சேரன் மாதேவி குருகுலப் பிரச்சினை உட்பட காங்கிரசில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய பெரியாருக்கு ஆதரவுக் கரமாக திகழ்ந்த - காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வரதராஜுலு நாயுடு, பிறகு ‘இந்து மகாசபையில்’ சேர்ந்து விட்டார் 1940 இல் திருவாரூரில் நீதிக்கட்சி மாநாட்டில் பெரியார், ‘இந்து மதம்’, ‘திராவிடர்கள்’ குறித்து நிகழ்த்திய உரைக்கு வரதராஜுலு நாயுடு வெளியிட்ட மறுப்புகளுக்கு பதிலளித்து, பெரியார் வெளியிட்ட அறிக்கை. பெரியார் நினைவு நாள் சிந்தனையாக வெளியிடுகிறோம்.

திருவாரூர் மகாநாட்டைப் பற்றியும் என்னைப் பற்றியும் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் பேரால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையை பல பத்திரிகைகளில் பார்க்க நேர்ந்தது. அதை முழு விரிவாக பொது மக்களும் அநேகமாய் பார்த்திருக்கக் கூடும். அதன் முக்கியமான சாரம் எனக்குப்பட்ட வரையில்,

1. இந்தியாவையும், இந்து, பார்ப்பனர்கள் ஆகியவர்களையும் நான் தாக்கி பேசுவதாயும் அதற்காக ஹிந்துக்கள் என்று சொல்லப்படும் ஒரு கூட்டம் என்னை எதிர்க்க வேண்டுமென்றும் பிரிட்டிஷ் சர்க்கார் என் மீது நடவடிக்கை எடுத்து என்னை அடக்க வேண்டுமென்றும் இக்காரியங்கள் செய்யப்பட அவர் தன்னாலான எல்லாக் காரியங்களையும் செய்ய முனைந்து நிற்பதாயும் கூறுவது.

2. திராவிட மக்களுக்கு ஆகவும் திராவிட நாட்டுக்கு ஆகவும் நான் செய்து வரும் தொண்டிற்கு எப்படியாவது கேடு ஏற்படும் படியாகச் செய்து திராவிட நாடும் திராவிட மக்களும் என்றென்றும் ஆரிய நாட்டிற்கும் ஆரியர்களுக்கும் அடிமையாகவே இருக்கும்படி செய்ய வேண்டுமென்ற கருத்தாய் இருக்க வேண்டுமென்பது.

இவைகளுக்கு நான் சமாதானம் சொல்ல கடமைப்பட்டவனாய் இருக்கிறேன். ஏனெனில் திராவிட மக்கள் நலனுக்கு ஏற்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்திற்குத் தலைவனாயிருப்பதாலும் விவாத விஷயங்கள் அந்த ஸ்தாபனத்தின் மாநாட்டு விஷயங்களைப் பற்றியிருப்பதாலும் தோழர் நாயுடுவின் அறிக்கையால் பொது மக்களுக்குத் தப்பப்பிராயம் ஏற்படாமல் இருகக்ச் செய்ய வேண்டியவனாய் இருக்கிறேன்.

டாக்டர் நாயுடு காட்டும் காரணங்கள்

டாக்டர் நாயுடு அவர்கள் மேற்கண்ட சாரம் பொருந்திய தனது அறிக்கைக்குக் காரணமாக என் திருவாரூர் மாநாட்டுத் தலைமைச் சொற்பொழிவில் சில குறிப்புகளும் கருத்துகளும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

அவையாவன:-

1. ஆதி திராவிடர்களுக்குத் தனி தொகுதி வேண்டும்.
2. பார்ப்பனரல்லாதாருக்குத் தனித் தொகுதி வேண்டும்.
3. முஸ்லீம்களும், பார்ப்பனரல்லாதாரும் ஒரே ஜாதி (திராவிடர்கள்) அவர்கள் சமயத்துறையிலும் அதிக வித்தியாசமில்லை.
4. திராவிட நாட்டுக் கிறிஸ்தவர்களும் திராவிடர்களே. ஆதலால் இந்நால்வரும் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்பதாக நான் பேசியிருப்பவைகளை எடுத்துக் காட்டுகிறார்.

