பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (9)
22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம்.
பெரியார் கருத்துகளைத் தொகுத்து வெளி யிடப்பட்ட ‘பெரியார் பொன்மொழிகள்’ என்ற நூலுக்கு 1947ஆம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் ஆட்சி தடை செய்தது. பெரியார் மீது ‘வகுப்பு நிந்தனை’ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்து பெரியார் கைது செய்யப்பட்டார். ‘பொன்மொழிகள்’ என்ற கருத்துகளின் தொகுப்பை ஒரு பதிப்பகம் நூலாக வெளியிட்டதற்கே பெரியார், அரசின் அடக்குமுறைகளை சந்திக்க வேண்டி யிருந்தது.
இந்த பொன்மொழிகள் நூலை வெளியிட்டது - திருச்சியில் திராவிட மணி பதிப்பகத்தை நடத்தி வந்த தோழர் டி.எம். முத்து. இப்படி ஒரு தொகுப்பு நூல் வெளி வரப்போவது குறித்து பெரியாருக்கே தெரியாது. வெவ்வேறு காலகட்டங்களில் அவர் பேசியதை, டி.எம். முத்து, பெரியார் நடத்திய ஏடுகளிலிருந்து தொகுத்திருந்தார். ஆனால் அரசு பெரியாரையும் விட்டு வைக்கவில்லை. பெரியார் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். வெளியிட்ட தோழர் டி.எம். முத்து, நூலை அச்சிட்ட புதுக்கோட்டை அச்சகத்தின் மீதும், ‘வகுப்பு வெறுப்பை’ உண்டாக்கியதாக திருச்சி ‘சப்-டிவிஷனல்’ நீதிமன்றத்தில் அரசு வழக்கு தொடர்ந்து நூல்களையும் பறிமுதல் செய்தது. இதேபோல் பிரிட்டிஷ் ஆட்சி, கருத்துரிமைகளைப் பறித்து அடக்குமுறைச் சட்டங்களை ஏவி விடுவதாகக் குற்றம் சாட்டிய அதே காங்கிரசார்தான் ‘சுதந்திர’ இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளிலேயே பார்ப்பன எதிர்ப்பு கருத்துகளை பேசுவதற்கோ எழுதுவதற்கோ தடை போட்டதை சுட்டிக்காட்ட வேண்டும். வந்த சுதந்திரம் பார்ப்பன-பனியாக்களுக்குத்தான் என்று பெரியார் கூறியது மிகச் சரியே என்பதை உறுதி செய்து விட்டார்கள்.
11.3.1950 முதல் வழக்கு விசாரணை தொடங்கி, 18.9.1950இல் தீர்ப்பு கூறப்பட்டது. 10 முறை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பெரியாருக்கு 700 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாத சிறைத் தண்டனை; டி.எம். முத்துவுக்கு 500 ரூபாய் அபராதம் அல்லது நான்கு மாத சிறைத் தண்டனை; அச்சக உரிமையாளருக்கு 4 மாத சிறை அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப் பட்டது.
இரண்டாவது, மூன்றாவது குற்றவாளிகள் உடனே அபராதத் தொகையைக் கட்டி விட்டார்கள். பெரியார் வழக்கம்போல் அபராதம் கட்ட மறுத்து சிறைக்குச் சென்றார். திருச்சி மத்திய சிறையில் பெரியார் அடைக்கப்பட்டார். பெரியாருக்கு இது 12ஆவது சிறைவாசம். பெரியார் மீதான அடக்குமுறையைக் கண்டித்து நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. மக்கள் கிளர்ச்சிக் காரணமாக 18.9.1950இல் சிறையேகிய பெரியாரை பத்தே நாட்களில் 28.9.1950 அன்று திடீரென்று அரசு விடுதலை செய்தது. பெரியார் விடுதலையைக் கேட்கவில்லை. விடுதலை செய்தது தமிழக அரசு தான். என்றாலும் சிறையில் எஞ்சி இருக்க வேண்டிய காலத்துக்கு அபராதம் கட்ட வேண்டும் என்று கூறி பெரியாரின் காரை பறிமுதல் செய்து, அதை ரூ.835க்கு ஏலம் விட்டு அபராதத் தொகையை வசூல் செய்தனர். பார்ப்பனர்களை எதிர்க்கும் கருத்துகளை நூலாக வெளியிட்டதுதான் ‘குற்றம்’.
