24.12.2024 அன்று கோவையில் நடைபெற்ற புரட்சியாளர்கள் அம்பேத்கர் - பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் தோழர் இனியவன் ஆற்றிய உரை. கடந்த இதழின் தொடர்ச்சி..
சுயமரியாதை முக்கியம்!
ஒடுக்கப்பட்டவர்களுக்கு நில உரிமை வேண்டும் என்று போராடிய அம்பேத்கர் அவர்கள் அதே நேரத்தில் மகாராஷ்டிரத்தில் நிலவிய ‘மகர்வர்தான்’ முறையை நீக்க வேண்டி பம்பாய் மாகாணத்தில் கோரிக்கை வைத்தார். மகர்வர்தான் என்பது கிராமங்களில் ஏவல் பணியில் ஈடுபடும் மகர்களுக்கு (ஒடுக்கப்பட்ட ஜாதி) கிராம மக்கள இலவசமாக அளித்திடும் சிறு நிலம் ஆகும். ஆனால் அந்த நிலத்தை பெற்ற காரணத்தாலேயே நேரம் காலம் பார்க்காமல் கிராமத்திற்கான ஏவல் பணிகள் அனைத்தையும் ஓர் மகர் கண்டிப்பாக செய்தே ஆக வேண்டும். அந்த மகர் மட்டும் அல்லாமல் அவரின் குடும்ப உறுப்பினர்கள் கூட கிராமத்தினரால் அனைத்து வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டார்கள். உயர்ஜாதியினரின் பணிகளைச் செய்ய ஒரு மகர் மறுத்தால் அவரது நிலம் அவர்களிடமிருந்து பிடுங்கப்படுவதுடன் சமூக விலக்கத்திற்கும் ஆளாக நேரிடும்.
இத்தகைய கொடுமையை எதிர்த்து அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மகர்வர்தான் முறையை ஒழிக்கிற கோரிக்கையை 1948-இல் முன் வைத்தார். இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டியது அண்ணல் அம்பேத்கர் கூறிய நில உரிமை என்பது வெறும் நிலம் என்கிற திடப்பொருள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல அது சமூகத்தில் மதிப்பையும் மரியாதையையும் தலித்துகளுக்குப் பெற்றுத் தருவதாக இருக்க வேண்டும் என்பதிலும் அம்பேத்கர் கவனமாக செயல்பட்டார்.
நாட்டின் விடுதலைக்குப் பிறகானக் கட்டமைப்பு குறித்து காந்தி வலியுறுத்திய ‘கிராம சுவராஜ்’ (ராமராஜ்ஜியம்), இந்துமதவாதி சவர்க்கார் முன்வைத்த ‘குடும்பம்’, இயந்திரகதியில் கம்யூனிஸ்டுகள் முன்வைத்த ‘சுவாலம்பி கிரிஷிகிராம’ (தன்னிறைவு விவசாய கிராமம்) ஆகிய அனைத்தையும் அம்பேத்கர் முற்றிலும் மறுதலித்தார். இம்முறைகள் அனைத்தும் ஜாதியைப் பாதுகாக்கும் அம்சத்தைக் கொண்டிருந்தன.
அவுரங்காபாத்தில் முன்னெடுக்கப்பட்ட இயக்கத்தில் தீண்டத்தகாதார்களுக்கு நில உரிமை வேண்டும் என்ற கோரிக்கையை ஆட்சியாளர்களிடமும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடமும் வலியுறுத்திய அம்பேத்கர் கீழ்க்கண்ட கோரிக்கையும் முன் வைத்தார்
1. இந்தியாவில் உள்ள 6 கோடி தலித் மக்களுக்கு அரசிடம் உள்ள வளம்மிக்க ஒன்பது கோடி தரிசு நிலங்களை கையளிக்க வேண்டும்.
2. கிராமங்களில் உள்ள ஏவல் பணி முறைகளில் இருந்து தீண்டத்தகாதார்கள் விடுவிக்கப்படுவதுடன் அவர்களுக்கென்று தனி கிராமங்களை உருவாக்க வேண்டும்.
