மொழிபெயர்ப்புக்கு ஒரு குறிப்பு எழுதியதற்காக கோர்ட்டுக்கு இழுக்கப்பட்டிருக்கிறார் கவிஞர் மீனா கந்தசாமி. பொன்னர் சங்கர் சாமிகளை தலித் சாமிகள் என்று குறித்தது பிழை - கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் சாமியை தலித் சாமி என்று சொல்லி இச் சாதிகளுக்கிடையில் சண்டை உருவாக மீனா காரண‌மாகிறார் என்பது கவுண்டன்புத்தூர் லோகநாதனின் குற்றச்சாட்டு. 

தலித்துக்களிடம் இருந்து ‘சாமியைப்’ பறிப்பது காலம் காலமாக நடந்து வருவதுதான். ஒவ்வொரு சாமியும் என்ன சாதி என்ற புரளியைக் கிளப்பி விட்டிருக்கிறது இந்த வழக்கு. ஒரு சாமியை தலித் சாமி என்று சொல்வதால் சண்டை வரும் என்று மிரட்டுபவர்களின் அரசியல் கேவலமானது. தலித்துகளுக்கு அடிவிழும் என்பதை சட்ட ரீதியாக சொல்ல முற்படுகிறார்கள்.

தலித்துகளுக்கு எதிராக நடக்கும் எத்தனையோ கொடுமைகளுக்கு எதிராக ஒரு உள்நாட்டு யுத்தமே நடந்து கொண்டிருக்க வேண்டிய நிலையில் - அடி விழும் அதற்கு அவர்களே பொறுப்பு என்ற பாணியில் கோர்ட்டுக்கு போவது தெனாவட்டிலும் ஒரு தெனாவட்டு. தலித்துகள் படும் அவலங்கள் பிரச்சினையில்லையோ?

மீனா மொழிபெயர்த்த புத்தகம் வந்து இன்று 7 வருசத்துக்கும் மேலாகிறது. இன்று வரைக்கும் ஒரு சச்சரவும் இல்லை. விடுதலை சிறுத்தை கட்சிக்கெதிராக ஒரு சாதிச் சச்சரவை உண்டு பண்ணி ஒரு ‘படிப்பினை’ காட்டவேண்டும் என்ற சாதி வெறியுடன் போடப்பட்டுள்ள வழக்கு இது. உண்மையில் சாதிச் சண்டையை தூண்டுவது, வழக்கு போட்ட லோகநாதனும் -அவர் ஏதோ நியாயமான வழக்கு போட்டிருக்கிறார் என்பதுபோல் பிரச்சாரம் செய்யும் சில ஊடகங்களுமே. 

மீனா கந்தசாமிக்கு கடவுள் இல்லை. அவரது கவிதைகள் சாதிய ரீதியாக வர்க்கரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் மொழியை கைப்பற்றி கலையாக்கும் உத்வேகம் கொண்டவை. அவரது அரசியற் சரிவு ஒடுக்கப்படுவோரை கவனப்படுத்துவதாக இருக்கிறது. இந்த கடவுளைக் கைப்பற்றும் பினாத்தலுக்கு அடிபணியப்போவதில்லை அவர். ‘சிறையில் களி தின்னத் தயார்’ என்று, இந்தமாதிரி மிரட்டல்களுக்கு தான் மசியப்போவதில்லை என்பதை அழுத்திச் சொல்கிறார் அவர்.

பொன்னர் சங்கர் கதையே ஒரு கற்பனைக்கதை என்று சொல்லப்படுகிறது – அதற்குள் சாமிக்கு சாதியைத் திணிக்கும் முயற்சி. போதாக்குறைக்கு இந்தியப் பண்பாடு பற்றி மீனாவுக்கு வகுப்பெடுக்க பலர் இணையதளமெங்கும் வரிசையில் வருகிறார்கள்.

மீனா ஆங்கிலத்தில் எழுதுபவர். சர்வதேச தளத்தில் அறியப்பட்டு வந்துகொண்டிருக்கிறவர். அவரை இப்படி ஒரு சொத்தை வழக்காட இழுத்து இந்திய நீதித்துறையின் லட்சணம் உலகளவில் நாறும் நல்ல நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. மீனாவுக்கு எதிராக – உலகெங்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்க தயங்காது இயங்கும் ஒருவருக்கு எதிராக  சும்மா ஒரு பம்மாத்து வழக்கு போட்டுவிட்டு – உலகெங்கும் இருக்கும் புத்திஜீவிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் சும்மா அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் என்பதுபோன்ற‌ கற்பனையை இந்த வழக்கைப் போட்டவர்களும் எடுத்த நீதித்துறையும் வளர்க்காதிருக்க நாம் அந்த பொன்னர் சங்கரைப் பிரார்த்திப்போம்.

