சபரிமலை அய்யப்பன் ‘கட்டை பிரம்மச்சாரி’ என்பதால் ‘மாதவிலக்கு’ எனும் ‘தீட்டுக்கு’ உள்ளாகும் பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாதாம்! ‘அய்யப்பனுக்காக’ அவனது வழக்கறிஞர்கள் இப்படி வாதாடுகிறார்கள். ‘நியூஸ்18’ தொலைக்காட்சி விவாதத்தில் (நவ. 7) பேசிய இரண்டு பார்ப்பனர்கள் (இதில் ஒருவர் பெண்) - பெண்களை அய்யப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்று கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி கூறுவதை ஏற்கவே முடியாது என்று அடம் பிடித்தார்கள்.
“கூடாது; கூடாது; இது அடாவடி.” அய்யப்பன், பிரம்மச்சாரி கோலத்தில் அங்கே இருக்கிறான். 10க்கு மேல் 50 வயதுக்குள் உள்ள பெண்கள் ‘பிரம்மச்சாரி’யை நேரில் தரிசித்தால் பகவான் கவனம் திசை திரும்பி விடாதா? பிரம்மச்சரியம் குலைந்து விடாதா? இது நாட்டுக்கே பேராபத்தாகி விடும் - என்று தொலைக்காட்சியில் பதறுகிறார்கள்.
ஆனாலும், ‘இவாள்கள்’ அய்யப்பனை இப்படியெல்லாம் அவமதிக்கக்கூடாது என்பதே அடியேனின் கருத்து. அய்யப்பன் பிரம்மச்சர்யம் என்ன அவ்வளவு பலவீனமானதா? பெண்களைப் பார்த்தாலே சபலத்துக்கு ஆளாகி விடுவானா? இதைக் கேட்டால் சட்டென்று பதில் கூறி விடுவார்கள். “வாயை மூடப்பா. இது நம்பிக்கைப் பிரச்சினை; இதில் கேள்வி கேட்கக் கூடாது; இந்துக்களை புண்படுத்த அனுமதிக்க முடியாது; இரு; இரு எங்கள் சந்து முன்னணி சண்டியர்களை அனுப்பி வைக்கிறோம்” என்று முண்டா தட்டுவார்கள்.
ஆவேசப்படவேண்டாம் அய்யா; உங்களின் பக்தி நலன் கருதி ஒரு ஆலோனையையும் முன் வைக்கிறோம். அய்யப்பன் கோயில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் அவ்வப்போது ‘சோழி’களை உருட்டி, பகவானிடம் பேசுவதாகக் கூறி வருகிறார்கள். குறைகளை கேட்டுத் தெரிந்து கொள்வார்களாம்; இதை மக்களும் நம்ப வேண்டுமாம்.
சரி; அப்படி சோழிகளை உருட்டி அய்யப்பனிடமே இந்தப் பெண்கள் பிரச்சினையை ஏன் விவாதிக்கக் கூடாது?
“சுவாமியே; அய்யப்ப சுவாமியே! இதோ, உங்களின் தூதுவனாக செயல்படும் அர்ச்சகர் வந்திருக்கிறேன். அருள்கூர்ந்து இந்த அடியேனின் சந்தேகங்களுக்கு விளக்கம் தரவேண்டும். பூவுலகில் கலியுகத்தில் ‘தர்மங்கள்’ எல்லாம் வேகம் வேகமாக மாறி வருகின்றன! காலம் காலமாக தங்கள் பிரம்மச்சாரியத்துக்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்று பெண்களை அனுமதிக்க மறுத்து வருகிறோம். விடாப்பிடியாக நாங்கள் பின்பற்றி வரும் இந்த அய்தீகம், இப்போது உச்சநீதிமன்றத்துக்கே படி ஏறி வந்து நிற்கிறது.
