‘ஆன்மீகம்' என்ற சொல் சனாதனவாதிகளால், மதவாதிகளால், மக்களை கூறுபோடுகின்ற ஜாதியவாதிகளால் பயன்படுத்தப் படுகின்ற ஒரு சொல்லாக மாறிப்போய் இருக்கிறது. உண்மையில் ஆன்மீகம் என்றால் என்ன என்பது பற்றி திருவண்ணாமலையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு தெளிவான விளக்கத்தை தந்திருக்கிறார்.

“ஆன்மீகம் என்ற சொல்லை இன்றைக்கு அரசியலுக்குப் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். ஜாதியைக் காட்டி, மதத்தைக் காட்டி மக்களைப் பிளவு படுத்துவதற்கு ஆன்மீகத்தை பயன்படுத்துகிறார்கள். நாங்கள் ஆன்மீகத்துக்கு எதிரிகள் அல்ல, ஆனால் இப்படி மக்களை பிளவுபடுத்த ஆன்மீகத்தை பயன்படுத்துகிறவர்களுக்கு நாங்கள் எதிரிகள் என்று அவர் கூறியிருப்பதோடு ஆன்மீகம் என்ற சொல்லுக்கு அறநெறி என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார்.

முதலில் ஆன்மீகம் என்பது தனிமனிதர் சார்ந்ததா? சமூகம் சார்ந்ததா? என்ற கேள்விக்கு விடைகாண வேண்டும். உறுதியாக தனி மனிதன் சார்ந்தது தான். ஒரு மனிதர் (ஆணோ அல்லது பெண்ணோ) தன்னுடைய அறநெறி வாழ்க்கையை தனக்குள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்காக தன்னை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த இலக்கில் உயர்வான பண்புகளை வளர்த்துக் கொள்வதை நோக்கி பயணிப்பது தான் மதவாதிகள் மொழியில் ஆன்மீகம்; நம்முடைய மொழியில் அறநெறி. பெரியார் கூறிய அறநெறி என்ன? மனிதராகப் பிறந்து விட்டால் மானுடத்துக்கு தொண்டு செய்வதே உயர்ந்த மானுடத்தின் பெருமைக்குரிய அடையாளம். இது பெரியாரின் ‘ஆன்மீகம்’; அறநெறி. அதாவது, பகுத்தறிவு அறநெறி; உண்மையில் ஆன்மீகம் மதவாதிகளுக்கு மட்டுமே உரித்தானது அல்ல; அப்படி மாற்றிக் கொண்டு விட்டார்கள்.

ஆனால், பக்தியின் பெயரால் ஆன்மீகம் என்ன செய்து கொண்டிருக் கிறது ? வர்ணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறது. புறத் தோற்றத்தில் அடையாளங்களை வைத்திருக்கிறது. காவி உடை உடுத்தியிருக்க வேண்டும், மத சின்னங்களை அணிய வேண்டும் இவைகள் ஆன்மீக அடையாளம் என்று கூறுகிறது. மற்றொரு பக்கம் கார்ப்பரேட் ஆன்மீகம் வணிகம் நடத்திக் கொண்டிருக்கிறது. ராம்தேவின் பதஞ்சலி வியாபாரம், பன்னாட்டு சந்தையில் வியாபாரம், ஸ்ரீ ரவிசங்கரின் தியான பயிற்சி அந்த தியான பயிற்சிக்கு உலகம் முழுவதும் பயிற்சி நிலையங்கள் என்று வியாபாரம் நடத்துகிறது. வெளிநாடுகளில் தீவு வாங்கி வைத்துக் கொண்டு தனி ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிற நித்யானந்தா போன்ற சாமியார்கள் ஆன்மீகவாதிகளாகத் தங்களைக் கூறிக் கொண்டிருக் கிறார்கள்.

சனாதனவாதிகள் இதை எதிர்ப்பதில்லை; வாய்மூடிக் கிடக்கிறார்கள். எந்தப் போர்வையில் எத்தகைய மோசடிகளுடன் மதம் வந்தாலும் அது, பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநாட்டவே பயன்படும் என்று உறுதியாக நம்புகிறார்கள்.

பக்தர்கள் அதிகமாக வரும் கோவில்களின் நகரங்களைக்கூட ஆன்மீக நகரம் என்று பெயர் சூட்டக் கிளம்பி விட்டார்கள்.

மட்டுமின்றி, வைதீக மதம் ஆன்மீகத்தை ‘ஆன்மா’வுடன் தொடர்பு படுத்துகிறது. புற உலக வாழ்க்கை மெய்மை அல்ல; மறு உலக வாழ்க்கையே ‘நிஜம்’ என்கிறது. மறு உலகத்தில் மோட்சம் அடைய இவ்வுலகில் சனாதன தர்மங்களின் கட்டளைகளை ஏற்று வாழ வேண்டும் என்கிறது. கீதையும் இதைத்தான் போதிக்கிறது.

 புத்தர் இதில் சற்று மாறுபட்டார். உடல் இறக்கிறது என்றாலும், உடலின் மூலக் கூறுகள் விண்ணுலகில் மூலக் கூறுகளுடன் இணைந்து விடுகிறது என்பதே புத்தரின் கருத்து என்று ‘புத்தமும் தம்மமும்’ நூலில் அம்பேத்கர் விளக்குகிறார். ஆனாலும் மதத்தின் மய்யப் புள்ளி, மனிதனுக்கும் கடவுளுக்குமான உறவாக இருக்கக் கூடாது. அது மனிதருக்கும் மனிதருக்குமான உறவு பற்றியதாகவே இருக்க வேண்டும் என்ற ஆழமான சிந்தனையை முன் வைத்தார் புத்தர். (ஆதாரம்: புத்தமும் தம்மமும்) இது புத்தரின் ‘ஆன்மீகம்’.

இப்போது ஆன்மீகத்தை கட்சி அரசியலுக்கு தேர்தல் அரசியலுக்கும் இழுத்துக் கொண்டு விட்டார்கள்.

ஆன்மீகத்துக்கும் அரசியல் கட்சிக்கும் தொடர்புபடுத்துவதே அபத்தம். இந்துத்துவ அரசியலுக்கும் பிற மதங்களை வெறுப்பதற்கும், பகுத்தறிவாளர்களை எதிர்ப்பதற்கும் தான் ‘ஆன்மீக அரசியல்’ பயன்படுத்தப்படுகிறது. பா.ஜ.க. இப்போது நடத்துவதுதான் ஆன்மீக அரசியலா? என்று கேட்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கட்சி மாறல் தடைச் சட்டத்தைப் புதைக்குழியில் புதைத்துவிட்டு, கட்சி மாறச் செய்து ஆட்சியை அமைப்பதும், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதும், சமூக ஒழுக்கக் கேடர்களை கட்சிகளில் பொறுப்புகளில் அமர்த்துவதும் தான் ஆன்மீக அரசியலா?

இப்போது ஆன்மீகம் என்பது ஆரியம் விரிக்கும் சூழ்ச்சி வலை. மதம் மற்றும் ஜாதிப் பிளவுகளைக் கூர்மைப்படுத்த நடத்தும் ‘சாணக்கிய’ அரசியல்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It