-சேனன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

13 comments

13
jayabal
இந்திய சாதிய சமூகத்தில் தலித்துகள் கிள்ளுக் கீரைகளாக எண்ணி நடத்தப்படுகின்றனர். தலித்துகள் ஆங்கிலம், மேல்நாடு, அறிவுத்துறை, என வளர்ந்துவருவதைக் கண்டு அடைகின்ற சாதி இந்துக்களின் எரிச்சல் தான் இந்த வழக்கு. இதற்கு பார்ப்பனீய இந்து ஊடகங்கள் முதற்கொண்டு தூபம் போடும் நிலையில், தலித்துகளின் அடையாள அரசியல் என்பது மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
உமாசங்கர்
மீனா அதை வைத்து அனுதாப அரசியல் செய்கிறார்.வழக்கு அவர் மீதும்,திருமாவளவன் மற்றும் வெளியிட்டவர் மீதும் போடப்பட்டுள்ளது.வழக்கு போட்டது சரியல்ல.மீனா எழுதிய குறிப்புக்கு ஆதாரம் என்ன?. பொன்னர் சங்கர் தலித் என்று தலித் வரலாற்றை ஆய்ந்தவர்கள் எழுதியுள்ளார்களா இல்லை
தலித் இயக்கங்கள் பொன்னர் சங்கரை கொண்டாடுகின்றனவா.
தன் தரப்பு சான்றுகளை முன் வைக்க வேண்டியதுதானே.
வழக்குப் போட்டவர் வீம்பிற்காக போட்டார் என்றால் அதை வைத்து இவர் இல்லாததை எழுதி அனுதாபம் தேடிக்கொள்கிறார்.
ஆக இரு தரப்பிலும் நியாயம் இல்லை.
yazhni
திரு சேனன், உங்களிடம் சில கேள்விகள், இந்த மீனா கந்தசாமி தலித் என்று எந்த அடையாளத்தை மையப்படுத்தி எழுதுகிறீர்கள்? தலித் மக்களுக்கும் நீங்கள் எழுதி இருக்கும் சாமிகளுக்கும் என்ன உறவு? வரலாறை சரியாக படித்து புரிந்துக்கொள்ள முடியாத மீனா கந்தசாமியை எப்படி ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளர் என்கிறீர்கள்? இத்தனைக்கும் ஒரு வரலாற்று பெரசிரியரின் மகளுக்கே வரலாறு சரியாக தெரியவில்லை என்பது விந்தையாக இருக்கிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பே முடிந்த நாடகத்தை திரும்பவும் அரங்கேற்றம் செய்வதின் நோக்கம் என்ன? மீனா கந்தசாமி அம்பேத்கர்வாதியா, பெரியார்வாதியா? அப்படி இந்த இரு மாபெரும் போராளிகளின் வழியில் வந்தவர் என்றால்"This is why i return to God again and again anda again and again anda again, because he doesn't betray me, because he never says no to my dreams, because he is always there for me, because he is the only one in front of whom, i cry, because he doesn't hate me for being who i am, and because every single day, he makes me feel that i am the luckiest woman in the world.(MEENA KANDASAMY, ON 25 NOVEMBER 2010, 02:08)" தன்னுடைய பக்கத்தில் இப்படி புலம்ப வேண்டிய அவசியம் என்ன?
yazhni
