ஜாதி வெறி படுகொலை - தாக்குதலுக்குள்ளான கச்சநத்தம் கிராமத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் குழு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்துப் பேசியது. அது குறித்து கழக வெளியீட்டு செயலாளர் இராம.இளங்கோவன் தரும் செய்தி:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் மானாமதுரை, திருப்பாச்சேத்தி அருகே உள்ள ‘கச்ச நத்தம்” என்ற ஊரில் நடைபெற்ற படுகொலைகளை பார்வையிடவும், பாதிக்கப்பட்ட தலித் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிடவும் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் 06.06.2018 புதன் கிழமை காலை 10 மணிக்கு கழகத்தின் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வைரவேல், பள்ளிபாளையம் முத்துப்பாண்டி, கோபி ஒன்றிய செயலாளர் அருளானந்தம், பழனி வட்டம் பொறுப்பாளர் மருதமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழு மதுரை சென்றடைந்தது. அங்கு மதுரை மாவட்ட பொறுப்பாளர் காமாட்சி பாண்டியன், காளையார்கோவில் பொறுப்பாளர் முத்துக்குமார், காரைக்குடி பெரியார் முத்து, வினோத் ராஜா, சிவா, பூர்ணிமா, காயத்திரி ஆகியோர் தயாராக இருந்தனர். அவர்களையும் இணைத்துக் கொண்டு, மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கச்சநத்தம் பகுதியின் காயப்பட்ட மக்களைச் சந்திதோம்.

katchanatham dalit

மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பகுதியில் சிகிச்சை பெற்று வந்த மலைச்சாமி, தனசேகரன், சுகுமார் ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறி உங்களுக்கு எங்களது திராவிடர் விடுதலைக் கழகம் என்றும் ஆதரவாக இருக்கும் தைரியமாக இருங்கள் என்றோம்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சம்பவம் நடந்த ‘கச்சநத்தம்’ பகுதிக்கு சென்றடைந்தோம். பாதிக்கப்பட்ட மக்களின் இல்லங்களை நேரில் பார்வையிட்ட போது நெஞ்சு பதறியது. தெரு வெங்கும் இரத்தம் பாய்ந்த சுவடுகள், வீடுகளுக்குள் மனித இரத்தத் திட்டுகள், வீட்டில் இருந்த தொலைக்காட்சி பெட்டிகளை வீச்சரிவாளால் வெட்டிய காட்சிகள், பொருள்கள் அனைத்தும் சூரையாடப்பட்டும், அடித்து நொறுக்கப்பட்டும், இரைந்தும் கிடந்தன. பீரோவில் இருந்த நகை பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

அப்போது அங்கிருந்த பெரியவர் தேவேந்திரன் அவர்களிடத்தில் பேசிய போது, நாங்கள் 40 குடும்பங்கள் மட்டும் இப்பகுதியில் உள்ளோம். நாங்கள் பள்ளர் வகுப்பைச் சாந்தவர்கள். இப் பகுதியில் எங்களைச் சுற்றிலும் 2000 குடும்பங்கள் அகமுடையார் என்ற ஆதிக்க ஜாதியினர் உள்ளனர். இவர்களின் ஆதிக்க ஜாதிக் கொடுமைகளுக்கு மத்தியில் தான் காலம்காலமாக சகிப்புத் தன்மை யோடு வாழ்ந்து வருகின்றோம்.

நாங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பு என்பதாலேயே இவர்கள் எங்களை அடக்கி ஆள்வதிலேயே குறியாக உள்ளனர். எங்களுக்கு சொந்தமாக விவசாய நிலங்கள் உள்ளன. பெரும்பாலும் விவசாயம் செய்வதே எங்களின் தொழில். எங்கள் பிள்ளைகள் ஊரில் பாதிக்கும் மேலாக படித்து நல்ல வேலைகளில் உள்ளனர்.

ஆனால் எங்கள் மக்களைப் படுகொலை செய்த நபர்கள் கஞ்சா, சாராயம் விற்பதும், களவு செய்வதுமே இவர்களின் தொழில். இந்த பிரச்சனைக்குக் காரணமே, இவர்கள் கஞ்சா விற்றுக் கொண்டு அடிக்கடி எங்கள் பிள்ளைகளுக்கு தொல்லை கொடுத்து வந்ததுதான். ஒரு கட்டத்தில் நாங்கள் காவல்துறையிடம் புகார் செய்தோம். ‘காவல் துறையில் புகார் செய்யும் அளவுக்கு வந்து விட்டீர்களா? உங்களைக் கொல்லாமல் விட மாட்டோம்’ என்று கூறி வந்தனர். வழக்கம் போல காவல்துறை கண்துடைப்புக்காக விசாரித்து விட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் எங்கள் ஊரில் பண்டிகை நடந்தது. அப்போது நடைபெற்ற களரி விழாவின் போதும் எங்களிடம் தகராறு செய்தனர். பண்டிகைக்காக வெளியூரில் வேலையில் இருந்தவர் களும், படித்துக் கொண்டிருந்த இளைஞர்களும் ஊருக்கு வந்திருந்தனர். பண்டிகை முடிந்து அடுத்த நாள் இரவு அனைவரும் நாங்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தோம். இரவு 9.30 மணி இருக்கும்போது, 25 நபர்கள் அடங்கிய ‘அகமுடையார்’ வகுப்பு இளைஞர்கள் மின் இணைப்பு அனைத்தையும் துண்டித்து விட்டு வீடுகளுக்குள் புகுந்து தாக்கி னார்கள். எதிர்பட்ட அனைவரையும் வீச்சரிவாளால் வெட்டினர். ஆறுமுகம் என்பவரை அவருடைய வீட்டுக்குள் இருந்து வெளியே இழுத்து வந்து தெருவில் வைத்து கத்தியால் வெட்டினர். அவர் அந்த இடத்திலேயே இறந்தார். அதேபோன்று சண்முக நாதனையும் படுகொலை செய்தனர்.

