ம.பி., இராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் கள் - பரப்புரைக் கூட்டத்தில் ‘இந்துத்துவம்’ குறித்து காரசார விவாதம் நடக்கிறது. காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி, இந்துத்துவத்தின் அடிப்படையை மோடி புரிந்து கொள்ளவில்லை என்று பேச, அதற்கு மோடி இந்துத்துவம் பற்றி நீங்கள் எங்கு தெரிந்து கொண்டீர்கள்? என்று எதிர் கேள்வி கேட்டிருக்கிறார்.

இரண்டு தரப்புக்கும் இப்போது நாம் சில கேள்விகளை கேட்க வேண்டியிருக்கிறது.

  • • ‘இந்து’ என்ற பெயர் - வேதம், இதிகாசம், புராணம் உள்ளிட்ட எந்த மத நூல்களி லாவது இருக்கிறதா? ‘இல்லை’ என்று கூறுகிறோம். இருக்கிறது என்பதற்கு ஆதாரம் காட்டத் தயாரா?
  • • இந்து மதத்தை விமர்சித்தால் ‘தேச விரோதிகள்’ என்று கூப்பாடு போடுகிற எச்.ராஜா உள்ளிட்ட பார்ப்பனர்களும் சங் பரிவாரங்களும் ‘இந்து’ என்ற பெயர் பிரிட்டிஷ்காரன் சூட்டியது என்பதை மறுக்க முடியுமா?

இந்து மதத்தின் ‘மனிதத் தெய்வமாகப்’ பார்ப்பனர்களும் சங்பரிவாரங்களும் தலையில் தூக்கி வைத்து ஆடிக் கொண்டிருக்கும் இறந்து போன சீனியர் சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதியே இதை ஒப்புக் கொண்டிருக்கிறார் . ஆதாரம் இதோ:

                “வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்ததால் நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது.” (ஆதாரம்: சங்கராச்சாரியின் உரைகளடங்கிய ‘தெய்வத்தின் குரல்’ முதல் தொகுதி)

                ‘இந்து’ என்ற ‘நாமகரணம்’ சூட்டியதே பிரிட்டிஷ்காரன் தான். இதை ஏற்றுக் கொள்வதற்குப் பெயர்தான் தேச பக்தியா?

  • • சரி; அரசியல் சட்டத்திலாவது ‘இந்து’ என்பதற்கான விளக்கம் இருக்கிறதா? இல்லை. யார் முஸ்லிம் இல்லையோ, யார் கிறிஸ்துவர் இல்லையோ, யார் பார்சி இல்லையோ, அவர்கள்தான் ‘இந்து’ என்றே சட்டம் கூறுகிறது. இஸ்லாம், கிறிஸ்துவம் போல் ‘இந்து’ என்பதை ஒரு மதமாக வரையறுக்க முடியாத நிலையில் இப்படி ஒரு குழப்பமான விளக்கத்தையே அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களால் தர முடிந்தது. ஆக, ‘இந்து’ என்று ஒரு வரையறுக்கப்பட்ட மதம் இருந்தது இல்லை என்பதை அரசியல் சட்டமே உணர்த்து கிறது என்பதை மறுக்க முடியுமா?
  • • பல பார்ப்பனத் தலைவர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் ‘இந்து மதம்’ பற்றி என்ன கூறியிருக்கிறார்கள்?

                ‘இந்து மதம் என்பதே - அண்மைக்காலத்தில் வந்த பெயர்தான்.’ - கூறியிருப்பவர் பார்ப்பனர்களின் தலைவரான இராஜாஜி. (ஆதாரம்: Hindusim: Doctrine and way of life)

                “பழைய இலக்கியங்கள் எதிலுமே இந்து என்ற சொல்லே கிடையாது.” - இப்படி கூறியிருப்பவர் மறைந்த ஜவகர்லால் நேரு (ஆதாரம் : ‘Discovery of India’ நூல்)

                “இந்து என்பது நமக்கு அன்னியர் கொடுத்த பெயர்.” - இப்படி கூறியிருப்பவர் பார்ப்பனர்கள் கொண்டாடிய சட்ட நிபுணர் பாஷ்யம் அய்யங்கார். (ஆதாரம் : ‘மெட்ராஸ் மெயில்’ ஏடு 19.12.1940)

                “இந்து மதம் தெளிவற்றது. வரையறை ஏதும் இல்லாதது என்பதை உணர்ந்தே இருக்கிறேன்” - இப்படி தீர்ப்பில் எழுதியவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த இராசமன்னார். (ஆதாரம்: மைக்கேல் எதிர் வெங்கடேசுவரன் வழக்கு - மெட்ராஸ் ஜெர்னல் தொகுப்பு 239/1052-1)

                இந்தியாவின் தேசத் தந்தையான காந்தி என்ன கூறினார்?

