கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்தி பேசாத மக்களின் மீது இந்தியைத் திணிப்பது என்ற மொழியை மையமாகக் கொண்ட அரசியல் நூறாண்டு கால வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்டதாகும். இந்திய விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலகட்டத்தில் மொழியால் மக்களை ஒன்றிணைத்தால் இந்திய விடுதலையை எளிதாக அடைய முடியும் என்பது காந்தியாரின் கணிப்பாகவும், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட காங்கிரஸ் தலைவர்களின் விருப்பமாகவும் இருந்தது.

31.7.1917 அன்று இன்றைய குஜராத் மாநிலம் பரோச்சில் நடந்த கல்வி மாநாட்டில் காந்தியார் இந்தியாவின் பொதுமொழி குறித்து அழுத்தமாகப் பதிவு செய்தார். அதற்கான எதிர்ப்புக்குரல் தமிழ்நாட்டிலிருந்து உடனே வெளிப்பட்டது. நீதிக் கட்சியின் நாளேடான ‘திராவிடன்’ இதழில் அடுத்த நாள் 1.8.1917 அன்று ‘மிஸ்டர் காந்தியும் இந்தியும்’ என்று இந்தி எதிர்ப்புத் தலையங்கம் வெளிவந்தது. தொடர்ந்து மூன்று கட்டுரைகள் அதே மாதத்தில் வெளிவந்தன.

ஆனாலும், தொடர்ந்து இந்தியை முன்னிறுத்தி வந்த காந்தியடிகள் 1918 ஆம் ஆண்டு சென்னையில் தட்சிண பாரத் இந்தி பிரச்சார சபா என்ற அமைப்பைத் தொடங்கி வைத்தார். அதோடு விட்டாரா காந்தி? “திராவிடர்கள் சிறுபான்மையராக இருப்பதால் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் திராவிட இந்தியாவில் உள்ளவர்களுடன் பேசுவதற்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றைக் கற்றுக் கொள்வதை விட இந்தியாவின் பிற பகுதிகளில் பொது மொழியாக உள்ள இந்தியைச் சிறுபான்மையினரான திராவிடர்கள் கற்றுக் கொள்வதுதான் தேசியப் பொருளாதாரத்திற்கு நல்லது” என்று தனது ‘யங் இந்தியா’ இதழில் எழுதினார்.

முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் எப்படித் தொடங்கியது?. அதன் தொடக்கமாக சென்னை மாகாணத்தின் முதல்வரான ராஜகோபாலாச்சாரி 10.8.1937 அன்று ராமகிருஷ்ணா மடத்தில் நடைபெற்ற மாணவர் இல்லக் கூட்டத்தில் உரையாற்றியபோது சென்னை மாகாணத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக வைக்கப் போவதாகக் குறிப்பிட்டார். “இதற்காக இந்தி பாடநூல்கள் விரைவில் எழுதப்பட வேண்டும்; புதிய இந்தி எழுத்துகளைத் தமிழ்நாட்டு மாணவர்கள் கற்றுக் கொள்ளத் தொடங்கி விடுவார்களேயானால் பிறகு இந்தி, சமஸ்கிருதத்தை அவர்கள் எளிதில் பயில வாய்ப்பு ஏற்பட்டு விடும்” என்று பேசினார்.

Periyar 264இதற்கு முதல் எதிர்வினை 22.8.1937 நாளிட்ட குடி அரசு இதழில் ‘சுயாட்சியா?’ பழிவாங்கும் ஆட்சியா?’ என்ற தலைப்பில் பெரியார் எழுதிய தலையங்கத்தில் வெளிப்பட்டது. “இந்தி கட்டாயப் பாடமாகும் பட்சத்தில் கண்டிப்பாக பார்ப்பனர் அல்லாத பிள்ளைகள் நூற்றுக்கு 90-க்கு மேல் தேர்ச்சியில் தவறிவிடுவதோடு பார்ப்பனப் பிள்ளைகள் நூற்றுக்கு நூறு ப்ரைஸ் விழுந்து தேர்ச்சி பெற உதவியாய் இருக்கும்” என்பது முதல் எதிர்ப்புக் காரணமாகக் கூறியிருக்கிறார்.

