krnarayananகோச்சரி இராம நாராயணன் எனும் கே.ஆர். நாராயணன் நூற்றாண்டு இது. குடியரசு துணைத் தலைவராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்தவர். போட்டியில் எதிர்த்து களத்தில் நின்ற முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியும் சங்கராச்சாரி சீடருமான சேஷன், 5 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தபோது ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று இவ்வாறு கூறினார்: “இந்தத்  தோல்வி எனக்கு அவமானம்; உயர்ஜாதிக்காரர்கள் உருவாக்கித் தந்த சட்டத்தால் கிடைத்த ‘தலித்’ அடையாளம் தான் அவரை வெற்றி பெற வைத்துள்ளது”.

ஆனால் கே.ஆர். நாராயணன் அவர்களின் அடையாளம் அது மட்டும் தானா? அதையும் தாண்டிய உயரிய விழுமியங்களால் குடியரசுத் தலைவர் பதவிக்கு பெருமை சேர்த்தவர். அரசியலில் காங்கிரஸ் கட்சியை ஏற்றவர். நாடுகளுக்கான உறவுகளை வெற்றிகரமாக கையாளக் கூடிய தூதர் பதவிகளில் இருந்தவர். மூன்று முறை காங்கிரஸ் கட்சியின் சார்பில்  கேரளாவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தேர்வு பெற்றவர்.

மண் குடிசை ஒன்றில் பட்டியல் இனப் பிரிவுகளிலேயே தர வரிசையில் கடைசி இடம் பெற்றிருந்த ‘கோரி’, வகுப்பில் பிறந்து, வெளிநாடு சென்று உயர் கல்வி பெறும் தகுதிக்கு தன்னை உயர்த்திக் கொண்டவர். ஆதரவுக் கரங்களும் அவருக்காக நீண்டன. 1992-1997 வரை குடியரசு துணைத் தலைவராகவும் 1997-2002 ஆம் ஆண்டு காலத்தில் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.

அந்தப் பதவிக்கு பெருமை சேர்த்த முதல் தலித். அவர் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற காலம் ஒற்றைக் கட்சி ஆட்சி முடிவுக்கு வந்து அய்க்கிய முன்னணி என்ற கூட்டணி கட்சிகள் அதிகாரத்துக்கு வந்த காலம். இந்தியாவின் பன்முகத் தன்மையை அங்கீகரிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில்  முதன்முறையாக தலித் சமூகத்தில் பிறந்த இவரை குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்ற சிந்தனையும் உதித்தது.

நாடாளுமன்றத்தின் பொன் விழா சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றும் அந்த வரலாற்றுத் தருணத்தைப் பயன்படுத்தி சமூக ஜனநாயகம் - சமூக நீதி என்ற இரண்டு கோட்பாடுகள் தான் அரசியல் சட்டத்தில் இழையோடிக் கொண்டிருக்கும் உயிர்த் துடிப்பு என்பதை உறுதியுடன் நாட்டுக்கு அறிவித்தவர்.

மிகச் சிறந்த ஆளுமைக்கும் கல்வித் தகுதிக்கும் ஆட்படுத்திக் கொண்டிருந்த அவரை உயர்ஜாதியினர் பூணூல் அணிவித்து உயர்ஜாதியாக ஏற்க முன் வந்தபோது ‘எனது  அடையாளம் சமூக ஜனநாயகம்’ என்று கூறி வேண்டுகோளை புறந்தள்ளினார். அவர் ஒரு அறிவியல்பூர்வமான சமூகப் போராளி.

அந்தக் காலகட்டங்களில் தமிழகம் வரும் குடியரசுத் தலைவர்கள் காஞ்சி சங்கரமடம் போய் ‘ஆசி’ பெறுவதை வழக்கமாகவும், கட்டாயமாகவுமாக ஆக்கிக் கொண்டிருந்த நிலையில் அந்த மடத்தின் பக்கம் பதவிக் காலம் முழுதும் திரும்பிப் பார்க்காதவர்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தின் ஒப்புதலுக்காக தலைமை நீதிபதி அனுப்பியப் பட்டியலைப் பார்த்து மனம் பதைத்து ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பினார். இந்தப் பட்டியலில் பட்டியல் இனப் பிரிவு, பெண்கள், மைனாரிட்டியினருக்கு பிரதிநிதித்துவம் தரப்படாததை சுட்டிக் காட்டினார். “நீதித் துறைகளில் இடஒதுக்கீடு கொள்கையை அமுல்படுத்துவது இல்லை” என்று தலைமை நீதிபதியிடமிருந்து பதில் வந்தது. ‘அது எனக்கும் தெரியும்’. நான் கேட்பது இடஒதுக்கீடு இல்லை; பிரதிநிதித்துவம்” என்று பதில் எழுதினார்.

