குடியுரிமைச் சட்டங்களைக் கொண்டு வருவதன் நோக்கத்தை சங்கிகளே இப்போது வெளிப்படையாகப் பேசத் தொடங்கி விட்டார்கள்.

கிரிராஜ் சிங் என்ற மத்திய அமைச்சர், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பீகாரின் வடகிழக்குப் பகுதியில் பரப்புரை செய்தபோது, “1947க்கு முன்பு ஜின்னா பாகிஸ்தான் நாடு கோரியபோதே இங்கிருந்து முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கும் அங்குள்ள இந்துக்களை இந்தியாவுக்கும் அனுப்பி வைத்திருந்தால் இப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வர வேண்டிய தேவையே இருந்திருக்காது” என்று பேசியிருக்கிறார். இதற்கு பா.ஜ.க. அமைச்சரவையிலேயே இடம் பெற்றுள்ள ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிரங் பஸ்வான் (பஸ்வானின் மகன்), பீகாரில் பா.ஜ.க. கூட்டணி கட்சியான நிதிஷ்குமார், கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ள இந்துஸ்தானி சுவான் மோட்சா (மதச் சார்பின்மை) கட்சியின் தலைவர் கண்டனம் தெவித்திருப்பதோடு, கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தின் நோக்கமே இந்தியாவை இந்து ராஷ்டிரமாக்குவது தான் என்ற உண்மை இப்போது வெளியே வந்துவிட்டது.

உ.பி. முதல்வராக உள்ள ஆதித்ய நாத் என்ற இந்துமத வெறியர் உ.பி.யில் நடக்கும் குடியுரிமை திருத்தச் சட்டங்களைக் கொடூரமாக ஒடுக்கி வருகிறார். துப்பாக்கி சூட்டில் இதுவரை 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவ்வளவு பேரும் இஸ்லாமியர்கள். இது பற்றி சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசிய பேச்சு - திமிர் - கொழுப்பு - ஆணவத்தின் உச்சம். “இவர்களை உ.பி. காவல்துறை சுடவில்லை; அவர்கள் சாவதற்காகவே போராட்டத்துக்கு வந்தவர்கள்; எனவே சாகத்தான் செய்வார்கள்; எங்கள் காவல்துறை துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டுகூட வெடிக்கவில்லை. போராட்டக்காரர்களே ஒருவரையொருவர் சுட்டுக் கொண்டார்கள்” என்று திமிருடன் பேசியிருக்கிறார்.

• குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக மாநிலங்களவையில் நாடாளுமன்றத்தில் ஓட்டளித்தது. அ.தி.மு.க. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வாழும் எவருக்காவது பாதிப்பு உண்டா என்று சட்டசபையில் சவால் விட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரம் செய்வதாகவும், முதல்வர் உள்ளிட்ட அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள் பேசி வருகிறார்கள். தேசிய குடியுரிமைப் பதிவேடு தயாரிப்பதற்கான முதல் கட்ட பணியான தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தயாரிக்கும் வேலைகளையும் தமிழக அரசு தொடங்கும் என்று அறிவித்து விட்டார்கள். இவ்வளவுக்குப் பிறகும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் புதிய கேள்விகள் ஏன் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்றும் இதற்கான விளக்கம் தேவை என்றும் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் உதயகுமார் சட்டப் பேரவையில் தெரிவித்திருக்கிறார்.

• குடியிருப்போர் தாய்மொழி, ஆதார் அடையாள அட்டை எண், அலைபேசி எண், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பெற்றோர்களின் பிறந்த தேதி, ஊர் ஆகிய விவரங்கள் மக்கள் தொகைப் பதிவேட்டில் ஏன் கேட்கப்பட வேண்டும் என்ற கேள்வியை தமிழக அரசே எழுப்பியிருக்கிறது. மேற் குறிப்பிட்ட விவரங்களை உரிய ஆவணங்களோடு தராவிட்டால் குடியுரிமைப் பதிவேடு மறுக்கப்பட்டு, இந்தியக் குடிமக்கள் என்ற உரிமை மறுக்கப்பட்டு, நாடற்றவர் ஆக்கப்படும் ஆபத்து இருக்கிறது. இந்த முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஒரு அரசு ஊழியருக்கே தரப்பட்டுள்ளது. பா.ஜ.க.வை எதிர்க்கும் முதுகெலும்பு இல்லாத தமிழக அரசே இந்த ஆபத்துகளை வெளிப்படுத்தும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்பதிலிருந்து சட்டத்தின் கொடூரத்தைப் புரிந்து கொள்ளலாம்.

• குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் ஒருவருக்காவது ஆபத்து உண்டு என்று கூற முடியுமா என்று மத்திய அரசும் தமிழக அரசின் அமைச்சர்களும் சவால் விடுகிறார்கள். அய்தராபாத்திலிருந்தும் பெங்களூரிலிருந்தும் வந்துள்ள இரண்டு செய்திகளை கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். பிப். 19, 2020 ஆங்கில ‘இந்து’ ஏடு (சென்னைப் பதிப்பு) வெளியிட்டள்ள செய்தி இது:

“அய்தராபாத்திலுள்ள ஆதார் அடையாள அட்டை வழங்கும் அமைப்பு (UIDAI) பழைய அய்தராபாத் பகுதியில் 127 பேருக்கு ஆதார் உரிமத்தை இரத்து செய்து நோட்டீஸ்அனுப்பியிருக்கிறது. தவறான தகவல்களைத் தந்து ஆதார் உரிமத்தைப் பெற்றுள்ளதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது. எனவே இந்தியக் ‘குடிமகன்’ என்பதை நிரூபிக்கும் ஆவணங்களோடு எங்களை வந்து சந்திக்க வேண்டும்” என்று ஆதார் நிறுவனத்தின் துணை இயக்குனரான அமிதாபின்ட்ரூ என்பவர் நோட்டீஸ்அனுப்பியுள்ளார். நோட்டீஸ்அனுப்பப்பட்டவர்களில் ஒருவர் முகம்மது சர்தார்கான். தச்சுத் தொழிலாளி; பவானி நகர் குடியிருப்பில் வாழ்கிறார். அய்தராபாத்திலே பிறந்து வளர்ந்தவர். பெற்றோரும் அய்தராபாத்திலே பிறந்தவர்கள். தந்தை அய்தராபாத் ஆல்வின் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். முதல்கட்டமாக 127 பேருக்கு நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது. பாதிக்கப் பட்டவர்களுக்காக வாதாட வழக்கறிஞர்கள் ஆர்வத்துடன் முன் வந்துள்ளனர். ஆதார் நிறுவன அதிகாரிகளுக்கு குடியுரிமை ஆவணங்களைக் கேட்கும் உரிமையே கிடையாது. குடியுரிமை சட்டங்கள் வர இருப்பதால் தாங்களே அதிகாரத்தை முறைகேடாகக் கைகளில் எடுத்துக் கொண்டு செயல் படுகிறார்கள் என்று வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். நோட்டீஸ்அனுப்பப்பட்ட 127 பேரில் பெரும்பாலோர் இஸ்லாமியர்; ஏனையோர் தலித் மக்கள்.

பெங்களூர் புறநகர்ப் பகுதியில் குடிசைப் பகுதியில் வாழ்ந்த 300 இசுலாமியர்கள் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள்; அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்று பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் புகார் தரவே, பா.ஜ.க. அரசின் காவல்துறை அவர்களின் குடிசைகளை அகற்றி வெளியேற்றி விட்டது என்ற செய்தியையும் ‘இந்து’ நாளேடு வெளியிட்டிருக்கிறது.

• அமெரிக்காவில் இயங்கும் மத சுதந்திரத்துக்கான சர்வதேச ஆணையம், அய்.நா.வின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டெரஸ், அய்ரோப்பிய நாடுகளுக்கான நாடாளுமன்றம், உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகள், இந்தியாவின் மதச்சார்பின்மை சிதைக்கப்பட்டு, மைனாரிட்டி மக்களுக்கு ஆபத்துகள் உருவாக்கப்படுவதை சுட்டிக்காட்டி எச்சரிக்கின்றன.

• இந்தியாவில் இராணுவ ஆட்சியை அமுல்படுத்திவிட்டு, மக்களின் நன்மைக்காகவே இராணுவ ஆட்சி வந்துள்ளது, இதனால் யாருக்கும் ஆபத்து இல்லை என்று கூறினால் எப்படி அதை ஏற்க முடியும்? அதேபோல்தான் பா.ஜ.க. ஆட்சியும் இப்போது இந்த குடியுரிமை திருத்தச் சட்டங்கள் பற்றிப் பேசுகிறது. இதன் ஆபத்துகள் அமுலாக்கப்படும்போதுதான் ஆபத்துகளை உணர முடியும்.

Pin It