இவ்வாறான எதிர் வாதங்களை முன்வைத்ததற்குப் பின்னர் இரண்டு செயல் திட்டங்களைக் கூறினார் பெரியார். இந்தி மொழித் திணிப்பு பார்ப்பனர் அல்லாத மாணவர்களைக் கல்வியில் முன்னேறுவதைத் தடுக்கும். எனவே பார்ப்பனரல்லாத சமுதாயப் பெற்றோர்களே, போராட்டத்திற்கு உதவுங்கள் என்பது ஒன்று. அடுத்து தமிழ்நாடு தழுவிய இந்தி எதிர்ப்பு வழிநடை பரப்புரைப் பயணம் நடத்துவதன் வழியாக, மக்களுக்கு இந்தி எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது.

8.5.1938 நாளிட்ட குடி அரசு இதழில் “இந்தி வந்துவிட்டது! இனி என்ன ஒருகை பார்க்க வேண்டியதுதான்!” என்ற தலையங்கத்தை பெரியார் அவர்கள் தீட்டி தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்குமான அழைப்பாக விடுத்தார்.

அந்தத் தலையங்கம் சொல்லும் செய்தி என்ன?

முதலாவது, அமைக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு வாரியத்தின் அறிவுரைப்படிதான் செயல்பட வேண்டுமே தவிர, தான்தோன்றித்தனமாக அனைவரும் தங்கள் விருப்பத்திற்குச் செயல்படக் கூடாது என்பது. அடுத்ததாக இது ஓர் தனி அமைப்பின் போராட்டம் அல்ல; ஒட்டுமொத்தத் தமிழர்களின் போராட்டம் என்பதை அழுத்தமாகக் கூறுவதற்கும், தமிழ்ச் சமுதாயத்திற்குக் கேடான ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்போது நமக்குள் உள்ள எந்த வகையான வேற்றுமையாக இருந்தாலும் அவற்றையெல்லாம் விலக்கி வைத்துவிட்டுப் பொது நோக்கத்திற்காக ஒன்றுகூடிப் போராட வேண்டும். என்பதையும் சொல்கிறது.

1.8.1938 அன்று திருச்சி உறையூரிலிருந்து ஐ.குமாரசாமி பிள்ளை அவர்களைத் தலைவராகவும், சுயமரியாதை இயக்க முன்னோடிகள் ஆன ‘நகரதூதன்’ மணவை திருமலைசாமி, பட்டுக்கோட்டை அழகிரி, மூவலூர் ராமாமிர்தம்மாள் ஆகியோர் அடங்கிய 100 பேர் கொண்ட இந்தி எதிர்ப்பு வழிநடை பிரச்சாரப் படை 42 நாட்கள் 928 கிலோ மீட்டர் பயணித்து 87 பொதுக்கூட்டங்களை நடத்தி பரப்புரை செய்த வண்ணம் 11.9.1938 அன்று சென்னையில் கடற்கரையில் நடைபெற்ற வரவேற்பு மாநாட்டில் நிறைவடைந்தது. அந்த மாநாட்டில்தான் ‘தமிழ்நாடு ‘தமிழருக்கே’ என்ற முழக்கம் முதன் முதலில் முழக்கமாக எழுப்பப்பட்டது. அதற்கு முன்னரும் சில ஆண்டுகள் பெரியார் வட இந்தியத் தொடர்பிலிருந்து விடுவித்துக் கொண்டு தமிழ்நாடு தனியாக இயங்க வேண்டும் என்று சொல்லி வந்திருந்தாலும், ஒரு மாநாட்டின் முழக்கமாக, நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள் எல்லோரும் இருந்த அந்த மேடையில் இருந்து ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. அதுதான் தமிழ்த் தேசியத்தின் முதல் விடுதலைக் குரலாக எழுந்த குரலாகும். ஆனால் இன்றளவும் முதலமைச்சராவதுதான் தமிழ்த் தேசியம் என்றிருக்கும் சில அறிவிலிகளுக்கு அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம்; ஆனால் வரலாறு இதுதான்.

