வரலாற்றில் இல்லாத வகையில் இந்திய நாடாளுமன்றத்தில் 11 கட்சிகளின் 140 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.மோடிக்கு எதிராக, நாட்டின் பாதுகாப்பு நலனைக் கருதி, பதாகைகளை ஏந்தி வந்ததற்காக இந்த அக்கிரம நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. INDIA கூட்டணியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல், சங்கிகள் செய்த வெறிச்செயல் இதுவாகும். இனி நம்முடைய நாடாளுமன்றம் வடகொரிய நாடாளுமன்றத்தைப் போல இருக்கப் போகிறது என கார்த்தி சிதம்பரம் (காங்) விமர்சித்துள்ளார்.

எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு பல்வேறு சர்ச்சைக்குரிய மசோதாக்களை ஒன்றிய சனாதன அரசு, எந்த எதிர்ப்புக்கும் இடமின்றி நிறைவேற்றி உள்ளது. இதை மணிஷ் திவாரியும் (காங்) குறிப்பிட்டுப் பேசியுள்ளார். நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு இரங்கல் உரை எழுத வேண்டிய நிலையில் இருக்கிறோம் என சசி தரூர் (காங்) கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது. உண்மையை பேசுபவர்களையும் கேள்வி கேட்பவர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளதாக சுஷில் குமார் ரிங்கு (ஆம்ஆத்மி) கண்டித்துள்ளார். தன்னுடைய கூர்மையான கேள்விகளால் பாஜகவினரை துளைத்து வந்த, திரிணாமுல் காங்கிரஸின் குரலான மகுவா மொய்த்ராவை, கற்பனையான காரணங்களுக்காக ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்திருந்தனர்.

நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினரிடம் (பிரதாப் சிம்கா) அனுமதிச்சீட்டை பெற்றுக்கொண்டு உள்நுழைந்த ஆறு பேர் கொண்ட கும்பல், புகை குண்டு வீசியதால், நாடாளுமன்றம் அதிர்ந்தது. இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சியினர் அனுமதி கேட்டிருந்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்துப் போராடிய தேசப்பற்றாளர்களை, போலி தேசபக்தர்கள் இடைநீக்கம் செய்து, அம்பலப்பட்டு போயுள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய ஆதாரச் சட்டம் ஆகியவற்றின் பெயர்களை பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷயா என மாற்றி மசோதா கொண்டு வந்துள்ளனர். INDIA கூட்டணியின் பெயரால் எரிச்சலடைந்து, நாட்டின் பெயரையே “பாரத்” என்று ஆங்கிலத்திலும் மாற்றத் துணிந்து விட்டனர். திராவிட சிந்து சமவெளி நாகரிகத்தோடு தொடர்புடைய பெயர் “இந்தியா”. பாரத் என்கிற புராணப் பெயரைக்காட்டிலும் இந்தியா என்பது பொருத்தமான பெயர்தான்.

எந்த வளர்ச்சி திட்டத்தையும் முறையாக செயல்படுத்தாமல், வெறும் பெயரை மட்டும் மாற்றிவிட்டால் காலனியாதிக்க மனநிலையில் இருந்து மக்கள் மீண்டு விடுவார்கள் என்கிறது சங் பரிவார் கூட்டம். தற்போது இருக்கும் 15 நாள் ரிமாண்ட் முறையை மாற்றி 60 அல்லது 90 நாட்கள் வரை கூட காவலில் எடுத்து விசாரிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. நிரபராதிகளை குற்றவாளிகளாகக் கட்டமைக்க இந்த 15 நாட்களை சில நேர்மையற்ற காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்தி வரும் நிலையில், இதனை 60 நாளாகவோ 90 நாளாகவோ மாற்றுவது என்பது, காவல் கொட்டடி வன்முறைகளை அதிகரிக்கவே செய்யும். புதுச் சட்டங்களில் மரண தண்டனை முறை ஒழிக்கப்படுவதற்கு பதிலாக, அதிகரிக்கும்படியான திருத்தங்கள்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரவேற்கும்படியாக எதுவும் இல்லை.

அதேபோல, தேர்தல் ஆணையம் தொடர்பான எதேச்சதிகார மசோதாவையும் மோடி அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு முன்பு வரை தேர்தல் ஆணைய அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய மூவர் குழுவின் கையில் இருந்தது. இக்குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக கேபினட் அமைச்சர் ஒருவரை இணைத்துக் கொண்டு புதிதாக மூவர் குழுவை உருவாக்கும் மசோதாவாக இம்மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய பேராபத்து ஒளிந்துள்ளது. ஆளுங்கட்சியை சேர்ந்த இருவரையும் எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவரையும் சேர்த்துக் கொண்டு ஒரு குழுவை அமைக்கும் பொழுது ஆளுங்கட்சியினர் தங்களுக்குச் சாதகமான ஒருவரை தேர்தல் ஆணையராக நியமிக்கும் அபாயம் உள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் தேர்தல்கள் நியாயமாக நடக்குமா? என்ற சந்தேகம் மனித உரிமையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்புக்கு நேரெதிரான மசோதா இதுவாகும்.

2021 ஆம் ஆண்டிற்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பையே இன்னும் எடுக்காமல், பெண்களுக்கான 33.33% இட ஒதுக்கீட்டு மசோதாவை அவசர கதியில் தேர்தல் உள்நோக்கங்களுடன் பாஜக ஏற்கனவே கொண்டு வந்திருந்தது. அது வெறும் ஏட்டளவில் மட்டுமே உள்ளது; நடைமுறைக்கு வரவில்லை. அரசுக்கு எதிரான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்குவதற்கான தகவல் தொழில்நுட்பச் சட்டத்தையும் ஏற்கனவே கொண்டு வந்திருந்தது. அதேபோல வனப் பாதுகாப்பு சட்டத் திருத்தமும் சர்வதேச எல்லைப் பகுதிகளில் காடுகளை அழிப்பதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்டிருந்தது. அனைத்து மக்கள்விரோத சட்ட திருத்தங்களுக்கும் பழங்குடியின சமூகத்தில் பிறந்து குடியரசுத் தலைவர் ஆனவர் என்று போற்றப்படும் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ஒருபுறம், தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றும் மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களை, பழிவாங்கும் நோக்கத்தோடு ஆளுநர் கிடப்பில் போடும் நிலையில், மறுபுறம் டெல்லியில் தங்குதடையின்றி உரிமை பறிப்பு மசோதாக்கள் நிறைவேறுவது வருத்தத்திற்குரிய செய்தியாகும். எனவே, மக்கள் விரோத மசோதாக்கள் திரும்பப் பெறப்பட வேண்டும். 10% பேர் இருந்தாலே நாடாளுமன்றத்தை நடத்தலாம் என்ற விதியும் மாற்றப்பட வேண்டும். மத்தியில் ஆட்சி மாறாமல் எதுவும் மாறப் போவதில்லை.”

எட்வின் பிரபாகரன்

Pin It