தமிழ்நாட்டு பாஜக தலைவராக பொறுபேற்று இருக்கும் முன்னால் ஐபிஎஸ் அதிகாரியும் இந்நாளைய ரவுடியுமான அண்ணாமலை தொடர்ந்து பொது மேடைகளில் தன்னை ‘நானும் ரவுடிதான்’ வகையறாவாக காட்டிக்கொள்ள கடும் பிரயத்தனப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்.
சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை செந்தில் பாலாஜியை “தூக்கிப் போட்டு மிதிச்சேன்னா, பல்லு கில்லு எல்லாம் வெளியே வந்துரும். நான் எவ்வளவோ பெரிய ஃபிராடுகளை எல்லாம் பார்த்துட்டுத்தான் வந்திருக்கேன்” என ஒரு ரவுடியைப் போல பேசினார்.
இப்படி ரவுடியைப் போல பேசிவிட்டு அதே வாயால் “அகிம்சைவாதியா அரசியல் போராட்டம் நடத்திட்டு இருக்கேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அது கர்நாடக முகம். அதை இங்கே காட்ட வேண்டாம்னு நினைக்கிறேன். உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள். இதுக்கெல்லாம் பயப்படற ஆள் நான் இல்லை” என தன்னை ஒரு காந்தியவாதியாக காட்டிக் கொண்டார்.
பொறுக்கி கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்ட போது அதற்கு ஆதரவாக ட்விட்டரில் "குடும்பத்தை, அதன் தலைவர்களை விமர்சிப்பது குற்றமெனில், கருத்து சுதந்திரத்திற்கு இங்கு இடமேது, இதே அளவுகோல் பல தலைவர்களை கேலி பேசுவோருக்கு உண்டா? பொதுவாழ்க்கையில் மன உறுதி முக்கியப் பண்பு; திமுகவிற்கு அது இல்லை போல.
கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்காதீர்" என்று பதிவிட்டு பிஜேபி பொறுக்கிகளின் புகலிடம் என்பதையும் அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தாங்கள் பொங்குவோம் என்பதையும் உத்திரவாதப் படுத்தினார்.
இந்நிலையில்தான் சில நாட்களுக்கு முன்னால் தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பொறுப்பேற்றுள்ளதால் இன்னும் ஆறு மாதங்களில் அனைத்து ஊடகங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவோம்” என ஊடகங்களுக்கு பகிரங்கமாகவே அண்ணாமலை மிரட்டல் விடுத்திருக்கின்றார்.
நாம் அண்ணாமலையின் மிரட்டலை ஏதோ ஒரு கமெடி ரவுடியின் பிதற்றல் என்று எளிதாக கடந்துச் சென்றுவிட முடியாது. காரணம் இந்தியாவில் 2014-ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்றது முதல் இன்று வரை ஊடகம் மற்றும் ஊடகத்துறையினர் மீதான தாக்குதல் அதன் உச்சபட்ச அளவில் நடந்துதான் வருகின்றது. பாஜகவின் மக்கள் விரோத செயல்பாடுகளை விமர்சனம் செய்யும் பல பத்திரிகையாளர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்படுவதும் நடந்து வருகின்றது.
சில மாதங்களுக்கு முன்னால் நியூஸ் 18 தொலைக்காட்சியில் இருந்து பாஜகவின் நிர்பந்தத்தின் பேரில் சில பத்திரிகையாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதும், பணியில் இருந்து விலக நிர்பந்தம் கொடுக்கப்பட்டதும் நமக்குத் தெரியும்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவிலும் இதுதான் நிலை. ஆர்.எஸ்.எஃப் என்ற பெயரில் செயல்படும் ஒரு அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி உலகம் முழுவதிலும் ஊடக சுதந்திரத்தைக் கடுமையாக ஒடுக்கும் 37 நாடுகளின் தலைவர்களின் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அறிக்கையின் படி 2001ல் குஜராத் முதல்வராகப் பதவியேற்ற பிறகு, ஊடகங்களை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதை தனது மாநிலத்தில் செய்து பார்த்துவிட்டு, 2014ல் இருந்து அதனை இந்தியா முழுவதும் மோடி விரிவுப் படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மிகப் பெரிய ஊடகங்களை நடத்தும் பணக்காரர்களுடன் மோடி நெருக்கத்தை வளர்த்துக் கொண்டதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
2017 ஆம் ஆண்டு பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதையும் ராணா அய்யூப் , பர்கா தத் போன்ற பத்திரிகையாளர்களை கூட்டு பாலியல் வன்முறை செய்ய ஆர்எஸ்எஸ் பொறுக்கிகள் அழைப்பு விடுத்ததையும் அறிக்கை பதிவு செய்துள்ளது.
