பகுத்தறிவாளருக்கும் - ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனருக்கும் நடக்கும் உரையாடல்
 
பகுத்தறிவாளன் : வாருமய்யா, ‘பாரத’ புத்திரரே! உமது பூமி மாதா வெப்பமாகி வருகிறாளே, தெரியுமா? இதே நிலை நீடித்தால் மனித இனமே அழிந்து விடும் என்று கூறுகிறார்களே?

பார்ப்பான்: பூமியைப் படைத்ததே - இறைவன் தான். ஆதிசேஷன் என்ற பாம்புதான் பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. பகவான் பூமியை அழிய விட மாட்டான். எல்லாம், அவன் பாத்துக்குவான், நீங்கள் ஏன் அலட்டிக்கிறீங்க?
 
பகுத்தறிவாளன் : அப்படியா? நீங்கள், எந்த கிரகத்தில் இருக்கிறீங்க? கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக இல்லாத வகையில் பூமியின் மேற்பரப்பு வெப்பமாகி வருகிறதாம்! இதனால் பூமியில் மனித இனம் உயிர் வாழ்வதே கேள்விக்குறியாகியுள்ள தாம். பகவான் பார்த்துக் கொள்வான் என்றால், பூமி வெப்பமாவதை ஏற்கனவே தடுத்து நிறுத்தியிருக்க மாட்டானா? பூமியின் வெப்பம் அதிகரிக்கும்போது, ஆதிசேஷன் அதைத் தாங்கிக் கொண்டே இருக்கிறானா?

பார்ப்பான் : இப்படி எல்லாம் விதண்டாவாதம் பேசக் கூடாது. நாட்டில் தர்மம் கெட்டுப் போயிடுத்து. அதனால், பகவான் சோதிக்கிறான். இதை மனித குலம் எப்படி சந்திக்கப் போகிறதுன்னு சோதிக்கிறான்.
 
பகுத்தறிவாளன் : தர்மத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம் பூமியில் அவதரித்து வருவேன் என்று கிருஷ்ண பகவான் கீதையிலே கூறியிருப்பதாக பிரச்சாரம் செய்து வருகிறீர்களே! இப்போது அவதாரம் எடுத்து வராமல் பகவான் சோதிக்கிறான் என்றால், இது என்ன குழப்பம்?

பார்ப்பான் : குழப்பம் உங்களுக்குத்தான்; எல்லாவற்றையும் பகவான் பார்த்துண்டுதான் இருக்கார், தெரியுமோன்னா?
 
பகுத்தறிவாளன் : பகவான் எங்கிருந்து பார்த்துண்டு இருக்கார்?

வெப்பமாகிக் கொண்டிருக்கும் பூமியிலிருந்தா? அல்லது வெப்பத்தைக் கக்கும் சூரியனிடமிருந்தா? அல்லது வேற்று கிரகங்களிலிருந்தா? எங்கிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்? உங்களுக்கு மட்டும் ஏதாவது ‘ஈ மெயில்’ அனுப்பியிருக்கிறானா? சொல்லுங்கோ? இதோ, பாருங்க, நான் கூறுவதை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க.
 
பூமி மற்ற கோள்களிடமிருந்து மாறுபடுவதற்கு ஒரே காரணம், இங்கே தான் உயிரினங்கள் தோன்றி வாழத் தகுந்த தட்ப வெட்ப நிலை நிலவுகிறது. இந்த தட்பவெப்ப நிலைக்கு ஒரே காரணம் சூரியன்தான். சூரியனின் வெப்ப சக்தி பூமி மீது எல்லையின்றி விழுந்து கொண்டே இருக்கிறது. அவ்வளவு வெப்பமும் பூமியில் தங்கிவிட்டால், பூமியே எரிந்து போய்விடும். அவ்வளவு வெப்பமும் உடனுக்குடன் திரும்பிப் போய்விட்டால், அதுவும் ஆபத்துதான். பூமி பனியில் உறைந்து போய்விடும். இந்த இரண்டுமின்றி - பூமியில் உயிர் வாழ்வதற்கேற்ற தட்ப வெப்ப நிலை நிலவுவதற்கு பூமியின் மேலே சுற்றியுள்ள வளி மண்டலம் தான் காரணமாக இருக்கிறது. இந்த வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜன், ஆக்ஜிஜன், பசுமையில்ல (ழுசநநn ழடிரளந) வாயு ஆகியவைதான். சூரிய வெப்பத்தை அப்படியே பரவவிடாமல், உள்வாங்கிக் கொள்கின்றன. இதனால்தான் பூமியில் இதமான வெப்பம் நிலவுகிறது.
 
