karur honour killing protestகரூரில் பொறியாளர் ஹரிஹரன் ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து 27.01.2021 அன்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

கரூரில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற ஜாதி ஆணவக் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், குரலற்ற விளிம்பு நிலையில் வாழக்கூடிய சமூக மக்களுக்கு பாதுகாப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்; சாதி மறுப்புத் திருமணம் புரிந்து கொண்டோருக்கும், திருமணம் புரிய இருப்போர்களுக்கும் பாதுகாப்பு வழங்க தனி ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்; சாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்கு அரசு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

சாமானிய மக்கள் கட்சி குணசேகரன் துவக்கவுரையாற்றினார். திருப்பூர் துரைசாமி - பொருளாளர், திராவிடர் விடுதலைக் கழகம், லட்சுமிகாந்தன் - அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம், ராமசந்திரன் - CPIML, பிரகாஷ் ராஜ் - ஆதித்தமிழர் பேரவை, தனபால் - த.பெ.தி.க., தமிழ் ராஜேந்திரன் - வழக்கறிஞர், பிரகலாதன் - தி.க., தமிழ் கவி - திராவிடர் இயக்க தமிழர் பேரவை, கிருஷ்ணமூர்த்தி - தீண்டாமை ஒழிப்பு முன்னணி, கத்தார் மாணிக்கம் - வி.சி.க. ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

திராவிடர் விடுதலைக் கழக கரூர் மாவட்டத் தோழர் வடிவேல் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு - ஈரோடு ரத்தினசாமி, அமைப்பு செயலாளர், தி.வி.க.

ஆர்ப்பாட்டத்திற்கு கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் பகுதிகளிலிருந்து திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு, கரூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஆணவப் படுகொலை செய்யப்பட்ட ஹரிஹரன் குடும்பத்தினரை 27.01.2021 அன்று சந்தித்து நடந்த சம்பவங்கள் குறித்து விசாரித்தறிந்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It