//பொன்னர் சங்கர் கதையே ஒரு கற்பனைக்கதை என்று சொல்லப்படுகிறது – அதற்குள் சாமிக்கு சாதியைத் திணிக்கும் முயற்சி. போதாக்குறைக்கு இந்தியப் பண்பாடு பற்றி மீனாவுக்கு வகுப்பெடுக்க பலர் இணையதளமெங்கும் வரிசையில் வருகிறார்கள்.// இந்திய பண்பாடு குறித்து பேசுவதற்கு நீங்கள் யார் சேனன்? இந்திய தேசத்தின் மூத்தகுடிய? மாற்று தேசத்தை சேர்ந்த நீங்கள் எங்கள் பண்பாட்டை குறித்து பேசுவதற்கு யார் உரிமை தந்தது?போலிகள் எல்லாம் ஒன்றுகூடி கூத்தடிக்கிரீர்களோ?
yazhni
தலித் மக்களுக்கு அடிவிழும் என்று சமூகம் சாராத சேனன் எழுதும்போது தலித் வேடம் பூண்டு இருக்கும் இந்த மீனா கந்தசாமிக்கு கோபம் வந்து இருக்கவேண்டும். ஏன் வரவில்லை? உப்பு போட்டு சொருத்தின்னும் சுயமரியாதை மிக்க தலித் சமூகத்தில் பிறந்து சாதியக்கொடுமையையும் தாக்குதளையயும் சந்தித்து இருந்தால் "ஏன் சமூகத்தை எப்படி அடிவாங்கும் சமூகம் என்று சொல்லலாம் என்று கோபம் வந்து இருக்கும்" அவர்தான் வேடதாரி என்பது இதில் இருந்தே புரிகிறதே. இவர் ஒரு தலித் பெண் என்றால் சாதிய வன்கொடுமைகளை எத்தனை களங்களுக்கு சென்று நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் வலியை உணர்ந்து அவர்களுக்காக போராடி உள்ளார் என்பதை தெளிவு படுத்த சேனன் அவர்களிடம் ஆதாரம் இருக்கா? அவங்க அப்பா கந்தசாமி பிறந்த ஊரிலேயே இன்றளவும் சேரியும், ஊருமாக இருப்பகுதியாக பிரித்தே தலித் மக்களை ஒதுக்கி வைத்து உள்ளார்களே இதற்காக தன சொந்த ஊரில் எத்தனை போராட்டத்தை நடத்தினார் சொல்ல முடியுமா? அவர் தந்தையின் ஊர் பகுதியில் ரெட்டை குவளை பழக்கம் இருக்கே அதைக்கண்டித்து மேட்டுக்குடிகளை எதிர்த்து எத்துனை குரல் கொடுத்தார்?தன் தந்தையின் அறிவாற்றலையும், தாய்யின் கல்வியாற்றளையும் பயன்ப்படுத்திக்கொண்டு காலியாக இருக்கும் தலித் இடத்தை தான் ஒரு தலித் என்று விளம்பரம் செய்துக்கொண்டு வந்து நாடகம் நடத்திக்கொண்டு இருக்கும் மீனா கந்தசாமி தான் ஒரு தலித் என்று தலித்துகளுக்கு என்று இருக்கும் அடையாளங்களை ஆதாரப்பூர்வமாக வெளிக்கொண்டுவந்து நிரூபிக்க முடியுமா?ஒவ்வொரு நாளும் தலித் மக்கள் எத்துனை சாதியக்கொடுமைகளுக்கு ஆளாகிக்கொண்டு இருக்கிறார்கள் இதை கண்டித்தாவது பேசி இருக்காரா? அவர் இந்த தலித் மக்களை வைத்து அவரும் அவர்குடும்பத்தாரும் பாதுக்காப்பு செய்துகொண்டதுதான் அதிகம் என்பதை மருத்துகூருவாரா?
இறுதியாக சேனன் அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை, ஒவ்வொரு எழுத்தாளனின் பேனாவிற்கும் ஒரு வகையான கூர்மை உண்டு அதை நீங்கள் சரியாக பயன்படுத்தாமல் போனால் அடுத்த நிமிடமே அப்பேனா உங்களை பதம்பார்த்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களைபோன்ற எழுத்தாளர்களால் உண்மையை எழுதும் எழுத்தாளர்களுக்கு மதிப்பில்லாமல் போகிறது. நீங்கள் இப்படி ஒரு கட்டுரையை எழுதியதால் இந்த கீற்றுவிர்க்குதான் அசிங்கம்.
yazhni