3. குலத்தொழில் முறைகள் ஒழிக்கப்பட வேண்டும், விவசாயத்தை மறு சீரமைக்க வேண்டும்.
4. விவசாயம் என்பது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிலாக மாற்றப்பட வேண்டும். பயிரிடுபவர்களுக்கு நீண்ட கால நிரந்தர குத்தகைக்கு விட வேண்டும்.
5. விவசாயம் என்பது தொழிலாக கருதப்பட வேண்டும் என்பதுடன் அது நகர வளர்ச்சியை நோக்கி முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்ததுடன், ரஷ்யாவில் உள்ள கூட்டுப்பண்ணை திட்டம்தான் நமக்குத் தேவையானது என்று (vol 5 , Page 960) கூறியுள்ளார். அந்த காலகட்டத்தில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் நிலவுடைமைக்கு எதிராக இயக்கங்களை மேற்கொண்ட போதும் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாய தொழிலாளர்களுக்கான (பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்கள்) நில உரிமை குறித்து முறையான திட்டம் எதையும் முன் வைக்கவில்லை. அவ்வகையில் அம்பேத்கர் அவர்களின் பேச்சும், எழுத்தும், செயலும் ஓர் கம்யூனிஸ்ட் முழக்கங்களாகவே வெளிப்பட்டுள்ளன. காலம் கடந்தாவது அதனை உள்வாங்கிக் கொண்டு புரட்சிகர கம்யூனிஸ்ட் சக்திகளும் - தலித் அமைப்புகளும் - முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து அம்பேத்கரின் கருத்தியலை களத்தில் செயல்படுத்துவோம்.
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 1953-இல் பட்டியல் ஜாதி/ பழங்குடியினர் குழு ஆணையர் அறிக்கை மீதான விமர்சனம், 1954 பட்டியல் ஜாதியினர் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை, 1954 தீண்டாமை ஒழிப்பு மசோதா விவாதம், 1955-இல் பட்டியல் ஜாதியினர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு கூட்டம் ஆகிய எல்லா நிகழ்வுகளிலும் பட்டியல் ஜாதி / பழங்குடியினருக்கு அரசு தரிசு நிலங்களைக் கையளிக்க வேண்டும் எனக் கூறியதுடன் விவசாயிகளுக்கு நில உரிமை என்கிற விவகாரத்தில் அரசு மாபெரும் முட்டாள்தனத்தை நிகழ்த்தியுள்ளது எனவும் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இடதுசாரி கட்சிகள் ஆட்சியைப் பிடித்த மாநிலங்களில் செயல்படுத்தப்பட்ட நிலச் சீர்திருத்தங்கள் எவையும் புரட்சிகரமாக அமையாததுடன் அவை அனைத்தும் இந்திய ஆளும் வர்க்கத்தின் முதன்மை பங்குதாரராக விளங்கும் ஜாதி கட்டுமானத்தை எள்ளளவும் தகர்க்கவில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
உழைக்கும் வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்டோர் உரிமையை வென்றெடுக்க 1927-இல் அம்பேத்கர் உருவாக்கிய ‘சுதந்திர தொழிலாளர்கள் கட்சியின் (IPL)’ கொடி சிவப்பு நிறத்தில்தான் இருந்தது. 1930-களில் கம்யூனிஸ்ட் தலைவர் R.B.மொரே அவர்களின் உறுதுணையால் IPL கட்சி கம்யூனிஸ்டுகளுடனும் இணைந்து பல்வேறு போராட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்தது.
