கொட்டும் மழையில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில்.....

ஆ. ராசாவுக்கு பெண்கள் துணை நிற்போம்!

குற்றம் என்ன? குற்றம் என்ன?

ஆ. ராசா செய்த குற்றம் என்ன?

ஆதரிப்போம்; ஆதரிப்போம்;

ஆ. ராசாவின் கருத்துகளை ஆதரிப்போம்!

துணை நிற்போம்; துணை நிற்போம்;

ஆ. ராசாவுக்கு துணை நிற்போம்!

- என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

dvk meeting against manu“இந்து”ப் பெண்களை இழிவுபடுத்தும் மனு சாஸ்திரத்தை தடை செய் என்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னையில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியார் இறுதி உரை நிகழ்த்திய தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை முன்பு 26.09.2022 அன்று மாலை 3.30 மணியளவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் பெருமளவில் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வழி நடத்தினர். பேராசிரியர் சரசுவதி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். ‘உங்களை எல்லாம் சூத்திரர்களாக விட்டு விட்டு சாகப் போகிறேனே’ என்று பெரியார் தனது இறுதி உரையில் சமூகக் கவலையோடு பேசிய இடத்தில் ‘சூத்திரர்களாக்கும்’ மனு தர்ம நூலை சுக்குநூறாகக் கிழித்தெறிந்து பெரியாரியப் பெண்கள் ஆர்ப்பரித்தனர். வடசென்னை, தென்சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்று உணர்ச்சி முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டம் தொடங்கியவுடன் கடும் மழை கொட்டத் தொடங்கிவிட்டது. கொட்டும் மழையில் கழகப் பெண்கள் தோழர்கள் மனு சாஸ்திரத்துக்கு எதிராக முழக்கமிட்ட காட்சி, உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, தலைவர் வேழவேந்தன், மயிலைப் பகுதி பொறுப்பாளர் சுகுமார், வடசென்னை மாவட்டத்தலைவர் ஏசுகுமார் மற்றும் தட்சிணாமூர்த்தி, தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும் தமிழ்நாடு மாணவர் கழகம், ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத் தோழர்களும், மக்கள் அதிகாரம் அமைப்பின் பெண் தோழரும், பெரியாரிய அம்பேத்கரிய, மார்க்சிய சிந்தனையாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்ற பேராசிரியர் சரசுவதி, மனுசாஸ்திரம் பெண்களை இழிவுபடுத்தியதை விளக்கிப் பேசினார். கழக செயல்பாட்டாளர் இரண்யா மனுசாஸ்திரத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். கொட்டும் மழையிலும் பொது மக்கள் ஆங்காங்கே மழைக்கு ஒதுங்கி நின்று ஆர்ப்பாட்டத்தையும் முழக்கங்களையும் கேட்டனர். இந்துப் பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம சுலோகங்களடங்கிய துண்டறிக்கைகள் மக்களிடம் வழங்கப்பட்டன.

பெண்களையும், சூத்திரர்களையும் அவமதிக்கும் மனுசாஸ்திரம்

  • பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போது தகப்பனாரின் கட்டுப்பாட்டிலும் திருமணமான பிறகு கணவனின் கட்டுப்பாட்டிலும் கணவன் இறந்த பிறகு, பிள்ளைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டுமே தவிர, பெண்கள், தாங்கள் விரும்புகிறபடி (சுயமாக சிந்தித்து) ஒரு போதும் இருக்கக் கூடாது.” (மனு சாஸ்திரம் அத்தியாயம் 5, சுலோகம் 148.)
  • கணவன் துராசாரமுள்ளவனாக “(ஒழுக்கக்கேடுகள் உள்ளவனாக) இருந்தாலும் அன்னிய ஸ்திரீலோலனாக (வேறு பெண்களோடு உறவு வைத்துக் கொள்ள துடிப்பவன்) இருந்தாலும், பதிவிரதைகளான பெண் என்பவள், அந்தக் கணவனை தெய்வத்தைப்போல் வணங்க வேண்டும்.” (மனு சாஸ்திரம், அத்.5, சுலோகம் 154)
  • பெண்கள் துரோகிகள் ; பெண்களைக் கொல்லுவது பாவமில்லை. படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார். (அத்தியாயம் 9 ; ஸ்லோகம் 17)
  • பெண்களையும், பிராமணர் அல்லாதவரையும் கொல்லுவது பாவமில்லை. (அத்தியாயம் 11; ஸ்லோகம் 65)
  • சூத்திரர்கள் அனைவரும் பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள்.

               சூத்திரர் என்போர் ஏழு வகைப்படுவர். 1. போரில் புறங்காட்டி ஓடியவன், 2. போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன், 3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியம் செய்பவன், 4. விபச்சாரி மகன், 5. விலைக்கு வாங்கப்பட்டவன், 6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன், 7. தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்பவன். (அத்தியாயம் 8, ஸ்லோகம் 415)

  • ஊர் - சேரிப் பிரிவினை

               இவர்கள் (தாழ்த்தப்பட்டோர்) அனைவரும் பட்டணத்திற்கும், ஊருக்கும் வெளியில் மரத்தடி, தோப்பு, சுடுகாட்டிற்கு அருகிலுள்ள இடம், மலைப் பூந்தோட்டம் இவைகளில், அனைவருக்கும் இவர்கள் இன்ன தொழிலாளிகள் என்று தெரியும்படி தன் தன் தொழிலைச் செய்து கொண்டு வாழ செய்ய வேண்டியது. (அத்தியாயம் 10; ஸ்லோகம் 50)

  • பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் படிக்கக் கூடாது

               சூத்திரன் மனப்பாடம் பண்ணும் நோக்கத்துடன் வேதம் படிப்பதைக் கேட்டால், அவனது காதுகளில் காய்ச்சிய ஈயத்தையும், அரக்கையும் ஊற்ற வேண்டும். அவன் வேதம் ஓதினால் ஓதும் நாக்கு துண்டிக்கப்பட வேண்டும். வேதத்தில் முழுத் தேர்ச்சி அடைந்தால் அவனது உடம்பு துண்டு துண்டாக வெட்டிச் சிதைக்கப்பட வேண்டும். (அத்தியாயம் 12; ஸ்லோகம் 4)

- சென்னை மாவட்டக் கழகத் துண்டறிக்கை

Pin It