இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது கல்வி என்பது மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. நேரு காலத்தில் கல்விக்கான ஏ.என்.முதலியார் குழு அமைக்கப்பட்டது. அதன்பின் லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் கோத்தாரி குழு அமைக்கப்பட்டது. கோத்தாரி குழு உலகின் பல்வேறு தலை சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வியாளர்களின் கருத்துகளைக் கேட்டுத்தான் அறிக்கையைக் கொடுத்தது. கோத்தாரி கமிஷனின் முதன்மையான பரிந்துரை, கல்வி மொழியோடும் பண்பாடோடும் தொடர்புடையது என்பதால் கல்வியை எக்காரணத்தைக் கொண்டும் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றக்கூடாது என்பதாகும். ஆனால் நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்ட போது டெல்லியில் உள்ள உயர் ஜாதி அதிகாரிகளால் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
தமிழ்நாட்டின் கல்விக் கட்டுமானம் என்பது, நீதிக்கட்சி ஆட்சிக் காலம் தொட்டு, கல்வி வள்ளல் காமராஜர், நெ.து.சுந்தரவடிவேலு ஆகியோரைத் தொடர்ந்து அண்ணா, கலைஞர் போன்றோர் பார்த்து பார்த்து உருவாக்கியது. அதிகப் பல்கலைக்கழகங்களை கலைஞர் உருவாக்கினார். அதன்பின் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்திலும் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. இவையெல்லாம் மாநிலப் பல்கலைக்கழகங்கள். கல்வி நெறிக் காவலராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலு அவர்களை, கலைஞர் சென்னைப் பல்கலைக்கழ்கத் துணைவேந்தர் ஆக்கினார்.
துணைவேந்தர் தகுதியை அன்று முதலமைச்சர்தான் முடிவு செய்தார். அய்யா நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் கல்வித் துறையில் அனுபவம் கொண்டவரே தவிர பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர் இல்லை. இன்று மத்திய அரசின் யுஜிசி என்ற பெயரில் துணைவேந்தர்கள் தகுதியை நிர்ணயிப்பது, மாநில அரசின் உரிமைகளில் கை வைப்பதாகும். இன்று கல்லூரிகளில் முதல்வர்களைத் தேர்ந்தெடுப்பதற்குக் கூட அவர்கள்தான் கட்டளை இடுகிறார்கள். ஆனால் அவர்கள் பள்ளிக்கல்விக்காகவும், உயர் கல்விக்காகவும் கொடுக்கிற நிதிஉதவி எவ்வளவு?
2019-2020 புள்ளி விவரப்படி நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் ஒரு விழுக்காடு கூட கொடுக்கவில்லை. அந்த ஒரு விழுக்காட்டிலும் கூட மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு 90 சதவீதம் செலவு செய்து விடுகிறார்கள். ஆனால் பொருளாதார ஆய்வறிக்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% கொடுக்கப்படுகிறது என்று மத்திய அரசு போட்டுக் கொள்கிறது. மாநில அரசு செய்யும் செலவையும் சேர்த்து அவர்கள் போட்டுக் கொள்கிறார்கள்.
யுஜிசி என்ற பெயரில் பல்கலைக்கழகங்களின் ஆய்வுப் படிப்புக்கான உதவித்தொகை வழங்கும் உரிமையைத் துணைவேந்தரிடம் இருந்து பறித்தார்கள். இப்படி மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரங்களை ஒவ்வொன்றாக பறித்தவர்கள் இப்போது துணைவேந்தரையே பறிக்கிறார்கள்.
இந்த நான்கு ஆண்டுகளில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை ஆளுநரிடம் விட்டுவிட்டார்கள். கலைஞர் ஆட்சியில் இருந்தபோது கலைஞர் சொல்பவர்தான் துணைவேந்தராக இருந்தார். ஜெயலலிதா ஆட்சியின் போதும் கூட அப்படித்தான் இருந்தது. முதலமைச்சரே பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக முடியும் என்று ஒரு சட்டத்தைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மாநிலத்தின் உரிமையை, எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தார், திராவிட இயக்கத்திற்கு விரோதமாக, துணைவேந்தர் பதவியை ஆளுநருக்கு விட்டுக் கொடுத்து விட்டார்கள். அதன் விளைவு என்ன?