“தொழிலாளர்கள் முதலாளித்துவம், பார்ப்பனியம் ஆகிய இரண்டையும் எதிர்த்து நிற்க வேண்டும்.” பிரிட்டிஷார் நாட்டை விட்டு வெளியேறிய பிறகும் கூட நாம் முதலாளித்துவத்தை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டி இருக்கும்” எனக் கூறியதுடன், “இந்திய கம்யூனிஸ்டுகள் காரல் மார்க்ஸின் தத்துவத்தை தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். மார்க்ஸின் தத்துவத்தை அப்படியே செயல் வடிவத்துக்கு கொண்டு வருவது சாத்தியமற்றது. மேற்குலக நாடுகளில் கூட வர்க்க ரீதியாக ஒரே நிலையில் இருந்த தொழிலாளர் அய்க்கியம் என்பது ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியாவிலே வகைப்படுத்தப்பட்ட வர்க்கப் பிரிவுகள் இல்லை. அனைத்துத் தொழிலாளர்களும் ஒரே இனத்தவர், ஒரே வர்க்கத்தினர் என்கிற நிலையை எட்ட வேண்டியது லட்சியமாகும். ஆனால் இயல்பாகவே தொழிலாளர்கள் அவ்வாறான நிலையில் இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் எதார்த்தம்” என 1938 இந்திய தீபகற்ப ரயில்வே தலித் தலைவர்கள் மாநாட்டில் அம்பேத்கர் பேசியுள்ளார்.
1942-46 வரை வைசிராய் செயற் குழுவில் தொழிலாளர் துறை உறுப்பினராக இருந்த பொழுதுதான் தொழிற்சங்க உரிமை சட்டம், எட்டு மணி நேர வேலை உள்ளிட்டவை சட்ட உரிமை ஆக்கப்படன.
பம்பாய் மாகாணத்தில் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வது சட்டத்திற்கு புறம்பானது என்கிற தீர்மானம் 1938 செப்டம்பர் மாதம் கொண்டு வரப்பட்டது. வேலை நிறுத்தம் என்பது தொழிலாளர்களின் உரிமையாகும் அதற்கு எதிரான தடை செய்யும் தீர்மானம் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிரானது என கடுமையாக விமர்சித்தார். தீர்மானத்தை எதிர்த்து டாக்டர் அம்பேத்கர், எஸ். ஏ.டாங்கே, பாருலேக்கர் மற்றும் பிற தலைவர்கள் ஒன்றிணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
போராட்டத்தில் அண்ணல் அம்பேத்கரின் சுதந்திரத் தொழிலாளர் கட்சியின் தொண்டர்கள் செஞ்சட்டையுடன் பங்கேற்றார்கள். இவ்வாறு தொழிலாளர் நலனில் முழுமையாக அக்கறை கொண்ட தலைவராக அம்பேத்கர் விளங்கினார். ஆனால் அன்றைய கம்யூனிஸ்டுகள் ஜாதி குறித்தான பார்வையில் முன்வைத்த இயந்திர வகையிலான அணுகுமுறையை கண்டித்துதான் அம்பேத்கர் கம்யூனிஸ்ட்களை சாட நேர்ந்தது. அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர்கள் காந்தியின் காங்கிரசை நம்பிய அளவிற்கு அண்ணல் அம்பேத்கரை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாததும் அவரின் கோபத்திற்கு காரணமாக இருந்தது.
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் 1942-இல் அனைத்திந்திய வானொலியில் இந்திய தொழிலாளர்களும் இரண்டாம் உலகப்போரும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில் “இந்தப் போரில் நாஜிக்கள் வெற்றி பெற்றால், சுதந்திரம் என்பது இருக்காது; சமத்துவம் என்பதும் இருக்காது.” என்றார். அதன் பிறகான கூட்டங்களில் சோவியத் ரஷ்யாவின் செம்படையை ஆதரித்து இந்தியத் தொழிலாளர்கள் நடந்திட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இவ்வகையில் சர்வதேச அளவில் கம்யூனிஸ்டுகளின் கோரிக்கையையே அம்பேத்கர் அவர்களும் பிரதிபலித்துள்ளார். எனவே, கம்யூனிஸ்டுகளின் அடிப்படை முழக்கமான நிலம், வர்க்க விடுதலை, சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கங்களின் முழக்கம் என அனைத்து நிலைகளிலும் அம்பேத்காரின் செயல்பாடு ஒத்திசைவாக இருந்தபோதிலும் இந்திய கம்யூனிஸ்டுகள் பார்ப்பனியத்தை புரிந்து கொள்ளாமல் முன்வைத்த கருத்துரைகளால்தான் அம்பேத்கரை, கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக எழுத வைத்துள்ளது என்பதே உண்மை.