அதே தெருவில் உள்ள சுகுமார் என்ற இளைஞர். இவர் எம்.எஸ்.சி. இயற்பியல் பட்டதாரி. அவரையும் வீட்டுக்குள் புகுந்து வெட்டினர். சுகுமாருக்கு 48 இடங்களில் வெட்டுகாயங்கள் உள்ளன.

வீட்டுக்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்தவர் மலைச்சாமி, இவர் லாரி டிரைவர். அவரை படுக்கையிலேயே வைத்து சரமாரியாக வெட்டினார்கள். கைவிரல்கள் கை, கால் அனைத்துமே பலத்த வெட்டுபட்டன. அதே போன்று தனசேகர் அவர்களையும், வெட்டினர். அவருக்கும் கை, கால் அனைத்துமே வெட்டுபட்டன.

இந்த சம்பவத்தில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகரன் ஆகியோர் இறந்துள்ளனர். மலைச் சாமி, தனசேகரன், சுகுமார் ஆகியோர் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

நாங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் என்பதாலேயே ‘ஆதிக்க ஜாதி’ என்ற திமிருடன் எங்களிடத்தில் நடந்து கொள்கின்றனர். எங்கள் இளைஞர்கள் நன்கு படிப்பதும், வேலைக்கு செல்வதும் இவர்களுக்கு மிகுந்த எரிச்சல், எங்களுக்கு விளைநிலங்கள் சொந்தமாக இருப்பதும் இவர்களுக்கு பொறுக்கவில்லை.

இவர்களில் பெரும்பாலும் கஞ்சா விற்பதும், சாராயம் விற்பதும் தான் தொழில். இவர்களுக்கு அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்பதே, இந்த ஆதிக்க ஜாதி மனப்பான்மையே இந்த படுகொலைக்கு முக்கிய காரணம் என்றார்.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் 10 நாட்களாக இங்கு தங்கியுள்ளனர். இவர்கள் முன்பே எங்கள் புகாருக்கு நடவடிக்கையை சரியாக எடுத்திருந்தால் இந்த படுகொலை நடந்திருக்காது என்று காவல்துறை மீது தனக்கு இருந்த அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

தற்போது காவல்துறை இது தொடர்பாக ஆவாரங்காட்டைச் சார்ந்த 15 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 5 நபர்களை கைது செய் துள்ளனர். மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நாங்கள் ஆறுதல் கூறியதுடன், உங்களுக்கு தேவையான சட்ட உதவிகள் அனைத்தையும் எங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக செய்கின்றோம் நீங்கள் தைரியமாக இருங்கள் என்று கூறியதுடன் நமது கழக வழக்கறிஞர் அருண் அவர்களை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசச் செய்தோம். அத்துடன் அவருடைய தொலைபேசி எண்ணையும் அவர்களிடத்தில் வழங்கினோம்.

கச்சநத்தம் பகுதியைச் சார்ந்த இந்த மக்கள், இந்த 40 குடும்பங்களும் எந்த இயக்கத்திலோ, அரசியல் கட்சியிலோ உறுப்பினர்களாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜாதிவெறிக்கு காரணமான இந்துமதம், இந்துத்துவ ஜாதிய கட்டமைப்பு, இந்த கட்டமைப்பை உருவாக்கி அதனை பாதுகாக்கும் பாசிசவெறி பிடித்த பார்ப்பன கும்பல் இவைகளை எதிர்த்து முற்றிலுமாக அழிக்காமல், இந்தப் படுகொலைகளை, அப்பாவி மக்களின் உயிர்களை, உடைமைகளை நம்மால் பாதுகாக்க முடியாது. ஜாதியின் ஆணி வேரை எதிர்க்கும் பெரியார் போராட்ட முறையே இதற்கு சரியான மருந்து.

நமது கொள்கைகளை வீரியமாக எடுத்துச் செல்வதிலும் அதனை மக்களிடையே பரப்புவதிலும் - அவர்களின் மனதில் பெரியாரின் ஜாதி ஒழிப்பு தத்துவத்தை நிலைநிறுத்துவதிலும் இன்னும் சற்று கூடுதலான கவனமும், அக்கறையும் நாம் செலுத்த வேண்டும். நம் அணுகுமுறைகளில் அவசியம் மாற்றம் தேவைப்படுவதால் அதுகுறித்து விரிவாக விவாதித்து அடுத்த தலைமுறைகளில், ஆதிக்கம் இல்லாத, அடிமைத்தனம் இல்லாத சமூகத்தை நிலை நிறுத்திடவும், ஜாதியத்தின் ஆணிவேரைப் பிடுங்கி எறியவும், உரிமை வேட்கையைத் தூண்டவும் நாம் புதிய உத்திகளில் பயணிக்க வேண்டி உள்ளது.

- இராம.இளங்கோவன் (வெளியீட்டுச் செயலாளர்), திராவிடர் விடுதலைக் கழகம்  

Pin It