திருவள்ளுவர் பல்கலைகழகத்திற்கு ஒருவரைத் துணை வேந்தராக நியமித்தார்கள். அவர் பாஜகவின் கையாளாகச் செயல்பட்டார். அங்கு பூஜை எல்லாம் செய்ய வேண்டும் என்று சொன்னார். அதேபோல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் கஸ்தூரி, பெண்களை வைத்துப் பூஜை நடத்த முயற்சி செய்தார். அதை நான் வெளிப்படையாக முகநூலில் பகிர்ந்தபின் ஆசிரியர் வீரமணி அவர்கள் அதனைக் கையில் எடுத்து, பின்னர் கல்வித்துறை அதை நிறுத்தியது. பெரியார் பல்கலைக்கழகத்திலும் இதேபோல் நடந்தது. அப்போதும் ஆசிரியர் அவர்கள் அதில் தலையிட்டு, பின்னர் தடுத்து நிறுத்தப்பட்டது. இவர்கள் துணைவேந்தராக நியமிப்பவர்களெல்லாம் பாஜகவின் கையாளாக இருப்பவர்களைத்தான். தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. பாஜகவின் எடுபிடிகள்தான் துணைவேந்தர்களாக இந்த நான்கு ஆண்டுகளாக ஆளுநரால் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆளுநருக்கு அதற்கு அதிகாரம் கிடையாது. நமது அரசியல் சட்டப்படி பார்த்தால், கேபினட் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்து, அந்தக் குழுவின் பரிந்துரைக்கு ஒப்புதல் கொடுத்தால், அதற்கு ஆளுநர் கையொப்பம் இட வேண்டும்.
இப்போது என்ன செய்திருக்கிறார்கள் பாலகுருசாமியை அதுபோன்ற ஒரு குழுவிற்குத் தலைமையாகப் போட்டிருக்கிறார்கள். அவர் வெளிப்படையாக புதிய கல்விக் கொள்கையை ஆதரிப்பவர். தமிழ்நாடு அரசு அதை ஏற்க வேண்டும் என்று சொல்பவர். இவரிடம் எதற்காக ஆளுநர், பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்?
தமிழ்நாட்டின் பல பல்கலைக்கழகங்கள் நிதி பற்றாக்குறையால் பெரும் சோதனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அதை நிவர்த்தி செய்வதற்கு ஒன்றிய அரசு இதுவரை எந்த முயற்சியும் செய்யவில்லை. அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்களுடைய இந்துத்துவக் கொள்கைகளை உள்ளே புகுத்துவதற்கு நடத்தப்படுகிற ஒரு கேவலமான சதியாகவே இது இருக்கிறது.
இப்போதுகூட முதலமைச்சர் அவர்கள் கேபினட் மூலம் ஒரு குழு அமைத்து, இவரைத்தான் துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என்று சொன்னால், ஆளுநர் அவரைத்தான் நியமிக்க வேண்டும். இதை அரசிடம் கொண்டு செல்ல வேண்டும். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தபோது அவர் கேபினப் மூலம் பரிந்துரை செய்வார், ஆளுநர் கையொப்பம் இடுவார். கேபினட் ஒப்புதல் அளிக்கும் முடிவுகளை ஆளுநர் மறுக்க முடியாது.
மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தை மாநிலங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஆளுநராக இருந்த பி.சி.அலெக்சாண்டர் அவர்களே சொல்லியிருக்கிறார். மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு மாநில அரசுதான் துணைவேந்தர்களை முடிவு செய்ய வேண்டுமேயொழிய, ஆளுநர் முடிவெடுப்பது சட்டவிரோதம். இப்போது இருக்கிற அதிகாரத்திற்கு உட்பட்டு கூட அது விரோதமான செயலாகும். மாநிலப் பல்கலைக்கழகங்களுக்குக் கொடுக்க வேண்டிய நிதியைத் தராமல் தங்களுக்கு வேண்டியவர்களைத் துணைவேந்தராக ஆளுநர் மூலம் நியமிப்பது அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயல். கூட்டாட்சிக்கு விரோதமான செயல்.
- பேராசிரியர் மு.நாகநாதன், மாநிலத் திட்டக் குழு முன்னாள் துணைத்தலைவர்