இப்போ என்னாச்சு தெரியுமா? பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயுவை அதிகமாகப் பயன்படுத்துவதாலும், எரிப்பதாலும், காடுகளில் மரங்களை எரிப்பதாலும் வெளியாகும் கரியமிலவாயு வெளியேற்றம் அதிகமாகிவிட்டது. இதேபோல், கேடு தரக்கூடிய மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, எஃப் வாயு போன்றவையும், மனிதர்களின் நவீன வாழ்க்கை முறைகளால் அதிகமாக வெளியேறி, பூமி வெப்பத்தை கட்டுப்படுத்தக்கூடிய பசுமையில்ல வாயுவை பாதிக்கச் செய்துவிட்டது. அதாவது, வெப்பத்தைப் பிடித்து வைக்கும் பசுமையில்ல வாயுக்களில், வெப்பத்தின் அளவு அதிகரித்துவிட்டது. இதனால் காலநிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, பருவமழை தவறிப்போய், புயல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகரித்து வருகின்றன. உலகமே இப்போது கவலையுடன், இதைப் பார்க்கிறது. நீங்கள், சூரியனையே பகவான் என்கிறீர்கள். குந்தி தேவி சூரிய பகவானுடன் சேர்ந்து கர்ணனைப் பெற்றதாக காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நான் கேட்கிறேன், பூமியைப் படைத்தது கடவுள் என்றால், இப்போது பூமியின் ஆபத்துக்கும் பகவான்தான் காரணமா? இந்த பூமியைக் காப்பாற்றுவதற்கு, பகவான், தனி விமானத்தைப் பிடித்து, தரையிறங்கியிருக்க வேண்டாமா?

பார்ப்பான்: இப்படி எல்லாம் இந்துக்களைப் புண்படுத்தக் கூடாது. நீங்கள் சொன்னேளே, நைட்ரஜன், ஆக்சிஜன், பசுமையில்ல வாயு, இன்னும் ஏதேதோ. எல்லாமே வாயு பகவான் தான், தெரியுமோ? விவரம் தெரியாமல் தத்துப்பித்துன்னு உளறாதேள்!
 
பகுத்தறிவாளன் : நைட்ரஜன் பகவான்; ஹைடிரஜன் பகவான்; பசுமையில்ல வாயு பகவான்ங்கிற பெயரெல்லாம், உங்க சாஸ்திருத்துல, வேதத்துல இருக்கா? சொல்லுங்க பார்க்கலாம்! இவையெல்லாம் விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள். விஞ்ஞானம் கண்டுபிடித்த பிறகு, நீங்கள், மதத்துக்கு சொந்தம் கொண்டாடக் கிளம்பிடுவீங்க! சரி, அப்படியானால் ஒரு கேள்வி கேட்கிறேன், வாயுக்கள் எல்லாம் பகவான்னு சொன்னா, கரியமிலவாயுவும் பகவான் தானே! அந்தக் கரியமில வாயு - அதிகமாக வெளியேறுவதுதான் பூமிக்கு ஆபத்தை உருவாக்கி வருகிறது. அமெரிக்கா, கனடா, சீனா போன்ற பணக்கார நாடுகள். தங்களின் வேகமான வளர்ச்சி ஆடம்பர தேவைகளுக்காக, நிலக்கரி, எண்ணெய், டீசல், பெட்ரோல், எரிவாயுகளைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளை அதிக அளவில் தொடங்கி, கரியமில வாயுவை அதிகமாக வெளியேற்றி வருகிறார்களாம்.
 
இதற்கு வரம்பு கட்டுவதற்காகவே இப்போது 192 நாடுகளின் பிரதிநிதிகள் டென்மார்க் நாட்டில் கோபன் ஹெகன் நகரில் கூடிப் பேசியுள்ளன. பகவானை கட்டுப்படுத்துவதா? இது தெய்வ நிந்தனை என்று கூறி, இதையும் எதிர்க்கப் போகிறீர்களா? இந்து விரோதிகள் டென்மார்க்கில் கூடுவதைத் தடை செய்ய வேண்டும் என்று உங்கள் இராமகோபாலன், மயிலாப்பூர் மாங் கொல்லையில் நின்று கொண்டு போராடப் போகிறாரா? போபால் விஷவாயுவும் உங்கள் பகவான் தானோ?

பார்ப்பான் : கரியமில வாயுவோ என்ன கண்றாவியோ. அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. இந்தப் பூமியில் எல்லாரும் ‘ஷேமமா’ இருக்கறதுக்கு நாங்க யாகம் நடத்துறோம். இதுக்கெல்லாம் வேதத்துலேயே மந்திரங்கள் இருக்கு தெரியுமோ! வேத மந்திரங்களோடு நாங்க மூட்டுற யாகப் புகை வெளியில கலந்து, அமைதியைக் கொண்டு வந்து சேர்க்கும். அதுக்காகத்தான், உலக அமைதிக்கு யாகங்கள் நடத்துறோம். நன்னா புரிஞ்சுக்கோங்க!
 
பகுத்தறிவாளன் : உங்களுடைய யாகமும், வேத மந்திரமும் கரியமில வாயு வெளியேற்றத்தை தடுத்து நிறுத்திடும்னா, இப்போ, உலக நாடுகள் டென்மார்க்குல கூட வேண்டிய அவசியமே இருந்திருக்காதே. நீங்கள் உலக அமைதிக்கு யாகம் நடத்துறதா கதை விட்டாலும், அமெரிக்காவுல இரட்டை கோபுர இடிப்பு நடந்தது. ஈராக்கிலும், ஆப்கானிஸ் தானத்திலும், பாகிஸ்தானத்திலும் அன்றாடம் குண்டு வெடிக்குது. உலகம் முழுதும் பயங்கரவாதம் பரவிகிட்டு வருதுன்னு, அமெரிக்காகாரன் கூப்பாடு போடுறான். பக்கத்துல ஈழ நாட்டில, ஒரே நாளில் 30000 தமிழர்களை சிங்களன் கொன்று குவிச்சானே, உலக அமைதிக்கான யாகத்தின் சக்தி எங்கே போனது?