                “இந்து என்ற சொல் வேதத்தில் காணப்பட வில்லை. மகா அலெக்சாண்டர் இந்தியா மீது படை எடுத்தபோது சிந்துவுக்கு கிழக்கே உள்ள மக்களை இந்துக்கள் என்று குறிப்பிட்டனர்” என்கிறார் காந்தி. (ஆதாரம்: ‘ஹரிஜன்’ பத்திரிகை 30.11.1947)

                பாரதியும் வரலாற்று ஆய்வாளரான நீலகண்ட சாஸ்திரியும் பிராமணிய - வைதீக மதம் தான் இந்து மதமாக பிறகு மாறியது என்கிறார்கள். (ஆதாரம்: பாரதி நூல்கள் - கட்டுரைகள்; நூல். நீலகண்ட சாஸ்திரியின் ‘பிராமண மதம்’ நூல்)

                பிரிட்டிஷ்காரர்கள் சட்டத் தொகுப்புக்கு ‘இந்து’ என்ற பெயரை எப்படித் தேர்வு செய்தார்கள்? அதற்கு முன் எப்படி இந்தப் பெயர் வழக்கில் வந்தது என்பதற்கு ஆதாரம் வேண்டுமா? பாரசீகர்கள் தந்த பெயர்தான் ‘இந்து’; அதற்கு ஆதாரம் ‘அவாள்களே’ வெளியிட்ட நூல்.

                சென்னையில் உள்ள ‘இராமகிருஷ்ணா மடம்’ வெளியிட்டுள்ள ‘இந்துமத சாரம்’ என்ற நூல் தரும் விளக்கம் இது.

                “இந்து என்னும் பெயர் வந்த வகை ஒருவித வேடிக்கையானதே. பஞ்சாப்பிலே பழைய ஆரியர் குடியேறியிருந்த இடத்துக்கு சிந்து நதியே மேற்கு எல்லையாக இருந்தது. நதியின் எதிர்க்கரையில் வாழ்ந்தவர்கள் பண்டைக்கால அய்ரானியர் (பாரசீகர்). இந்த நதியின் பெயரைக் கொண்டே ஆரியரை பாரசீகர்கள் (அய்ரானியர்) அழைக்கலாயினர். ஆனால் அவர்களால் சிந்து என்று சரியாக உச்சரிக்க முடிய வில்லை. அதை இந்து என்றனர். ஆதலின் பாரசீகர் இட்ட பெயர் ‘இந்து’ என்பதாயிற்று” - ஆக பாரசீர்கள் பெயர் சூட்டி, பிறகு சட்டத் தொகுப்புக்காக பிரிட்டிஷார் பாரசீகர் சூட்டிய பெயரை எடுத்துக் கொண்டார்கள். இதுவே ‘இந்து’.

                ‘இந்து’ என்ற மதப் பெயரே இவ்வளவு குழப்பம். அதை அரசியலாக்கி, பல்வேறு மதக் குழுக்களை ‘இந்து’ மதத்துக்குள் உள்ளிழுக்க சாவர்க்கர் உருவாக்கிய சொல் ‘இந்துத்துவா’.

                இல்லாத ஒரு மதம் ‘இந்து’ - பார்ப்பனிய வர்ணாஸ்ரமத்தை சமூக அமைப்பாக்கிட இந்து மதம் சாராத வெகு மக்களை இழுத்து அவர்களை தங்களின் வேத சாஸ்திர அடிமைகளாக்கிட உருவாக்கிய கற்பனை மதம் தான் ‘இந்து’.

இந்துத்துவா என்றால் என்ன தெரியுமா என்று சவால் விட்டுக் கொண்டிருக்கும் இராகுலுக்கும் மோடிக்கும் ‘இந்து’ முன்னணி பின்னணிகளும் இந்த வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்!

Pin It