மற்றும் அவர் அடுத்தாற்போல் காட்டும் காரணங்கள்:

அ. திராவிடர்கள் இந்துக்களல்ல.
ஆ. இந்து மதம் ஆரியர் மதம்.
இ. திராவிடர் - ஆதி திராவிடர், திராவிட நாட்டிலுள்ள முஸ்லீம்கள், கிறி°தவர்கள் ஆகிய 4 கூட்டத்தினரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந் நால்வரும் ஒற்றுமையாய் இருந்து ஆரியத்தை எதிர்த்து நிற்க வேண்டும்.
ஈ. இந்திய தேசியம் என்பது திராவிடர்களுக்குக் கேடானது.
உ. திராவிட நாட்டில் இந்து மகாசபைக்கு வேலை இல்லை என்கின்றவைகளான இவைகள் எனது தலைமை உரையில் காணப்படுவது மற்றொரு காரணமாகும்.

ஆம்; சென்ற வருஷத்திய சென்னை மாநாட்டு தலைமை உரையிலும் இவ்வருஷத்திய மாநாட்டு தலைமை உரையிலும் இக்கருத்து கொண்ட வாசகங்கள் இருக்கின்றன என்பதை நான் ஒப்புக் கொள்ளுகின்றேன்.

இதற்கு பதினாயிரக்கணக்கான மக்களைக் கொண்ட அம்மாநாட்டில் ஏகமனதான பல தீர்மானங்களும் செய்யப் பட்டிருக்கின்றன. அவையாவன:-

வரப்போகும் சென்சசில் திராவிடர்கள் தங்களை இந்தியர்கள் என்றோ இந்துக்கள் என்றோ சொல்லக் கூடாது. திராவிடர் என்றே சொல்ல வேண்டும். மதம் என்ன என்று கேட்டால் திராவிட மதம் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இந்து மதம் என்று சொல்லக் கூடாது. - என்பதாக ஒரு தீர்மானம் ஏகமனதாய் நிறைவேறி இருக்கிறது.

மற்றும் - “இப்போது உள்ள இந்துலா என்னும் உரிமை சட்டமானது திராவிடர்களுக்கு ஏற்றதல்ல. அதை திராவிடர்களுக்குப் பயன்படுத்தக்கூடாது. திராவிட சமுதாயத்திற்கு ஏற்றதான திராவிட உரிமைச் (திராவிட லா) சட்டம் என்பதாக ஒன்று திருத்தி அமைக்கப்பட வேண்டும்” என்றும், “திராவிடர்களுக்கு மரியாதையாக ஸ்ரீ என்கின்ற ஆரிய வார்த்தையை ஏற்படுத்தி இருப்பதை எடுத்துவிட்டு திரு என்று போட வேண்டும் என்று சர்க்கார் உத்திரவு பிறப்பிக்கப்பட வேண்டும்” என்றும், “சமய ஒற்றுமை விஷயத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமை என்கின்ற வார்த்தை நம் நாட்டுக்கு பொருத்தமற்றதாதலால் இனி மேல் திராவிடர் முஸ்லீம் ஒற்றுமை என்கின்ற பெயராலேயே சொல்லப்பட வேண்டும்” என்றும், “திராவிட மக்களுக்குள் இனி இந்து மகாசபை பிரசாரத்திற்கு இடம் கொடுக்காமலும் செவி சாய்க்காமலும் இருக்க வேண்டும்” என்றும், “ஆதி திராவிடர்களுக்கு ஆரிய மதப் பெயரான ஹரிஜனம் என்கின்ற பெயர் கூடாது, ஆதி திராவிடர்கள் என்றே அழைக்கப்பட வேண்டும்” என்றும், “ஆரிய சூழ்ச்சியாலும், ஆரிய சமய ஆதாரங்களாலும் திராவிட சமூகத்திடையே நுழைக்கப்பட்டுள்ள சமுதாய உயர்வு தாழ்வு வேற்றுமைகள் வேரோடு களைத்தெறியப்பட வேண்டும்.” “திராவிடர்களுக்குள்ளாகவே இன்று காணப்படும் உயர்வு தாழ்வுகளும் நீக்கப்பட வேண்டும்.”

“இவைகள் காரியத்தில் நடைபெறுவதற்கு அவசியமான வழிகளை வகுத்து கையாளுவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.” என்றும் ஆரிய திராவிட தேச சமய சமூக கலப்பினால் ஏற்பட்ட துன்பங்கள் ஒழிவதற்கு ஆக “திராவிடர்களின் கலை, நாகரிகம், பொருளாதாரம், அரசியல் ஆகியவைகள் காப்பாற்றப்படவும், முன்னேற்றமடைவதற்கும் ஆக திராவிட நாடாகிய சென்னை மாகாணத்தை நேரே பிரிட்டிஷ் சென்னை சம்மந்தம் இருக்கும்படியான ஒரு தனி நிர்வாக நாடாக பிரிக்கப்பட வேண்டும்” - என்றும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேறி இருக்கின்றன.