அதேபோல ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்’ என்பதிலும் அண்ணல் அம்பேத்கர் கொள்கை அளவில் கம்யூனிஸ்டுகளுடன் முரண்பட்டு நிற்கிறார் என்கிற போதும் பாராளுமன்ற ஜனநாயகத்தை அவர் முற்று முதலாக ஏற்றுக் கொள்கிறார். 1789-இல் நடைபெற்ற பிரஞ்சுப் புரட்சியின் வழியாகவே ‘பாராளுமன்ற ஜனநாயகம்’ என்கிற முறை உருவாக்கியது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
கம்யூனிஸ்ட் சர்வதேசிய இரண்டாம் அகிலத்தின் (COMINTRON : 1919-43) கூட்டத்தில் 1920 இல் தோழர் லெனின் முன்வைத்த “அனைத்து நாடுகளின் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைவீர்” என்கிற முழக்கத்தை இந்தியாவில் உழைக்கும் வர்க்கத்தின் அடிப்படை அலகாக விளங்குகிற ஒடுக்கப்பட்டோரின் விடுதலையை (ஜாதி ஒழிப்பை) வர்க்கப் போருடன் இணைத்து முன்னெடுக்க அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியினர் தவறிவிட்டதன் விளைவாகத்தான் அம்பேத்கருடன் முரண்பட நேர்ந்தது. தற்போது சூழல் அப்படி இல்லை பெரும்பான்மையான கம்யூனிஸ்ட் கட்சிகள் அம்பேத்கரின் கருத்துக்களை குறைந்த பட்ச விமர்சனங்களோடு முழுமையாகவோ / பகுதியாகவோ ஏற்றுக்கொண்டு இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளார்கள்.
தந்தை பெரியாரைப் பொருத்தவரை அவரது கருத்துக்கள் தமிழ்நாட்டுச் சமூகம் மற்றும் அரசியலில் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணத்தால்தான் இன்று மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு அனைத்து துறைகளும் முன்னேறி இருக்கிறது. அவர் வழி வகுத்துத் தந்த திராவிட அரசியல் போக்கின் காரணமாக இன்று தமிழ்நாட்டில் இந்துத்துவம் வேரூன்ற முடியாமல் தவிக்கிறது. பெரியார் காங்கிரஸில் இருந்து வெளியேறிய பிறகு பொதுவுடமை சித்தாந்தத்தின் மீது மிகப்பெரிய ஆர்வத்தைக் கொண்டிருந்தார். பார்ப்பன ஆதிக்கம் ஒழிக்கப்படாமல் கையளிக்கப்படும் இந்திய விடுதலை என்பது ஓர் அதிகார மாற்றமே என்று பெரியாரும் அம்பேத்கரும் தீர்க்கமாகக் கூறினர்.
வர்க்கம் என்பதே ஜாதிப் பாகுபாடே! 1925-இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து தந்தை பெரியார் விலகும் போது “காங்கிரஸ் கட்சி ஜாதியை பாதுகாக்கும், முதலாளித்துவ (சுரண்டல்வாத) கட்சியாக இருக்கிறது. அதை நம்புவதில் இனி எந்த பயனும் இல்லை. எனவே நான் வெளியேறுகிறேன்” எனக் கூறினார். ஜாதி ஒழிப்பை முதன்மையாகக் கொண்டு 1925-இல் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய போதிலும் “பணக்காரன் என்பதே தேசத்தையும் ஏழைகளையும் குடியானவர்களையும் தொழிலாளர்களையும் கெடுத்து பணம் சம்பாதித்தவர்கள் என்பதுதான் சத்தியம்” (குடியரசு ,1925) என எழுதினார். இந்தியாவில் வர்க்கம் என்பது ஜாதி பிரிவுகளாக உள்ளன என்பதையும் தகுந்த தரவுகளுடன் விளக்கியுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை 1931-இல் தமிழில் ‘சமதர்ம அறிக்கை’ என்கிற பெயரில் தந்தை பெரியார் குடியரசு இதழில் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து மதம் குறித்து லெனின் எழுதிய புத்தகம், ஒவ்வொரு