பார்ப்பான் : இதோ பாருங்கோ, வீண் பேச்சு எல்லாம் பேசப்படாது. இந்தப் பூமியே பகவானுக்கு கட்டுப்பட்டது. நோக்கு தெரியுமா? இந்த பூமியையே அப்படியே பாயாக சுருட்டி, கடலுக்குள் கொண்டு போய் இரண்யாட்சன் என்ற அரக்கன் ஒளித்து வைத்தபோது, மகாவிஷ்ணுதான், பன்றி அவதாரமெடுத்து, பூமியைத் துளைத்துக் கொண்டு போய் அந்த அரக்கனை வீழ்த்தி, இந்த பூமியையே பத்திரமாக மீட்டு வந்தார். ஞாபகம் வச்சுக்கோங்க. அந்த வெற்றி விழாதான் தீபாவளிப் பண்டிகை!
 
பகுத்தறிவாளன் : சரிதான். அன்றைக்கு பூமியை மீட்டு வந்த மகாவிஷ்ணு, இன்று பூமிக்கு ஆபத்து வந்துள்ளபோது, எங்கே போனான்? ‘டாஸ்மாக்குல’ தண்ணி அடிக்கிறானா? உடனே டென்மார்க் நாட்டுக்குப் போகச் சொல்லுங்கய்யா. அங்கேதான், ஆலோசனை நடக்குது!

பார்ப்பான் : என்ன ஓய், உமக்கெல்லாம் எங்க கடவுள் அவ்வளவு அலட்சியமாயிட்டானா? அதெல்லாம் அந்த நாட்டுக்கெல்லாம் எங்க பகவான் வர மாட்டான். ‘மனுஷாள்’ செய்யற பாவத்துக்கு பகவான் என்ன செய்வான்? காலம் கலி காலம். தர்மம் கெட்டுப் போயிடுச்சு! உலகம் அழியப் போறது; அவ்வளவுதான். ஏன், பகவானை வம்புக்கு இழுக்குறேள்.

பகுத்தறிவாளன் : அப்போ, உலகத்தை அழிய விட்டுட வேண்டியதுதானா? அப்படியே பூமியே அழியறப்போ, ‘பூ தேவர்களான’ நீங்களும், உங்கள் தர்மமும், வேதமும், உங்கள் கோயில்களும் சேர்ந்து தான் அழியப் போகிறது! அப்போது, பகவான் வந்து, உங்கள மட்டும் காப்பாத்திடுவார்னு நம்புறீங்களா?

பார்ப்பான் : அய்யோ.... நிறுத்துங்கோ; நிறுத்துங்கோ! பயமுறுத்தாதேள்! அப்படி எல்லாம் ஆபத்தை விலைக்கு வாங்க நாங்க தயாராயில்லை. முதல்ல பூமிய எல்லாரும் சேர்ந்து காப்பாத்தட்டும். கரியமில வாயுக் கசிவை நிறுத்தட்டும். பணக்கார நாடுகளுக்கு கடிவாளம் போடட்டும். மனித இனத்தின் செயல்களால் பசுமையில்ல வாயு அதிகரித்து, பூமியின் வெப்ப சக்தி அதிகரிப்பை தடுத்து நிறுத்துவதற்கான உடன்பாடுகளை உலக நாடுகள் மேற்கொள்ளட்டும். பூமியை விஞ்ஞானிகளும், உலக நாடுகளும் பத்திரமாக்கித் தந்தால்தான், நாங்க அதன் மேலே நின்று கொண்டு, ‘தர்மம்’, ‘அவதாரம்’, ‘வேதம்’, ‘யாகம்’, ‘பூணூல்’, ‘வர்ணாஸ்ரம்’ எல்லாவற்றையும் பேசி உங்க தலையில் மிளகாய் அரைக்க முடியும்! சுவர் இருந்தா தானே சார், சித்திரம் வரைய முடியும்?
 
பகுத்தறிவாளன் : பூமியை பத்திரப்படுத்திப் பாதுகாத்துக் கொடுத்தால், அதன் பிறகு, நீங்கள் பூமியில் வாழுற மனிதனை அடிமையாக்க, சுரண்ட, தீண்டப்படாதவளாக்க, சூத்திரனாக்க கிளம் பிடுவீங்க! அப்படித் தானே! கரியமிலவாயுவைவிட நீங்கதானப்பா, ஆபத்தானவங்க! அந்த வாயு மண்ணைத்தான் அழிக்குது; நீங்க, மனிதர்களையே, அழிக்கிறீங்களேடா, “பாவி”!

- கோடங்குடி மாரிமுத்து

Pin It