மறையவர்கள்? வேதங்களில் உள்ளதை மக்களிடம் மறைத்ததற்காக இவர்கள் மறையவர்களானார்கள் என்றே நான் கூறுவேன். நாம் ‘மறையோர்’ அல்ல; அறிவார்ந்தோர்; இந்த மறையோர் சூழ்ச்சிகளில் எல்லாம் இலட்சியம் வைக்க வேண்டாம் என்றவர்தான் வள்ளலார். வள்ளலார், 50 ஆண்டு, 3 மாதம், 25 நாட்கள் உயிருடன் இருந்தார். அவருக்கு பல இலட்சியங்கள் இருந்தன. மக்களைப் பற்றிக் கவலைப் பட்டவர். மக்களை விட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நந்தனைப்போல், பாணனைப் போல், ஆண்டாளைப் போல் அவரும் ஜோதியில் அய்க்கியமாகி விட்டார் என்று சொன்னார்கள். யாரெல்லாம் இப்படி ஜோதியில் அய்க்கியமானவர்கள் என்பது நமக்குத் தெரியும்.
நடராசன் கோயிலில் அப்பரும், சுந்தரரும் மீண்டும் மீண்டும் போனார்கள்; வந்தார்கள். அவர்கள் சைவர்கள் என்ற உயர்குலப் பிறவி யாயிற்றே! ஆனால் நந்தன் மட்டும் போக முடியாமல் தடுக்கப்பட்டான். “உள்ளே ஒரு முறை அனுப்பி வை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று நடராசன் அழைத்திருப்பான் போலிருக்கிறது. போன நந்தன் திரும்பி வரவில்லை. இது ஒரு எச்சரிக்கை. நந்தனைப்போல் எவராவது உள்ளே வரவேண்டும் என்று போராடினால் திரும்பி வர மாட்டீர்கள் என்று விடுக்கப்பட்ட எச்சரிக்கை தான் இது. ஆண்டாள் திருவரங்கம் கோயி லுக்குப் போனவர் திரும்பவில்லை. அதேபோல் திருப்பாணாழ்வாரும் திருவரங்கம் கோயிலுக்குப் போனவர் திரும்பவில்லை.
நந்தன்களும் திருப்பாணாழ்வார்களும் ஆண்டாள்களும் அதற்குப் பிறகு உருவாகாமலேயே போய் விட்டார்கள். பவுராணிகம் சிலைகள், கோயில்கள், ஆகமங்களை வைத்து - நம்மைப் பிரித்தது; அழித்தது. யக்ஞங்களை வைத்து ஆட்சியாளர்களை தனது கைப்பிடிக்குள் வைத்து நம்மை சுரண்டியது. இந்த வைதீகமும் பவுராணிகளும் வர்ணபேதத்தை தெய்வ அங்கீகரமாக்கியது. சங்கரர் 6 மதங்களை ஒருங்கிணைத்து இந்து மதத்தைக் கட்டமைத்தார். அதில் அவர்களின் கடவுளான ‘பிரம்மா’ வரவில்லை; ஏன் வரவில்லை என்று எவராவது கேட்டார்களா? சன்மதத்தில் உள்ள கடவுள்கள் பார்ப்பனர்களின் கடவுள் அல்ல. ஆனாலும் அந்தக் கடவுளுக்கு அர்ச்சகர் ஆகும் உரிமை அவாளுக்கே உண்டு என்பதற்காகவே சங்கரர் இந்த இணைப்பை உருவாக்கி, புராணம், இதிகாசங்களை எழுதி ஆகமங்களைக் க hட்டி, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன. வள்ளலாரும் இப்படித்தான் போனவர் திரும்பவில்லை. ஜோதியில் கலந்து விட்டார் என்றார்கள். ஏன் திரும்பவில்லை? காரணம், அவர் வைதீகத்தை மட்டுமல்ல பவுராணிகத்தையும் எதிர்த்தார்” என்றார் பேராசிரியர் கருணானந்தம்.