கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பெரியார் தமிழ்மீது ஆர்வம் இல்லாதவராக இருந்தால் திருக்குறள் மீது அக்கறை இல்லாதவராக இருந்தால் ஒரு மாநாடு நடத்தி தீர்மானம் போடுவாரா, அந்த தீர்மானத்தைத் ஓட்டி தொண்டர்கள் உரை எழுதுவார்களா...?

பெரியாரின் தமிழறிவு 

இப்படிப் பல செய்திகள் சொல்லிக்கொண்டே போகலாம். பெரியார், திராவிடர் இயக்க தொண்டர்கள் தமிழுக்கு செய்த நன்மைகள் ஏராளம். இன்னொரு செய்தி சொற்களைத் தமிழ்ப்படுத்துவதற்கு அரசே ஒரு குழு அமைக்கிறது. கலைச்சொற்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும் என்ற‌ ஒரு முயற்சி நடந்தது. “ஹைட்ரஜன்” என்பதை “ஆப்ஜனகம்” என்று தமிழில் மொழிபெயர்க்கிறார்கள். Disinfectant என்பதற்கு பூதி நாசினி என்று போடுகிறார்கள்.

இதற்கு பதிலடியாக பெரியார் பேசுகிறார் நான் தமிழ்ச்சங்கம் மொழிப்பெயர்ப்பை படித்திருக்கிறேன் ‘ஹைட்ரஜன்’ என்பதற்கு ‘நீரகம்’ என்றும் ஹைட்ரோலிசிஸ் என்பதற்கு மின்பருக்கை என்றும்

Disinfectant என்பதற்கு நச்சு நீக்கி என்றும் மொழிபெயர்த்து இருக்கிறார்கள். ஏன் இந்த சொற்கள் பிடிக்கவில்லையா என்று அகராதிகளை எடுத்துக்காட்டி கேட்கிறார்.

 இதை எல்லாம் கேட்பவரை தமிழ் அக்கறை இல்லாதவராக, தமிழறிவு இல்லாதவராக, இப்படி எல்லாம் தமிழை உணர்வுபூர்வமாக எடுத்து சொல்லும் பெரியாரை போலி என்று அலட்சியப்படுத்த முயற்சிக்கிறது போலி தமிழ்த் தேசியக் கூட்டம். 1936-ல் சனவரி 13-ஆம் நாள் தமிழ்த் திருநாள் என்று பொங்கல் விழாவை கொண்டாடி இருக்கிறார்கள். பச்சையப்பன் கல்லூரியில் பெரியார், திருவிக, நமச்சிவாய முதலியார் மூன்று பேரும் கலந்து கொண்டுள்ளனர். பெரியார் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

அவரது உரையில் இந்த மேடையில் பல தமிழறிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்தித் திணிப்பை பற்றி பேசாமல் அமைதியாக இருக்கிறார்களே ஏதேனும் பயமா? என்று கேள்வி கேட்கிறார்.மேடையிலே தமிழறிஞர்களை வைத்து இந்திக்கு எதிராக தமிழ் உணர்வு ஊட்டியவர் பெரியார். இன்னொரு பக்கம் இதே நமச்சிவாய முதலியாருக்கு (போராசிரியர்) 85 ரூபாய் சம்பளமும், சமஸ்கிருத பண்டிதர் குப்புச்சாமி சாஸ்திரிக்கு 300 ரூபாய் சம்பளம் என்ற நிலை இருந்தது.

பெரியார் கேட்டார் தமிழ் சொல்லித் தருபவருக்கு 85 ரூபாய், சமஸ்கிருதம் சொல்லித் தருபவருக்கு 300 ரூபாய் சம்பளம் என்ன நியாயம் என்று கோரிக்கை வைத்தார். உடனே 85 ரூபாய் சம்பளத்தை 300 ஆக்கினார்கள்.

தமிழ்ப் புலவர்களைப் பெரியார் எப்படி கையாண்டார்?

மறைமலையடிகள் ஒரு கூட்டத்தில் கடவுள் இல்லை என்று சொல்லி உயிரோடு சுற்றிக்கொண்டு இருக்கிறார் ஒருவர் இதை பார்த்துக் கொண்டிருக்கீர்களோ? என்று பேசி இருக்கிறார்.

இதைக் கேள்விப்பட்ட பெரியார் முதல் வாரம் பத்திரிகையில் எழுதுகிறார், மறைமலையடிகள் பேசியதாக ஒரு செய்தி வந்தது அதற்கு தகுந்த சமாதானத்தை நான் மறைமலையடிகளிடம் எதிர்பார்க்கிறேன் என்று எழுதியிருந்தார்.

