சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “பீகாரில் ஓ.பி.சி. எஸ். சி., எஸ்.டி. என அனைவரும் 84% என்று சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு காட்டுகிறது. மத்திய அரசின் 90 செயலாளர்களில், 3 பேர் மட்டுமே ஓ.பி.சி. வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இந்தியாவின் பட்ஜெட்டில் 5% மட்டுமே கையாளுகின்றனர். எனவே, இந்தியாவின் சாதிப் புள்ளி விவரங்களை அறிந்து கொள்வது அவசியம். அதிக மக்கள் தொகை, அதிக உரிமைகள், இது எங்கள் உறுதிமொழி,” என்று கூறியுள்ளார்.
வரலாற்றில் ஒரே நிகழ்வு இரண்டாவது முறையாக நிகழும் போது அது அவலச்சுவை நிறைந்த ஒன்றாக மாறி விடுகிறது. 1990 ஆம் ஆண்டு முன்னாள் தலைமை அமைச்சர் திரு வி.பி. சிங் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்திய போது ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியும் அத்வானி தலைமையிலான பாஜகவும் இணைந்து நாட்டை கூறு போடுவதாக கூக்குரல் இட்டதுடன் வி.பி. சிங் தலைமையிலான அரசையும் கவிழ்த்தார்கள்.
இன்று வரலாற்று சக்கரம் சுழன்று தொடங்கிய இடத்திற்கே வந்துள்ளது. இம்முறை பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை நிகழ்த்தியவர் வி.பி. சிங்கின் அரசியல் வாரிசுகளில் ஒருவரான நிதிஷ்குமார். கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டவுடன் இந்நிகழ்வை வரவேற்று பேசியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. காங்கிரஸ் கட்சி ஒரு காலத்தில் நேர் எதிரான நிலையை எடுத்ததில் இருந்து இது தலைகீழ் மாற்றமாகும். அதேநேரம் பாஜக தலைவரும் தலைமை அமைச்சருமான நரேந்திர மோடி இது நாட்டை பிளவுபடுத்தும் நடவடிக்கை என்று கூறியுள்ளார். பாஜக அவர்களின் கடந்தகால கருத்திலேயே உறுதியாக உள்ளதை காட்டுகிறது.
அநேகமாக “இந்தியா” கூட்டணியின் அரசியல் திசைவழியை தீர்மானிப்பதாக இந்த சாதிவாரி கணக்கெடுப்பு அமையலாம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த நடவடிக்கை குறித்தும் இதனோடு தொடர்புடைய அரசியல் மற்றும் வரலாற்று பின்புலம் குறித்தும் நாம் பரிசீலனை செய்வது அவசியம்
சமூகநீதி அரசியல்
இந்தியா போன்ற வர்ணாசிரம சாதி அமைப்பு உள்ள சமூக அமைப்பில் வகுப்புவாரி அரசியல் என்பது முதன்மை வாய்ந்தது. இதை நாம் பிரதிநிதித்துவ அரசியல் என்றும் சமூகநீதி கொள்கை என்றும் அழைக்கலாம். அகில இந்திய அளவில் அண்ணல் அம்பேத்கரும் தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும் இதை தீவிரமாக முன்னெடுத்தவர்கள்
சமூகநீதி கொள்கை தமிழ்நாட்டில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வரலாறு கொண்டது. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கிய இந்த அரசியல் தந்தை பெரியாரால் வளர்த்து நடைமுறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
வடநாட்டில் சாகு மகராஜ் காலத்தில் தொடங்கப்பட்ட இட ஒதுக்கீடு மற்றும் சமூகநீதி அரசியல் அண்ணல் அம்பேத்கரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.
சமூகநீதி அரசியலின் அடிப்படை என்பது பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு அரசியல் அதிகாரத்தில் பகிர்வு சமூக வளங்களில் பகிர்வு கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
சாதிவாரி கணக்கெடுப்பு வரலாறு
இட ஒதுக்கீடு அளிப்பதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு என்பது அவசியமும் அடிப்படையும் ஆகும். சமூக நீதி வரலாற்றுக்கு ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாறு உள்ளது போலவே சாதிவாரி கணக்கெடுப்புக்கும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வரலாறு உள்ளது.