மோடி, குஜராத் முதல்வராக இருந்த 2002இல்தான் படுமோசமான இஸ்லாமிய இனப்படுகொலை நடந்தது. வாஜ்பாய் பிரதமர். அவரே இந்தப் படுகொலைகளுக்காக முகம் சுளித்தார். அப்போது குஜராத்துக்கு உடனே இராணுவத்தை அனுப்பி கலவரத்தை அடங்குங்கள் என்று துணிவுடன் வாஜ்பாயிடம் வலியுறுத்தியவர் கே.ஆர். நாராயணன்.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் தலைநகருக்கு தப்பி வந்தவர்களையும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்து ஆறுதல் கூறினார். ‘எச்.அய்.வி.’ நோய் பாதிப்புக் குள்ளானவர்களை சமூகமே விலக்கி வைத்த காலத்தில் குடியரசு துணைத் தலைவராக இருந்த நிலையில் அந்த மனிதரை அழைத்து கைகுலுக்கியவர். இந்த மனித நேயம் உலகையே அவரைத் திரும்பிப் பார்க்க வைத்தது.  

பாபர் மசூதியை மதவெறி சக்திகள் இடித்துத் தள்ளியபோது மவுனம் காக்கவில்லை. காந்தியார் கொலையைவிட கொடூரமானது என்று எதிர்ப்பைப் பதிவு செய்தார்.  கருத்துரிமையை மதித்தவர். அவர் துருக்கி நாட்டுக்கான இந்தியாவின் தூதராக இருந்தபோதுதான் அந்த நாட்டில் ‘பகவத் கீதை’ நூலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க வைத்தார்.

அரசுகள் ஆணைப்பபடி ஆளுநர்கள் தயாரிக்கும் அறிக்கைகளை அப்படியே கண்களை மூடிக் கொண்டு ஒப்புதல் தரும் குடியரசுத் தலைவராக அவர் செயல்படவில்லை. தன்னை ‘செயல்படும் குடியரசுத் தலைவர்’ (றடிசமiபே ஞசநளனைநவே) என்றே அழைத்துக் கொண்டார்.

அய்.கே. குஜ்ரால் பிரதமராக இருந்தபோது உ.பி. மாநிலத்தில் கல்யாண் சிங் தலைமையில் நடந்த மாநில ஆட்சியை 356ஆவது பிரிவின் கீழ் கலைக்கும் பரிந்துரையை மாநில ஆளுநர் ரமேஷ் பண்டாரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். முதன் முறையாக குடியரசுத் தலைவர் வரலாற்றிலேயே ஒப்புதல் தர மறுத்து விட்டார்.

மத்திய மாநில உறவுகளைக் குறித்து ஆராய்ந்த சர்க்காரியா ஆணையத்தின் பரிந்துரைகளையும், ‘பொம்மை’ வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளையும் பரிசீலிக்குமாறு கோப்பை அமைச்சரவைக்கு திருப்பி அனுப்பினார். இதை பிரதமர் அய்.கே. குஜ்ரால் தனது சுயசரிதையில் பெருமையுடன் பதிவு செய்துள்ளார்.

மற்றொரு முக்கிய நிகழ்வு 2001ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்ததாகும். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி அவர்களை வலுக்கட்டாயமாக அவரது வீடு புகுந்து நள்ளிரவில் கைது செய்த கொடூரமான மனித நேயத்துக்கும் சட்டத்துக்கும் சவால் விடுக்கும் அத்துமீறல் நடந்த நேரம். மத்தியில் அமைச்சராக இருந்த தி.மு.க.வினரும் இதேபோல் வலுக்கட்டாயமாக கைது செய்யப் பட்டார்கள்.