ஏலத்தில் விடப்பட்ட அந்தக் கார் 1948ஆம் ஆண்டு சுற்றுப் பயணத்துக்காக பெரியாருக்கு வழங்கப்பட்டதாகும். அப்போதைய மதிப்பு ரூ.12,000. சேலம் என்.எஸ். சர்வீஸ் உரிமையாளர் என். சத்தியாபிள்ளை என்பவரிடமிருந்து சேலம் குகைப் பகுதியைச் சார்ந்த ஜெகதீசன் மூலமாக ரூ.9 ஆயிரத்துக்கு வாங்கி பெரியாருக்கு தரப்பட்டது. கார் ஏலத்துக்கு வந்தபோது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த பஞ்சநாத முதலியார் அந்தக் காரை ஏலம் எடுத்து மீண்டும பெரியாரிடம் ஒப்படைக்க ஏலமிடும் இடத்துக்கு வந்தார். வல்லபாய் பட்டேல் மறைவையொட்டி அன்று ஏலம் விடுவது நிறுத்தப் பட்டது. மறுநாள் தான் ஏலம் விடப்பட்டது. அன்றைய நாளில் பஞ்சநாத முதலியார் வர இயலாமல் போனது. திருச்சியைச் சார்ந்த இரத்தினவேல் பிள்ளை என்பவர் ரூ.835க்கு காரை ஏலத்துக்கு எடுத்தார். ஏலம் எடுத்தவரிடம் அந்தத் தொகையைத் தந்து காரை மீட்டு மீண்டும் பெரியாரிடம் ஒப்படைக்க பஞ்சநாத முதலியார் முன் வந்தார்.
ஆனால் அரசின் அடக்குமுறைக்கு பந்தாடப்பட்ட அந்தக் காரை, தனி நபர் ஒருவர் பணம் போட்டு வாங்கி பெரியாரிடம் தருவது சரியல்ல; மக்களிடமிருந்து நிதி திரட்டி காரை மீட்டு பெரியாரிடம் வழங்க வேண்டும் என்று கழகத் தோழர்கள் இன உணர்வாளர்கள் முடிவு செய்தனர். பஞ்சநாத முதலியார் தலைமை யிலேயே ஒரு குழு நியமிக்கப்பட்டு மக்களிடம் சிறு சிறு தொகையை நன்கொடையாகத் திரட்டி, காரை வாங்கி பெரியாரிடம் ஒப்படைத்தனர். இந்தக் கார் மீட்பை ஒரு விழாவாக நடத்தி பெரியாரிடம் ஒப்படைக்க தோழர்கள் முடிவு செய்து 14.1.1951 அன்று திருச்சி பெரியார் மாளிகையில் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்தனர். திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுத் தலைவர் தி.பொ. வேதாசலம் விழாவுக்கு தலைமையேற்றார். இந்தக் கார் பெரியாரை சுமந்து இரண்டரை ஆண்டு காலத்தில் 65,000 மைல்கள் சுற்றி வந்ததையும் இந்தக் காரைப் பயன்படுத்தி பெரியார் செய்த பரப்புரை சமுதாயத்தில் உருவாக்கிய தாக்கத்தையும் உணர்ச்சியுடன் அவர் குறிப்பிட்டார். காரைப் பெற்றுக் கொண்ட பெரியார் தனது உரையில் இவ்வாறு கூறினார்:
“இந்தக் கார் என்னுடையது அல்ல; கழகத்துக்காக நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நன்கொடை அளித்த பொது மக்கள் கழகப் பணிக்கு என்னை ஆளாக்கி என்னிடம் வேலை வாங்கவே கழகத்துக்கு நன்கொடையாக அளித்தார்கள். அவர்கள் விருப்பப்படியே என் ஆயுள் முடியும் வரை கழகத் தொண்டு ஆற்றுவேன். இந்தக் கார் பயணத்தின்போது, அல்லது இந்தக் காரில் சென்று பணியாற்றும்போது எனது உயிர் நீங்குமானால் ஆவி அடங்குமானால், அதுதான் எனக்கு இலட்சிய வெற்றி அடைந்ததாகும்” என்று பெரியார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினார்.
பெரியார் மீதான வழக்கை விசாரித்த திருச்சி நீதிமன்ற நீதிபதி அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை இந்த வழக்கிற்குப் பொருந்தாது என்று கூறி, இந்திய தண்டனைச் சட்டம் 153(ஏ) பிரிவின் கீழ் இது குற்றம் என்று தீர்ப்பளித்தார்.
அந்தப் பொன்மொழிகள் நூலிலிருந்து 10 கருத்துகள் ‘பிராமண வெறுப்பு’ என்பதற்கான ஆதாரமாக அரசு தரப்பு முன் வைத்தது. உதாரணத்துக்கு ஒன்றிரண்டை சுட்டிக் காட்டுவோம்.