1872 இல் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது. அதுமுதல் 1931 வரை ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைந்து சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் ஆங்கிலேயர்களின் காலனி ஆட்சியில் இருந்து இன்றைய பாஜக தலைமையிலான இந்திய அரசு வரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு கழித்து 2011 ஆம் ஆண்டில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைந்து எடுக்கப்பட்டது. ஆனால் அதை இன்று வரை வெளியிட பாஜக அரசு மறுத்து வருகிறது. வெளியிட்டால் நிறைய குழப்பங்கள் ஏற்படும் என்று காரணம் கூறி நிறுத்தி வைத்துள்ளது. இத்தகைய சூழலில் தான் பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்தது.
சட்டப் போராட்டமும் சாதிவாரி கணக்கெடுப்பும்
பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு எண்ணிக்கை அடிப்படையிலான ஓர் ஆய்வு (Survey) தானே ஒழிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) அல்ல.1948 ஆம் ஆண்டு சட்டத்தின் படி ஒன்றிய அரசு மட்டுமே கணக்கெடுப்பு நடத்த முடியும்.
பீகார் அரசு சர்வே நடத்த முடிவெடுத்த போது இப்படி ஒரு சர்வே நடத்தவே உரிமையில்லை என்று பாஜகவும் இந்திய நடுவண் அரசும் எதிர்ப்பு தெரிவித்தன. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது உச்சநீதிமன்றம் சாதிவாரி கணக்கெடுப்பு இல்லையெனில் எவ்வாறு இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று கேட்டு தடை விதிக்க மறுத்தது. மேலும் இதுகுறித்து பீகார் உயர்நீதிமன்றத்தில் முறையிட ஆலோசனை கூறியது. பீகார் உயர்நீதிமன்றமும் தடை விதிக்க மறுத்து விட்டது.
பீகாரின் மக்கள் தொகை 13கோடிப்பேர். இவர்களை முற்றிலும் உள்ளடக்கி சர்வே நடத்தப்பட்டுள்ளது. ஜுன் 2022 இல் தொடங்கி 45 நாட்கள் ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தம் 500 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 15 மாதங்களில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சாதிவாரி ஆய்வு முடிவுகள்
வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, மாநிலத்தில் மிகப்பெரிய மக்கள்தொகை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இது மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 36.01% ஆகும். இது தவிர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 27.12% பட்டியல் சாதி - 19.65% இடஒதுக்கீடு இல்லாத உயர் சாதியினர் - சுமார் 15.52%, பட்டியல் பழங்குடி மக்கள் - 1.68% ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிடைத்திருக்கும் மேற்கூறிய தரவுகளின் படி, மத நம்பிக்கைகளின் அடிப்படையில் பீகாரில் இந்துக்கள் அதிகம் உள்ளனர்.
மாநிலத்தில் இந்துக்களின் மக்கள் தொகை சுமார் 82%. அதேசமயம், முஸ்லிம்கள் - 17.7% கிறிஸ்தவர் -0.05% பௌத்தர்கள் - 0.08%. சீக்கியர்கள் -0.01% இது தவிர, சமணர்கள் மற்றும் வேறுசில மதத்தினரும் பிகாரில் உள்ளனர். எந்த மதத்தையும் பின்பற்றாதோர் 2,146 பேர் அதாவது 0.0016% பேர் மட்டுமே உள்ளனர்.
பீகாரின் முக்கிய உயர் சாதியினரைப் பற்றி நாம் பேசினால், மாநிலத்தில் பிராமணர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பிராமணர் மக்கள் தொகை - 3.65% ராஜபுத்திரர் மக்கள் தொகை - 3.45% பூமிஹார் மக்கள் தொகை - 2.86% திருநங்கைகளின் மொத்த எண்ணிக்கை 825 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க ஒன்று இஸ்லாமியர்களில் உயர்நிலையில் உள்ள முற்பட்ட சமூகத்தையும் முற்பட்டோருக்கான கணக்கீட்டில் இணைத்து கணக்கெடுத்து உள்ளனர்.
ஆய்வினால் ஏற்பட்ட விளைவுகள்
பீகாரின் பெரும்பான்மை மக்கள் தொகைக்கு ஏற்ப தற்போது பீகார் அரசு இட ஒதுக்கீடு அளவை 65 % ஆக அதிகரித்துள்ளது.
