கேள்வி: குடியுரிமை சட்டத் திருத்த மசோதா 2019 என்ன சொல்கிறது?

பதில்: 2014ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவிற்கு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வந்த இந்துக்கள்/ பவுத்தர்கள்/ சமணர்கள்/ சீக்கியர்கள்/கிறித்துவர்கள்/ பார்சிகள் ஆகியோர் இந்திய குடிமக்கள் எனும் உரிமையைப் பெறுவதற்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

assam protest against CABகேள்வி: ஏன் இதனை கடுமையாக எதிர்க்க வேண்டும்?

பதில்: மூன்று முக்கிய காரணங்களுக்காக நாம் இதனை எதிர்க்க வேண்டும்.

1. ஏன் முஸ்லீம்களுக்கு இந்த உரிமை மறுக்கப்படுகிறது?
2. ஏன் இலங்கை, மியான்மர் போன்ற நாடுகள் சேர்க்கப்படவில்லை?
3. மத அடிப்படையில் குடியுரிமை வழங்குவது என்பது அரசியல்அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

கேள்வி: இந்த மூன்று பிரச்சனையிலும் எதிர்கட்சிகளின் நிலைபாடு என்ன?

பதில்: 2016ம் ஆண்டு கடும் எதிர்ப்பு காரணமாக இந்தப் பிரச்சனை தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட்டது. அப்பொழுது மார்க்சிஸ்ட் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் முகமது சலீம் அவர்கள் இந்தக் குழுவில் உறுப்பினராக இருந்தார். எதிர்க் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பை மீறி இந்தக் குழு முடிவு எடுத்தது. அப்பொழுது முகமது சலீம் அவர்கள் மிக விரிவான எதிர்ப்பு அறிக்கையை சமர்ப்பித்தார். அதே போல பல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பொழுதும் எதிர்க்கட்சி சார்பாக இரண்டு திருத்தங்கள் முன் மொழியப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட மதம் அல்லது தேசங்கள் என்பதை நீக்குமாறு இந்த திருத்தங்கள் கோருகின்றன.

மதம் குறித்த பெயர்களை நீக்குவதன் மூலம் முஸ்லீம்களுக்கு எதிரான பாரபட்சம் நீக்கப்படும்.

தேசங்கள் குறித்த பெயர்கள் நீக்குவதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்க் கட்சிகள் கூறுகின்றன.

கேள்வி: இந்த சட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானதா?

பதில்: நிச்சயமாக. அரசியல் அமைப்புச் சட்டம் குறிப்பாக 14வது பிரிவு அனைத்து இந்தியர்களும் மதம்/ இனம்/ மொழி/ சாதி/ பாலினம் என எவ்வித வேறுபாடுமின்றி சமம் என அழுத்தமாகக் கூறுகிறது. இந்த சட்டம் அதற்கு முரண்படும் வகையில் உள்ளது. 

கேள்வி:பாகிஸ்தான்/ வங்கதேசம்/ ஆப்கானிஸ்தானில் இந்துக்கள் துன்புறுத்தப்படுகின்றனரா?

பதில்: இல்லை என சொல்ல முடியாது. பெரும்பான்மை வாதம் என்பது அனைத்து தேசங்களிலும் ஒரு புற்று நோய் போல பரவி வருகிறது. இந்தியாவில் அது சங் பரிவாரத்தின் பெரும்பான்மை மதவாதம் எனில், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இஸ்லாமிய மதவாதம் உள்ளது. இலங்கை மற்றும் மியான்மரில் பவுத்த பெரும்பான்மை வாதம் பேயாட்டம் போடுகிறது.

கேள்வி: வடகிழக்கு மாநிலங்களில் ஏன் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது?

பதில்: அசாம், திரிபுரா, மணிப்பூர் போன்ற பல மாநிலங்களில் பெரிய போராட்டங்கள் நடக்கின்றன. அசாம் முதல்வர் இல்லத்தை பெரிய பேரணி ஒன்று முற்றுகையிட்டது. மக்களிடமிருந்து தப்பிக்க முதல்வர் ஹெலிகாப்டர் மூலம் வெளியேற வேண்டிய அவசியம் உருவானது. இந்த சட்டத்திலிருந்து அசாமுக்கு விலக்கு அளிக்கும் வரை அவர் தான் படித்த பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கு போராட்டக்காரர்கள் தடை போட்டுள்ளனர்.

கேள்வி: ஏன் இவ்வளவு கோபம்?

பதில்: அசாம் போராட்டம் நடந்த பொழுது 1984ம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் உருவானது. அதன் அடிப்படையில் 1971ம் ஆண்டுக்குப் பிறகு அசாமில் குடியேறிய அனைவரும் (இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் உட்பட) அடையாளம் காணப்பட்டு வெளியேற்ற வேண்டும் என்பது முக்கியமான முடிவு. இப்பொழுது முஸ்லீம்கள் வெளியேற்றப்படுவார்கள். ஆனால் இந்துக்கள் தொடர்வர். இதனை அசாம் மக்களில் ஒரு பிரிவினர் ஏற்க மறுக்கின்றனர். எனவே இந்தப் போராட்டம்.

கேள்வி: அசாமில்தானே தேசிய குடிமக்கள் பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டது?