ஆதலால் எனது கொள்கையும் எனது கட்சியின் கொள்கையும் டாக்டர் வரதராஜலு வாதங்கள் செய்தார்கள். இதற்கு காந்தியார் ஒவ்வொரு இடத்திற்கு ஒரு மாதிரி பதில் சொன்னார். திருப்பூரில் வருணாச்சிரம தர்மம் தான் தனது இந்துமத கொள்கையென்றும், வருணப்படிதான் அவனவன் வேலை செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார். அப்போது ஒருவர், “அப்படியானால் நான் எந்தக் காலத்திற்குத்தான் இந்த சூத்திர இழிவிலிருந்து நீங்குவது” என்று கேட்டு விட்டார். அதற்கு காந்தியார், “ஏழு தலைமுறை பிராமண சம்பந்தமாகவே பிறந்தால் பிராமணனாகலாம்” என்று பதில் சொன்னார். அதனால் கோயமுத்தூரிலும் சிறிது கிளர்ச்சி ஏற்பட்டது.

அங்கு காந்தியார், சர்.ஆர்.கே. ஷண்முகம் வீட்டில் இறங்கி இருந்தார். இந்த கிளர்ச்சியைப் பற்றி தோழர்கள் காந்தியாரும், சி. ராஜ கோபாலாச்சாரியாரும் பேசும்போது ஆச்சாரியார், “சண்முகம் செட்டியாரும் அந்தக் கொள்கைக்காரர்தான்” (இந்து மத விரோதிதான்) என்று சொன்னார். அதற்குக் காந்தியார் “என்ன சண்முகம் நீங்களும் அப்படியா?” என்று கேட்டார். அதற்கு ஆர்.கே. சண்முகம், ”ஆம்” என்றார்.

அப்படியானால் உங்களுக்கு யார் குரு என்றார். அதற்கு உடனே அவர், “ஈ.வெ.ராமசாமி தான்” என்றார். காந்தியாருக்கு தூக்கிப் போட்டதுபோல் ஆகி, “நம்ம ராமசாமி நேற்றல்்ல அவரை எனக்கு தெரிந்த காலம் முதலே அதாவது 1915 ஆம் வருஷம் முதலே அவர் லோகாயுதவாதி” (மெட்டீரியலிஸ்ட்) என்று சொன்னார். “அப்படியானால் அவரைக் கண்டு இது விஷயமாக பேச வேண்டும்” என்றார் காந்தியார். தோழர் எஸ். ராமநாதன் அவர்கள் காந்தியார் கூப்பிடுவதாக சொல்லி என்னை பெங்களூருக்கு அழைத்துப்போய் இதைப் பற்றி காந்தியாருடன் பேசவும் வைத்தார்.

மற்றொரு சம்பவம் சுமார் 20 வருஷத்திற்கு முன்பு தோழர் வரதராஜுலு நாயுடு அவர்கள் தலைமையில் பேசும் போது “நான் சாவதற்கு முன் சடங்குகளை ஒழிப்பேன். ஒழிக்க முடியாவிட்டால் சாகும்போது இந்துவாக சாக மாட்டேன்; சடங்கில்லாத மதக்காரனாகத்தான் சாவேன்” என்றும் சொல்லி இருக்கிறேன். ஆதலால் இந்துமத எதிர்ப்புக்கோ இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ ஆரியர் திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பன துவேஷம் காரணமல்ல என்பதையும் மக்கள் மீது உள்ள பரிதாபமே காரணம் என்பதையும் இவற்றிலிருந்தாவது மக்கள் உணர்வார்கள் என்று கருதுகிறேன்.

நாயுடு அவர்கள் “நாயக்கர் இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டிருக்கிறார்” என்று சொல்லுகிறார். என்றுமே “இந்துக்களுக்கு எதிரான அபிப்பிராயங்களையே கொண்டு இருக்கிறவன்” ஆன “நான் முஸ்லிம்களோடு சேர்ந்திருக்கிறேன்” என்று நாயுடுகார் சொல்லும் வார்த்தைக்கு ஒன்றும் அர்த்தம் இருப்பதாய் எனக்கு விளங்கவில்லை. ஏனெனில் அவுரங்கசீப்பை சேர்ந்த ஜின்னாக்கள் வெகு நூற்றாண்டுகளாகவே இந்துக்களுக்கு விரோதியாகவும் இருந்தார்கள் என்றால் ராவணனைச் சேர்ந்த ராமசாமிகள் அதற்கு முன்பு இருந்தே இந்துக்களுக்கு விரோதிகளாய் இருக்க வேண்டியவர்களல்லவா?