இதன் மற்றொரு விளைவாக இந்திய நடுவண் அரசிடம் நீண்ட நாட்களாக அளிக்காமல் வைத்திருந்த ரோகிணி ஆணைய அறிக்கை உடனடியாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அளிக்கப்பட்டது. இந்த ஆணையம் கடந்த 2017 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது மூன்று மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்ட ஆணையத்தின் காலவரம்பு உரிய காலத்தில் முடியாமல் தொடர்ந்து 13 முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது அறிக்கை அளிக்கப்பட்டாலும் இன்னும் அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
எப்போதும் போலவே, இஸ்லாமியர்கள் மக்கள் தொகை பெருகிவிட்டது இஸ்லாமியர்கள் வரைமுறையற்று குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்று திரும்ப திரும்ப பாஜக ஒரு பிரச்சாரத்தை செய்து வந்தது. அது இந்த கணக்கெடுப்பு மூலம் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு விளைவுகளும் ஏற்பட்டுள்ளது.
கட்சிகள் அணுகுமுறையும் சாதிவாரி கணக்கெடுப்பின் முக்கியத்துவமும்
ஆளும் பாஜக வானது முன்னர் பார்த்தபடி இது நாட்டையும் மக்களையும் பிளவுபடுத்தும் நடவடிக்கை என்று பார்க்கிறது. உயர்சாதியினரை பாதுகாப்பதற்கான சித்தாந்தத்தையும் கருத்தியலையும் கொண்டுள்ள கட்சி என்ற முறையில் அது இந்நிலைபாட்டை கொண்டிருப்பதில் வியப்பில்லை.
காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தி சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முற்போக்காக பேசியிருந்தாலும் அது கட்சியின் கருத்தாக நடைமுறைக்கு கொண்டு செல்லப்படுமா என்பது ஐயமே! காரணம் காங்கிரஸ் மென் இந்துத்துவ போக்கையே கடைபிடித்து வருகிறது. அது ஐந்து மாநில தேர்தல்களில் கூட எதிரொலித்தது. தமிழ்நாட்டை ஆளும் திமுக கொள்கை அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரித்தாலும் கூட நடைமுறையில் அதை செயல்படுத்துவதற்கு தயங்குவதை அல்லது இரட்டை நிலைபாட்டை எடுப்பதை காணமுடிகிறது. கட்சித் தலைவர்களில் ஒருவரான கனிமொழி இதை ஆதரிக்கிறார். ஆனால் அங்கீகரிக்கப்பட்ட திமுக பேச்சாளர்கள் கணக்கெடுப்பு தேவையில்லை என்று பேசிவருகின்றார்கள். திமுக ஆதரவு சன் செய்தி நிறுவனமோ மக்களை பிளவுபடுத்தும் நடவடிக்கை என்று பாஜக போல கூறுகிறது.
திமுக தேர்தல் கணக்குகளில் இருந்து உறுதியான முடிவெடுக்க தயங்குவது போல் தெரிகிறது. உயர்சாதி பிரிவினரின் எதிர்ப்பு, இட ஒதுக்கீட்டில் பலனடையாத குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளின் எதிர்ப்பு என்று பலமுனை சிக்கல்கள் உருவாகும் என அஞ்சுவதற்கு வாய்ப்புள்ளது. அதிமுக இது குறித்து தனித்த நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை எனினும் திமுக போலவே தேவையற்ற புதிய சிக்கல்கள் உருவாக்கும் எதையும் செய்வதற்கு தயங்க வாய்ப்புள்ளது.
பாமக, விடுதலை சிறுத்தைகள், சிபிஐ ஆகியவை சாதிவாரி கணக்கெடுப்பை நேரடியாக ஆதரிக்கின்றன. சிபிஎம் பொருளாதார இட ஒதுக்கீட்டை ஆதரித்த அமைப்பு என்ற முறையில் அதனிடம் இருந்து தெளிவான நிலைபாட்டை எதிர்பார்க்க இயலாது. ஆனால் இன்றளவும் திராவிடர் கழகம் உள்ளிட்ட மக்கள் இயக்கங்கள் சமூக நீதியை வலியுறுத்தும் பல்வேறு அறிஞர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரித்து வருகின்றனர்
தமிழ்நாட்டை பொறுத்தவரை நடைமுறையில் 69% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் மற்ற மாநிலங்களை விட முன்னணியில் உள்ளோம் என்ற வாதமும் வைக்கப்படுகிறது. ஆனால் இவை எதுவும் சாதிவாரி கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை குறைப்பன அல்ல.
சமூக நீதி பார்வையோடு மக்கள் நடுவில் வலுவான இயக்கங்களை கட்ட வேண்டும். இது நூற்றாண்டின் கனவு. தலைவர்கள் கண்ட கனவு. எனவே நமது அடிகளை அதை நோக்கி வைப்போம்.
- சிலம்புச்செல்வன்