பதில்: ஆம். இந்தப் பதிவேடு பணிகள் முடிந்த பிறகு சுமார் 44 லட்சம் பேர் இந்தியக் குடிமக்கள் இல்லை எனக் கூறப்பட்டது. இது கடும் அதிருப்தியையும் கோபத்தையும் உருவாக்கியது. பின்னர் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன் பின்னரும் 19 லட்சம் பேர் குடிமக்கள் இல்லை என நிலைநாட்டப்பட்டுள்ளது.

ஒரு சாகித்ய அகடாமி விருதுபெற்ற எழுத்தாளரும், இந்திய இராணுவத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி விருதுகள் பெற்றவரும் கூட குடிமக்கள் உரிமை மறுக்கப்பட்டனர். 19 இலட்சம் பேரில் மிகக் கணிசமானவர்கள் முஸ்லீம் அல்லாதவர்கள் ஆவர். இவர்களை வங்கதேசம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என இந்திய அரசாங்கம் கூறியது. ஆனால் வங்க தேசம் அரசாங்கம் மறுத்து விட்டது. எனவே இவர்களைத் தனிமைப்படுத்த பல இடங்களில் சிறைகள் உருவாக்க வேண்டும் என மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது.

கேள்வி: அப்படி செய்தால் ஹிட்லர் செய்தது போல ஆகிவிடுமே?

பதில்: ஆம்! ஹிட்லர் யூதர்களையும், கிறித்துவர்களையும், கம்யூனிஸ்டுகளையும் சிறைகளில் அடைத்தது போல இதுவும் உருவாகும் ஆபத்து உள்ளது.

கேள்வி: தேசிய குடி மக்கள் பதிவேடு அசாமுக்கு மட்டுமா?

பதில்: இல்லை. இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்த மோடி அரசாங்கம் முனைகிறது. ஆனால் அசாமில் முஸ்லீம் அல்லாதவர்களும் குடியுரிமை இழந்துள்ளனரே! அதனை சரிக் கட்டவே குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த சட்டம் அமலானால் முஸ்லீம்கள் தவிர ஏனையோர் குடியுரிமை பெறுவர். முஸ்லீம்கள் மட்டும் சிறைகளுக்கு அனுப்பப்படுவர்.

கேள்வி: இது பாசிச அணுகுமுறை அல்லவா?

பதில்: ஆம்! அதில் எந்த ஐயமும் இல்லை. 

கேள்வி: சங் பரிவாரம் கிறித்துவர்களுக்கும் எதிரானதுதானே! அப்படியெனில் கிறித்துவர்களுக்கு குடியுரிமை எப்படி தர முன்வருகிறார்கள்?

பதில் : சங் பரிவாரம் கிறித்துவர்களுக்கும் எதிரானதுதான். எனினும் முஸ்லீம்களைத் தனிமைப்படுத்த கிறித்துவர்களை அரவணைக்க முயற்சி செய்யலாம். தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் கூறியது போல கிறித்துவ நாடுகளான மேலை நாடுகளைப் பார்த்து பயமும் உருவாகியிருக்கலாம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தயவு, மோடி அரசாங்கத்திற்கு மிகவும் தேவை என்பது அறிந்த ஒன்றுதானே!

கேள்வி: ஏன் ஈழ அகதிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்?

பதில்: பவுத்த - சிங்களப் பெரும்பான்மை வெறியர்களால் ஈழத் தமிழர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் மோடி அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தை பகைத்துக் கொள்ள தயராக இல்லை. மேலும் தமிழர்கள்/ தமிழ்நாடு எனில் கோபம் அவர்களுக்கு இருப்பது தொடர்கிறது.

கேள்வி : அ.இ.அ.தி.மு.க. நிலைபாடு என்ன?

பதில் : இந்த சட்டத்தை ஆதரித்து மக்களவையில் கைதூக்கி விட்டனர். தமிழர்கள் பாதிக்கப்படும் பொழுது கூட தமது எதிர்ப்பைத் தெரிவிக்க பயம் கொள்கின்றனர் எனில் அ.இ.அ.தி.மு.க., பாஜகவின் கைப்பாவையாக உள்ளது என்பது பளிச்செனத் தெரிகிறது.

கேள்வி: பாகிஸ்தான் அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து அல்லது ஏனைய முஸ்லீம் நாடுகளிலிருந்து முஸ்லீம்கள் வந்தால் நிராகரிப்பீர்களா எனும் கேள்வி ஏன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது?

பதில்: ஏனெனில் பாகிஸ்தானில் ஷியா, அகமதி, சுஃபி போன்ற முஸ்லீம் பிரிவினரும் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். மாற்றுக் கருத்து கொண்ட சன்னி பிரிவு முஸ்லீம்களும் கூட தப்புவது இல்லை. அவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறது மோடி அரசாங்கம்.

கேள்வி: இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்குமா?

பதில்: பலர் வழக்குகள் தொடரும் வாய்ப்பு உள்ளது. நியாயமாக மற்றும் சட்டப்படி ஆய்வு செய்தால் இதனை உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும்.

ஆனால் 'அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது' என்று தன் வாலை கவட்டுக்குள் சொருகிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

ஆகையால் பெரும்பான்மை மதமான இந்து மதத்தில் உள்ள உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து இந்து மதவெறிக் கும்பலைத் துரத்த வேண்டும்.

- தருமர், திருப்பூர்

Pin It