ஈழத் தமிழர்களுக்காக - பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் கூட்டங்களுக்கு காவல்துறை விதித்த தடை செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ‘பொதுக் கூட்டம் நடத்தும் உரிமையை மறுக்கக் கூடாது என்று கூறிய உயர்நீதிமன்றம், பெரியார் திராவிடர் கழகம் தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல என்றும் தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளது.
அண்மைக்காலமாக - தமிழகத்திலும், புதுவையிலும் ஈழத் தமிழர்களின் படுகொலைகளைக் கண்டித்தும், இந்தியா இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும், பெரியார் திராவிடர் கழகம், மக்களிடையே பொதுக் கூட்டங்கள் வழியாக எடுத்துச் செல்ல முயன்றதற்கு - தமிழக, புதுவை காவல் துறை தடைபோட்டு வந்தது.
குறிப்பாக தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி, காங்கிரசார் பார்ப்பன மிரட்டலுக்கு அஞ்சி, கருத்துரிமையை பறிக்கும் சட்ட விரோத உத்தரவுகளை பிறப்பித்து வந்தது. இந்த நிலையில் புதுவையில் 2007 டிசம்பர் 15 ஆம் தேதி - புதுவை பெரியார் திராவிடர் கழகம் ஈழத் தமிழர்களுக்காக அரியாங்குப்பத்தில் நடக்க இருந்த பொதுக் கூட்டத்துக்கு தடைவிதித்ததைத் தொடர்ந்து கழக சார்பில் - புதுவை மாநில பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கழக வழக்கறிஞர் சு.குமாரதேவன், ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி பி.ஜோதிமணி 27.2.2008 அன்று தீர்ப்பை வழங்கினார்.
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் உரிமை காவல்துறைக்கு உண்டு. அதற்கான கட்டுப்பாடுகளை காவல்துறை விதிக்கலாம். ஆனால், கூட்டம் நடத்தும் உரிமையையே முழுமையாக மறுத்துவிட முடியாது. கூட்டத்தின் நோக்கம் தெளிவாக கூறப்பட்டுள்ள பிறகும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுவதாக கருதிக் கொள்ளக் கூடாது என்று நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.
புதுவை அரசு வழக்கறிஞர் - சட்டம், ஒழுங்கு நோக்கத்தில் பொதுக் கூட்டங்களை நடத்த அனுமதிப்பதா, வேண்டாமா என்பதை அரசு நிர்வாகமே முடிவு செய்யலாம் என்று காஞ்சி ஜெயேந்திரன் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எடுத்துக் காட்டினார். (ஜெயேந்திரன் கைது செய்யப்பட்டபோது, மன்னார்குடியில் கழகக் கூட்டம் நடத்த அனுமதி மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு)
இதற்கு பதிலாக - பழ. நெடுமாறனுக்கும் - தமிழக அரசுக்குமிடையே நடந்த வழக்கில் நீதிபதி ஆர். ஜெயசிம்மபாபு, வழங்கிய தீர்ப்பை வழக்கறிஞர் குமாரதேவன் எடுத்துக் காட்டினார். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் கட்டுப்பாடுகளைத் திணிப்பதற்கு முறையான விதிகள் ஏதுமில்லை. இதைப் பயன்படுத்தி நியாயமற்ற கட்டுப்பாடுகளைத் திணிப்பது தன்னிச்சையான முடிவாகி விடும்.
எனவே ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்பு வழங்கியுள்ள கூட்டம் நடத்தும் உரிமையை பாதிக்காத அளவுக்கு அரசு, கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று, அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதே போன்ற ஒரு கூட்டம் 10.10.2006 இல் வேலூர் சத்துவாச்சேரியில் பெரியார் திராவிடர் கழகம் நடத்த முயன்றபோது, காவல்துறை தடைவிதித்ததையும், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தடையை நீக்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததையும், வழக்கறிஞர் சு. குமாரதேவன் எடுத்துக் காட்டினார்.
வழக்கறிஞரின் வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி, “பெரியார் திராவிடர் கழகம் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக கூட்டம் நடத்தவில்லை. பெரியார் திராவிடர் கழகமும் தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல. காவல்துறை நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம். அதற்காக - கூட்டம் நடத்தும் உரிமைகளையே பறித்து விடக் கூடாது; கூட்டம் நடத்தும் உரிமையையே பறிப்பது; அந்தக் கட்டுப்பாட்டுக்குரிய அர்த்தமாகிவிடாது. எனவே, காவல்துறையின் தடை ஆணையை இந்த நீதிமன்றம் ரத்து செய்கிறது. மனுதாரர், கூட்டம் நடத்த மீண்டும் விண்ணப்பம் தந்த, 10 நாட்களில் காவல்துறை, அனுமதி வழங்க வேண்டும்” என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீர்ப்பின் மூலம் தமிழகத்திலும், புதுவையிலும், காவல்துறையால் முடக்கப்பட்டிருந்த கருத்துரிமை மீதான தடை நீக்கப்படுகிறது. இத்தீர்ப்பின் அடிப்படையில் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு கூட்டங்களுக்கு கழகத் தோழர்கள், காவல்துறைக்கு விண்ணப்பிக்கலாம்.