நான் முஸ்லிமானால் என்ன?
நீ இந்துவானால் என்ன?
உன் கோவில் முன் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்கள்
இந்துவாக இருந்தாலும் நீ மார்போடு தழுவப் போவதில்லை;
பக்கிரிகள் முஸ்லிமானாலும் நான் கட்டியணைக்க போவதில்லை!

நீ எத்தனை விரதங்கள் இருந்தால் என்ன?
நான் எத்தனை நோன்புகள் நோற்றாலென்ன ?
நீ வரி கேட்பதற்கு எந்த பிரிவுகளைத் தேடுவாயோ
நானும் அதே பிரிவுகளைப் பின்பற்றுகிறேன்.
உனது மந்திரங்கள் சமஸ்கிருதம் ஆனாலும்
எனது ஸமூராக்கள் அராபியானாலும்
நமது பிள்ளைகளின் ஆங்கில வழி படிப்பை நிறுத்தும்
துணிவு உனக்குமில்லை எனக்குமில்லை!

உனது கோயிலுக்குப் போகும் பாதையில்
எந்தக் குண்டும் குழியுமான சாலையில்
முட்டி மோதி போவாயோ,
நானும் அதே கருங்கல் மிதக்கும்
மட்டமான சாலையில் மசூதிக்குப் போவேன்!

நீ பண்டிகைகளுக்கு எந்த சைவ சமையல் செய்தாலும்,
எனது பண்டிகைகளுக்கு
எந்த அசைவ சமையல் சமைத்தாலும்
மளிகைக் கடையில் விலைப்பட்டியல்
இருவரையும் பயமுறுத்தக் கூடியதாகத் தான் இருக்கிறது!

உனது கண் புருவ நடுவில்
பெரிய பொட்டு வைத்தாலும் கூட
எனது கண்களில்
சுருமா பூசினாலும்கூட
எனது கண்களுக்கும்
எந்த கலப்படமும் தெரியாமல்
நமது வாழ்க்கை ஏமாற்றமாகவே கழிகிறது!

நீ நதிகளில் புனித நீராட நினைத்தாலும்,
நான் நதிகளின் கரைகளில் எந்த மசூதியில் ‘ஓலு ' செய்ய விரும்பினாலும்
அசுத்தமாகி வறண்டு போகின்ற இந்த சகதியன்றி நமக்கு போக்கிடம் ஏதுமில்லை!

நீ எந்த பானகம் செய்ய விழைந்தாலும்,
நான் எந்த பாயாசம் செய்ய விரும்பினாலும்
நம் இருவரின் வாழ்க்கையும்
தண்ணீர் கேனுக்காக காத்திருக்கும் படியாகவே உள்ளது!

நீ வாஸ்து பார்த்து வீடு கட்டினாலும்,
நான் வாஸ்து இல்லாமல் வீடு கட்டினாலும்
நம் வீடுகளில் முன்னோடும் சாக்கடை
நமது பொறுமையை சோதித்துக் கொண்டே இருக்கிறது!
புண்ணிய தேசமென்று நீ நினைத்தாலும் கூட
நான் ‘சாரே ஜஹாஸே அச்சா ' என்று பாடினாலும் கூட
சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாமல் மாசினால்
இருவரும் மூக்கை பொத்திக்கொண்டு அலைந்து திரிகிறோம்!

நாளும் கோமியம் குடித்தாலும் உனக்கு
ஊதியம் எவனும் கொடுக்க மாட்டான்;
புனித ஜம்ஜம் நீரை குடித்தாலும்
எவனும் எனக்கு சம்பளம் தர மாட்டான்.
அந்த தாடிக்கார அரேபியனின் தேசத்துக்கு நான் போனாலும்
இதுவே 'புண்ணிய பாரதம்' என்று நீ நினைத்தாலும்
நாம் வியர்வை சிந்தாமல் நமக்கு எவனும் உணவு வழங்கமாட்டான்!

நீ எந்த பண்டிகை நவராத்திரிகள் கொண்டாடினாலும்
நான் எந்த பண்டிகை மாதங்கள் கொண்டாடினாலும்,
கருப்புப் பணக் கொள்ளையர்களை
எந்த ஆட்சியாளரும் முற்றாகப் பிடிக்கவில்லை என்று ஒப்புக் கொள்வோம்!

உனது சடங்குகளின் படி பெண்ணுக்குத் திருமணம் செய்தாலும்
எனது முறைப்படி மகளுக்கு நிக்காஹ் செய்தாலும்
மனதுக்குள் நல்ல மாப்பிள்ளை கிடைப்பானா? இல்லையோ? என்று
பயந்து கொண்டு தேடுவோம் இருவரும்!

நம் இருவருக்கும் தெரியும்,
மழைக் காலம் வருகிறதென்றால் காகித படகின் ஆனந்தம் போய்
நமது குடியிருப்புகள் எப்போது மூழ்கும் என்கிற கவலை உனக்கும்
இருக்கிறது எனக்கும் இருக்கிறது!

நம் இருவருக்கும் தெரியும்,
எனது கஜல் காவாலி பாடல்களை போலவே
உனது இனிய ஆலாபனையும் ஏதோ ஆபத்தில் இருக்கிறது;
நம் இருவரின் குரல்களை ஏதோ ஒரு அரசியல் ஆக்கிரமிப்பு செய்யப் போகிறது!

நாம் இருவருக்கும் தெரியும்
நான் முஸ்லிமானால் என்ன?
நீ இந்துவானால் என்ன?
நாம் இருவரும் ஒப்புக் கொள்ளக்கூடிய உண்மை ஒன்று மட்டும் இருக்கிறது
நீ அமெரிக்கா போனாலும்
நான் அரேபியா போனாலும்
நாம் எல்லோரும் இந்தியர்கள்!
இந்து முஸ்லிம் சகோதரர்கள்!

ஆகையால் அரசியல் தலைவர்களின் சுயநலத்துக்காக
நாமேன் ஒருவரை ஒருவர் வசை பாட வேண்டும்?

தெலுங்கு மூலம்: ஸைக் அலி கோரி ஸய்யத்

தமிழில்: பா. ஆனந்தகுமார்

(அக்டோபர்- நவம்பர், 2022 மாத ‘தாமரை' இதழ்)

Pin It