தோழர் நந்தன் அவர்களுக்கும், கீற்று குழுமத்திற்கும் ஒரு வேண்டுகோள், இனியும் சேனன் போன்றவர்களின் நேர்மை அற்ற சுய லாப, எழுத்துக்களை பதிய அனுமதிக்காதீர்கள். இது எங்களை போன்ற கீற்று வாசகர்களை புண்படுத்துகிறது.
அய்யன்
'அடி விழும் அதற்கு அவர்களே பொறுப்பு என்ற பாணியில் கோர்ட்டுக்கு போவது தெனாவட்டிலும் ஒரு தெனாவட்டு'. - கட்டுரையாளரின் இந்த வார்த்தைகளுக்கு மேல் சாதிய பிரச்சினையைத் தூண்டிவிடும், சமூகத்தை நாசப்படுத்த எண்ணும் வன்மம் வேறு எதுவும் இருக்க முடியாது. கட்டுரை எழுதுபவர்கள் தங்கள் சமூகப் பொறுப்பை உணர்ந்து எழுத வேண்டும். வார்த்தைகளில் நஞ்சைக் கலக்கக் கூடாது.
'புத்தகம் வந்து இன்று 7 வருசத்துக்கும் மேலாகிறது. இன்று வரைக்கும் ஒரு சச்சரவும் இல்லை.'- என்கிறார். நூறு ஆண்டுகள் கழித்தும் ஒரு புத்தகம் வாசிக்கப்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் சப்பைக் கட்டு கட்டுவது போல மீனா என்ன வரலாற்று ஆய்வாளரா? தலித் தெய்வங்கள் என்பதற்கு எத்தகைய சான்றுகளை முன் வைக்கிறார்? பொன்னர் - சங்கள் வரலாறு படித்திருக்கிறாரா? அதில் உண்மை எது புனைவு எது என்று பிரித்தரியும் ஆற்றல் அவரிடம் உண்டா? குலதெய்வங்கள் எப்படி தோன்றின என்ற வரலாறு அறிவாரா? சாமிகளை வணங்க அனைவருக்கும் உரிமை உண்டு என்பது வேறு, சாமிகள் தோன்றிய வரலாறு என்பது வேறு. இதை முதலில் வக்காலத்து வாங்குபவர்கள் உணரவேண்டும். தலித்தியத்தின் பெயரின் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் கூடாது. அது எல்லா இடங்களிலும் செல்லுபடியாகாது. அதில் உண்மை இருக்கவேண்டும், நேர்மை இருக்கவேண்டும். அடாவடி இருக்க கூடாது. அது வெறுப்பிற்கு உள்ளாகும். ஆனாலும் காலகாலமாக இதுதான் நடக்கிறது. கவிதை எழுதுவது வேறு, வரலாற்றை ஆய்வது வேறு. மீனா அவர்கள் தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள மேற்கொண்ட சித்து வேலையாக இது இருக்கலாம். அல்லது முற்றிலும் அறியாமையாக இருக்கலாம். தேவையால்லாமல் அவரை பலிகடா ஆக்காதீர்கள்.
Sivam
2004ல் வெளிவந்த புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு ஒரு குறிப்பு எழுதியதில் 'பொன்னர் சங்கர் சாமிகளை தலித் சாமிகள்' என்று எழுதிய ஒரு வரிதான் 2011ல் லோகநாதன் இவர்கள்மேல்ப் போட்ட வழக்குக்கான காரணம்! 7 வருடத்திற்குப்பிறகு வழக்குப்போடப்பட்டிருக்கிறதாம். இது பற்றி எழுதிய சேனனுக்கும் வழக்குப்போடப்பட்டுள்ள மீனா கந்தசாமிக்கும் இங்கே பலத்த தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. சேனன் அவர்களை எனக்குத் தெரியாது. ஆனால் மீனா கந்தசாமி அவர்களை ஓரளவு பின்பற்றி வருகிறேன். எனக்கென்னவோ இந்தப்பின்னூட்டங்களைப் பார்க்கிறபோது 'தலித்துக்களின் மூலம் மீனா பெயர் எடுக்கிறார்' என்பதே பிரச்சனைபோலத் தெரிகிறது.

