"நீங்கள் என்னுடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வதற்கு ஒரு பாடம் இருக்கிறது என்றால், அது என்னுடைய சமூகத்தை நான் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதுதான். என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய மகிழ்விலும், துயரத்திலும் பங்கேற்பதில் நான் பெருமை கொள்கிறேன்.'' - டாக்டர் அம்பேத்கர்

இந்தியாவின் முதல் தலித் குடிமகனாகத் திகழ்ந்த (1997 - 2002) மாண்பமை கே.ஆர். நாராயணன் அவர்கள், தன்னை செயல்படும் குடியரசுத் தலைவராகவும், மக்கள் குடியரசுத் தலைவராகவும் அறிவித்துக் கொண்டு இயங்கியவர். அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பிறகு உருவான தலித் புத்தெழுச்சிதான் கே.ஆர். நாராயணன் இந்தியாவின் குடியரசுத் தலைவராக வருவதற்கு அச்சாணியாக இருந்தது. சமூக நீதித் தத்துவத்தால் (இடஒதுக்கீடு) பயன்பெற்ற ஒருவர், அந்தச் சமூகத்திற்குப் பயன்படும்பொழுதுதான் அத்தத்துவம் முழுமை பெறுகிறது; பொருள் பொதிந்ததாகிறது. அந்த வகையில், கே.ஆர். நாராயணன் சமூக நீதித் தத்துவத்திற்கு மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்திருக்கிறார்!

அரசியல் அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பில் இருந்த கே.ஆர். நாராயணன், ஆதிக்கக் கருத்தியலுக்கு எதிராக குடியரசு நாள் உரையை (26.1.2000) நிகழ்த்தி விட்டார் என்ற ஒரே காரணத்திற்காக, அவ்வுரையை அனைத்து நாளேடுகளும் முதல் பக்கத்தில் வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்தன. அடித்தட்டு மக்களின் பிரச்சனையை வெளிப்படுத்தும் ஒருவர் தலித்தாக இருந்துவிடக் கூடாது - அவர் குடியரசு தலைவராகவே இருந்தாலும் இந்நிலைதான். அதையும் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பார்ப்பனர்தான் சொல்ல வேண்டும். அப்போதுதான் ஊடகங்கள் அவற்றைச் செய்தியாக்கும். அதனால்தான், கே.ஆர். நாராயணன் துணிச்சலுடன் ஆற்றிய உரையை, ‘தலித் முரசு' தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறுநூலாக வெளியிட்டது.

கே.ஆர். நாராயணன் பதவியேற்ற ஓரிரு ஆண்டுகளிலேயே, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அவருக்கு அனுப்பப்பட்ட கோப்பில், மிக அழுத்தமானதொரு குறிப்பைப் பதித்தார்: "மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்டவர்களும், பழங்குடியினரும் 25 சதவிகிதம் உள்ளனர். அவர்களுக்கும், பெண்களுக்கும் அரசியல் சட்டத்தின்படியும், சமூக நீதிக் கொள்கைக்கு ஏற்பவும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். இப்பிரிவைச் சார்ந்தவர்களில் தகுதி வாய்ந்தவர்கள் உள்ளனர். அவர்களுக்குய அளவுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படாமல் இருப்பது அல்லது ஒட்டுமொத்தமாகப் பிரதிநிதித்துவமே இல்லாதிருப்பது நியாயமாகாது.''

"கே.ஆர். நாராயணன் ஓர் அலங்காரப் பதவியை வகித்தவர்தானே? அவர் என்ன சாதி ஒழிப்புப் போராளியா?' என்பது போன்ற விமர்சனம் உண்டு. இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற, ஆளும் வகுப்பினர் முன்னிறுத்தும் அளவுகோலை (கல்வி, திறமை...) நிறைவு செய்ய வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. ஆதிக்கவாதிகளின் அளவுகோலை அலட்சியப்படுத்துவோர், அவரவர்களுக்கான களங்களில் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி அதனுள் இயங்க விரும்புவோர், ஆதிக்க வகுப்பினர் முன்வைக்கும் இலக்கணத்தின்படி, தங்கள் திறமைகளை வளர்த்தெடுத்தாக வேண்டும். இதைத் திறம்படச் செய்த கே.ஆர். நாராயணன், தன்னுடைய இலக்கை அடைந்ததும், ஆளும் - ஆதிக்க வகுப்பினருக்குப் பயன்படவில்லை. இங்குதான் அவர் மக்கள் குடியரசுத் தலைவராக மிளிர்கிறார்; ஒரு போராளிக்குரிய தகுதியைப் பெறுகிறார்.

ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டே, சாதி அமைப்புக்கு எதிராக வெகு சிலர்தான் செயல்படுகிறார்கள். அந்த வெகு சிலரில், தலைசிறந்து திகழ்ந்தவராக கே.ஆர். நாராயணன் அவர்களைச் சொல்ல முடியும். அவர், அம்பேத்கரை மேற்கோள் காட்டாத உரையே இல்லை என்ற அளவுக்கு, அம்பேத்கரியலை உள்வாங்கி, முன்மொழிந்த ஒரு தலைவராக விளங்கினார். இந்தியக் குடியரசுத் தலைவர் என்றால், அவர் சங்கராச்சாரி, சாய்பாபா காலில் மண்டியிட வேண்டும் என்ற பார்ப்பனிய மரபை அலட்சியப்படுத்தி, இறுதிவரை சங்கரன்களையும், சாய்பாபாக்களையும் அண்டவிடாத சுயமரியாதைச் சுடரொளியாகவே சுடர்விட்டார்.

எந்தத் திறமையுமற்ற ஒருவர், பார்ப்பன சாதியில் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக, கொலைக் குற்றம் புரிந்திருந்தாலும், இந்து சமூகம் அந்நபரை ‘ஜகத்குரு'வாகக் கொண்டாடுகிறது. ஆனால், அனைத்துத் திறமைகளையும் ஒருங்கே பெற்று, நேர்மையாகச் செயல்பட்டு, இந்தியத் துணைக் கண்டத்தின் உச்சபட்ச பதவியை எய்திய ஒருவர் பார்ப்பன சாதியில் பிறக்காத ஒரே காரணத்திற்காக, அவர் மறைவுக்குப் பிறகும் அவரைத் தீண்டத்தகாதவராகவே இந்து சமூகம் கருதுகிறது. இந்தியாவில் ஒருவர் மறைந்து நூற்றாண்டுகள் கடந்தாலும், சாதி இழிவு மட்டும் மறைவதில்லை. இந்நிலையில், சாதி ஒழிப்புக் குறித்து நம் சிந்தனையை தீவிரப்படுத்துவதே நாம் அவருக்குச் செலுத்தும் வீர வணக்கம்.
Pin It