இந்நிலையில் இருவருக்கும் இந்துக்களுக்கு விரோதமான ஒரு இடம்தான் இருக்க முடியுமே தவிர வேறு வேறு இடம் எப்படி இருக்க முடியும்? இது மாத்திரமா? ஆதி திராவிடருக்கும், கிறஸ்தவர் களுக்கும் எனக்கும்கூட ஒரு இடம் தானே இருக்க முடியும்? நான் எதற்காக முஸ்லிம்களையோ கிறிஸ்தவர்களையோ, ஆதி திராவிடர்களையோ விட்டு விலகி இருக்க வேண்டும் என்பது எனக்கு விளங்கவில்லை. அரேபியாவிலும் ஆப்கானிஸ்தானத்திலும் ஈஜிப்டிலும் இருக்கும் முஸ்லிம்களுடன் நான் சேர்ந்து கொண்டு அவர்களை இந்நாட்டுக்கு வந்து கொடி போடும்படி நான் கூப்பிட்டால் அது தவறாகலாம்.

திராவிட நாட்டிலே இருக்கும் திராவிட இனத்தில் இருக்கும் முஸ்லீம்களுடன் நான் ஆரிய வர்த்தத்திலே இருக்கும் ஆரிய சமயத்தவரான இந்துவுக்காக சண்டை போட வேண்டுமென்று நாயுடு கருதுகிறாரா என்பது எனக்கு விளங்கவில்லை. மற்றும் “இந்து மகாசபையை நாயக்கர் எதிர்க்கிறார்” என்கிறார். இங்கு சில வரிகளுக்குக் கீழாகவே நாயுடுகார்,

“இந்து மகாசபை மாநாடுகள் கூட்டி ஜஸ்டிஸ் கட்சியினுடையவும் லீக்கினுடையவும் கோரிக்கைகளை எல்லா வகையாலும் எதிர்த்து நிராகரிக்க வேண்டும்” என்கிறார். ஆகவே இப்படிப்பட்ட காரியத்திற்காக நிறுவப் போகும் இந்து மகாசபையை எதிர்க்காமல் அதற்கு நான் இடம் கொடுக்க வேண்டியது அவசியந்தானா? இதற்காக கூட்டப்படும் மாநாடு ஒழுங்கான மாநாடு ஆகுமா? என்று பொது மக்களைக் கேட்கிறேன்.

மற்றும் நாயுடு அவர்கள், “பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற தர்க்கம் திராவிடர் ஆரியர் என்கின்ற யுத்தமாக மாற்றப்படுகிறது. சரித்திரத்திலேயே இந்தக் கொள்கைக்கு ஆதாரம் இல்லை” என்று தனது அறிக்கையில் எழுதுகிறார்.

இது நாயுடு ஏதாவது தேச ஜாதி (தேசிய) சரித்திரங்களைப் பார்த்து இப்படி எழுதுகிறாரா அல்லது “பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்கிறது” என்று பழமொழி போல் உலக மக்களை மூடர்கள் என்று கருதிக் கொண்டு இப்படி எழுதுகிறாரா என்பது நமக்கு விளங்கவில்லை.

ராவணன் கதையையும், காலத்தையும் ஞாபகப்படுத்திக் கொண்டு தனது வாதத்திற்காக பயன்படுத்திக் கொண்ட நாயுடுகாருக்கு ஆரியர் - திராவிடர் என்பதற்குச் சரித்திரத்திலேயே இடம் காணப்படவில்லை என்றால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை பற்றி பொது மக்கள் தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

ராமேஸ் சந்திரதத் எழுதிய “புராதன இந்தியா”, “பண்டைய இந்தியாவின் நாகரீகம்”, ராமேஸ் சந்திர மசும்தார் எழுதிய “பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரீகமும்”, சுவாமி விவேகானந்தர் “ராமாயணம்” என்னும் தலைப்பில் பேசிய பேச்சு, 1922 கேம்பிரிட்ஜ் பிரசுரித்த ‘பழைய இந்தியாவின் சரித்திரம்’, ராஜகுமார் முக்கர்ஜி எழுதிய ‘இந்து நாகரீகம்’, ஜேம்ஸ்மர்ரே எழுதிய அகராதி, பண்டர்கார் கட்டுரைகள், டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் எழுதிய “தென்னிந்தியாவும் இந்திய கலையும்”, பி.டி. ஸ்ரீனிவாசய்யங்கார் எழுதிய “இந்திய சரித்திரம்”, ஜெகதீச சந்தர்டட் எழுதிய “இந்தியா அன்றும் இன்றும்”, ஏ.சி. தாஸ் எழுதிய “வேத காலம்”, சி.எஸ். சீனிவாசாச்சாரியார் எழுதிய “இந்திய சரித்திரம்”, “இந்து இந்தியா”, எச்.ஜீ. வெலஸ் எழுதிய “உலக சரித்திரம்”,

