கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

குஜராத் கலவரத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் விடுதலை செல்லாது என்றும் அவர்களை மீண்டும் இரண்டு வார காலத்துக்குள் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் 08.01.2024 அன்று அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

அந்தத் தீர்ப்பில், குற்றவாளிகளின் விடுதலைக்கு பின்னால் இருக்கிற அரசியலையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஒன்றிய ஆட்சியும், குஜராத் ஆட்சியும் இணைந்து குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளனர் என்று கூறிய உச்சநீதிமன்றம் இதில் நடந்திருக்கிற மோசடிகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. இதில் ஃபிராடு நடந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம் பயன்படுத்திய வார்த்தையை சுட்டிக்காட்ட வேண்டும்.

அது என்ன ஃப்ராடு? இந்த வழக்கு குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டது. எனவே குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் முடிவு மகாராஷ்டிரா மாநில அரசுக்குத்தான் உண்டே தவிர குஜராத் மாநில அரசுக்கு சட்டப்படி கிடையாது. ஆனால் குஜராத் மாநில அரசு எப்படி இவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யமுடிந்தது? தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்கிறார். அந்த மனுவின் படி குஜராத் அரசுக்கு தங்களை விடுவிப்பதற்கான உரிமை இருக்கிறது என்று அந்த வழக்கில் அவர் வாதாடுகிறார். அதற்கு மாநில அரசும், ஒன்றிய அரசும் உடந்தையாக இருந்திருக்கிறது. குஜராத் அரசுக்கு தங்களை விடுவிக்கும் உரிமை உண்டு என்று வாதாடிய அந்த வழக்கில் பல உண்மைகளை மறைத்து நீதிமன்றத்தில் பல தகவல்களை தெரிவித்திருக்கிறார்கள்.

1992ம் ஆண்டு குஜராத் மாநில அரசின் முன்கூட்டிய விடுதலைக் கொள்கையின் படி, குஜராத் மாநில அரசுக்கு அந்த உரிமை உண்டு என்று நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் சார்பில் அரசு கூறியது. உண்மையில் 1992ம் ஆண்டு விதிக்கப்பட்ட அந்தக் கொள்கை பிறகு நீக்கப்பட்டுவிட்டது. காலாவதியான ஒரு கொள்கையை உயிரோடு இருப்பதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை தெரிவித்திருக்கிறது குஜராத் மாநில பாஜக அரசு. அதற்குப் பிறகு குஜராத் நீதிமன்றமே இரண்டுமுறை 1992 வது ஆண்டு கொள்கை காலாவதியாகிவிட்டதால் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான உரிமை மகாராஷ்டிர மாநில அரசுக்குத்தான் உண்டு, குஜராத் மாநில அரசுக்கு இல்லை என்று குஜராத் உயர்நீதிமன்றமே அளித்த தீர்ப்பையும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்காமல் குஜராத் மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று பொய்யைக் கூறி அந்த உத்தரவைப் பெற்றுள்ளனர். எனவே இதுவொரு ஃபிராடு என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி இவர்களை விடுதலை செய்யலாம் என்பதற்கான குழுவில் இருக்கிற ஒரு உறுப்பினர் “இவர்களெல்லாம் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள், இவர்கள் குற்றங்களை ஒருபோதும் செய்திருக்க மாட்டார்கள்” என்று அதற்கான காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார். இப்போது நீதிமன்றத்தின் வழியாக இவர்களின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது. அதன் காரணமாகத்தான் கடந்த சில வாரங்களாக தொலைக்காட்சி விவாதங்களில் நேரடியாக பேசவந்த பாஜகவினர் நேற்று தலைதெரிக்க ஓடிவிட்டனர் என்பதை மக்கள் கவனிக்க வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்