உங்களுக்காகவே கலியுகத்தில் சட்டம் படித்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடி வருகிறோம். பெரும் தொகையையும் ‘பீஸ்’ ஆக தர வேண்டியிருக்கிறது. அங்கே என்ன கேட்கிறார்கள் தெரியுமா சாமி?
மானம் போகிறது
காலம் காலமாக பெண்களை அனுமதிக்க மறுப்பது அய்தீகம் என்று கூறுகிறீர்கள். நீதிமன்றத்தில் படியேறி அய்யப்பனுக்காக வக்கீல் வைத்து வாதாடுவது அய்தீகமா?” என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்ளுமாறு கேட்கிறான்.
என்ன பதில் சொல்வது என்றே தெரிய வில்லை சாமி! நீதிமன்றத்துக்கே வர மாட்டோம்; அது ‘ஆகம பழக்க வழக்கமல்ல’ என்று சொல்ல முடியுமா? அப்படி சொன்னால் சம்மன் வந்து விடுமே! இடியாப்ப சிக்கலில் மாட்டித் தவிக்கிறோம் சுவாமி! இது மட்டுமா?
நீதிமன்றத்திலே இன்னும் குடைகிறான்!
“பிரம்மச்சாரியான அய்யப்பனை தரிசிக்க பெண்கள் வரக் கூடாது என்று தடைபோடும் நீங்கள், திருமணமே செய்யாத கட்டை பிரம்மச்சாரிகள் மட்டும் தான் கோயிலுக்குள் தரிசிக்க வேண்டும் என்று ஏன் அறிவிக்கக் கூடாது” என்று வேறு கேட்கிறான்!” நாங்கள் தலைகுனிந்து நிற்கிறோம். பிரம்மச்சாரிகள் மட்டுமேதான், கோயிலுக்குள் அனுமதி என்றால், கோயிலுக்கு எப்படி கூட்டம் வரும்? நீங்களே சொல்லுங்கள்.
நாங்கள் அங்கே ஈ ஓட்டிக் கொண்டு பேன் குத்திக் கொண்டுதான் இருக்க வேண்டும். வருமானத்துக்கே வழி இல்லாதபோது அப்புறம் உங்களை ‘சீண்டுவதற்கே’ ஆள் கிடைக்காதே; நாங்கள் என்ன செய்யட்டும்?”
“பறையுங்ககோ சாமி!”
இப்படி ‘அய்யப்பனிடம்’ ஆலோசனை கேட்கலாம் என்பது அடியேன் விண்ணப்பம். அதற்குப் பிறகு ஒரே போடு போடலாம்! அய்யப்பன், “பெண்களை அனுமதிக்க ‘ஓகே’ சொல்லி விட்டார்” என்று அர்ச்சகர் நீதிமன்றத்தில் ஒரு ‘அபிடவிட்’ போட்டால் போதும். அவ்வளவுதான். முடிந்தது கதை. அதற்கு மேல் எவன் அப்பீல் செய்ய முடியும்?
“அட போங்கடா! அய்யப்பனாவது நேரில் வந்து சொல்வதாவது? காதில் பூ சுற்று கிறீர்களா?” என்று எந்த பக்தரும் கேட்கப் போவது இல்லை. அப்படிக் கேட்கும் துணிவு நீதிமன்றத்துக்கே கிடையாது.
“கோயிலுக்குள் கன்னிப் பெண்கள் நுழையக் கூடாது என்று அய்யப்பனே கூறியிருக்கிறார்” என்று கூறிக் கொண்டு இது வரை மக்களிடம் கூறி அதை நம்ப வைத்தவர்கள் அல்லவா? இப்போது அய்யப்பன் இப்படித்தான் பேசினான் என்று புளுகியதையும் மக்கள் நம்பித் தானே ஆக வேண்டும்? அதுவும் அர்ச்சகப் பார்ப்பனர் வாயாலே வந்துவிட்ட பிறகு அதற்கு அப்பீல் ஏது?
பறையுங்கோ!
- கோடங்குடி மாரிமுத்து