கீற்றில் தேட...

2005 ஆம் ஆண்டு சொராபுதின் சேக் போலி எண்கவுண்டர் மூலமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜக தலைவர் அமித்ஷா-வை ஜூலை 2010 அன்று சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். குஜராத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி செப்டம்பர் 2012 அன்று மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் டிசம்பர் 2014 அமித்ஷாவை இந்த வழக்கில் இருந்து விடுவித்து மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து.

amitsha cartoonஇதற்கிடையில் பாஜக தலைவர் அமித் ஷா முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சொராபுதின் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்த மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிர்ஜிகோபால் ஹர்கிஷன் லோயா , 2014 நவம்பர் 30 இரவு டிசம்பர் 1 இடையிலான நேரத்தில் நாக்பூருக்கு பயணம் செய்து கொண்டிருந்த போது உயிரிழந்தார். அந்த சமயம் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகின.

இது குறித்து டிசம்பர் 2016 – டிசம்பர் 2017 காலகட்டங்களில் மேற்கொண்ட விசாரணை யில், லோயா மரணித்த போது நிலவிய சூழ்நிலைகள், குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப் படும் போது இருந்த அவரின் உடலின் நிலை குறித்து எழுந்த பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்தது. இந்த கேள்விகளுக்கான விடை தெரிய பேசிய பலரில் மகாராஷ்டிரா மாநிலம் துளே பகுதியை சேர்ந்த லோயாவின் சகோதரி மருத்துவர் அனுராதா பியானியும் ஒருவர். அப்போது அவர், மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மோகித் ஷா, ஒரு வழக்கில் சாதமாக தீர்ப்பு வழங்குவதற்காக தனக்கு ரூ.100 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக லோயா என்னிடம் கூறினார். மேலும் லோயா இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பாக லாத்தூர் மாவட்டத்தில் உள்ள எங்களது பாரம்பரிய வீட்டில் தீபாவளி கொண்டாட் டத்திற்காக அனைவரும் ஒன்று கூடியிருந்த போது இதை என்னிடம் கூறினார் என்றார். ஒரு வழக்கில் சாதமான தீர்ப்பு வழங்குவதற்காக பணம் மற்றும் மும்பையில் ஒரு வீடு லஞ்சம் தருவதாக கூறியுள்ளதாக தனது தந்தை ஹர்கிஷனிடமும் கூறியுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக அமித்ஷா விலக்கு கேட்ட போது அதை கண்டித்த மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜேடி. உப்பாத் சில வாரங்களில் இடம் மாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து ஜூன் 2014 பிரிஜிகோபால் ஹர்கிஷன் லோயா மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப் பட்டார்.

ஒரு ஆண்டிற்கும் மேலாக நீதிபதி உப்பாத் தலைமையில் இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த போது, அமித்ஷா நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் வர இயலாது எனவும் அவர் தில்லியில் வேலையாக இருக்கிறார் எனவும் அவரது தரப்பு மூலம் வாய்மொழி சமர்ப்பிப்புகள் செய்யப் பட்டதே தவிர ஒரு முறை கூட அமித்ஷா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என நீதிமன்ற பதிவுகளில் உள்ளதாக ‘அவுட்லுக்’ பத்திரிகை பிப்ரவரி 2015, செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் 2014 ஜூன் 6, நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளித்த நீதிபதி உப்பாத் தான் மிகவும் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறி ஜூன் 20 ஆம் தேதி அமித்ஷா நிச்சயமாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அமித்ஷா தரப்பிற்கு தெரிவித்தார். ஆனால் ஜூன் 20 ஆம் தேதி அமித்ஷா மீண்டும் ஆஜராகவில்லை. எந்த ஒரு காரணமும் கூறாமால் நீதிமன்றத்தில் ஆஜராவதை அமித்ஷா தவிர்த்து வருவதாகவும் இந்த வழக்கின் மறு விசாரணையை ஜூன் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் நீதிபதி உப்பாத் அறிவித்ததாக அப்போது செய்தி வெளியிட்டது. ஆனால் ஜூன் 25 ஆம் தேதி நீதிபதி உப்பாத் பூனே நீதிமன்றத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

இது சொராபுதின் வழக்கை ஆரம்பம் முதல் முடிவு வரை அதே நீதிபதிதான் நடத்த வேண்டும் என்று செப்டம்பர் 2012 உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறிய செயலாகும்.