மேலும் சகல கலா பொக்கிஷம் என்னும் “நியு ஏஜ் என்சைக்ளோ பீடியோ”, சி.ஜெ. வர்க்கி (மாஜி மந்திரி) எழுதிய “இந்திய சரித்திர பாகுபாடு”, ஹென்றி பெரிஜ் 1865-ல் எழுதிய “விரிவான இந்திய சரித்திரம்”, இ.பி. ஹாவெலஸ் எழுதிய “இந்தியாவில் ஆரிய ஆட்சி.” ஜி.எச். ராலின்சன் எழுதிய “இந்தியா”. நாகேந்திர நாத் கோஷ் எழுதிய “இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும்”, வின்சென்ட் ஏ. ஸ்மித் எழுதிய “ஆகஸ்போர்ட் இந்திய சரித்திரம்”, “இம்பிரியல் இந்தியன் கெஜட்”, சர் வில்லியம் வில்சன் “இந்திய மக்களின் சரித்திரம்”, ராகோசின் எழுதின “வேத கால இந்தியா”, பால்மாகின் கவர்செல் எழுதிய “புராதன இந்தியா நாகரீகம்”, சர். என்றி ஜான்ஸ்டன் எழுதிய “இந்தியாவில் அன்னியர்”,

இவைகள்அறிவு, ஆராய்ச்சி திறம், கல்விப் பட்டம் பெற்ற ஆங்கிலேயராலும் வங்காளிகளாலும் பல ஆரியர் (பார்ப்பனர்)களாலும் எழுதப்பட்டவைகளாகும். திராவிடர்களால் எழுதிய எதையும் இங்கு குறிப்பிடவில்லை. இதுபோல் இன்னமும் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நிபுணர்கள் எழுதிய புத்தகங்கள் ஆதாரங்கள் கன்னிமேரா லைபெரரியில் மாத்திரம் இருக்கின்றன. சாவகாசப்பட்டால் நாயுடுகார் தயவு செய்து போய்ப் பார்த்துக் கொள்ளலாம்.

மற்றும் “பல யுகங்களாகத் திரண்ட ஞானத்தின் அஸ்திவாரத்தைக் கொண்டது இந்துக் கலாச்சாரம்” என்று நாயுடு எழுதுகிறார். பல யுகம் என்பதே ஒரு புரட்டான வார்த்தையாகும். ஏனெனில் இந்து கலாச்சாரக் கதைகள் அல்லது இந்து சரித்திரங்களிலுள்ள விஷயங்களைப் பார்த்தால் அவை ஒரு யுகத்தில் நடந்த விஷயம் பல யுகங்களாக நடந்தவைகள் என்று காணப்படும். ரிஷியோ முனியோ ஆகிய ஒரு மனிதன் பல யுகங்களில் நடந்த பல சம்பவங்களில் இருந்தனவாக இருப்பான்.

அகஸ்தியர், நாரதர், விசுவாமித்திரர், பராசாரர், வசிஷ்டர், யக்கியவல்கியர் முதலிய நபர்கள் தான் கருதி, ஸ்மிருதி ஆகியவைகளுக்கு ஆதார புருஷர்களாக இருக்கிறார்கள். இவர்களில் எவருடையதும் பகுத்தறிவுக்குச் சம்பந்தப்பட்டது அல்ல. ‘அராபியன் நைட்ஸ்’ போன்ற கதையாகவே ஒவ்வொரு விஷயமும் காணப்படும்.

மற்றும் இந்து மதம், இதிகாசம் ஆகியவைகளும் பகுத்தறிவுக்கு பொருத்தமற்றதாகவே இருக்கும். ‘இந்து’ இந்து கலாச்சாரம், இந்து சமயம், இந்தியா என்கின்ற வார்த்தைகள் எந்த இந்து ஆதாரங்களிலாவது இருப்பதாகக் காட்ட முடியுமா என்று கேட்கிறேன்.

இந்து என்கின்ற வார்த்தை ஒரு நாட்டான் என்பதைக் குறிக்கிறதா? ஒரு மதத்தான் என்கின்றதைக் குறிக்கின்றதா? என்று கேட்கின்றேன்.

(தொடரும்)