சமூக மாற்றத்திற்கு வாழ்நாள் முழுதும் போராடியவர் பெரியார். சமூகத்தை அடிமைப்படுத்திய சக்திகளை சரியாக அடையாளம் கண்டார். ”ஜாதி வர்ணாசிரம” கட்டமைப்பே தமிழர்களின் எதிரி என்ற முடிவுக்கு வந்தார். அதற்கான கருத்தியல்களை வழங்கிய பார்ப்பனியத்தையும், அதன் தலைமை பீடமான சங்கராச்சாரிகளையும் கடுமையாக எதிர்த்தார்.
பெரியார் ஜாதி ஒழிய வேண்டும் என்றார். சங்கராச்சாரிகள் பிறவியின் அடிப்படையில் பிராமண, சூத்திர பேதத்தை நியாயப்படுத்தும் வர்ணாசிரமமே நமக்கான தர்மம் என்றனர். பெரியார் தீண்டாமைக்கு எதிராகக் களமாடினார். வைக்கத்தில் போராடினார். சங்கராச்சாரிகள் தீண்டாமை தேவை அது ஷேமகரமானது என்றார்கள். பெரியார் பெண்ணடிமை ஒழிய வேண்டும் என்றார். சங்கராச்சாரிகள் பெண்கள், ஆண்களுக்கு அடிமைப்படுவதே நமக்கான தர்மம் என்றனர். வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள், கணவனை இழந்த பெண்கள் தரிசு நிலம்.
அவர்கள் பார்க்கக்கூடாதவர்கள், தீண்டப்படாதவர்கள் இதுவே நமது தர்மம் என்றார்கள். பெரியார் தமிழை அறிவியல் மொழியாக்க விரும்பினார். இன்னும் தமிழ் காட்டுமிராண்டி மொழியாகவே இருக்கலாமா என்று கவலைப்பட்டார். திருக்குறள் மாநாடு நடத்தினார். குறள் நெறியே நமது மதம் என்றார். திருக்குறளைக் குறைந்த விலையில் அச்சிட்டு பரப்பினார். தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். ஆனால் சங்கராச்சாரிகள் சமஸ்கிருதமே நமக்கான மொழி என்றார்கள். அதுதான் தெய்வ பாஷை என்றார்கள், தமிழ் நீஷபாஷை, உச்சி வேளை பூஜையின் போது தமிழில் பேச மாட்டோம் என்றார்கள். அப்படிப் பேசினால் மீண்டும் ஸ்நானம் செய்ய வேண்டும் என்றார்கள், கோயில் வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதம் மட்டுமே இருக்க வேண்டும் என்றார்கள்.
‘தீக்குறளை சென்றோதோம்’ என்று திருப்பாவையில் ஆண்டாள் கூறியுள்ளதை திருக்குறளை படிக்கக்கூடாது என்று திருக்குறளை இழிவுபடுத்தினார்கள். பெரியார் அரசியல் சட்டத்தில் ஜாதிக்குப் பாதுகாப்பு இருக்கக் கூடாது என்றார். அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்ட போது காஞ்சி மூத்த சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரஸ்வதி அதைக் கடுமையாக எதிர்த்தார். பிராமணர்களின் தர்மங்களும் சாஸ்திரங்களுமே நமக்கான சட்டம், வேறு அரசியல் சட்டமே தேவை இல்லை என்று பகிரங்கமாக எழுதினார்.
யாகம் உள்ளிட்ட வேத சடங்குகளை எதிர்த்து பார்ப்பனியத்துக்கு எதிராக மக்களைத் திரட்டினார் புத்தர். அந்த புத்த மார்க்கத்தை வீழ்த்தியவர் ஆதிசங்கரர். அதற்காகவே நான்கு திசைகளிலும் சங்கர மடங்களை அவர் நிறுவினார். மீண்டும் வேத காலத்தை உருவாக்க வேண்டும் என்பது சங்கராச்சாரிகளின் லட்சியம் அதைத் தடுத்து நிறுத்த வாழ்நாள் முழுவதும் போராடியவர் பெரியார்.
வேதகாலத்தை மீண்டும் கட்டமைக்க இப்போது என்ன தேவைப்படுகிறது, இந்தியாவை அழித்து இந்துராஷ்டிரம் உருவாக்க வேண்டும், அதற்கு மாநில உரிமைகள், மொழி உரிமைகள் பல்வேறு தேசிய இனங்களின் அடையாளங்கள் தடையாக நிற்கின்றன; எனவே ஒற்றை ஆட்சியை நோக்கி பல்வேறு தேசிய இனங்களின் உரிமைகளை அழிக்கும் முயற்சியில் ஒன்றிய ஆட்சி துடிக்கிறது.
ஒரு சில வட மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து இந்தி பேசாத மாநிலங்கள் உட்பட பிற மாநிலங்களைத் தங்களுக்கு அடிமை ஆக்கிக் கொள்ள முடியும் என்ற நோக்கத்தோடு தொகுதி மறு சீரமைப்பைப் பயன்படுத்த திட்டமிட்டு வருகிறார்கள். மக்கள் பேசாத சமஸ்கிருதத்திற்கு ஏனைய மொழிகளை விட பல மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்குகிறார்கள். தேசியக் கல்விக் கொள்கையில் சமஸ்கிருதமே நமது பண்பாடு என்று அறிவிக்கிறார்கள். அந்தப் பண்பாட்டைத் திணிப்பதற்கு வழி அமைத்துத் தருவதற்கு மும்மொழி திட்டத்தைத் திணிக்கிறார்கள். சூத்திரனுக்கு கல்வியைத் தராதே என்ற மனுதர்ம கொள்கைக்கு வலிமை சேர்க்க தமிழ்நாட்டின் கல்வி நிதியை முடக்குகிறார்கள். திட்டமிட்டு குலத் தொழிலுக்கு உயிரூட்ட விஸ்வகர்மா திட்டம் வருகிறது. மக்கள் ஜனநாயகத்திற்கும் அதை மறுக்கும் வேத பார்ப்பனியத்துக்கும் நடக்கும் போராட்டம்தான் இப்போது நடக்கும் அரசியல். பெரியார் - சங்கராச்சாரி போராட்டம் தொடர்கிறது.
தமிழ்நாட்டில் பெரியார் ஆழமாக விதைத்துச் சென்ற சிந்தனைகளை சீர்குலைத்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆளுநர் பெரியாரை எதிர்த்துப் பேசுகிறார். ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திலேயே பெரியாரை எதிர்க்கிறார். அயோத்தி ராமன் கோயிலில் ராமன் சிலையை நிறுவ சூத்திரன் மோடிக்கு உரிமை இல்லை என்று சங்கராச்சாரிகள் வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். நிர்மலாக்கள் அந்த சங்கராச்சாரிகளைக் கண்டிக்கவில்லை மாறாக சங்கராச்சாரிகளை எதிர்த்துக் களமாடிய பெரியாரை இழிவு படுத்துகிறார். இதற்கு சில போலி தமிழ் தேசியவாதிகளும் தமிழனுக்கு துரோகம் இழைத்து பார்ப்பனியத்திற்கு விலை போகிறார்கள். இன்றைக்கு பெரியார் எதிர்ப்பு என்பது சங்கராச்சாரிகளின் பார்ப்பனிய நச்சுக் கருத்துகளுக்கு உயிரூட்டும் முயற்சியே ஆகும். பார்ப்பனிய சூழ்ச்சிகளை முறியடிக்க தயாராவோம்!
- விடுதலை இராசேந்திரன்