- பார்ப்பனக் கடவுளுடைய யோக்கியதையைச் சொல்லப் புறப்பட்டால் கையும், வாயும், காகிதமும் கூட நாற்றமெடுத்து விடும்.
- வடநாட்டான் ஒழிந்தால் பார்ப்பனர்கள் அடங்கி விடுவார்கள். பின் ஜாதி முதலியவற்றை அவர்களே மூட்டை கட்டிவிடுவார்கள்.
- தீண்டாமை விலக்கு என்று கூறி கோயில் திறந்து விட்டார்களே, இன்னும் பார்ப்பான் தானே மணியடித்து வருகிறான்; தட்டில் விழுகிற காசு அவனுக்குத் தானே இன்னும் போய்க் கொண்டிருக்கிறது?
- பார்ப்பனர்களுக்கு ஒன்று கூறுகிறேன்; நீங்கள் கடவுள், சாஸ்திரம், மதம் மீது பழியைப் போட்டு நாட்டுக்குரிய நாட்டை ஆண்ட எங்கள் இனத்தவர்களை ஏமாற்றிப் பிழைத்ததை இந்த 1949ஆம் ஆண்டோடு மூட்டைக் கட்டி வைத்து விட்டு பகுத்தறிவுக்கு இடம் கொடுங்கள் மனிதத் தன்மையை வளருங்கள்.
- ஒரு பார்ப்பானாவது செல்லாக் காசாவது கோயில் குளம் - ஒரு தான தருமம், இவற்றிற்குக் கொடுத்திருப்பானா? அப்படி இருக்க, இவ்வளவு செய்தும் நாம் ஏன் சூத்திரர்களாக இருக்க வேண்டும்? அவர்கள் மட்டும் ஏன் ஒன்றும் செய்யாமலே நம்மை ஏமாற்றி உண்டு பிராமணர்களாய் வாழ வேண்டும்?
- இப்படிப்பட்ட கருத்துகளைத் தான் ‘பார்ப்பன துவேஷ’ கருத்துகள் என்று கூறி அரசு வழக்கு தொடர்ந்தது.
வழக்கம்போல பெரியார் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஒரு ‘ஸ்டேட்மென்ட்’ (அறிக்கை) படித்தார். அந்த நூலையே வெளியிட்டதற்குப் பிறகு தான் பார்த்தேன் என்று கூறிய பெரியார், நான் ஏன் பார்ப்பனர்களை எதிர்க்கிறேன் என்பதை விரிவாக விளக்கிடும் கொள்கை அறிக்கையாகவே அதைத் தயாரித்து படித்தார்.
நீதிமன்றத்தில் பெரியார் சமர்ப்பித்த அந்த கொள்கை அறிக்கை, பெரியார் இயக்கம் தீண்டப்படாத மக்களுக்கு எதிரானது வகுப்புவாதம் பேசும் இயக்கம் என்ற பொய்ப் பிரச்சாரங்களைத் தகர்க்கிறது. அந்த அறிக்கையின் ஒரு பகுதி:
“கடந்த பல நூற்றாண்டுகளாகவே, இந்து சமுதாயம் பிராமணர், பிராமணரல்லதார், தீண்டப்படாதார் என மூன்று பிரிவினர்களாக பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். முதல் பிரிவினர் கல்வியில் ஏகபோக உரிமையைக் கொண்டாடி வருகிறார்கள். இதனால் அறிவு வளர்ச்சி பெற்று, வருகிற ஆட்சியாளர்களின் கைப்பாவைகளாக விளங்குகிறார்கள். குறைந்த முயற்சியிலேயே அதிக இலாபத்தை நன்மையை அடையும் தன்மையில் இருக்கிறார்கள். இது தவிர அவர்கள் எல்லா வகுப்புகள் மீதும் மதத்தின் பெயரால் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். ஜாதி பிரிவுகள் தான் சமுதாய அமைப்பை உண்டு பண்ணியிருக்கிறது.
நான் கடைசியாக எடுத்துக்காட்டியுள்ள தீண்டப்படாத பிரிவினர் இந்து மதத்துக்குப் புறம்பானவர்கள். அவர்களுக்கு கல்வி சொத்து, சமுதாய அந்தஸ்து முதலியவைகள் கிடையா. அவர்கள் அடிமைகள்.