உண்மையில் நிலைமை மிக மோசமாக உள்ளதைத்தான் கள நிலவரங்கள் காட்டுகின்றன. சங்கிகள் ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் மூத்த பத்திரிகையாளர் ரதன் சிங் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காசியாபாத்தில் விக்ரம் ஜோஷி என்ற பத்திரிகையாளர் தமது இரு மகள்கள் முன்னிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
சங்கிகளின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள் நேரடியாக கைதுசெய்து சிறையில் வைப்பது அல்லது அவர்கள் மீது பெரும் எண்ணிக்கையில் வழக்குகளைத் தொடர்ந்து செயல்பட விடாமல் செய்வது, கொல்வது அல்லது அண்ணாமலை சொன்னது போல முழு ஊடகத் துறையையும் கட்டுப்படுத்துவது இதைத்தான் சங்கிகள் செய்து வருகின்றார்கள்.
இதன் உச்சக் கட்டமாகத்தான் மோடி அரசின் கேவலமான ஒட்டுக்கேட்கும் செயல்பாடுகள் தற்போது அம்பலமாகி ஊரே சிரிப்பாய் சிரித்துக் கொண்டு இருக்கின்றது.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஒ. என்ற நிறுவனத்தின் உளவு பார்க்கும் பெகாசஸ் என்ற மென்பொருளை பயன்படுத்தி மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தவைர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்ககளின் செல்போன் உரையாடல் மற்றும் தகவல் பரிமாற்றங்களை மோடி அரசு கண்காணித்திருக்கின்றது. மேலும் முன்னணி ஊடகங்கள் மற்றும் அதன் செய்தி ஆசிரியர்கள், செய்தியாளர்களின் செல்போன் உரையாடல்களும் சட்டவிரோதமாக கண்காணிக்கப்பட்டுள்ளன.
ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்டோரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது. இதில் ராகுல்காந்தி அவரது சகோதரி பிரியங்கா காந்தி, பிரசாந்த் கிஷோர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போன்றோரும் அடக்கம். தமிழ்நாட்டில் திருமுருகன் காந்தி அவர்களின் செல்போனும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது.
அடுத்தவர்களின் படுக்கையை எட்டிப் பார்ப்பதுதான் மோடி அரசின் நாகரிகமான அரசியல். தனக்கு எதிராக ஒன்றியத்தில் யாருமே சிந்திக்கக்கூடாது என்பதும் அப்படி சிந்திப்பவர்களின் செயல்பாடுகளை ஒட்டு மொத்தமாக முடக்க வேண்டும் என்பதுதான் கோழைகளின் செயல் திட்டமாக உள்ளது.
ஏற்கெனவே இந்தியாவில் உள்ள பெரும்பாலான கார்ப்ரேட் ஊடகங்கள் மோடி அரசின் ஏவல் நாய்களாகத்தான் வேலை செய்துகொண்டு இருக்கின்றன. சில சுயேச்சையான ஊடகங்களும், சுதந்திர பத்திரிகையாளர்களுமே உண்மைகளை துணிந்து எழுதியும் பேசியும் வருகின்றார்கள்.
ஆனால் அது கூட ஷூ நக்கியின் அரசியல் வாரிசுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றது. அந்த அச்சத்தால்தான் தனக்குள்ள அதிகார பலம், பண பலத்தை பயன்படுத்தி ஊடகத் துறையினரையும் சமூக செயல்பாட்டாளர்களையும் மிரட்டப் பார்க்கின்றது.
அதன் தொடர்ச்சியாகத்தான் நாம் அண்ணாமலையின் பேச்சையும் பார்க்க வேண்டும். நிச்சயமாக அவர்கள் ஊடகங்களை தங்களின் கைப்பாவையாக மாற்ற எல்லா வகையான நெருக்கடிகளையும் கொடுப்பார்கள்.
ஏற்கெனவே ஊடக விவாதங்களின் போது பாஜகவை சேர்ந்த நாராயணன், போன்றவர்கள் பகிரங்கமாகவே நெறியாளர்களுக்கும், விவாதங்களில் பங்கேற்பவர்களுக்கும் மிரட்டல் விடுத்ததும் இதனால் நாராயணன் பங்கேற்கும் விவாதத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என பலர் அறிவித்ததும் நமக்குத் தெரியும்.
இனி வரும் காலங்களில் நிலமை மிக மோசமாகலாம். ஊடக விவாதங்களுக்கு பிஜேபி ரவுடிகள் கையில் அரிவாளுடனும், பெட்ரோல் குண்டுகளுடனும் வரலாம்.
அண்ணாமலை போன்ற காமெடி ரவுடிகள் நான்கு எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு தன்னையே தமிழகத்தின் முதல்வர் என்றுகூட அறிவித்துக் கொள்ளலாம்.
காரணம், எதுவுமே நடக்காது என்று உறுதியாக சொல்லும் காலத்தை நாம் கடந்துவிட்டோம். மோடியின் காலத்தில் சாத்தியப்படாது என்று சொல்ல இந்த உலகில் என்னதான் இருக்கின்றது?.
- செ.கார்கி