தொழிலாளியும் ஏன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர வேண்டும் என்கிற கட்டுரைகளையும், சோவியத் நாட்டில் பெண்ணுரிமை, மருத்துவக் கட்டமைப்பு, தொழிலாளர்களுக்கான உரிமைகள் குறித்தும் தொடர்ச்சியாக குடியரசு இதழில் கட்டுரைகளை வெளியிட்டார். இதிலிருந்தே தந்தை பெரியார் அவர்களுக்கு பொதுவுடமை சித்தாந்தத்தின் மீதும், சோவியத் ரஷ்யா மீதும் இருந்த ஆர்வம் அத்தகைய புரட்சி இங்கேயும் நடந்துவிட்டால் பரவாயில்லை என்கிற எண்ணமும் மேலோங்கி இருந்ததை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
1933-இல் தந்தை பெரியார் அவர்கள் தொழிலாளர் மாநாடு; விவசாயிகள் மாநாடு, ஜமீன்தார் ஒழிப்பு மாநாடு, லேவாதேவி ஒழிப்பு மாநாடு, நாத்திகர் மாநாடு, இளைஞர் மாநாடு, ஜமீன்தார் அல்லாதார் மாநாடு என தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தாக்கத்தின் அடிப்படையில் மேற்கண்ட மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தினார். கம்யூனிஸ்ட் தோழர்களான ஜீவா, தோழர் சிங்காரவேலர் ஆகியோருடன் இணைந்து தந்தை பெரியார் அவர்கள் பல்வேறு பணிகளை மேற்கொண்டார். 1930-36 காலகட்டங்களில் தோழர் சிங்காரவேலரும் தோழர் பெரியாரும் இணைந்து சுயமரியாதை சமதர்ம கட்சியை உருவாக்க பல்வேறு நிலைகளில் முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால் அரசின் நெருக்கடியினாலும், ஜாதி மதம் ஒழிப்பு போன்றவற்றில் கம்யூனிஸ்டுகள் காட்டிய சுணக்கத்தினாலும் இம்முயற்சி முழுமை அடையாமல் போய்விட்டது. 1934-இல் கம்யூனிஸ்ட் கட்சியை காலனி அரசு தடை செய்ததுடன் அந்தக் கட்சிக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதனால் தான் ஏற்றுக்கொண்ட ஜாதி ஒழிப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது கூட சிக்கலாகிவிடும் என்பதனால் தந்தை பெரியார் அவர்கள் கம்யூனிஸ்ட் கொள்கைகளை சற்று ஒதுக்கி வைப்பதாக அறிவித்தார். இது ஓர் அறிவு நேர்மை மிக்க செயலாகும். அதேபோல 1948-54-இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் தந்தை பெரியார் அவர்கள் கம்யூனிஸ்ட் தோழர்களைப் பாதுகாக்கும் அரணாக விளங்கினார்.
அண்ணல் அம்பேத்காருக்கு ஏற்பட்ட அதே முரண்பாடுதான் தந்தை பெரியாருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மீது ஏற்பட்டது. ஜாதி ஒழிப்பு, தீண்டாமை, பார்ப்பனிய அதிகார தகர்ப்பு, மதம் ஆகிய விவகாரங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வெளிப்படையாக செயல்பட தயாராக இல்லாத காரணத்தாலும் பார்ப்பனிய எதிர்ப்பு என்பதை முற்றிலுமாக கம்யூனிஸ்டுகள் புறந்தள்ளிய காரணத்தாலும் சமூக, அரசியல்ரீதியாக முற்போக்குப் புரட்சிகர சக்திகளாக விளங்கிய கம்யூனிஸ்டுகளை பார்ப்ப ஆதிக்க சக்திகள் என பெரியார் வசைப்பாடிட நேர்ந்தது. ஆனால் அந்த விமர்சனங்கள் இந்திய கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகள் மீதான விமர்சனமே தவிர, கம்யூனிச சித்தாந்தத்தின் மீது அவர் விமர்சனங்களை வைக்கவில்லை. இடதுசாரி சிந்தனைகள், சமதர்ம கோட்பாட்டின்மீது இணக்கமான கோட்பாட்டையே பெரியார் கொண்டிருந்தார் என்பதை கூறி உரையை நிறைவு செய்கிறேன்.
- இனியவன்