அடுத்ததாக தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு 1938 நவம்பர் 13 ஆம் நாள் சென்னையில் மறைமலை அடிகள் அவர்களுடைய மகள் நீலாம்பிகை தலைமையில் நடந்தேறியது. அந்த மாநாட்டிலும் தமிழ்நாட்டில் 100-க்கு 95 பேர் தாய்மொழியில் கூடக் கல்வியற்று இருக்கிற நிலையில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இந்தியைக் கட்டாயப் பாடமாக அறிமுகப்படுத்தி இருக்கிற அரசைக் கண்டித்தும், தமிழர்கள் தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு பார்ப்பனப் புரோகிதர்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெரியார் அவர்களை, ஈ.வெ.ரா என்றும், தோழர் ராமசாமி என்றும், இராமசாமி பெரியார் என்றும் பல்வேறு முறைகளில் அழைப்பதை மாற்றி ‘பெரியார்’ என்ற சிறப்புப் பெயரால் மட்டுமே இனி அழைக்க வேண்டும் என்ற தீர்மானமும் அந்த மாநாட்டில்தான் நிறைவேற்றப்பட்டது. அதோடு நிற்காமல் அடுத்த நாள் 14.11.38 அன்று இந்தி எதிர்ப்புப் போரில் பெண்கள் பங்குபெறத் தொடங்கினார்கள். அதனைத் தொடர்ந்து வாரம் ஒரு நாள் பெண்களே பங்கு பெறுகிற போராட்டம் நடைபெற்றது. அடுத்த செயல் திட்டமாக முதலமைச்சரின் இல்லத்திற்கு முன்னால் மறியல் போராட்டம் என்று அணி அணியாகத் தொடர்ந்து நடத்தினார்கள்.

இந்நிலையில் சிறைக்கொடுமையால் நடராசன், தாளமுத்து என்ற இரு தோழர்கள் 1939-இல் ஜனவரி 15, மார்ச் 12 ஆகிய நாட்களில் இறந்தனர். இந்நிகழ்வு தமிழர் நெஞ்சில் சினத்தை மேலும் கூட்டியது. போராட்டம் முதலமைச்சர் இல்லத்தின் முன்னர் என்பதை மாற்றி பள்ளிகள் முன்பும் பொது இடங்களிலும் நடக்கத் தொடங்கின. பள்ளி விடுமுறை நாட்களில் போராட்டம் இராது. பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட்டதும் போராட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதற்கிடையில் மே மாத இறுதியில் சிறையிலிருந்த பெரியார் விடுதலை செய்யப்பட்டார். ஜூன் மாத முதல் வாரத்தில் போராட்ட சர்வாதிகாரிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். எனினும் போராட்டங்கள் தொடர்ந்தன.

இந்நிலையில் 27.10.1939 அன்று சில அரசியல் காரணங்களுக்காக ராஜாஜி ஆட்சி கவிழ்ந்தது. சென்னை ஆளுநரே தம் சொந்த மேற்பார்வையில் ஆட்சி நடத்தினார். புதிய ஆட்சிக்குக் கால அவகாசம் கொடுப்பதற்காகப் பலரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தீவிரக் கிளர்ச்சியை மட்டும் கொஞ்ச காலம் நிறுத்தி வைக்குமாறு, பெரியார் வேண்டுகோள் விடுத்தார். அதுவரை 73 பெண்கள், 32 குழந்தைகள் உட்பட 1,271 பேர் சிறையில் இருந்தனர். 13.11.1939 அன்று சிறையிலிருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்தி எதிர்ப்புத் தொண்டர்கள் விடுதலை செய்யப்பட்டு, இந்தியைப் புகுத்துவதில்லை என்று உறுதியும் தரப்பட்டதைத் தவிர, ஏற்கெனவே இந்தி பாடமாக வைக்கப்பட்ட பள்ளியில் இருந்து அதை ஒழிக்க, புதிய ஆட்சி ஆவன செய்யவில்லை. இது கண்ட தமிழர் மீண்டும் முரசு கொட்டினர். 31.12.1939 அன்று காஞ்சியில் கூடினர். அப்பாசறைக் கூட்டத்திற்கு சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இந்தி எதிர்ப்பு வரலாற்றை அவர் விளக்கிப் பேசியதைத் தொடர்ந்து உரையாற்றிய பெரியார், “இந்தி ஒழிய வேண்டும்! இல்லையேல் தமிழர் சிறையில் மடிய வேண்டும்!” என்று முழங்கினார். இதற்கிடையில் பிப்ரவரி இறுதிவரை வடநாட்டில் பயணம் செய்யத் திட்டமிட்டுச் சென்ற பெரியார் திடீரென பயணத்தை முடித்துக் கொண்டு பிப்ரவரி 16-இல் சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

18.2.1940 சென்னையில் கூடிய கூட்டத்தில் ‘இந்தி ஒழிக’ என முழங்கினார். அடுத்த நாள் 19.2.40 சென்னை கோகுலே மன்றத்தில், “இதுவே இறுதி எச்சரிக்கை. இனிப்பேச்சில்லை. செயல்தான். இந்திக் கட்டாயத்தைத் தவிடுபொடி ஆக்குவதே இனி வேலை! கட்டாய இந்தியைத் தொலைப்பார்களா இல்லையா? என்ன சொல்லுகிறார்கள் இந்த ஆட்சியினர்?” என்று கேட்டார். 19.2.1940-இல் பெரியார் தனது இறுதி எச்சரிக்கையை விடுத்தார். 21.2.1940-இல் கட்டாய இந்தியை நிறுத்தி வைத்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.