இரண்டாம் வாரம் மீண்டும் மறைமலையடிகள் பேசிய முழுமையான செய்திகளைத் திரட்டி கொண்டு எழுத இருக்கிறேன் அதற்குள் சமாதானம் வருமா.. என்று தெரியவில்லை என எழுதினார்.மூன்றாவது வாரம் மறைமலையடிகள் “நான் அப்படி சொல்லவில்லை அதற்காக வருந்துகிறேன்” என்று எழுதிக் கி.ஆ.பெ விசுவநாதன் அவர்களிடம் தந்து பெரியாரிடம் கொடுக்கச் சொன்னார்.

கி.ஆ.பெ விசுவநாதன் நீதிக்கட்சி செயலாளராக இருந்தார். உடனே கி.ஆ.பெ விசுவநாதன் மறைமலையடிகள் கொடுத்த செய்தியை திராவிடன் ஏட்டுக்கு கொடுத்தார். திராவிடன் ஏடு தலைப்பு செய்தியாக “மறைமலையடிகள் மன்னிப்பு” என்று வெளியிடுகிறார்கள். இதை அறிந்த பெரியாருக்கு கோபம் வந்துவிட்டது.

எவ்வளவு பெரிய தமிழறிஞர் அவர், நான் அவரை எதிர்த்து எழுதவில்லை. எனவே தான் இரண்டு வாரங்களாக எதிர்ப்பது போல் அறிக்கை விட்டேன். மறைமலையடிகள் பெருந்தன்மையாக கடிதத்தை எழுதி இருக்கிறார். ஆனால் என்னுடைய கூட்டுப்பணியாளர்கள் அவசரப்பட்டு போய் வேறு ஒரு பத்திரிகைக்கு கொடுத்து அந்த பத்திரிக்கை மன்னிப்பு என்று தலைப்பில் வெளியிட்டதற்கு நான் நிபந்தனையில்லாமல் (பெரியார்) மன்னிப்பு கேட்கிறேன். என்னுடைய‌ கூட்டுப் பணியாளர்கள் இப்படி நடந்துகொள்வது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது, என்று எழுதி இருக்கிறார்.

 “அறிவுரைக் கொத்து” என்ற‌ நூல் கல்லூரிகளில் பாடநூலாக வைக்கப்படுகிறது. அதில் எழுதிய கருத்துக்கள் பார்ப்பனக் கும்பலுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சமஸ்கிருதம் படித்தால் சீக்கிரம் மோட்சம்‌ கிடைக்கும் என்று எழுதி இருக்கிறார். எ.கா : ‘ஹிருதயம்’ இதை தமிழ்ப்படுத்தினால் ‘இதயம்’ என்று, இப்போது ‘நெஞ்சு’ என்று சொல்லுகிறார்கள். ’வேகமாக செல்’ என்பதற்கு ‘ப்வரிதம்’ என்று சமஸ்கிருத சொல்லாடல். தமிழில் அதை விரைவு என்று சொல்லுகிறோம். எப்படி தமிழில் எளிமையாக உச்சரிக்கிறோம். சமஸ்கிருத வார்த்தைகள் அடிவயிற்றில் இருந்து மூச்சை வாங்கிப் பேச வேண்டி இருக்கிறது. ஆகவே இப்படி இருந்தால் நீண்ட காலம் வாழ முடியுமா? சீக்கிரம் மோட்சம் கிடைக்கும் என்று எழுதி இருக்கிறார்.

உடனே பார்ப்பனர்கள் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு “அறிவுரைக் கொத்து” என்ற‌ நூலை பாடநூல் பகுதியில் இருந்து நீக்கியது. பெரியார் போராட்டம் நடத்தினார். எங்கள் தமிழறிஞர் எழுதிய நூலை அரசு எப்படி திரும்பப் பெறலாம் என்ற கோரிக்கை வைத்து தமிழ்நாடு முழுவதும் கூட்டம் நடத்தினார். எதிர்ப்புக்குப் பணிந்து தமிழ்நாடு அரசு அதை மீண்டும் பாட நூலாக மாற்றியது.

பெரியார் சைவம், வைணவம் போன்றவற்றைப் பார்க்கவில்லை. அறிவுக்கு ஒவ்வாத அனைத்தையும் விமர்சனம் செய்தார். பெரியார் கம்பராமாயணத்தை பற்றி விமர்சனங்கள் முன்வைக்கும் போது சைவஅறிஞர்கள் ஆதாரங்களை கொடுத்தார்கள்.

பெரியபுராணம் பற்றி எழுத தொடங்கினேன் ஆட்களை காணவில்லை..என்றார். பெரியார் கிறித்துவத்தைப் பற்றி விமர்சனம் எழுதும் போது ஏ.டி பன்னீர் செல்வம் கூட சற்று விலகினார்.

பெரியார் விமர்சனங்கள் முன்வைக்கும் போது யாராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் எதிர்கொண்டார்.

