கழகத் தலைமைக்குழு கூட்டம் 19.07.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இத்தலைமைக்குழு கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தலைமைக்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கழகத்தின் அடுத்த கட்ட செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கழகத் தலைவர், கழகப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் கருத்துக்களை, ஆலோசனைகளை குழுவின் முன்பு வைத்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

  • ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு தமிழ்நாட்டு அரசு தனியாக “ஜாதி ஆணவப் படுகொலைத் தடுப்புச் சட்டம்” ஒன்றை நிறைவேற்றுவது அவசியம் என்று தலைமைக்குழு கருதுகிறது. இதனை தமிழ்நாட்டு அரசிற்கு கோரிக்கையாக வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • பள்ளி கல்லூரிகளில் ஜாதி, மதப் பாகுபாடுகளைக் களையவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும் அரசுக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தனிநபர் கமிஷன் அமைக்கப்பட்டது. இதில் ஆய்வுகளை மேற்கொண்ட நீதிபதி சந்துரு அவர்கள் 20 பரிந்துரைகள் அடங்கிய 650 பக்க அறிக்கையை தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளார்.

இந்தப் பரிந்துரைகளை தமிழ்நாட்டு அரசு உடனடியாக அமுல்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசிக்க வேண்டும் என்று தலைமைக்குழு கேட்டுக் கொள்கிறது.

  • தமிழ்நாட்டில் அடுத்த தலைமுறை வளரும் இளம் பருவத்தினர் பலர் சிறு வயதிலேயே போதைப் பொருட்கள் பயன்படுத்தும் அவல நிலைக்கு ஆளாகி அவர்களுடைய சுயத்தை இழந்து சமூகத்திற்கு ஆபத்தாக செல்லும் போக்கு அதிகரிப்பதை இத்தலைமைக்குழு கவலையோடு கவனிக்கிறது. இது போன்ற கவலைக்குரிய ஆபத்தான சூழலில் இருந்து அடுத்தத் தலைமுறைகளை மீட்டெடுப்பதற்கு போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பரப்புரைகளை நம் சமூக அரசியல் பரப்புரைகளுக்கு இடையே செய்வது குறித்தும் தலைமைக்குழுவில் ஆலோசனை நடத்தப்பட்டது.
  • திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களை கழகத்தின் முன்னணிப் பொறுப்பாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் நடத்தி களப்பணியாற்றி வரும் கழகத் தோழர்களை நேரடியாக சந்தித்து கழகத்தின் அடுத்த கட்ட செயல் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துவது, மாவட்டக் கழகங்களைப் புதுப்பிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டங்களில் கழகத் தலைவர் கலந்து கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

ஆலோசிக்கப்பட்ட மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டங்கள் நடைபெற உள்ள இடம், தேதி ஆகியவை அடுத்த புரட்சிப் பெரியார் முழக்கம் இதழில் அறிவிக்கப்படும்.

காலை முதல் மாலை வரை நடைபெற்று இந்த தலைமை குழு கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால்.பிரபாகரன், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன், சூலூர் பன்னீர்செல்வம், சென்னை இரா.உமாபதி, அன்பு தனசேகர், மயிலாடுதுறை இளையராஜா, அய்யனார், காவை ஈசுவரன் உள்ளிட்ட கழகத் தலைமைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத இரண்டு உறுப்பினர்களில், கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம.இளங்கோவன் தான் கலந்து கொள்ள இயலாததையும், தலைமைக் குழுவில் விவாதிக்க என சில கருத்துகள் ஆலோசனைகளை கடிதம் வாயிலாக அனுப்பியிருந்தார். மேட்டூர் அ.சக்தி தான் வரமுடியாமை குறித்து செய்தி அனுப்பி இருந்தார்.