ஆர்.எஸ்.எஸ்.சின் பார்ப்பனிய சனாதனம் ஒரு அமைப்பு மட்டுமல்ல; அது ஒரு ஆபத்தான சமூகத்திற்கு எதிரான கொடூர கருத்தியல் வடிவம் என்ற தெளிவான புரிதலுக்கு ராகுல்காந்தி வந்துள்ளார். இந்திய அரசியலில் இப்படி ஒரு சித்தாந்தத்தை எதிர்த்து மக்களை அணி திரட்டும் இளம் தலைவர் ஒருவர் புறப்பட்டிருக்கிறார் என்பதே நம்மைப் பொறுத்த வரையில் ஒரு அபூர்வமான நிகழ்வு என்றே கருதுகிறோம். அவருடைய நடைப்பயணம் முழுவதிலும் அவர் கட்சி நலன், தேர்தல் வெற்றிகளைக் கடந்து ஆர்.எஸ்.எஸ். கருத்தியல் ஆபத்துகளையே முன் வைத்து, மக்களை அணி திரட்டி வருகிறார்.

“ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு நான் ஒருபோதும் போக மாட்டேன். நீங்கள் என் கழுத்தை அறுத்தாலும் நான் அங்கு செல்லமாட்டேன். எனது குடும்பத்திற்கு என்று ஒரு கொள்கை உள்ளது. அது ஒரு சிந்தனை அமைப்பைக் கொண்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகள் மீதும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் அழுத்தம் உள்ளது. பத்திரிகைகள் மீது அழுத்தம் உள்ளது. அதிகாரத்துவத்தின் மீது அழுத்தம் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீது அழுத்தம் உள்ளது. அவர்கள் நீதித்துறை மீதும் அழுத்தம் கொடுக்கிறார்கள்.

எனவே இது ஒரு அரசியல் கட்சிக்கும், மற்றொரு அரசியல் கட்சிக்கும் இடையிலான சண்டை அல்ல. அவர்களால் கைப்பற்றப்பட்ட அமைப்புகளுக்கும், எதிர்ப்போருக்கும் இடையே தான் இப்போது சண்டை” என்று அவர் தெளிவாகப் பேட்டி அளித்திருக்கிறார்.

அனைத்து அமைப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ். தாக்கம் இருப்பதை அவர் சுட்டிக் காட்டும்போது, காங்கிரசையும் அதில் உள்ளடக்கியிருக்கிறார். கட்சிக் கண்ணோட்டத்தில் தனது கட்சி என்பதற்காக விலக்கி வைக்க அவர் தயாராக இல்லை. சொல்லப் போனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஆர்.எஸ்.எஸ். பாசிசப் பார்ப்பனியக் கருத்தியலை ஏற்றுக் கொண்டுள்ள சக்திகளை எதிர்த்துத் தான் போராடி வருகிறார். கட்சித் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்க மறுப்பதற்கும் இதுவே அடிப்படை என்று கூறலாம். நேருவும், காமராசரும் காங்கிரசுக்குள்ளேயே இத்தகையப் போராட்டத்தை நடத்தியதை நாம் வரலாறுகளில் பார்க்க முடிகிறது.

இராஜாஜியின் (ஆச்சாரியார்) குலக் கல்விக்கு எதிராக மக்கள் கல்வியை முன் வைத்தவர் காமராசர். இராஜேந்திர பிரசாத், பட்டேல்களின் இந்துத்துவத்துக்கு எதிராக மதச் சார்பின்மையை உயர்த்திப் பிடித்தார் நேரு. அவ்வப்போது காந்தியின் ‘குழப்பங்களையும்’ அவர் எதிர்கொள்ள நேர்ந்தாலும் காந்தியை ‘இந்துத்துவ’ அணிக்குள் அவர் பொருத்திப் பார்க்கவில்லை. ஒரு கட்டத்தில் காந்தியே குழப்பங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றபோது தான் கோட்சேயின் துப்பாக்கிக் குண்டுகள் காந்தியின் உயிரையே பறித்தது.

நீண்ட காலத்துக்குப் பிறகு காங்கிரசுக்குள்ளேயே பார்ப்பனிய எதிர்ப்பு என்ற சங்கிகளின் சனாதன எதிர்பார்ப்பு கருத்தியல் பேராட்டமாக உயிர் பெறத் தொடங்கியிருக்கிறது. அதற்கு ராகுல் காந்தி தலைமை ஏற்க முன் வந்திருக்கிறார். ராகுல் காந்தியின் இந்தப் போராட்டத்தை சனாதன எதிர்ப்பு சக்திகள் வலுவூட்ட வேண்டியது அவசியமாகும்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It