மேற்கூறிய இரு பிரிவினர்களுக்குமிடையே உள்ளவர்கள்தான் சாஸ்திரப்படி சூத்திரர்கள் என்று அழைக்கப்படுகிற பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்கள். இவர்களில் முதற்படியிலுள்ள சிலருக்கு கல்வி வசதி கிடைத்தது. இவர்கள் பார்ப்பனர்களைப் போல் அவர்களின் பழக்க வழக்கங்களையே பின்பற்றினார்கள்; ஆட்சியாளர்களின் பார்ப்பன சமுதாயத்தின் ‘ஆமாம்’ போடும் சாமிகளானார்கள். அவர்கள் தங்களை ‘அதிர்ஷ்ட’சாலிகள் என்றும், தங்களை வைதீக சமூகம், மதம் ஆகியவைகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கருதிக் கொண்டு காலத்தோடு ஒத்துப் போய்க் கொண்டு எத்தகைய சீர்திருத்தத் திற்கும் ஒப்புக் கொள்ளாதவர்களாயுமிருந்து வருகிறார்கள். நடுத்தர மக்களாகிய சூத்திரர்கள் அல்லது பார்ப்பனரல்லாதார்களில் பெரும்பாலோர் ஏழைகள், தரித்திரர்கள், கல்வியறிவில்லாதவர்கள். ஏறக்குறைய மூன்றாவது பிரிவினர்களான தீண்டப் படாதவர்களை ஒத்தவர்கள். இவர்களை சர்க்கார் பிற்பட்ட வகுப்பார் என்று பிரித்து வைத் துள்ளார்கள்.
1919ஆம் ஆண்டு இந்திய சட்டத்தை நிறைவேற்றிய பிரிட்டிஷ் பார்லிமெண்டார், மற்ற சமூகத்தார் மீது சிறுபான்மையான சமூகம் ஆதிக்கம் செலுத்தி வருவதை ஒப்புக் கொண்டு, பார்ப்பனரல்லாத பெரும்பான்மையான சமூகத்திற்கு தனித் தொகுதி ஸ்தானங்கள் ஒதுக்கிற்று. ஒரு வருடத்திற்கெல்லாம் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. நல்ல ஆதரவு கிடைத்து, 1920-24இல் பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று சென்னை ஆட்சியை நிர்வகித்து வந்தது.
முதல் எதிரியாகிய நான், அந்நாளில் இந்திய தேசிய காங்கிரசில் முக்கிய பதவிகளை வகித்து வந்தேன். அதாவது மாகாண காங்கிரஸ் கமிட்டியில் முக்கிய பொறுப்பான பதவியிலிருந்து வந்தேன். சமுதாயத்தி லுள்ள இத்தகைய பிரிவுகள் - வேற்றுமைகள் இருப்பதை நான் விரும்பவில்லை. பார்ப்பனர் பார்ப்பன ரல்லாதார் என்ற பிரிவுகள் உடனே ஒழிக்கப்பட வேண்டுமென்று கருதினேன். படித்த பார்ப்பனர்கள் - வெளிநாட்டுக்குச் சென்று திரும்பிய பார்ப்பனர்கள் என்னைப் போலவே கருதினார்கள். ஆனால், வைதீகப் பார்ப்பனர்களும் சாஸ்திரங்களையும் புராணங்களையும் படித்து ஊறிப் போன பார்ப்பனரல்லாத பெரும் பான்மையோரும் எதிர்த்தார்கள். எனவே, நானும் சில தோழர்களும் காங்கிரசைவிட்டு வெளியேறினோம்.
வைக்கத்தில் தீண்டப்படாதார்களுக்காகப் போராடினேன். கோயிலுக்குப் போகும் ரோட்டில் தாழ்த்தப்பட்ட தோழர்களை அழைத்துச் சென்றேன். அதன் காரணமாக திருவிதாங்கூர் சர்க்காரால் ஒரு தடவைக்கு மேலாகவே சிறைப்படுத்தப்பட்டேன். ஆனால் என் முயற்சி வெற்றியடைந்தது.
கோயில் நுழைவு சட்டமாக்கப்படுவதற்கு வெகு நாட்களுக்கு முன்னமே நான் கோயில் நுழைவை ஆதரித்து வந்திருக்கின்றேன். என்னுடைய தோழர்கள் இதற்காக ஈரோட்டிலும் திருவண்ணாமலையிலும் கோயிலுக்குள் நுழைந்தார்கள். இதிலும் வெற்றி யடைந்தேன். தென்னிந்திய இரயில்வேயால் நடத்தப் படும் உணவு விடுதிகளில் பார்ப்பனர் பார்ப்பன ரல்லாதார் என்ற பிரிவுகள் ஒதுக்கப்பட் டிருப்பதை நான் எதிர்த்தேன். இப்பிரிவுகள் நீக்கப்படாவிட்டால் திருச்சி ஜங்ஷன் பிளாட்பாரத்தில் சத்யாக்ரகம் செய்யப் போவதாக அறிவித்தேன். அதிலும் நான் வெற்றி யடைந்தேன். இவ்வேற்றுமைகளைக் குறிக்கும் பலகைகளை அப்புறப்படுத்துமாறு இரயில்வே போர்டார் உத்தரவு பிறப்பித்தார்கள்.