நீதிபதியாக லோயா பதவியேற்ற சமயத்தில் இந்த வழக்கு தொடர்பாக அமித்ஷா நேரில் ஆஜராக விலக்கு அளித்தார். உப்பாத் அடுத்து வந்த லோயா, ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் அமித்ஷா ஆஜராவதற்கு விலக்கு அளித்து வருகிறார். ஆனால் இது ஒரு விதிமுறைக்காகவே இருக்கலாம். அமித்ஷா மீது உள்ள குற்றச்சாட்டுகள் வடிவமைக்கும் வரை அவர் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிப்பதாக லோயா அறிவித்தார் என அவுட்லுக் இதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

சொராபுதின் சகோதரர் ரூபாபுதின் வழக்கறிஞர் மிஹிர் தேசாய், இந்த வழக்கின் சான்றுகள், சாட்சியங்கள் , 10,000 மேற்பட்ட பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை என அனைத்தையும் பரிசீலிப்பதில் நீதிபதி லோயா மிக ஆர்வமாக இருக்கிறார். ஒரு நீதிபதியாக லோயா-விற்கு நற்பெயரை எடுத்துத் தரக்கூடிய ஒரு முக்கியமான வழக்கு இது. ஆனால் இதன் அழுத்தம் நிச்சயம் அதிகரித்து வருகிறது. நீதிமன்ற அறை எப்போதும் பதற்றத்துடன் தான் காணப்படும். அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து அமித்ஷாவை விடுவிக்கும் படி அவரது வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர். அதே சமயம் , டேப்பில் பதிவுசெய்யப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் குஜராத் மொழியில் இருந்தன. நீதிபதி லோயா மற்றும் புகார்தாரருக்கு குஜராத் மொழி தெரியாததால் , அதை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து தரும்படி கோரிக்கை வைத்தோம். ஆனால் அமித்ஷா தரப்பு வழக்கறிஞர்கள் மொழி மாற்றம் குறித்த கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல், அமித்ஷாவை இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு வலியுறுத்தினர் என தேசாய் கூறினார். புகார்தாரர் வழக்கறிஞர்கள் மிரட்டும் விதத்தில் சந்தேகத்திற்கு உரிய நபர்கள் நீதிமன்ற அறையில் இருப்பதை எனது உதவி வழக்கறிஞர்கள் பார்த்துள்ளனர்.

அக்டோபர் 30 ஆம் தேதி நடந்த விசாரணையின் போது அமித்ஷா ஏன் ஆஜராகவில்லை என நீதிபதி லோயா வினாவினார். நீங்கள் தான் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளித்தீர்கள் என அமித்ஷா தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அப்போது நீதிபதி லோயா, வழக்கு விசாரணையின் போது அவர் மாநிலத்தில் இல்லாத கரணத்தால் தான் அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளித்தேன். மகாராஷ்டிராவில் பாஜக அரசின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அமித்ஷா மும்பை சென்றுள்ளார். நிகழ்ச்சி நடந்த இடம் நீதிமன்றத்தில் இருந்து 1.5 கி.மீ., தொலைவில் தான் உள்ளது. அமித்ஷா மாநிலத்தில் இருக்கும் போது அவர் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அமித்ஷா தரப்பு வழக்கறிஞரிடம் கூறிவிட்டு , வழக்கு விசாரணையை டிசம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த வழக்கின் அழுத்தம் காரணமாக நீதிபதி லோயா எவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தார் என மும்பையில் அவருடன் தங்கியிருந்த அவரது உறவினர் நுப்பூர் கூறுகையில், நீதிமன்றத்தில் இருந்து வீட்டிற்கு திரும்ப வரும் போது மிகவும் இறுக்கமாக உள்ளது என லோயா கூறுவார் . அனைவரும் சம்பந்தப்பட்ட மிகப் பெரிய வழக்கு இது. அதிக மன அழுத்தத்தை கொடுக்க கூடியது. அரசியல் ரீதியானது வழக்கு இது என்றார்.

2010 ஜூன் முதல் செப்டம்பர் 2015 வரை மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த மோகித் ஷா, சொராபுதின் வழக்கில் சாதகமான தீர்ப்பு வழங்குவதற்காக எனக்கு ரூ.100 கோடி லஞ்சம் தருவதாக கூறினார். இரவு நேரங்களில் பொது உடையில் என்னை சந்திக்க வரும் அவர், கூடிய விரைவில் சாதமான தீர்ப்பை வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தார். இந்த தீர்ப்பு டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் வந்துவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. அந்த சமயம் வேறொரு முக்கிய செய்தி வெளியாகப் போவதால் மக்களின் பார்வை அதன் மீது தான் இருக்கும். இந்தத் தீர்ப்பு மீது இருக்காது என மோகித் ஷா தனது சகோதரரிடம் கூறியதாக அனுராதா பியாணி தெரிவித்துள்ளார்.