(முரசொலி மாறன் மற்றும் டி.ஆர். பாலு) தொலைக்காட்சி வழியாக நேரில் பார்த்த அவர், உடனடியாக வாஜ்பாயிடம் தொடர்பு கொண்டு ஆளுநரிடம் அறிக்கை கேட்க உத்தரவிட்டார். அப்படியே ஆளுநர் பாத்திமா பீவியிடம் விளக்கமும் கேட்கப்பட்டது. பதில் திருப்தி தராத காரணத்தால் ஆளுநர் திருப்பி அழைக்கப்பட்டார்.

1999ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போனது. ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதி செய்தவர்கள் சோனியா, ஜெயலலிதா மற்றும் சுப்ரமணியசாமி. நாடு மற்றொரு தேர்தலை சந்திக்காமல் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார் கே.ஆர். நாராயணன்.

பா.ஜ.க. அல்லாத கட்சியின் பிரதிநிதிகளை நாடாளு மன்ற உறுப்பினர்களை அழைத்துப் பேசி மேற்கு வங்க முதல்வராக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த ஜோதி பாசுவை பிரதமராக்க லாம் என்ற ஆலோசனையை முன் வைத்தார்.

காங்கிரசிலிருந்த பார்ப்பனர்களான பிரணாப் முகர்ஜி, எம்.எல். பொட்டேடார் போன் றவர்கள் ஒரு கம்யூனிஸ்ட்டை முதல்வராக்குவதா என்று கடுமையாக எதிர்த்தனர். ஜோதிபாசு பிரதமராகியிருந்தால், வாஜ்பாய் இரண்டாவது முறையாக பிரதமர் பதவிக்கு வந்திருக்கவும் முடியாது. குஜராத் இனப் படுகொலை யும் மோடி ஆட்சியில் நடந்திருக்கவும் முடியாது. (இந்த தகவல்களுக்கு ஆதாரம் : ‘ஹரீஷ்காரே’ இந்து ஆங்கில நாளேட்டில், அக். 27, 2020இல் எழுதிய கட்டுரை)

உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி தந்த ஆலோசனைப்படி கலைஞர் முதல்வராக இருந்தபோது ‘பொடா’ என்ற மற்றொரு ‘தடா’ சட்டத்தை தமிழ்நாட்டுக்கு மட்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியபோது ஒப்புதல் தராமல் திருப்பி விட்டவர் கே.ஆர். நாராயணன்.

‘இந்துத்துவா’ அரசியல் கோட்பாட்டை உருவாக்கிய சாவர்க்கருக்கு பாரத ரத்னா பட்டத்துக்கு பிரதமர் வாஜ்பாய் ஒப்புதல் தர எழுதிய கடிதத்தைக் கிடப்பில்  போட்டார். தூக்குத் தண்டனைக்கு ஒப்புதல் கேட்டு வந்த எந்தக் கடிதத்துக்கும் பதில் அளிக்காமல் கிடப்பில் போட்ட பெருமைக்குரியவர். அவர் பதவி காலத்தில் ஒருவருக்குக்கூட தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை.

சென்னை அய்.அய்.டி.யில் படித்து அமெரிக்காவில் பெரும் செல்வத்துடன் வாழும் ஒரு பார்ப்பன மாணவர் அய்.அய்.டி.க்கு ரூ.2 கோடி நன்கொடை வழங்கினார், அதற்காக அவருக்கு முனைவர் பட்டம் வழங்க அய்.அய்.டி. இயக்குனர் தந்த பரிந்துரையை பணத்துக்காகப் பட்டத்தை விற்க முடியாது என்று ஏற்க மறுத்தவர்.

வரலாற்றில் நேர்மையாலும் அறிவுத் திறனாலும் தாங்கள் வகித்த உயர் பதவிகளுக்கு பெருமை தேடித் தந்த மாபெரும் மனிதர்களை மனுதர்ம பாசிச சிந்தனையில் மூழ்கிக் கிடக்கும் ஊடகங்களும் மக்களின் பொதுப் புத்தியும் எப்போதுமே கவுரவிப்பதற்கோ, பெருமை செய்வதற்கோ தயாராக இல்லை. காரணம் அவர்கள் பிறந்த ஒடுக்கப்பட்ட சமுதாயமே இதற்கு தடைக்கல்லாக வந்து நிற்கிறது.

ஆனாலும், வரலாறுகள் உண்மைகளைத் திரையிட்டு நிரந்தரமாக மறைத்து விடவே முடியாது!

வாழ்க மாமனிதர் வரலாற்று நாயகர்

கே.ஆர். நாராயணன்!

- விடுதலை இராசேந்திரன்

Pin It