திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் b&w tamil youtube சேனலுக்கு அளித்த நேர்காணலில், மேதகு பிரபாகரன் பெரியார் கொள்கைகளையே ஈழத்தில் செயல்படுத்தினார் என்பதை விரிவாக விளக்கினார் .

நெறியாளர் : 2006-இல் ஈழத்துக்கு ஒரு மாதம்‌ சென்று வந்தீர்களே, அந்த நட்பு எப்படி உருவானது‌?

பொதுச்செயலாளர்: 2006-க்கு முன்பு தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு இணைந்து பல்வேறு களப்பணிகள், அரசியல் பணிகள் செய்திருக்கிறோம். அதன்காரணமாக அவர்களோடு நெருக்கமான நட்பு ஏற்பட்டது. குறிப்பாக 1982,1983 ஆண்டுகாலத்தில் ‘விடுதலை’ பத்திரிகையில் நான் பொறுப்பில் இருந்தேன். தமிழீழ விடுதலைப்புலிகள் ஆதரவு தேடி தமிழ்நாடு வந்த காலகட்டம் அது.

அப்போது அவர்கள் எங்களோடு நெருக்கமாக இருந்தார்கள். பல்வேறு குழுக்கள் தமிழ்நாட்டிற்கு வந்தார்கள். அதில் விடுதலைப் புலிகள் இயக்கம் தான்‌ சரியான‌ இயக்கம் என்று நாங்கள் தேர்ந்தெடுத்து அந்த இயக்கத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, அப்போது திராவிடர் கழகத்தில் இருந்த தோழர்கள் கொளத்தூர் மணி, கோவை இராமகிருஷ்ணன், நான் உட்பட‌ எல்லோரும் இணைந்து விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவுக்‌ கரம் நீட்டினோம். அந்த காலகட்டத்தில் ‘விடுதலை’ பத்திரிகையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வமான ஏடு போல, அவர்களுடைய செய்திகள் முதன்மையாக வெளிவந்து கொண்டிருந்தன.

அப்போது அரசியல் பிரிவு பொறுப்பாளராக செயல்பட்ட ‘பேபி சுப்பிரமணியம்’ என்ற‌ விடுதலைப்புலி தோழர்‌ பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவர் அவர்தான் இங்கே அரசியல் பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டார். அவர்‌ எங்கள் திராவிடர் கழகத்தோடும், என்னோடும், நெருக்கமானத் தொடர்பில் இருந்தார்‌. பேபி சுப்பிரமணியம் என்னுடைய‌ இல்லத்திலேயே, 9 ஆண்டுகள் குடும்ப உறுப்பினராகவே தங்கி இருந்தார். கிட்டத்தட்ட என்னுடைய இல்லம் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு அலுவலகமாகவே இருந்தது. கிட்டு அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வந்தபோது வீட்டிலிருந்த சுவரொட்டிகள், பதாகைகள் பார்த்து, “இது என்ன புலிகளின் அலுவலகமா என்ன?” என்று கேட்டார்‌. இந்த இல்லத்தை அரசியல் பிரிவு அலுவலகமாக நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று பேபி சுப்பிரமணியம் சொன்னார். எங்களுடன் இணைந்து பல தோழர்கள் இந்த களப்பணியில் அப்போது ஈடுப்பட்டார்கள் .

நெறியாளர் : பேபி சுப்பிரமணியம் தங்கி இருந்த காலக்கட்டம் எது?

பொதுச்செயலாளர்: 1982-1990 வரை அவர் தங்கி இருந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை நடப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே அவர்‌ ஈழத்துக்கு பயணப்பட்டார். பிரேமதாச இலங்கை அதிபராக இருந்த காலக்கட்டம். அப்போது ஒரு சமாதானம் அரசுக்கும்‌ புலிகளுக்கும்‌ இடையில் ஏற்பட்டது. இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும்‌ இணைந்து ஈழத்தில் இருந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதற்குப் போராடிய‌ காலம்கட்டம். அந்தச் சூழலில் அவர்‌ ஈழத்துக்குச் சென்றார். நாங்கள் கடற்கரை வரை சென்று படகில் வழி அனுப்பினோம்.

நெறியாளர் : அன்றைக்கு தமிழீழ விடுதலைக்குப் பாடுபட்ட பல குழுக்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும் கூட எப்படி விடுதலைப்புலிகள்தான்‌ சரியான இயக்கம் என்று அடையாளம் கண்டு ஆதரித்தீர்கள்?

பொதுச்செயலாளர்: ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ், டெலோ, புளோட் என்ற‌ குழுக்கள் இருந்தன. விடுதலைப் புலிகளின் கடந்த கால வரலாறுகளையும், செயல்பாட்டின் நேர்மைகளையும், கொள்கை வெளியீடுகளையும் அறிந்தபோது இருந்த குழுக்களில் விடுதலைப்புலிகள் தான் சரியான‌ இயக்கம் என்று நாங்கள் அடையாளம் கண்டு ஆதரித்தோம்‌. பழ.நெடுமாறன்‌ அவர்களும் ஆதரித்தார். அனைத்துக் குழுக்களும்‌ ஒன்றாக சேர‌ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த வைகோ, அதற்குப் பின்னர் விடுதலைப்புலிகள்தான்‌ சரியான‌ இயக்கம் என்ற‌ முடிவுக்கு வந்தார்.

1990-களில் பேபி சுப்பிரமணியம் அவர்கள் ஈழத்துக்கு சென்ற பிறகு முதலில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூற்றாண்டு‌ விழா எடுக்கப் போகிறோம், நீங்களும் கவிஞர் இன்குலாப் மற்றும் பெரியாரிய தோழர்களும் விழாவுக்கு வரத் தயாராக இருங்கள் என்று கூறிவிட்டுத்தான் ஈழத்துக்கே பயணப்பட்டார். ஈழத்துக்குப் போன‌ சில மாதங்களிலேயே சூழ்நிலை மாறிவிட்டது. போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்து விட்டன.

நெறியாளர் : நீங்கள் எப்போது ஈழத்துக்குப் பயணப்பட்டீர்கள்?

பொதுச்செயலாளர்: நார்வே ஒப்பந்தத்தின்‌ கீழ் போர்‌ நிறுத்தம் ஏற்பட்ட அந்த காலகட்டத்தில்தான், நான்‌ 2006 ஏப்ரல் மாதம் 12 தேதி பேபி சுப்பிரமணியம் அழைப்பை ஏற்று ஈழத்துக்கு சென்றேன்‌. அப்போது போர் நிறுத்த சமாதான‌ ஒப்பந்தம் முடிவுக்கு நெருங்கிக் கொண்டு இருந்த காலமும் கூட. நான்‌ கிளிநொச்சியில் தங்கி இருந்தேன். அப்போது, பேபி சுப்பிரமணியம் மற்றும் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோருடன் இணைந்து மேதகு‌ பிரபாகரனை இரண்டு முறை சந்தித்தேன்.

தங்கி இருக்கும்போதே போர் மேகங்கள் சூழ ஆரம்பித்து விட்டன. சிங்கள இராணுவத் தளபதி பொன்சேகா மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலைத் தொடந்து, உடனே தமிழீழப் பகுதிக்கும் சிங்களப் பகுதிக்கும் இருந்த எல்லைப் பகுதிகள் துண்டிக்கப்பட்டன. நான்‌ தமிழ்நாடு‌ திரும்பிப் போக முடியாத சூழல் ஏற்பட்டது. சமாதான உடன்படிக்கை இருந்த காரணத்தினால்‌ ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு வழியாக‌ வழி திறக்கப்பட்டது. நான் கிளிநொச்சியில் இருந்து கொழும்புக்கு வந்து விமானத்துக்கு செல்ல வேண்டும். தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்ததன் காரணமாக வழிநெடுக‌ கடுமையான சிங்கள இராணுவத்தினுடைய‌ சோதனைகள் நடந்து கொண்டு இருந்தன.

அப்போது என்னை பத்திரமாக கொழும்புக்கு அனுப்பி வைக்க விடுதலைப்புலிகள் ஒரு ஏற்பாடு செய்தனர். இலங்கை அரசாங்கத்திலேயே பணியாற்றும்‌ ஒரு தமிழ் IAS அதிகாரி இருந்தார். அவர் விடுதலைப்புலிகளுக்கு மறைமுகமாக ஆதரவாக இருந்தார். தமிழ் IAS அதிகாரிக்கு வழங்கப்பட்டிருந்த சிங்கள அரசின் அடையாளம் பொறிக்கப்பட்ட அரசு வாகனத்தில், சிங்களம் தெரிந்த ஓட்டுநரை எனக்காக ஏற்பாடு செய்தனர். வழிநெடுகிலும் சிங்கள இராணுவத்தின் விசாரணை நடந்தது, சிங்களம்‌ தெரிந்த ஒட்டுநர்‌ அவர்களிடம் சிங்கள மொழி பேசி கெடுபிடியில் இருந்து என்னை பாதுகாப்பாக கொழும்பு விமான நிலையம் வரை கொண்டு சேர்த்தார். 2006 மே மாதம் 7-ஆம் தேதி சென்னை திரும்பினேன். ஏறக்குறைய 25 நாட்கள் நான் கிளிநொச்சியில் தங்கி இருந்தேன்.

குறிப்பாக நான் ஈழத்துக்கு சென்றபோது கிளிநொச்சியைத் தலைமையகமாகக் கொண்டு விடுதலைப்புலிகளின்‌ ஆட்சியே நடைபெற்றது. அந்த ஆட்சி எப்படி நடந்தது என்பது குறித்து நான்‌ பார்த்த காட்சிகளை, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு சொல்ல வேண்டிய‌ தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.

பெரியாருக்கும் பிரபாகரனுக்கும்‌ ஏதோ முரண்பாடுகள் இருப்பதைப் போல சில நபர்கள் பேசி வருகிறார்கள். இது அப்பட்டமான பொய் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.உண்மையில் பிரபாகரன் பெரியார்‌ கொள்கையில் மிகவும் ஈர்க்கப்பட்டு இருந்தார். அவர் தமிழ்நாட்டிற்கு முதலில் வந்தபோது அவருக்கு இறை நம்பிக்கை இருந்தது. திருப்போரூரில் இருக்கிற முருகன் கோவிலில்தான் திருமணம் செய்தார்.

அதற்குப் பிறகு, முதன்‌முதலாக வெளிநாட்டில் இருந்து வெற்றிகரமாக சென்னை துறைமுகத்திற்கு ஆயுதங்கள் பத்திரமாக வந்து சேர்ந்தபோது, அதற்காக பழனி‌முருகன் கோவிலில் மொட்டை அடித்துக் கொண்டார். அப்போதே அவருடன் நெருக்கமாக இருந்த தோழர் ஆறுச்சாமி போன்ற பெரியாரிய இயக்க தோழர்கள், “மொட்டை அடித்தால் எல்லாம் சரியாய் போய்டுமா?” என பிரபாகரனுடன் கேலி பேசுவார்கள்.

இந்த கிண்டல்களை அவர் எளிமையாக எடுத்துக்கொண்டு தான் பேசினார். அப்போது மேதகு பிரபாகரன் சொன்னது, “அப்படியெல்லாம் இல்லை எதோ ஒரு நம்பிக்கையில் நான்‌ இருக்கிறேன் அவ்வளவு தான்” என்றார்.

பெரியார் இயக்கத் தோழர்களுடன்‌ மிக நெருக்கமாக உரையாடினார். பெரியார் கொள்கைகளை விவாதிப்பார். விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு பெரியார் உணர்வாளர்கள் செய்த அற்பணிப்பான உதவிகள் மேதகு பிரபாகரனை மிகவும் ஈர்த்தன. கொளத்தூர் மணி அவர்களின் தோட்டத்தில்தான் மூன்று ஆண்டுகள் விடுதலைப்புலிகளின்‌ இராணுவப் பயிற்சி நடந்தது. அதற்கான‌ முழுச் செலவையும் கொளத்தூர் மணி அவர்கள் நன்கொடையாகவே பெற்று இராணுவ பயிற்சிக்கு உதவினார். சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் பயிற்சிக் காலம் முழுவதும் தேவையான முட்டைகளை, அவரின் சொந்த செலவிலேயே வழங்கினார். புலிகளுக்கு உதவியதற்காக அவரும், அவரின் கணவரும் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு உச்சநீதிமன்றம் வழியாக விடுதலை செய்யப்பட்டனர்.

பெரியார் இயக்கத் தோழர்கள் விடுதலைப்புலிகளின்‌ வரலாற்று கண்காட்சிகள், நிதி திரட்டல், பரப்புரை செய்தல் என்று பல்வேறு உதவிகளை பரப்புரையாகவும், கலை இயக்கியமாகவும்‌, நாடகம் நிகழ்த்தல் மூலமாகவும் தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கு மேலாக‌ முழு நேரமாகச் செய்தனர். தோழர்கள்‌ அர்ப்பணிப்பை உணர்ந்து, பெரியாரிய‌ சிந்தனையின் தொடர்ச்சியாக அவர் முழு பகுத்தறிவாளராகவே பரிணமித்தார். கடவுள், மத, ஆன்மா நம்பிக்கைகளில் அவருடைய நிலைப்பாடு என்ன என்பதைப் பற்றி ஆயிரம் உதாரணங்கள் சொல்ல முடியும். அருட்தந்தை ஜெகத் கஸ்பர் வன்னியில் கடைசியாக பிரபாகரனுடன் ஒரு பேட்டி எடுக்கிறார்‌. அந்த பேட்டியை சில ஆண்டுகளுக்கு முன்பு‌ பொது வெளியில் வெளியிட்டிருக்கிறார்.

அந்த‌ பேட்டியில் ஜெகத் கஸ்பர் ஒரு கேள்வியைக் கேட்கிறார். “உங்கள் மரணத் தருவாயில் துப்பாக்கி முனையைக் காட்டி நீங்க சாகப் போகிற நேரத்தில் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை வருமா? கடவுளே என்று வேண்டுவீர்களா?” என்று கேட்டார். “அப்படி கடவுளை நினைக்க மாட்டேன். மரணம் என்னும் இயற்கை என்னுடைய‌ வாழ்க்கையை முடித்து விட்டது என்றுதான் கருதுவேன்” என்று உடனடியாக பிரபாகரன் பதிலளித்தார்.

இரண்டாவதாக விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக மத அடையாளங்களை ஒதுக்கி வைத்தது. விடுதலைப்புலிகள் நடத்திய அலுவலகங்கள், கல்வி அலுவலங்கள் தொலைக்காட்சி அலுவலகங்கள், பயிற்சி அலுவலகங்கள், உணவகங்கள் உள்ளிட்ட எந்த ஒரு இடத்திலும் எந்த ஒரு கடவுள் படமும் கிடையாது. மேதகு பிரபாகரனின் ஈழ விடுதலை தொடர்பான கருத்துக்கள் மட்டும் தான் பொறிக்கப்பட்டிருக்கும். அதேபோல, வீரச்சாவு அடைந்த போரளிகளுக்கான நிகழ்ச்சிகள் எப்படி நடக்கும் என்று சொன்னால், அவர்களுக்கு வேத மந்திரங்கள் சொல்வது, மோட்சம் செல்ல வழி செய்வது போன்ற‌ மத சடங்குகள் எதுவும் இல்லாமல் இராணுவ அணிவகுப்போடு‌ துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அவர்கள்‌ புதைக்கப்பட்டார்கள்.

இறந்த பிறகு ஆன்மா மோட்சத்துக்கு போக வேண்டும் என்று, மறைந்த இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு கூட இந்தியாவில் சடங்கு செய்யப்படுகிறது. சடங்குகள்‌ செய்யப்பட்ட பின்னர்தான்‌ இராணுவ மரியாதை தரப்படுகிறது இந்தியாவில்.

ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அந்த சடங்குகள் முற்றிலும் கிடையாது. இந்த ஆன்மா மோட்சத்துக்கு போய்‌ சுற்றிக்கொண்டு இருக்கிறது என்ற கோட்பாட்டை புலிகள் மறுத்து இந்த போராளிகள்‌ விண்ணுக்கு போகவில்லை. ஆனால் எங்கள் மண்ணில் விதைக்கப்படுகிறார்கள் என்ற கோட்பாட்டையே பின்பற்றினார்கள்.

(தொடரும்)