ஒரு வழக்கில் சாதமாக தீர்ப்பு வழங்குவதற்காக எவ்வளவு பணம் வேண்டும்? எவ்வளவு நிலம் வேண்டும்? மும்பையில் வீடு வேண்டுமா? என கேட்டு லஞ்சம் கொடுக்க முன்வருகிறார்கள். ஆனால் நான் அதை ஏற்கப்போவதில்லை. எனது ராஜினாமா கடிதத்தை அளிக்க போகிறேன். அல்லது பணி இடமாற்றம் கோரி விண்ணப்பிக்கப் போகிறேன் என நீதிபதி லோயா கூறியதாக அவரின் தந்தை ஹர்கிஷன் கூறினார்.

இந்த செய்தி ஊடகங்களில் வெளியான போது, நீதிபதி லோயா குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகள் குறித்து மோகித் ஷா மற்றும் அமித் ஷாவிடம் கேட்டதற்கு இது வரை எந்த பதிலும் இல்லை.

லோயாவின் மரணத்திற்கு பின்னர் சொராபுதின் வழக்கை விசாரிக்க நீதிபதி எம்பி.கோசவி நியமிக்கப்பட்டு 2014 டிசம்பர் 15 முதல் இந்த வழக்கை விசாரணை நடத்தி வந்தார். அப்போது அமித்ஷா தரப்பு வழக்கறிஞர்கள், அமித்ஷாவை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்க கோரி, மூன்று நாட்களாக வாதாடினர். ஆனால் சிபிஐ தரப்பு வெறும் 15 நிமிடங்களில் தனது தரப்பு வாதத்தை முடித்துக்கொண்டது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 17 விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

நீதிபதி லோயா மரணமடைந்து ஒரு மாதம் கழித்து, டிசம்பர் 30 ஆம் தேதி, அரசியல் காரணங்களுக்காக சிபிஐ அமித்ஷா மீது குற்றம்சாட்டுகிறது. அதனால் அமித்ஷா தரப்பு வாதங்களை ஏற்று அவரை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிப்பதாக நீதிபதி எம்பி.கோசவி தீர்ப்பளித்தார்.

தீர்ப்பு வெளியான அதே நாளில் தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து கிரிக்கெட் வீரர் தோனி ஓய்வு பெற்றதாக நாடு முழுவதும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் செய்தி வெளியானது. அனுராதா பியாணி கூறியது போல , ”அமித்ஷா குற்றவாளி அல்ல, அமித்ஷா குற்றவாளி அல்ல” என சிறிய எழுத்துகள் மட்டுமே திரையில் ஓடவிட்டு மட்டுமே தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டு மக்களின் பார்வை திசை திருப்பப்பட்டது.

நீதிபதி லோயா இறந்து சுமார் இரண்டரை மாதங்களுக்கு பின்னர் தான் அமித்ஷா அவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போதைய தலைமை நீதிபதி அவர்களது இல்லத்திற்கு வந்த போது, லோயா-வின் மகன் அனுஜ் 2015 பிப்ரவரி 18 தேதியிட்டு எழுதிய கடிதத்தை அவரிடம் வழங்கினார். அதில், எனக்கும் எனது குடும்பத்தினரும் இந்த அரசியல்வாதிகளால் ஆபத்து உள்ளது. அவர்களை எதிர்த்துப் போட்டி போட எனக்கு சக்தி இல்லை. எனது தந்தையின் மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணை குழு அமைக்க வேண்டும். எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என கூறியிருந்தார்.

மேலும் அனுஜ் அடுத்தடுத்து எழுதிய இரண்டு கடிதங்களில், எனக்கு எனது குடும்பத்தாரும் ஏதேனும் நேர்ந்தால், தலைமை நீதிபதி மோகித்ஷா மற்றும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தான் இதற்கு முழு பொறுப்பு என கூறியுள்ளார்.

2016 நவம்பர் நீதிபதி லோயாவின் தந்தை ஹர்கிஷனை சந்தித்த போது, எனக்கு 85 வயதாகி விட்டது. மரணத்தை பற்றி பயம் இல்லை. எங்களுக்கு நீதி வேண்டும். எனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளின் வாழ்க்கை குறித்து பயம் எனக்கு உள்ளது என லோயாவின் புகைப்படத்தை பார்த்தபடி கண்ணீர் மல்க கூறினார்.

- ‘அவுட்லுக்’