பெரியார் பல்கலைக்கழக முறைகேடுகள் மீதான விசாரணை வரவேற்கத்தக்கது என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை விடுத்துள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே பணி நியமனம் போன்றவற்றில் இட ஒதுக்கீட்டு விதிகளைப் பின்பற்றாமை, விதிகளை மீறி பாரபட்சமாய் நடந்து கொள்ளுதல், உரிமை கேட்போரை இடைநீக்கம், பணி நீக்கம் செய்தல் போன்ற நடவடிக்கைகளையும் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் பல ஆர்ப்பாட்டங்களை பல்கலைக்கழகத்திற்கு முன் கடந்த காலங்களில் நடத்தி இருக்கிறது.

மேலும் பெரியார் பல்கலைக் கழகத்தில் நடக்கும் முறைகேடுகளை விளக்கி அரசுக்கும் உயர்கல்வி துறைக்கும் பல்வேறு முறையீட்டு மனுக்களையும் அனுப்பி இருக்கிறது.

1)           அண்மையில் நடந்த உடற்கல்வி இயக்குனர், நூலகர் போன்ற பணி நியமனங்களில் சுழற்சி முறையைப் பின்பற்றாமல் நியமனம் செய்தது.

2)           போலியான கல்விச் சான்றிதழ்கள் என தெரிந்தும் போலி சான்றிதழ் அளித்தவர் களையே பணியில் அமர்த்தியது.

3)           துறைத்தலைவர்களை சுழற்சி முறையில் நியமிக்காதது.

4)           துணைவேந்தர் முன்னரே முடிவு செய்தவர்களை பணி நியமனம் செய்தது

5)           இந்துத்துவ ஆதரவு பரப்புரைகளில், செயல் பாடுகளில் ஈடுபடுவதை துணைவேந்தரே ஊக்குவிப்பது,தாமே ஈடுபடுவது போன்ற பல குற்றச்சாட்டுகள் விவாதத்திற்கு வந்திருக்கின்றன.

இப்போது அவற்றை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக உயர்கல்வித்துறையின் கூடுதல் செயலாளர், இணைச் செயலாளர் ஆகியோரை உள்ளடக்கிய விசாரணைக் குழுவை நியமித்திருக்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

இந்த விசாரணைக் குழு முன்னர் எழுப்பப் பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும், உரிமைக்கு குரல் கொடுத்த ஆசிரியர் சங்கப் பொறுப்பாளரை - பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்ததையும் விசாரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறோம்.

மேலும் விசாரணை முடிந்ததும் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைக்கிறோம்.

ஆணையத்தின் இந்த விசாரணையும் அதன் அடிப்படையிலான நடவடிக்கைகளும் ஆளுநரின் ஆதரவு இருக்கிறது என்ற ஆணவத்தோடு நடந்து கொள்ளும் துணை வேந்தரின் போக்குக்கும், பெரியார் பல்கலைக் கழக முறைகேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் நம்புகிறோம்” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Pin It