முதலாவது மீனா கந்தசாமி பற்றி அறியவேண்டும். இப் பெண்மணி இன்று பிரபலமானதற்கான காரணம். தலித்கள் பற்றிப் பேசுகிறார் என்பது மட்டுமல்ல. அவர் தனது 25 வயதிலேயே சர்வதேச அளவில் அறியப்பட்ட கவிஞர், ஆங்கில எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பெண்ணியவாதி. இவை அனைத்தும்தான் காரணம். அண்மையில் இவர் கவிதைகள் 2 பல்கலைக்கழக பாட நெறிக்குள் சேர்க்கப்பட்டதாய் அறிகிறேன். இப்படியிருக்க 'தன் தந்தையின் அறிவாற்றலையும் தாய்யின் கல்வியாற்றலையும் பயன்ப்படுத்திக்கொண்டு" என்று தனிநபர் தாக்குதல்களை மேற்கொள்ளுவது நாகரீகமற்ற, பக்குவப்படாத நிலைத்தாக்குதல்!

மீனா கந்தசாமி தலித்தியர்களின் பெயர் சொல்லி சங்கம் வைத்து வெளிநாடுகளிடம் பணம் கறக்கிறாரா? இல்லையே! இருந்தால் எங்கு எப்படி என்று சொல்லுங்கள்.

எவ்வகைப்போராட்டத்தையும் களத்திலும் நடத்தலாம் அடுத்தவர் மனத்திலும் நடத்தலாம். ஆகவே நான் எப்படி இருக்கப்போகிறேன் என்பதை ஒரு போராளி, தானேதான் தீர்மானிக்கிறான். மற்றவர்கள் அல்ல. எங்கள் பெயர் சொல்லிப் பிரபலமாக நினைக்கிறாயா? கிராமத்துக்கு வா! பாடுபடு என்பது ஒருவகை இயலாமையின் வெளிப்பாடு!

இங்கே குற்றம் சுமத்தப்படுவதுபோல அவர் தலித் இல்லையென்று வைத்துக்கொள்வோம். 'எங்களின் நிபந்தனையோடுதான் தலித்துகள் பற்றிப் பேசவேண்டும் என்று எப்படிச்சொல்வது" அவர் தங்களால் பணம் கொடுத்து வேலைக்கமர்த்தப்பட்டவரா? சரி, தங்கள் தலித்திய வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறார் என்றால் உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கிறது என்று கொள்ளலாம். அதைவிடுத்து இப்படித் தூற்றுவதில் பயன் இல்லையே! உங்களுக்குத் திருப்திதான் எஞ்சும்.

ஆங்கிலத்தில் எழுதும், சர்வதேச அளவில் அறியப்பட்ட ஒருவரின் பெறுமதி தெரியாமல் அவரைத் தாக்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.
ஒருவரைப் நமக்கேற்றாற்போல் பயன்படுத்த அறிவு தேவை. தாக்குவதற்குத்தேவையில்லை. எண்ணிப்பார்க்க கவலையே மிஞ்சுகிறது!!!

http://www.youtube.com/use​r/anasnawas#p/u/79/3OQY3bF​eUYo
தஞ்சை வெங்கட்ராஜ்
எது எப்படி இருந்தாலும் எழுச்சித் தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எந்த இழுக்கும் வராத வகையில் இந்த உரையாடல்கள் இருப்பதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்!
yazhni
அப்பா மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை(MBC) சார்ந்தவர், அம்மா பிற்படுத்தப்பட்ட(OBC) வகுப்பை சார்ந்தவர் என்றால் இவர்களுக்கு பிறந்த மகள் என்ன வகுப்புக்குள் வருவார்?

(a) MBC
(b) OBC
(c) Dalit
(d) None of these
selvaraj
சிவன் ஒரு வெட்டியான் என்பது வரலாறு. வெட்டியான் சமுகம் ஒரு தலித் சமுகம் . சிவன் ஒரு தலித் என்பதை ஏற்பார்களா ? இந்த சாதி வெறியர்கள்
thamizhan
such a note by meena kandasamy springs out of her dravidian leaning... considering brahmins vs. non brahmins on the whole and refusing to accept the caste divisions that exist among non-brahmins. And also the worst oppression on daliths are executed by the non-brahmin castes...
சாயிலன்
இந்திய பண்பாடு குறித்து வேறு யார் பேசவேண்டும் என்று எதிர்பார்கிறீர்கள் யாழினி?... சேனன் குறித்து குறை கூறுவதற்கு தங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று தெரியவில்லை... போலிகளை பற்றி நீங்கள் வகுப்பெடுக்கும் நிலையில் நாங்கள் இல்லை யாழினி... நாவடக்கம் மிகமுக்கியம் என்பதை மறந்துவிட வேண்டாம்...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.