சரியயெனப்பட்டதை அறிவியல் பார்வையில் அணுகினார். சுயமரியாதைத் திருமணத்தை முதலில் அறிமுகப்படுத்தும் போது பார்ப்பன மறுப்பு தான். புரோகித பகிஷ்கார சங்கம் என்று ஒன்றை வைக்கிறார்கள்.

சுயமரியாதைத் திருமணத்துக்கு ஒன்றுக்கு சென்று வந்து சொல்லுகிறார். பார்ப்பனர்கள் பூநூலை விட மூன்று மடங்கு பெரிதாகவடம் போல் நூல் அணிந்து பார்ப்பனர்களை விட ஐந்து மடங்கு சத்தத்துடன் சமஸ்கிருத மந்திரங்களைச் சொல்லிக் இருந்தார்கள். இதுதான் பார்ப்பன புரோகித பகிஷ்கார என்பது என்று எழுதினார்.

புலவர் மாநாட்டில் ஒரு கேள்வியை முன்வைத்தார். “நீங்கள் எல்லாம் மரபு என்ற ஒன்றை சொல்கின்றீர்கள் சிங்கம் என்றால் கர்ஜிக்கும், யானை என்றால் பிளிறும், ,குதிரை என்றால் கனைக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் பெண்களைப் பற்றி எழுதும் போது மட்டும் மயில் போல் சாயல் உடையாள் என்று சொல்லுகிறீர்களோ, தோகை இருந்தாலே அது ஆண் மயில் அல்லவா? இதை எப்படி பெண்ணோடு ஒப்பிடுகிறீர்களே.. என்று கேட்டார்‌.

சுயமரியாதை இயக்க மூத்த தலைவர் டி.கே. இராமச்சந்திரன் அவர்களுடைய மகன் திருமணம் திண்டிவனத்தில் நடந்தது. திருமணத்தில் பெரியார், ஜயா முனுசாமி அவர்கள் அளவுக்கு நான் தமிழ் படித்தவன் அல்ல. திருக்குறளில் பெண்ணுக்கு தானே கற்பு பற்றி சொல்லி இருக்கிறார். ஆணுக்கு ஏதாவது கற்பைப் பற்றி பேசி இருக்கிறாரா? என்று பெரியார் கேட்டார் உடனே முனுசாமி இருக்கிறது.

“பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற வொழுக்கு என்றார்.

பெரியார் நானும் படித்தேன் அதில் பிறர் மனைவியை நோக்கக்கூடாது தங்கச்சியை நோக்கலாமா?, கணவன் இல்லாத பெண்ணை நோக்கலாமா? என்று கேள்வி கேட்டார். முனுசாமி தமிழறிஞர் வந்தது வம்பு என்று கடைசி வரை அமைதியாக இருந்தார். ஆழ்ந்து குறள்களை படித்ததால் தான் கேள்வி எழுப்ப முடிகிறது.

ஒவ்வொரு கட்டத்திலும் பெரியாரோடு இணைந்தவர்களுக்கு பொருத்தமாகத் தான் வந்து சேர்ந்தவர்களின் நிலை இருந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு வருகிறார்.

கட்டாயம் இந்தி ஒழிக என்பது தான்‌ முழக்கம்‌. அடுத்து இந்தி ஒழிக என்ற ஆகிறது. தமிழ்ப் புலவர்கள் வந்த பின்னால் இந்தி ஒழிக; தமிழ் வாழ்க என்று உருமாறுகிறது. இப்போது தமிழ் வாழ்க என்று நம் மாநககராட்சி கட்டிடங்களில் வந்து நிற்கிறது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் வந்தவர்களுக்குத் தமிழ் உணர்வு மேலோங்கி இருந்தது அந்த கால கட்டத்தில். சட்ட எரிப்புப் போராட்டத்தின் போது இயக்கத்துக்கு வந்தவர்கள் எல்லாம் ஜாதி எதிர்ப்பில் உறுதியாக இருந்தவர்கள். 80-க்கு பிறகு திராவிடர் கழகத்தில் இணைந்தவர்கள் எல்லாம் ஈழ விடுதலையில் ஆழ்ந்த புரிதலும் உணர்வுகளுடன் இருப்பார்கள். இப்படி இயக்கத்துக்கு வந்தவர்கள் வந்தவுடன் தங்களுடைய தமிழறிவு, ஆற்றல் எல்லாம் இயக்கத்துக்காக பயன்படுத்தி எழுத்தாற்றல் இவற்றை எல்லாம் சேர்த்துக் கொண்டு புதிய முறையில் இயக்கப் பரப்புரை நடக்க உறுதுதுணையாக இருந்தார்கள்.

(தொடரும்)

(பிப்ரவரி 1-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிமிர்வோம் வாசகர் வட்ட 28-வது சந்திப்பு நிகழ்ச்சியில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை)