தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களில், வசிப்பிடத்தின் அடிப்படையில் உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், வசிப்பிடத்தின் அடிப்படையில் உள்ஒதுக்கீடு வழங்குவது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, 2019-இல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றமும் முதுநிலை படிப்புகளில், வசிப்பிடத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று ஜனவரி 30-ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள இத்தீர்ப்பால் தமிழ்நாடு பின்பற்றி வரும் 69% இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பலமான மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு இத்தீர்ப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மருத்துவ முதுகலை படிப்பில் 2 ஆயிரத்து 294 இடங்கள் இருக்கின்றன. அதில் இடஒதுக்கீட்டின்படி ஒன்றிய அரசு 50 விழுக்காடு இடங்களையும், தமிழ்நாடு அரசு 50 விழுக்காடு இடங்களையும் நிரப்பி வருகிறது. அதன்படி பார்த்தால் தமிழ்நாடு அரசின் வசம் சுமார் 1,200 இடங்கள் உள்ளன. தற்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பால் அந்த 1,200 இடங்களையும் பறிகொடுக்க நேரிடும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மருத்துவ சேவைகள் என்பது மற்ற மாநிலங்களைப் போல நகரங்களில் மட்டும் கிடைக்கக்கூடிய ஒன்றல்ல. ஒவ்வொரு 5 கிலோ மீட்டருக்குள்ளும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கும். அங்கே தங்கி 2 ஆண்டுகளுக்கு மருத்துவ சேவை புரியும் மருத்துவர்களுக்கு உயர்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. கிராம அளவில் மருத்துவ சேவையை முறையாக வழங்கவும், மருத்துவர்களிடத்தில் சேவை மனப்பான்மையை வளர்க்கவும் இத்தகைய முயற்சிகள் பலன் தந்திருக்கின்றன. ஆனால் தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால், இத்தகைய சேவை மனப்பான்மையும் சேர்த்து ஒழிக்கப்படுகிறது.
MD, MS, DM, MCH போன்ற படிப்புகளுக்கான சேர்க்கை விகிதம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக உள்ளது. குறிப்பாக இரத்தநாள அறுவை சிகிச்சைக்கான மருத்துவர்களில் இந்தியாவில் சரிபாதி பேர் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களில் அனைவருமே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டின் சுமார் 15 இடங்களில் இரத்தநாள அறுவை சிகிச்சைக்கான மருத்துவக் கட்டமைப்புகள் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டைத் தவிர வேறெந்த மாநிலத்திலும் மாநிலத்தின் தலைநகரைத் தாண்டி வேறு இடங்களில் இரத்தநாள அறுவை சிகிச்சைக்கான மருத்துவமனைகளையோ, மருத்துவர்களையோ காண்பது அரிது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் இரத்தநாள அறுவை சிகிச்சைகளுக்காக பல நூற்றுக்கணக்கானோர் வெளிமாநிலங்களில் இருந்து சிகிச்சைக்காக வந்து கொண்டிருக்கின்றனர்.
இதுபோல பல்வேறு வகையான சிறப்பு மருத்துவர்களை அதிகம் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதற்கு தமிழ்நாடு பின்பற்றி வரும் சமூகநீதிக் கோட்பாடும், அதன் வழிவந்த ஆட்சியாளர்களின் இடஒதுக்கீட்டு, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கொள்கைகளுமே காரணம். ஆனால் அவற்றையெல்லாம் வசிப்பிடத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டுப் பார்வை என்று எங்கோ டெல்லியில் அமர்ந்துகொண்டு தீர்ப்பை எழுதுவது, தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை மட்டும் குறைப்பதல்ல, தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை மட்டும் சிதைப்பதல்ல. தமிழ்நாட்டில் வந்து சிகிச்சை பெற்றுப் பலனடையும் வெளிமாநிலத்தவர்களையும் சேர்த்தே பாதிக்கப்போகிறது.
மருத்துவ உயர்படிப்பில் ஏற்கெனவே ஒன்றிய அரசால் நிரப்பப்படாமல் இருந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுகீட்டை, திமுக அரசு அமைந்த பிறகு சட்டப் போராட்டம் நடத்தி பெற்றுக்கொடுத்தது. இப்போது இதே விவகாரத்தில் மாநில அரசின் உரிமையைப் பறித்திருக்கிறது உச்சநீதிமன்றம். இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடவிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு மாநில உரிமைகளைப் பறிப்பது போதாதென்று நீதிமன்றமும் தன் பங்குக்கு மாநில உரிமைகளைப் பறிப்பது என்பது கூட்டாட்சித் தர்மத்துக்கு எதிரானது. இதிலும் தமிழ்நாடு அரசு நடத்தப்போகிற சட்டப்போராட்டத்திற்கு ஜனநாயக சக்திகள் துணைநிற்போம்! தமிழ்நாட்டு மாணவர்களின் உரிமையை காத்திடுவோம். தமிழ்நாடு ஏற்படுத்தி வைத்திருக்கிற வளமான மருத்துவக் கட்டமைப்பைப் பாதுகாத்திடுவோம்.
- விடுதலை இராசேந்திரன்
***
கல்வி உரிமையைப் பறிக்காதே!
யு.ஜி.சி.யைக் கண்டித்துக் கழகம் ஆர்ப்பாட்டம்
கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவிப்பு!
ஒன்றிய அரசே !
கல்வி உரிமையைப் பறிக்காதே !
இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்காதே!
ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து நம் மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள், விதிகளில் திருத்தங்களை செய்து அறிவித்து வருகிறது.சமீபத்தில் UGC விதிகளில் திருத்தம் செய்து புதிய விதிகளை ஒன்றிய பாஜக அரசு வெளியிட்டுள்ளது. அது மாநிலக் கல்வி உரிமைகளைப் பறிக்கும் வண்ணம் குறிப்பாக தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பைச் சிதைக்கும் வகையில் உள்ளது.
மேலும் இந்த புதிய விதிகளில் உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழிக்கும் திட்டத்துடன் திருத்தங்களை செய்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.
“எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே” எனும் சனாதன தர்மத்தை சட்டப்படியே நிறைவேற்ற துடிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் எதிர்வரும் பிப்.13ஆம் தேதி வியாழக்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒத்த கருத்துள்ள தோழமை அமைப்புகளை ஒன்றிணைத்துக் கொண்டு நடத்த உள்ளது.
பாஜக அரசின் இந்த கொடும் போக்கை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவும், நமது கண்டனங்களை ஒன்றிய அரசுக்குப் பதிவு செய்யவும் இந்த ஆர்ப்பாட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் நடத்துமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.