பொதுவிடங்களில் வகுப்புகளுக்கு இருக்கும் குறைகள் நீக்கப்பட வேண்டுமென்று நான் கிளர்ச்சி செய்தேன். அதன் பயனாக, இது பற்றிய சட்டம் இன்று சட்ட புத்தகத்தில் ஏறிவிட்டது.
வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காக நான் அன்று போராடினேன். அதே கொள்கையை இன்றைய ஆட்சியாளரே ஒத்துக் கொள்கிறார்கள். பிரதிநிதித்துவ மில்லாத வகுப்புகளுக்கும் எந்த அளவுக்கு அவர்கள் பயத்தைப் போக்க முடியுமோ அதையும் இன்றைய ஆட்சியாளர் செய்து வருகிறார்கள்.
இப்பொழுது பிராதில் காணப்படும் பகுதிகள், நீண்ட நாட்களுக்கு முன் கடந்த 25 ஆண்டுகளாக நான் பேசியவைகளிலிருந்து பொறுக்கியெடுக்கப்பட்டவை களென்று வைத்துக் கொண்டாலுங்கூட, பிராமணீயம் ஜனநாயகத்துக்கோ குடியரசுத் தன்மைக்கோ ஏற்றதல்ல, பயனுள்ளதல்லவென்று என்னால் குறை கூறப்பட்ட வைகள், இந்து சமுதாயத்திலுள்ள சாதிப் பிரிவுகளையும் வைதீகத் தன்மையையும் நான் எதிர்த்து வந்திருக் கின்றேன்; உருவ வணக்கத்தையும் அதனால் நாட்டில் ஏராளமான பணம் பாழாவதையும் நான் கண்டித்து வந்திருக்கின்றேன்; இவைகளுக்கு ஆதாரமான புராணங்கள், சாஸ்திரங்கள், வேதங்கள் இன்று பயனளிக்காது என்று எடுத்துக்காட்டி வருகிறேன்; பகுத்தறிவுக்கு இவை புறம்பானவைகள் என்பதையும் எடுத்துக் காட்டியிருக்கிறேன்.
எவ்வளவு பழமையானதாயிருந்தாலும், என்ன வரலாற்றைப் பெற்றிருந்தாலும், உண்மையை எடுத்துக்காட்ட வேண்டும். சமுதாயத்திற்கேற்றதல்லாத சில முறைகள் நீக்கப்பட வேண்டுமானால், அவைகள் பற்றி மக்கள் யாவரும் உணருமாறு எடுத்து விளக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் ஏதாவது சீர்திருத்தம் செய்ய முடியும். உள்ளதை உள்ளவாறு எடுத்துக் காட்டப்படாவிட்டால் சமுதாயத்தில் எத்தகைய சீர்திருத்தமும் செய்ய முடியாது.
ஒரு வகுப்புக்கும் மற்ற வகுப்புக்கும் துவேஷத்தை யுண்டு பண்ண வேண்டுமென்ற எண்ணம் எனக்கில்லை. வகுப்பு என்பது தெளிவாக இல்லை. எந்தெந்த வகுப்பு களுக்கிடையே துவேஷத்தை வளர்க்கும் எண்ணம் எனக்கிருக்கிறது என்பதை வழக்கில் எடுத்துக்காட்டப் படவில்லை.
என்மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்கள் குறிப்பிடுவது போல் நான் குற்றவாளியல்ல.
இவ்வாறு பெரியார் அவர்கள் எழுத்து வடிவில் வாக்குமூலத்தை அளித்தார். - ‘விடுதலை’ 2.10.1950
பார்ப்பனர்களிலே ஒரு பிரிவினர் மாற்றத்தை விரும்பு வதையும் சூத்திரர்களிலே ஒரு பிரிவினர் ‘பார்ப்பனிய தாசர்களாக’ இருப்பதையும் தீண்டப் படாதவர்கள் இந்து சமூகத்திலிருந்து விலக்கப்பட்ட தனிப் பிரிவாக இருப்பதையும் பெரியாரின் இந்த அறிக்கை சமூக ‘எதார்த்தத்தை’ படம் பிடித்துக் காட்டிற்று.
பொன்மொழி தடை வரலாறு -
அடுத்த இதழிலும் தொடரும்