ஆகமக் கோயில்களை பார்ப்பனர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதை எதிர்த்து, பெரியார் இயக்கம் குரல் கொடுத்து வருகிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற 100-வது நாளில் செயல்படுத்தினார். ஆனாலும் 24 பார்ப்பனரல்லாத அர்ச்சகர்க்கு மேல் நியமனம் செய்ய முடியாமல், நீதிமன்றங்களில் பார்ப்பனர்கள் தடை வாங்கி விட்டார்கள்.

தடையை நீக்க அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை சுட்டிக் காட்ட வேண்டும். அறநிலையத்துறை இந்த பிரச்சினையில் ஆர்வம் காட்டாமல் செயல்படுகிறது. பெரியார் நெஞ்சில் தைத்த அந்த முள்ளை அகற்றும் இந்த சமூக மாற்றக் கொள்கையில் அறநிலையத்துறையின் செயல்பாடுகள் கண்டிக்க தக்கவையாகவே இருக்கின்றன.

இந்த நிலையில் பல கிராம கோயில்கள் ஜாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றன. அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி வழங்கியுள்ள தீர்ப்பைப் பாராட்டி வரவேற்க வேண்டும். "கோயில்களை நிர்வகிக்கும் உரிமையை ஒரு குறிப்பிட்ட ஜாதிகள் கோர முடியாது‌. கோயில்களை ஜாதி அடிப்படையில் பிரித்துப் பார்ப்பது ஜாதியை நிலை நிறுத்துவதற்கே பயன்படும். ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு வழிப்பாட்டு முறை இருக்கலாம், ஆனால் அதை காரணம்காட்டி, அந்த கோயில் தனது ஜாதிக்கு மட்டுமே உரிமையுடையது என்று கேட்க முடியாது" என நீதிபதி தனது தீர்ப்பில் திட்டவட்டமாக தெளிவுப்படுத்தி இருக்கிறார்.

பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்களில் பட்டியலின‌ மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் பல இடங்களில் மோதல்கள் ஏற்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை கோயில்களை மூடும் நிலை உருவாகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் கோயில்கள் ஜாதிக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்‌ என்பதைப் பேசி இருந்தார். பாஜகவின் இந்துத்துவ அரசியல் ஜாதியை காப்பாற்றுவதற்காகவே இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

கோயில்களுக்கும்‌ ஜாதிகளுக்குமான‌ உறவு பிரிக்கமுடியாத வகையாகவே இருந்திருக்கிறது. நாடார்கள், வன்னியர்கள், முக்குலத்தோர் என்று ஒவ்வொரு ஜாதியினரும் கோயில்களைக் கட்டி தங்கள் ஜாதிக்கு உரிமை கோரினாலும், குடமுழுக்கு நடத்தவும் சடங்குகள் செய்யவும் பார்ப்பனர்களையே அழைக்கிறார்கள். ஆனால் பல கோயில்களில் பட்டியலின‌ மக்களை அனுமதிக்க மறுக்கிறார்கள்.

கோயிலுக்கு உரிமை கொண்டாடும் ஜாதிக்காரர்கள் கோயில் கட்டுமானப் பணியில் தங்கள் ஜாதியினரை மட்டுமே ஈடுபடுத்துக்கிறார்களா? எந்த ஒரு ஜாதியும் சமுகத்தில் தனித்து இயங்க முடியாது என்பதுதான்‌ சமூக வாழ்க்கை. கோயிலுக்கு ஜாதி உரிமை கோருவது போல் மருத்துவர்களும், வழக்கறிஞர்களும், பொறியாளர்களும்‌ தங்கள் ஜாதிக்கு மட்டுமே சேவை செய்வோம் என்று கூற‌ முடியுமா ? அப்படித்தான் கூறுவார்களா?

இன்றைய கிராமக் கட்டமைப்பு, ஜாதியை உயிர்த்துடிப்புடன் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது என்பதே உண்மை. கிராமக் கோயில்கள் திருவிழாவில்தான் கலவரங்கள் பெருமளவில் வெடித்துக் கொண்டிருக்கின்றன. ரேசன் கடைகளைக் கூட தலித் பகுதியில் அமைக்க முடியவில்லை. ஆதிக்க ஜாதியினர் மிரட்டுகிறார்கள்.

திண்டுக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தீண்டாமைக் கொடுமைகள் தலைவிரித்தாடுவதை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகத் தோழர்கள் கள ஆய்வு செய்து விரிவான பட்டியல் ஒன்றை தயாரித்தார்கள். அந்த பட்டியல் கழகத்தின் சார்பில், தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு நேரில் மனுவாக வழங்கப்பட்டது. திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் உரிமைகளுக்கான‌ திட்டங்கள் கிராமங்களில் உள்ள பெண்களை அதிகாரமயம் ஆக்கி இருக்கிறது என்பது உண்மை.

மோதல்களின் எண்ணிக்கை குறைந்தாலும் ஜாதிய வேற்றுமை சமூகத்தில் ஊடுருவி இருக்கிறது. ஜாதி எதிர்ப்புக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சொல்வதற்கு இயக்கங்கள் தயாராக இல்லை. ஜாதி மோதல்கள் என்று வந்தால் அரசையும் காவல்துறையையும் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் ஜாதியைப் புனிதப்படுத்திக் கொண்டு இருக்கும் கடவுள், மத நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்க தயராக இல்லை. திராவிடர் விடுதலைக் கழகம் கிராமங்களில் இரட்டைக் குவளை முறையை எதிர்த்துப் போராடியது கிராமந்தோறும்‌ ஜாதி எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்புப் பரப்புரையை நடத்தியது. வைக்கம் நூற்றாண்டிலும் கிராமங்களில் நிலவும் தீண்டாமை பட்டியலை தயாரித்தது.

தலித் அரசியல் கட்சிகள் ஜாதி எதிர்ப்புக் கருத்தியலை பரப்புவதில் போதுமான அளவில் செயல்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். இந்த பின்னணியில் உயர் நீதிமன்றங்களில் இருந்து வரும் இந்த ஜாதி எதிர்ப்புக் குரலை நாம் வரவேற்க வேண்டும். இதே நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக கட்டப்பட்டு இருந்த கோயிலை அகற்ற வேண்டும் என்று ஒரு வழக்கில் தீர்ப்பளித்தார். அந்தத் தீர்ப்பில் "கடவுள் அங்கும் இங்கும் இல்லாமல் எங்கும் நிறைந்திருப்பார். குறிப்பிட்ட இடத்தில் இருந்தால் மட்டுமே வெளிப்படுத்த முடியும் என்ற அவசியம் இல்லை. சில கடும்போக்களார்கள்தான் மதத்தைப் பயன்படுத்தி மக்களிடையே மோதலை உருவாக்கி வருகிறார்கள்" என்று வழங்கிய தீர்ப்பையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்