“கட்டாய இந்தி முறை பொதுமக்களில் பெரும்பாலானோரிடையே எதிர்ப்பையும் அதிருப்தியையும் விளைவித்து இருக்கின்றது. முதல் மூன்று பாரங்களில் தேர்வு எதுவும் இல்லாமல் இந்தியைக் கட்டாயப் பாடமாக மட்டும் கற்றுக் கொடுப்பதால் மாணவர்களுக்கு அந்த மொழியில் போதிய அறிவோ திறமையோ ஏற்படாது என அரசினருக்குத் தோன்றுகிறது. ஆகவே அரசினர் இந்திக் கட்டாயத்தை உடனே எடுத்து விடுவதென முடிவு செய்து விட்டனர்” என்பதே அந்த அறிக்கை.

இந்த நேரத்தில் நாம் ஒரு செய்தியை நினைவூட்டிக் கொள்வது நல்லது என்று கருதுகிறோம். 1947-இல் பாகிஸ்தான் பிரிந்தபோது உருது மொழியை நாட்டின் பொது மொழியாக அறிவித்தது. ஆனால், மேற்கு பாகிஸ்தான் என்றும் இப்போதைய வங்கதேசம், கிழக்கு பாகிஸ்தான் என்றும் இருந்த காலகட்டத்தில் கிழக்கு பாகிஸ்தானின் மக்கள் தொகைதான் ஒப்பீட்டு அளவில் அதிகம். இவர்கள் வங்க மொழி பேசுபவர்கள். எனவே அரசியல் நிர்ணய சபையிலேயே திரேந்திரநாத் தத் என்பவர் வங்க மொழியை நாட்டு மொழியாக அறிவிக்க வேண்டும் அல்லது நாட்டு மொழிகளில் ஒன்று என்றாவது அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தும் ஏற்கப்படாததால், 1952-இல் கிழக்கு பாகிஸ்தானில் போராட்டங்கள் வெடித்தன. டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் தீவிரமாய் அந்தப் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். ஆனாலும், பாகிஸ்தான் அரசு அந்தப் போராட்டத்தை அடக்க நினைத்ததே தவிர வங்க மொழியையும் ஒரு தேசிய மொழியாய் அங்கீகரிக்க ஒப்பவில்லை. எனவே வீரியமாய் நடந்த அப்போராட்டங்களில் துப்பாக்கிச் சூடும் நடந்தது. அதில் ஐந்து மாணவர்கள் கொல்லப்படவும் நூற்றுக்கணக்கான பேர் காயம் ஏற்படவுமான சூழல் ஏற்பட்டது. அதற்குப் பின்னால் வங்கதேசம் தனி நாடாக உருவாகி வங்க மொழி நாட்டு மொழியாகவும் ஆகிவிட்டது.

வங்கதேசத்தைச் சேர்ந்த அறிஞர்கள் ஐ.நா. மன்றப் பொதுச்செயலாளர் கோபி அன்னானுக்கு இறந்து போன ஐந்து தோழர்களைக் கௌரவிக்கும் வகையில் அந்த நாளை உலகத் தாய்மொழி நாளாக அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தனர். அதை ஏற்றுக் கொண்டுதான் ஐ.நா பிப்ரவரி 21 உலக தாய்மொழி நாள் என 1999-இல் அறிவித்தது. ஆனாலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடந்த போராட்டங்கள், 1,300 பேருக்கு மேல் சிறைப்பட்டும் 2 தோழர்கள் சிறையில் இறந்தும் நடந்த தொடர் போராட்டம், தாய்மொழிக் காப்புக்காய் நடந்த அந்தப் போராட்டத்தை உலகத் தாய்மொழி நாளாக இணைத்து அறிவிக்கவில்லையே என்ற மனத்தாங்கல் தமிழர் ஒவ்வொருவர் மனதிலும் நிலவிக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் சுட்டிக்காட்டி ஆக வேண்டும்.

(21.01.2023 அன்று சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டில் வெளியிடப்பட்ட மாநாட்டு மலருக்காக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுதிய சிறப்புக் கட்டுரை)